சீரோங்கும் வீரராகவன்
(சிந்துப் பாட்டு)
(குறிப்பு: “-“ என்னும் குறி வரும் இடத்தில் சற்று நிறுத்திப் பாடலாம்)
(பல்லவி)
(தானான தானா - தானனா)
சீரோங்கும் வீர - ராகவன்
… தேரோங்கும் எவ்வுள் - நாயகன்
பாரோர்கள் போற்றும் - மன்னவன்
… பாவங்கள் போக்கும் - புண்ணியன்
(சரணம்)
(தானான தான தானா - தானான தானனா)
காணாத கண்கள் காணக் - கண்ணாயி ருப்பவன்
… காலங்கள் தோறும் எங்கள் - கைகோர்த்து நிற்பவன்
நா(ள்)நாளும் நாடு வார்க்கு - நல்வாழ்வ ளிப்பவன்
… நாராய ணாய என்பார் - நாவீற்றி ருப்பவன். (சீரோங்கும்)
தாளாத நோய்கள் எல்லாம் - தாள்தந்து தீர்ப்பவன்
… தாயாகி எந்தை யாகித் - தான்வந்து காப்பவன்
தோளேந்து வல்வில் ஒன்றால் - சோகங்கள் சாய்ப்பவன்
… சூழ்கின்ற தொல்லை எல்லாம் - தூளாக்கி மாய்ப்பவன். (சீரோங்கும்)
- இமயவரம்பன்