Fwd: விநாயகர் அனுபூதி! (81-90) (கோபால்)

0 views
Skip to first unread message

GOPAL Vis

unread,
Jan 6, 2026, 8:00:19 PM (2 days ago) Jan 6
to santhav...@googlegroups.com
விநாயகர் அனுபூதி! (81-90)

முதலாம் பிளையே முருகன் முனனே
சதமா னவனே சகமாள் பவனே
இதமா னவனே இகமும் பரமும்
பதமே துணையுன் பணியென் கடனே! ..(81)

[சதம் = நிரந்தரம்]
[(பிரபஞ்சத்திலேயே) முதலாவதாய்ப் பிறந்த பிள்ளையே! முருகனுக்கு முன்னவனே! நிரந்தரமானவனே! சகத்தை ஆள்பவனே! (அன்பர்க்கு) இதமானவனே! இகத்திலும் பரலோகத்திலும் உன் திருவடிகளே துணை! உனக்குச் சேவை செய்வதே எனது கடமை!] ..(81)

கடமோ டிடுமுன் கழலைப் பணிவார்
மடமை விலகும்; மதிபண்(பு) அடையும்;
புடமிட் டபொனாய்ப் புலனைந்(து) ஒழுகும்;
திடசித் தமுடன் திருவும் மிகுமே! ..(82)


[கடம் = பாவம்; மடமை = அறியாமை; திடம் = அலையாமை]
[உன் திருவடிகளைப் பணிபவருடைய பாவங்கள் ஓடி மறையும்; அறியாமை விலகும்; அறிவு பண்படும்; ஐந்து புலன்களும் தூய பொன் போலச் சிறந்து இயங்கும்; சித்தம் திடம் பெறும்; செல்வமும் பெருகும்!] ..(82)

மிக்கார் எவருன் விழுமம் தனிலும்!
சொக்கார் எவருன் சொருபம் தனிலே!
எக்கா லுமிணை இலனுன் நிழலில்
புக்கார் எவர்தாம் புவிமீ ளுவரே! ..(83)


[மிக்கார் = உயர்ந்தார்; விழுமம் = சீர்மை,உயர்வு; சொக்கார் = வியந்து மயங்காதவர்; புக்கார் = புகுந்தவர்]
[உன்னைவிடச் சிறப்பு மிக்கவர் யார்? உன் உருவத்தைப் பார்த்தபின் சொக்காதவர் யார்? எக்காலத்திலும் இணை இல்லாதவனாகிய உன் நிழலில் புகுந்தபின் இந்த பூமிக்கு மீண்டும் வருபவர் யார்?] (83)

மீனை இருகண் விழியாய் உடையாள்
மானைத் தனகைம் மழுவோ(டு) உடையான்
ஏனை உலகோர் இடரற் றிடவே
ஆனை முகனாய் அளிபுத் திரனே! ..(84)


[தன = தன்னுடைய; ஏனை = மற்ற]
[மீன்களையே இரு விழிகளாய்க் கொண்ட உமாதேவியும், மழுவோடு மானையும் தன் கையில் பிடித்தவனான சிவபிரானும், மற்ற உலகத்தினரின் துன்பத்தைக் களைவதற்காகவே ஆனைமுகனாய் அளித்த புத்திரனே!] ..(84)

திரமற் றவுடல்! திரிபுற் றமனம்!
தரமற் றசெயல்; தயவற் றகுணம்!
உரகா பரணா உயிரால் பயனென்?
நரகுக் கெனவோ நரனா யதுமே! ..(85)


[உரகாபரணன் = பாம்பை அணிந்தவன்]
[பாம்பை அணிந்தவனே! நிரந்தரமில்லாத/ அழியவிருக்கிற உடல், திரிந்த/நேர்மையற்ற மனம், சிறப்பில்லாத செயல், தயை இல்லாத குணம், இவற்றோடு உயிர் இருப்பதால் என்ன பயன்? நரகத்திற்கென்றே படைக்கப் பட்டதோ இந்த மனிதப் பிறப்பு?] ..(85)

