Fwd: விநாயகர் அனுபூதி! (31-40) (கோபால்)

6 views
Skip to first unread message

GOPAL Vis

unread,
Dec 26, 2025, 8:20:56 PM (23 hours ago) Dec 26
to santhav...@googlegroups.com
விநாயகர் அனுபூதி! (31-40)

தனியாய் அமர்வாய் தருகண் டவிடம்
கனிகாய் மலர்புல் கொடுநின் திருமுன்
குனிவார் எவரும் குறைவற் றுயரக்
கனிவாய் அருள்வாய் கருவிண் ணெனவே! ..(31)


[தரு = மரம்; திருமுன் = சன்னிதி; கருவிண் = கார்மேகம்]
[மரம் கண்ட இடத்தில் தனியாக அமர்ந்து கொண்டு, கனிகள், காய்கள், மலர்கள், அறுகம்புல், இவற்றைக் கொண்டு உன் சன்னிதியில் குனிந்து வணங்குபவர் யாவரும், குறைவேதும் இல்லாமல் உயர்வு அடைவதற்கு, மழை பொழியும் கார்மேகம் போலக் கனிவுடன் அருள்பவன் நீ!] ..(31)

வேழப் பெருமா! விதியின் மிகையாய்
ஆழப் பெருநூல் அறிவுற் றவனே!
சூழக் கணமும் சுரரும் தலைகள்
தாழப் பணியத் தயைசெய் குவையே! ..(32)


[வேழம் = யானை; விதி = பிரமன்; பெருநூல் = வேதம்]
[யானை முகனான பெருமானே! பிரமனை விடவும் அதிகமாகவும் ஆழமாகவும் வேதங்களை அறிந்தவன் நீ! உன்னைச் சூழ்ந்தவாறு கணங்களும் தேவர்களும் தம் தலைகள் தாழுமாறு பணிய, அவர்களுக்குக் கருணையோடு உதவுபவன் நீ!] ..(32)

வையஞ் சிதையா வணம்ஆண் டருளக்
கையைந் துடைநீ கழிமா உலகின்
மையத் தினிலே மறைஅச்(சு) அலனோ!
ஐயே நினைநன்(கு) அறிவார் இலரே! ..(33)


[வையம் = உலகம்; கழி மா = மிகப் பெரிய]
[இந்த உலகம் அழிந்து விடா வண்ணம் அதைக் காத்தருள்வதற்காகவே ஐந்து கைகளை உடைய நீ, இந்த மிகப் பெரிய உலகத்தின் மையத்திலே மறைவாக இருக்கும் அச்சு அல்லனோ! ஐயனே! உன்னை நன்கு (பூரணமாக) அறிந்தவர் யாரும் இலர்!] ..(33)

இலமுன் மகிழ்வுக்(கு) இனிமைப் பவனம்!
புலரும் கதிர்போல் பொலிசெம் மலர்கள்!
சலமார் கமலத் தளிர்மேல் பவனம்
செலஓம் இசையின் திரையூர் தலமே! ..(34)


[இலம் = இல்லம்; இனிமைப் பவனம் = ‘ஆனந்தபவனம்’, மஹா கணபதியின் இருப்பிடம்; சலம் = நீர்; பவனம் = காற்று; திரை = அலை]
[நீ மகிழ்வுடன் இருக்கும் உனது இல்லம் ஆனந்தபவனம் ஆகும்! அங்கே உதித்தெழும் சூரியனைப் போன்ற சிவந்த மலர்கள் பொலியும்! நீரில் நனைந்த செந்தாமரை இதழ் மேல் காற்று (உரசிச்) செல்ல, ஓம் என்னும் இசையின் அலை ஊர்ந்து செல்லும் தலம் அதுவே!] ..(34)

தலமும் சலமும் தருவும் வடிவும்
பலவா யிறையின் பதியா யிரமே!
உலகில் திகழொவ் வொருகோ யிலிலும்
விலகா(து) அமரும் விதமுன் தகையே! ..(35)


[தலம் = திருத்தலம்; சலம் = தீர்த்தம்; தரு = (தல)விருக்ஷம்; வடிவு = மூர்த்தி; பதி = ஊர்]
[திருத்தலங்களும், புண்ணிய தீர்த்தங்களும், தல விருக்ஷங்களும், மூர்த்தங்களும் பலவாறு இருக்க, தெய்வப் பதிகள் ஆயிரமாய் உள்ளன! உலகில் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் விடாது நீ வந்து அமரும் பாங்கே உனது பெருமை!] ..(35)

தகைசால் இமயம் தருகோ மகளும்,
சிகைசெப்(பு) ஒளிரும் சிவனும் பெறுசேய்!
பகையாம் அசுரப் படைவென்(று) அடரும்
புகையாம் கொடியாற் புகழுற் றவனே! ..(36)


