வாஞ்சிநாதன்
ஆயிரத்துத் தொளாயிரத்துப் பதினொன்று ஜூன்மாதம் பதி னேழன்று
தோயுரத்தத் தோடு நெல்லைக் கலெக்டராம் ஆஷ்குண்டு பட்டு வீழ
பாயுரத்தம் தான்சிந்தி தன்வாயில் தான்சுட்டு வீழ்ந்தான் , முன்தான்
வாயுரைத்த சபதத்தை அப்படியே தான்முடித்த வாஞ்சி நாதன்.
துணிவாட்சி செய்கின்ற தோளுடையான், துவளாதான், துடிப்பே நெஞ்சில்
அணியாட்சி செய்திருக்க அடங்காத சினங்கொண்டோன், ஆண்மை வாஞ்சி
பிணியாட்சி செய்துவந்த ஆஷென்னும் வெள்ளையனைப் பின்தொடர்ந்து
மணியாட்சி சந்திப்பில் மக்களெலாம் பார்த்திருக்க மார்பில் சுட்டான்.
பாரதமா தாசங்கம் என்றாலே ஆஷுக்குப் பயந்தான், "ஆணி
வேரினையே அறுத்தெறிந்தே அதைச்சார்ந்தோர் சாம்பரென ஆகச் செய்வேன்
பாரெனவே சூளுரைத்த பாதகனை 'ஆஷெ'னவே பட்டுப்போக
வீரனவன் முடிவெடுத்த மிகப்பெரிய காரியத்தை விழைந்து செய்தான்.
விஞ்செனுமோர் கொடியவனை விஞ்சிவிட்ட வெள்ளையனாம் ஆஷை இன்னும்
விஞ்சவிடில் பஞ்செனவே பற்றவைத்துப் பொசுக்கியெழில் பார்ப்பான் என்றே
வெஞ்சினமே தான்கொண்டு வீழ்த்திடவே சூளுரைத்த வீர வாஞ்சி
அஞ்சுவதொன் றறியாத வேள்வித்தீ ஆவேச அந்த ணாளன்.
கட்டுண்டு, மொத்துண்டு, பிணிபட்டு, மிதிபட்டு, பறங்கி காலைத்
தொட்டுண்டு தாம்வெருவி கோபமெனும் சூடின்றி, வெள்ளைக் கையால்
குட்டுண்டு கிடந்திருந்த கூட்டத்தில் ஆண்மையுடன் கொதித்த வீரன்
வெட்டுண்டு போனாலும் விடமாட்டேன் என்றுரைத்த வீர வாஞ்சி.
மண்ணிதிலே பிறந்தவர்கள் இறப்பதுவும் உறுதியென வந்த பின்னே
பெண்மகவு பிறந்தென்ன, போயென்ன, குடும்பம் என்னும் பிணிதான் என்ன
எண்ணமதில் வெறியென்று கொண்டுவிட்ட விடுதலையை எய்தா முன்னம்
நண்ணுகிற பாசமிலை, பற்றில்லை எனஉறுதி நாட்டம் கொண்டான்
தாகமென நெஞ்சத்தில் தாங்கிவந்த அழல்கொதிப்பைத் தணிப்பதற்கு
வேகமெனச் செயல்படுதல் விவேகமென உணர்ந்திருந்தான் வீர வாஞ்சி
போகுமுனே இந்தியரைப் பொசுக்கிடுவேன் என்றுரைத்த பொல்லா ஆஷை
ஏகெனவே சாகடித்த இளவாஞ்சி எழுச்சிகளின் இமய உச்சி.
காட்டுத்தீ, புயற்காற்று, கக்கிவரும் எரிமலையின் கனற்பிழம்பு
பாட்டுத்தீ பாரதியும் பாய்ச்சல்தீ அய்யருமே பதித்து வைத்த
ஊட்டத்தீ ஊதுமன உலைக்குள்ளே உயிர்த்தெழுந்த உணர்ச்சி வெள்ளம்
வேட்டுத்தீ யால்அந்த வெள்ளையனின் உயிர்குடித்த வீர வாஞ்சி.
கட்டபொம்மன், சிதம்பரனார், பாரதியார் போன்றவர்கள் கணக்கே இன்றி
மொட்டுவிட்டு வெடித்திட்ட திருநெல்லை மண்தந்த வீரத் தாலே
கட்டிவைத்த குடுமிக்குள் முடித்துவைத்த தன்மானம். தீமை தன்னைச்
சுட்டுவைத்துப் பொசுக்கியநல் வரலாறு படைத்திட்ட வீர வாஞ்சி.
தென்பாண்டிச் சீமையிலே வாஞ்சிநாதன் சிந்திவைத்த இரத்தம், வெற்று
மண்ணோடு மண்ணாகப் போகாமல் வீரத்தை வளர்த்ததன்றே!
விண்ணாடு சென்றாலும் அவன்விளைத்த வீரத்தால், பறங்கி நெஞ்சக்
கண்ணாடி முன்னாடி அவன்தோற்றம் தான்கண்டு கலங்கிப் போனான்.
குற்றால அருவியிலே குளித்திருந்த இளவாஞ்சி கொண்ட வேகம்
வற்றாத பேராறு, மாறாத பேராற்றல்,மனப்பிடிப்பால்
நெற்றாகிப் போய்விட்ட நிறைஇளமை, வாழ்க்கையினை அனுபவித்து
முற்றாத முன்னமே முடிந்திட்ட முழுநிலவு, முறியா மூச்சு.
தங்கோட்டைக்குள் புகுந்து தன்னையே ஆளவந்த வெள்ளைக் கோட்டைச்
செங்கோட்டாய் மாற்றிடவே தீக்குண்டைப் பாய்ச்சியவன், சேனை வீரன்
செங்கோட்டை ஆண்சிங்கம், தேசபக்தி தினவெடுத்த திறத்தினாலே
வெங்காட்டத் தீயினிலே வீழ்ந்துவிட்ட வைரமணி, வேகா வீரம்.
நேசரெலாம் ஒருநாளில் நிமிர்ந்திடலாம் எனச்சொன்ன நீலகண்டன்
ஓசையின்றி கல்கத்தா ஓடிவிட , வழிகாட்ட ஒருவரில்லா
மோசநிலை தானுணர்ந்தான் , முன்வந்தான், முடிவெடுத்தான், முனைந்தான், பொய்மை
வேசமிட அறியாதான் , வீறுகொண்ட நெஞ்சுடைய வாஞ்சி நாதன்.
'ஜெயபாரத, ஜெயபாரத ஜெயபாரத ' என்றே
உயர்வானதோர் தனிமந்திரம் தாம்கொண்டனன் நன்றே
உயிரானது ஜெயபாரத உறவானதாய் நின்றே
துயரானவை தருநீசனைத் தூளாக்கினான் கொன்றே!
தன்னாருயிர் இன்பாரதத் தாயினுயிர்ச் சொத்து
என்னாகினும் துயரேயிலை ஈவோம் உயிர்க்கொத்து
பின்னாகிலும் இந்நாட்டினில் சேரும்வளச் சத்து
என்றானவன், இந்நாட்டரும் ஜோதிச் சுடர்முத்து.!
தேசமே நேச மான
சிறப்புடை வாஞ்சி நாமம்
பூசைகள் புரிதற் கேற்ற
புனிதமாய் ஏற்றுக் கொண்டோம்
காசுகள் விளைக்கும் வெற்றுக்
கயமையில் வீழ்ந்தி டாமல்
வாசமாய் உயர்வோம், வீர
வாஞ்சியின் நாமம் வாழ்க!
