மாவடு மஹாத்மியம்

3 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Mar 12, 2026, 1:17:25 PM (2 days ago) Mar 12
to santhavasantham

மாவடு மகாத்மியம்

 

என்னிதயம் ஆளுகிற என்னரசி, இக்கடிதம்

உன்னத மாவடுவின் ஊக்க வெளிப்பாடு

மூடி இடைகசிந்து முன்னேறி பக்கத்தில்

ஆடை நனைந்தே அசிங்கம் அடைந்திருக்கும்

என்றெண்னி மாவடுவை ஏற்றுவரச் சென்றேன்

என்ன அதிசயமோ, இட்டதொரு கட்டளைக்குக்

கீழ்ப்படிந்து (என்னைப்போல்) கிஞ்சித்தும் சிந்தாமல்

ஆழ்ந்த திரவத்தில் அத்தனையும் சாதுவென

ஊறிக் கிடந்திருந்த உற்சாகத் தைக்கண்டேன்

ஆறப் பொறுக்காத ஆத்திரத்தில் ஓர்வடுவைக்

கையெடுத்துத் தின்னக் கருதி இருக்கையிலே

பையச் சிரிப்பொன்றைப் பக்கத்திலே கேட்டேன்.

என்னருகே யாருமே இல்லா நிலையினிலே

சன்னச் சிரிப்பொலியின் சங்காத்தம் யார்செய்தார்.?

என்றெண்ணி நானங்கே எவ்விடத்தும் பார்க்கையிலே

சின்னவடு மீண்டும் சிரிக்கத் தொடங்கியது.

ஏன்சிரித்தாய் மாவடுவே, ஏன்சிரித்தாய் சொல்லென்றே

நான்கேட்டேன். சற்றேதான் நாணிப்பின் சொல்லியது

அன்பா, உனக்குநான் ஆகாரம் ஆகுமுன்னே

ஒன்றுசொல்வேன், என்வார்த்தை உள்ளத்தால் நீகேட்க!

என்னை வடுவென்றே எண்ணாதே, உன்னருமை

இல்லாளின் தூதுவன்நான் என்பால் குறிப்பாலே

சொல்லிச் சொல் லாதுவிட்ட  தூதொன்றைச் சொல்லுகிறேன்.

அன்றொருநாள் வீதியிலே அம்பார மாய்க்கிடந்த

என்கூட்டத் தைப்பார்த்தாள் , என்முகத்தைத் தான்பார்த்தாள்

என்னைத்தான் பார்த்தாளோ எம்மை விரும்புகிற

உன்னைத்தான்  பார்த்தாளோ , உண்மையிலே நானறியேன்

அந்தக் குறிப்பினிலே யானறிந்த ஒன்றுரைப்பேன்

அந்த மனுஷனிதை ஆசையாய்த் தின்பாரே

வாங்கிடலாம் என்றெண்ணி மாவடுவாம் எம்மருகே

பாங்காய் அமர்ந்தாள், பசுமை நிறைந்ததுவாய்

சின்ன வடுவாய், சிதைவேதும் அற்றதுவாய்

தன்னிலையில் வெம்பாத் தரமுளதாய்த் தேர்ந்தெடுத்தாள்.

ஒவ்வோர் வடுவுள்ளும் உன்னையன் றோபார்த்தாள்.

அவ்வடுவை நீ மிகவும் ஆசையாய்த் தின்பதனைத்

தொட்டுப்பார்க் கும்போதே சொப்பனமாய்த் தான்கண்டாள்

கிட்டத்தில் பார்ப்பதுபோல் ஏதோ கிணுகிணுத்தாள்
வீட்டுக்கு வாங்கிவந்து வெம்பிடாமல் கொட்டிவைத்து

போட்டுச் சுவைக்கப் புறப்பட்டு வந்த மகள்

தன்னை விரட்டி ச் சரியாய்த் தரம்பார்த்து

மின்னும் படிக்கு விளக்கெண்னெய் மேல்தடவி

ஓர்நாள் முழுக்க உலர்த்திப்பின் சம்பாரம்

பார்த்துப் பதமாய்  பரவவிட்டுச் ஜாடியிலே

போட்டுக் கலக்கிப் புதிதாய் , முதல் முறையாய்

கூட்டுவது போலக் குழைந்து , பரபரத்து

உப்பிட்டு, உள்ளத் துணர்விட்டு , பின்னாளில்

சப்பிட்டுப் போகாமல் தக்கபடி நீரிட்டே

ஊறுகாயாக உனக்கனுப்பி வைத்துள்ளாள்

சாறு நிறைந்ததுவாய் சத்து மிகுந்ததுவாய்

பார்க்கின்ற போதே பரவச மூட்டுவதாய்

நேர்த்தியுள்ள எங்களை நீ தின்ற பின்னாலே

ஏதும் இடையூ றிழைத்திடவே கூடாதாம்

மாது சொன்ன  உத்தரவு, மாறவே கூடாது

உன்வயிற்றில் நாங்கள் உலாவரும் போதினிலே

முன் உள்ள கல்லை (galbladder stones), முறியடித்து நோயெதுவும்

வாராத வண்ணம் வகையாக்கிக் காப்பாற்றிச்

சீராக வைக்கவெனத் தேவியவள் கட்டளைகாண்.