[தகைசால் = பெருமை மிக்க; செப்பு = செம்பு; புகையாம் கொடி = தூமகேது]
[பெருமை மிக்க இமயம் தந்த அரசியான சக்தியும், செம்பைப் போல் ஒளிரும் சிகையை உடைய சிவபெருமானும் பெற்ற பிள்ளையே! பகைவரான அசுரப் படைகளை வென்று அடர்ந்த புகைக் கொடியை ஏந்தியவனாகப் புகழ் பெற்றவனே!] ..(36)

உற்றார் அயலார் உறவோர் பகையார்
எற்றார் எனினும் இகவாழ் வினிலே
பற்றா வதெலாம் பழுதாம் வரை!நின்
பொற்றாள் உறவோ புனிதத் தொடரே! ..(37)


[பற்று = தொடர்பு]
[நண்பர்கள், மற்றவர்கள், உறவுகள், பகைவர்கள், என யாராகிலும் எத்தகையவர்களாகிலும், இவ்வுலக வாழ்வில் நம்மோடு தொடர்பு கொள்வதெல்லாம் நாம் பழுதாகும் (நோய்ப்படும்) காலம் வரையில் தான். உன்னுடைய பொற்பாதங்களுடன் உள்ள உறவோ புனிதமாக எக்காலத்திலும் தொடரும்.] ..(37)

தொடரும் தடையும் துயரும் தொலையும்;
கடனும் கழியும்; கறைவிட்(டு) அகலும்;
விடமோ அமுதாம்; வெறுமை நிறைவாம்;
உடலும் மனமும் உனதா கிடிலே! ..(38)

[உடலும் மனமும் உனதேயாக அர்ப்பணிக்கப் பட்டுவிட்டால், தொடர்ந்து வரும் தடைகளும் துயரங்களும் தொலைந்து போகும்! கடன்கள் கரைந்து விடும்! மாசுகள் அகன்றுவிடும்! விடமும் அமுதாகும்! வெறுமை போய் நிறைவும் கைகூடும்!] ..(38)

ஆக்கும் விதியாங்(கு) அழியா(து) உலகைக்
காக்கும் பெருமாள் கருடா சனனும்
போக்கும் சிவனும் புரியப் புகுமுன்
நோக்கும் பொருள்நீ நுதிமிக் கவனே! ..(39)


[விதி = பிரமன்; கருடாசனன் = திருமால்; போக்குதல் = நீக்குதல்/இல்லாமல் செய்தல்; புரிய = (தம் தொழிலைச்) செய்ய; நுதி = கூர்ந்த ஞானம்]
[படைக்கும் பிரமனும், உலகை அழியாமல் காக்கும் பெருமாளான திருமாலும், அழிக்கும் சிவபெருமானும், தத்தம் தொழிலைச் செய்யப் புகும் முன் ஞானப் பரம்பொருளான உன்னையே தியானிப்பர்/தரிசிப்பர்.] ..(39)

வனவே டனுமாய் வளைவா ணிகனாய்
முனகும் பெருவாய் முதியோன் எனவாய்த்
தினவும் திணறித் திருடன் செயலைத்
தனதம் பிசெயத் தயைசெய் தனையே! ..(40)


[வனத்தின் வேடனாய், வளையல் விற்கும் வாணிகனாய், முனகிக் கொண்டிருக்கும் பெரிய வாயுடைய முதியவனாய் வந்துதின்னவும் திணருவது போலத் திருட்டுச் (பாசாங்கு/ஏமாற்றுதல்) செயலை உனது தம்பியாகிய முருகன் செய்தபோது அவனுக்குக் (கண்டிக்காமல்) கிருபை செய்தாயே!!] ..(40)

நல்வாழ்த்துகள்
கோபால்
[27/12/2025]

सर्वे जना: सुखिनो भवन्तु ।

Subbaier Ramasami

unread,
7:02 AM (13 hours ago) 7:02 AM
to santhav...@googlegroups.com
மிக அருமை

On Fri, Dec 26, 2025 at 7:20 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
விநாயகர் அனுபூதி! (31-40)

GOPAL Vis

unread,
8:51 AM (11 hours ago) 8:51 AM
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி. 
கோபால்

--

Arasi Palaniappan

unread,
6:30 PM (1 hour ago) 6:30 PM
to சந்தவசந்தம்
மூலப் பொருளே! முடியா முதலே!
ஞாலத் தவிசின் நடுவீற் றிருப்போய்!
கோலக் கவிஞர் கோபால் வாக்கில் 
சீலத் துடனே திகழ்கண பதியே!

பதியே தழைக்கப் பயனே விளைய
விதியே அருளும் விக்னேஷ் வரனே!
நிதியும் அதையாள் நெறியும் அருளி 
வதியும் மனிதர் மனம்போந்(து)
அருளே!

அரசி. பழனியப்பன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtv0M0RG69SEU%3DrOG%2BQRFCEyzHy3n%2BnLoRRpHi95GciReQ%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages