குலைத்தெங்கின் இளநீரைக் குடிப்பதற்குத் தான்வைத்து
தலைவாழை இலைபோட்டு, சர்க்கரைப் பொங்கல் வைத்தே
இலைதன்னில் இடமில்லை எனச் சுவையாம் வகைநிறைத்து
நலமெல்லாம் விசாரித்து நல்விருந்து தான்படைத்தார்
பச்சடியில் பத்துவகை பாயசத்தில் அதன்மேலாம்
மெச்சுசுவை உசிலிவகை, விதவிதமாய் அவியலொடு
எச்சுவையும் ஈடில்லை எனச்சொல்லும் இனிப்புவகை
அச்செடுத்த அழகுடனே ஆகாகா வடைகள் பல
மொட்டுவைத்த மல்லிகையாய் மொய்த்திருக்கும் அன்னமுடன்
வேகவைத்த பருப்புகளும் விழுதாகப் பசுநெய்யும்
ஆகும் வடகங்கள் ஐந்தாறு வகைகளுடன்
கொட்டிவைத்த பருப்பினிலே குழைந்திருக்கும் சாம்பாரும்
எட்டிவரும் போதினிலும் ஈர்க்கும்மண ரசவகையும்
வட்டவட்ட அப்பளத்தின் வாகான வகைபலவும்
உச்சுக்கொட் டித்தின்ன ஊறுகாய்கள் பற்பலவும்
பச்சைமிளகாய் கலந்தே படைத்திருக்கும் புளியிஞ்சி
எச்சரிக்கை யாக இவற்றினொடு லேகியமும்
உச்சி வரைஉரைக்கும் உக்கிரக மோர்மிளகாய்
இவற்றினொடு
காரக் குழம்பு, கறிவேப்பிலைத் துவையல்
ஆரும் சுவைசேர் ஐந்துவகை மோர்க்குழம்பு
வெட்டி எடுக்கத்தான் வேண்டும் எனும்வகையில்
கட்டித் தயிரும், கச்சிதமாய்ச் சித்ரான்னம்
தேங்காய், எலுமிச்சை சீராய்ப் புளிசாதம்
மாங்காய்ப் பச்சடி , வாய்மணக்கும் சுண்டல்வகை
தேங்குழல் அப்பம், திகட்டும் அதிரசமும்
மாங்காய் மசியல் , வாழைப் பொடித்தூவல்
முப்பழங்களோடு முந்திரியும் தாமிருக்க
ஒப்புரவாய்க்கேட்டே உபசாரம் தாம் செய்து,
உண்டு முடித்தவுடன் ஒய்யாரத் தாம்பூலம்
கொண்டு கொடுப்பார் குமரிப்பெண்களங்கே
பீடாவில் பத்துவகை, பேர்தெரியா ஐஸ்க்ரீம்கள்
சோடா பழரசம், சொக்கவைக்கும் பானங்கள்
என்றே கொடுக்கும் இனிய விருந்தினையே
தின்ன எண்ணுகையில் உமிழ்நீர் பெருகியது
வயிற்றில்
கடபுடாக் கோளாறு வாந்தி பயமுறுத்த
கிடைத்ததை அனுபவிக்கக் கிட்டாமல் போந்தேனே!
இலந்தை