8 வருடங்களுக்கு முன்பு, எனக்குத் திருமணம் ஆன பொழுது என் மனைவிக்கு மூவின வெண்பா எழுதியிருந்தேன். அதாவது, மூன்று வெண்பாக்கள், ஒவ்வொன்றும் ஒரு இன உயிர்மெய் எழுத்துகள் மட்டுமே கொண்டது.
குறிப்பாக இடையின வெண்பாவில் புணர்ச்சி முக்கியம், உயிரை உயிர்மெய்யாக மாற்ற.
வல்லினம்:
சிற்றிடை பட்டுடை தேசு தகுபொற்பு
பொற்றொடி பொட்டு புதுப்பூ படுசடை
பற்றுகொடு பாகுப் பதப்பேச்சு ! சாற்றிடக் கைப்
பற்றுதற் பேறு பதிக்கு
தொடி = வளை
மெல்லினம்:
மின்னுமே நின்னணி மேனி மாண் மானினி
நண்ணினேன் நான்நின்மென் மைமுனை நாணமே
நின்னெண்ண மென்மனம் மன்னுமே ! நம்மணம்
நன்மண! மென்நன்மை நீ
மானினி = பெண், மென் மைமுனை = நீள மை இட்ட மெல்லலிய விழி முனை
நம்மணம் = நம் திருமணம்
நன்மண! மென்நன்மை நீ = நன்மனம் என் நன்மை நீ
இடையினம்:
விழியோ யெழிலலை வேலையே ! வாழ்வி
லெழிலியாய் வாரி யரிவை யருளீய
விலையேயோ ரல்லலே ! யிவ்வுயி ரெல்லையே !
யுளவலரி லுள்ளவ ளே
புணர்ச்சி பிரித்து இடையினம்
விழியோ எழிலலை வேலையே ! வாழ்வில்
எழிலியாய் வாரி அரிவை அருளீய
இலையே ஓர் அல்லலே ! இவ்வுயிர் எல்லையே !
உள அலரில் உள்ளவ ளே
வேலை = கடல், எழிலி = மேகம், உயிர் எல்லை = அவளிருக்கும் வரையில் நான் இருப்பேன் என்ற பொருளில்
இராம்நாத் பகவத்