குகன் வேற்படை இருக்கும் நமக்காக!
மாருதம் எழட்டும் புயலாக, - அந்த
… வானமும் விழட்டும் இடியாக,
காரிருள் விரட்டும் கதிராகக் - குகன்
… கால்துணை இருக்கும் நமக்காக!
ஆழ்நிலம் அனைத்தும் பிளவாக - எங்கும்
… ஆழிகள் எழட்டும் அலையாக,
வீழ்வினைத் தடுக்கும் விறலாகக் - குகன்
… வேற்படை இருக்கும் நமக்காக!
ஆவியை உழற்றும் அழலாக - இடர்
… ஆயிரம் வரட்டும் திரளாக,
தீவினை அழிக்கும் திறலாகக் - குகன்
… சீரருள் இருக்கும் நமக்காக!
- இமயவரம்பன்