வாக்கை நிறைவேற்றி வைப்போம், கவலாதே

ஊக்கத்தோ டுன்னை உலாவரச் செய்திடுவோம்

தின்று சுவைத்திடுக : தேக நலம்பெறுக

என்று சொல்லி  மாவடுவும் என்வாயில் ஏறியது

தின்றதென்ன மாவடுவா, தேனமுதா, நற்சுவைகள்

ஒன்றாய்த் திரண்டுவந்தே ஊறுகாய் ஆனதுவா?

உப்பி யிருந்த வடு உள்சுருங்கிப் போனபின்னே

செப்பவொண்ணாத் தீஞ்சுவையைத் தேக்கியதும் எப்படியோ?

உள்ளுக்குள் போகா உணவும், வடுமாங்காய்

அள்ளிக்கொண் டுள்ளே அமைதியாய்ப் போகிறதே

இந்தவடு போட்டகைக்கு என்ன கொடுக்கிறது?

சிந்தைசெய்தேன் ஏதும் தெரியவில்லை. தங்கத்தில்

காப்பென்றால் பூங்கை கனத்திடுமே! ஆதலினால்

பாப்புனைந்து என்றனது பாராட்டைச் சொல்லிவிட்டேன்

வாழ்க வடுமாங்காய் மாதரசி, எந்நாளும்

சூழ்க நலமென்றே சொல்லாலே வாழ்த்துகிறேன்.!

 

இலந்தை

1-3-89

 

பி.கு:மின்னஞ்சல் வந்த பிறகு கடிதம்  எழுதுவது அநேகமாக மறைந்துவிட்டது. அந்தக்காலத்தில் நான் என் மனைவிக்கு எழுதும் கடிதங்கள்  பெரும்பாலும் கவிதையாகவே இருக்கும். அவற்றையெல்லாம் மீண்டும் படிக்கிற போது(நல்ல வேளையாக அவை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன) கடித இலக்கியங்களாகத் தெரிகின்றன.

Siva Siva

unread,
Mar 12, 2026, 2:48:50 PM (2 days ago) Mar 12
to santhav...@googlegroups.com
அருமை!
மாவடுத் தூது!

இந்தவடு போட்டகைக்கு என்ன கொடுக்கிறது?

சிந்தைசெய்தேன் ஏதும் தெரியவில்லை. தங்கத்தில்

காப்பென்றால் பூங்கை கனத்திடுமே! ஆதலினால்

பாப்புனைந்து என்றனது பாராட்டைச் சொல்லிவிட்டேன் /

மணம் உலவாப் பாட்டு.
பணம் செலவாகாப் பாராட்டு!

வி. சுப்பிரமணியன்


On Thu, Mar 12, 2026 at 1:17 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

மாவடு மகாத்மியம்

 

என்னிதயம் ஆளுகிற என்னரசி, இக்கடிதம்

உன்னத மாவடுவின் ஊக்க வெளிப்பாடு

...

அன்பா, உனக்குநான் ஆகாரம் ஆகுமுன்னே

ஒன்றுசொல்வேன், என்வார்த்தை உள்ளத்தால் நீகேட்க!

என்னை வடுவென்றே எண்ணாதே, உன்னருமை

இல்லாளின் தூதுவன்நான் என்பால் குறிப்பாலே

...

Ram Ramakrishnan

unread,
Mar 12, 2026, 3:32:40 PM (2 days ago) Mar 12
to santhav...@googlegroups.com
அற்புதம், தலைவரே.

அருமையாகச் செய்த மாவடுவைச் சுவைத்த உணர்வு ஏற்பட்டது.

ஈற்றடி (அளவடி) நீங்கலாக, கலிவெண்பாவில் அருமையாக அமத்துள்ளீர்கள்

என்ன பாவகையாகக் கொள்ளலாம்?


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)



On Thu, Mar 12, 2026 at 1:17 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCYzKepWNifWsFFmfBZYovSZMs5KzRE_x4YceX%3DMaCHYg%40mail.gmail.com.

GOPAL Vis

unread,
Mar 13, 2026, 6:28:59 AM (yesterday) Mar 13
to santhav...@googlegroups.com
அருமை அருமை அருமை!

தூதெனவே வந்ததுமோர் சுவையாகிக் கரைந்தகதை!
ஏதுசொல இன்கனியாய்ப் பருவமடைந்(து) இன்னுமொரு
மரமாவோம் என்றறிறியா மடமையிலே விலைகொடுத்தார்
கரங்கண்ட பின்னாலே கடமைக்காங்(கு) அவியாகும்!
இத்தகைய உயிருலகில் ஏராளம்! என்செய்ய?
மத்தகத்தே கைகூப்பி மகேசன்முன் வைத்(து)அவற்றைப்
பசியாற்றும் கடனுக்குப் பரமனருள் என்றேற்றே
அசித்திடலாம் அவைநோக அரைகுறையாய் எறியாதே!

கோபால்


On Thu, Mar 12, 2026 at 10:47 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

மாவடு மகாத்மியம்

என்னிதயம் ஆளுகிற என்னரசி, இக்கடிதம்

உன்னத மாவடுவின் ஊக்க வெளிப்பாடு

. . . . . .  

Reply all
Reply to author
Forward
0 new messages