பழைய நாட்களில் நான் திஸ்கியில் எழுதி அவுட்லுக் எக்ஸ்பிரஸைப் பயன்படுத்தி அனுப்பிய மடல்களில் இடம்பெற்ற கவிதைகள் இவை. என்னிடத்திலேயே இவற்றின் பிரதி கிடையாது. என்னுடைய பழைய எழுத்துகளைக் கூடுமானவரை மீட்டெடுப்பது என்று களமிறங்கியிருக்கும் நண்பர்கள் எடுத்தவை இவை. இழந்ததற்காக நான் வருந்தியதுண்டென்றால், அவற்றில் இந்தக் கவிதைகளும் அடக்கம். இவை அனுபவங்கள். கனவனுபவங்கள் என்று வைத்துக்கொள்ளுங்களேன். உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
கனவு- (1): உன்னைப் போலவே..
உன்னைப் போலவே உன் அண்டை வீட்டானையும்...
ஓயாமல் சத்தமிடும்
கீழ்வீட்டு மின்விசிறி
புலித்தலை முளைத்த பூனைக்குட்டியாய்
எலித்தலை கொண்ட யானையாய் மாறி
பாயிற் படுத்துறங்கும் என்
உறக்கப் பரப்பெல்லாம்
ஓடிப்பிடித்தாடும்.
என்னைப் போலவே
அண்டை வீட்டானை
ஏன்
கீழ் வீட்டானையும்
நேசிக்கலாம்தான்.
சத்தமிடும்
மின்விசிறியை
என்ன செய்ய?
கனவு- (2): ...விழும்வரைக்கும்
சின்னக் குளம் ஒன்று
தெறிக்கும் தளும்பும்
திடீரெனக் கடலாகும்.
அலையொன்று வானெழும்பும்
கரை நிற்கும் என்னைக்
கட்டும் பிடித்திழுக்கும்
ககனவெளி விட்டெறியும்.
முகமற்ற நான் பறப்பேன்
முகில்தடவி மீன் தொட்டு
புள்ளிகளாய்த் தெரியும்
எல்லைசி கட்டிடமும்
பக்கத்தில்
மீனாட்சி கோபுரமும்
பின்னே விரைந்தேக
எங்கெங்கோ சுற்றிடுவேன்.
பட்டுப் பூச்சியைப்போல்
காற்றின் உடலெல்லாம்
குடைந்து குடைந்தெழுந்து
கனவில் மனம்பறக்கக்
கண்ணுறங்கும் உடல் முழுக்க
கட்டிலுக்கு ஓரடிமேல்
விட்டுச் சிறகடிக்க
மேல்மிதக்க மேல்மிதக்க.
அலை மீண்டும் தரையிறக்கும்.
கடலுக்கு நடுவினில் நான் --
கணுக்கால் வரைமுழுக.
பக்கத்தில் கண்ணுறங்கும்
என்பிள்ளை காலென்மேல்
தப்பென்று விழும்வரைக்கும்...
கனவு- (3): எப்படிச் சாத்யம்..
கடற்கரையில் நான் நிற்பேன்
கடலுக்கு உள்ளிருந்து
குட்டிப் பெண்குழந்தை
மூன்றிருக்கும் அவள் வயது
உடல் முழுக்க ஒன்றுமின்றி
கழுத்திலொரு தாலியுடன்
என்னுருவம் தனைநோக்கி
இரண்டு கரம் நீட்டி
ஓடிவரும் பொழுது
தலையணையின் ஈரம் - என்
கண்நிலைமை தனைச்சொல்லும்.
இடுப்பளவு கடல்நீரில்
என்னுருவம் தெரிகையிலே
எனைநோக்கி வருமதுவோ
அடிப்பாதம் வரைமட்டும்
நனைந்தோடி வருவதனை
எத்தனை நாள்பார்த்தும்
எப்படி இதுசாத்யம்
என்றுணர்ந்து கொண்டதில்லை.
--
அன்புடன்,
ஹரிகி.