ஆயம் கருதா(து) அறமாற் றியிலேன்!
ஞாயம் தெளியேன்; நயமும் பயிலேன்;
காயம் நினதாய்க் கருதேன்; எனிடம்
தாயன் புடனே தயைசெய் வதெனே! ..(86)


[ஆதாயம்/வரவு கருதாமல் தருமம் செய்யவில்லை; ஞாயம் எது என்ற தெளிவில்லை; நயமான இயல்பைக் கற்றடையவில்லை; இந்த உடல் உன்னுடையதே என்று எண்ணவில்லை; (இருப்பினும்) நீ எனக்குத் தாயைப் போல் அன்போடு கருணை செய்வது என்னே!] ..(86)

என்னே எழிலுன் இருகைப் படைகள்!
முன்னை வினையை முடியச் செயவும்
இன்னே பிணியை இலதாக் கிடவும்
கன்னற் பெயரோய் கடி(து)ஏ வுகவே! ..(87)

[படைகள் = ஆயுதங்கள்; முன்னை = முற்பிறப்பைச் சேர்ந்த; இன்னே = இப்பொழுதே; கன்னல் = கரும்புச் சாறு; கடிது = உடனே]
[கரும்புச் சாற்றைப் போல் இனிமையான பெயரை உடையவனே! உன் (பாச அங்குச) ஆயுதங்கள் இரு கைகளிலும் எத்துணை அழகாக இருக்கின்றன! என் முற்பிறப்புப் பாவங்களை முடிக்கவும், இப்பொழுதே என் பிணிகளை நீக்கி விடவும், உடனே அவற்றை ஏவி விடு!] ..(87)

ஏவே தமெலாம் இசைதத் துவமே!
தேவே! சிவையின் சிசுவே! கணமாள்
கோவே! புகையின் கொடிகொண் டவனே!
ஓவேன் அடியேன் உனையுன் னிடவே! ..(88)


[ஏ = விளிக் குறிப்பு/அழைத்தல்; இசைத்தல் = புகழ்தல்; ஓவுதல் = நிறுத்துதல்; உன்னுதல் = நினைத்தல்]
[ஏ வேதமனைத்தும் புகழ்கின்ற தத்துவப் பொருளே! தேவனே! சிவை/உமையின் குழந்தையே! கணங்களை ஆளும் தலைவனே! புகைக் கொடி கொண்டவனே! அடியேன் உன்னைத் தியானம் செய்வதை நிறுத்த மாட்டேன்!] ..(88)

உனதே உல(கு)ஆங்(கு) உனதே உயிர்கள்
எனதென் பதுவீண் இறுமாப்(பு) அசடே!
முனதாஞ் செயலோ முடிவாம் விளைவோ
நினதா ணைகளே! நிகிலம் பொமையே! ..(89)


[ஆங்கு = அதுபோலவே; அசடு = பொய்; நிகிலம் = உலகம்]
[உலகம் உன்னுடையதே! அதுபோலவே இந்த உயிர்களும் உன்னுடையவை! எனது என்பது வீண் தற்பெருமை; பொய்யானதே! முதலில் செய்யப்படும் செயலோ, முடிவாகக் காணும் விளைவோ, எல்லாம் உனது ஆணைகளின் படியே நிகழ்வன! உலகம் (உன்னிடம்) ஒரு பொம்மையே! ..(89)

பொங்கும் கருணை பொழியும் பரிவால்
கங்கொன்(று) அறியாக் கடலாம் இறைநீ
இங்கோர் சிலைபோல் எழிலார் வடிவோ(டு)
எங்கட்(கு) உறவாய் இனி(து)ஈ பவனே! ..(90)


[கங்கு = எல்லை, கரை]
[பொங்குகின்ற கருணையாலும், பொழிகின்ற அன்பாலும், நீ கரையற்ற இறைமைக் கடலாவாய்! இங்கே ஒரு சிலைபோல, அழகான வடிவம் கொண்டு, எங்களுக்கு உறவானவனாய், இன்பம் தருபவனாக இருக்கிறாயே!] ..(90)

நல்வாழ்த்துகள்
கோபால். 

सर्वे जना: सुखिनो भवन्तु ।
Reply all
Reply to author
Forward
0 new messages