கடவுள் வாழ்த்து
---
நிலையிலா உலகில் நீயெனைப் படைத்தாய்!
கலையிலே என்னுளம் கலந்திட வைத்தாய்!
அலையலை யாய்க்கவி ஆயிரம் பாடியுன்
அலகிலாப் புகழ்புவி அனைத்தும் பரப்புவேன்!
-------
தேனுறு கமலத் திருவடி போற்றி!
கானுற நடந்த திருவடி போற்றி!
வானுற உயர்ந்தோன் இணயடி போற்றி!
யானுற அருள்வோன் இணயடி போற்றி!
வையம் ஏத்தும் எழிலடி போற்றி!
தையாள் ஏந்தும் எழிலடி போற்றி!
ஐயன் அழகன் மலரடி போற்றி!
உய்ய உலகெலாம் மலரடி போற்றி!
குணத்துப் பெரியோன் தாளே போற்றி!
மனத்தே இனியான் தாளே போற்றி!
கணத்தும் நீங்கான் தாளே போற்றி!
வணத்துள் வண்ணோன் தாளே போற்றி!
திருவுடை நெஞ்சோன் தாளே போற்றி!
அருளுடைக் கடலோன் அடியே போற்றி!
இருளுடைத் தகற்றும் இணயடி போற்றி!
கருநிறக் கண்ணன் கழலடி போற்றி!
----
உலகெல்லாம் உன்கண்ணுள்!
உய்யவழியும் உன்னொளியில்!
நிலையில்லா உளத்தோரோ
நினதருளிலா மானிடர்கள்!
கலையேஎன் கருத்தெலாமுன்
கருணையேஎன் வேண்டுதலாம்!
அலைபாயா துளமுன்றன்
அடியிணையில் வைப்பேனே!
----
வாடாமலர் தேனார்குழல் மங்கைதனை உடையோனே!
வரையாம்திரு மலையில்திகழ் மாலே!பரம் பொருளோனே!
சேடாதிபன் மேலேயுறை சீரார்கடல் நிறத்தோனே!
சேணாய்முகில் துதித்தேகும் திருவேங்கடப் பெருமானே!
வீடாம்நின தடியேநினை அடியார்மனம் களிப்போனே!
விந்தைபெரும் விந்தையென வியப்பாருனைப் பணிவாரே!
கூடாதெது உள்ளம்தனைக் கூடச்செயும் பெரியோர்க்கே?
கோலம்புரி கோலமுடை எழிலே!எமக் கருள்வாயே!
----
மலராய் கனியாய் மணமாய் தருவாய் பரந்தோனே!
இலனாய் உளனாய் இருளாய் ஒளியாய் இருப்போனே!
நலமாம் பொருளாய் நினைவாய் உளமாய் நிறைந்தோனே!
உலகாய் அணுவாய் உணர்ந்தாய் எமக்கே அருள்வாயே!
----
எழில்தவழ உலகமைத்து எல்லையிலே கவிஞனையும்
கழியெண்ண உளமளித்துக் கனியெனவே கற்பனையும்
பொழிந்திடவே அமைத்தனையுன் பொன்னான அருளுடனே!
அழிந்திடாத படைப்பெலாமுன் அழகினையே பறைசாற்றும்!
-----
இயற்கை வருணனைப் பாடல்கள்
காலை
தாமரைப் புட்கள் தொழுதிட ஞாயிறு
பாமலர் ஆரம் ‘நா’மகள் சூட்ட
நீள்வரை சூழ்ந்த நள்ளிருள் ஏக
கணங்கணம் சிறிதாய்க் கட்டொளி பிரிய
மணம்தனைப் பரப்பும் மன்னியக் காற்றுடன்
பொதியம் தன்னில் பொழியும் நாற்றம்
கதியெனக் கலந்து சுதியுடன் கூடித்
தென்றல் எனவே சிறுகால் மிதக்க
குன்றிடாத் திரைகள் தோன்றிடும் கடலில்
செவ்வொளி யுடனே சேர்ந்திடும் நீல
வெவ்வொளி யில்லா நல்லொளி தண்மை
அளித்திட எழுவான்; களித்திடும் வானகம்
இருப்பதை அறியும் இவ்வுல கவனது
தருமொளி காணும் தருணம் பிறகே!
எழிலும் இயலும் தழுவிக் கொள்ளும்
காட்சியைக் காணக் காணுமோ ஆயிரம்
மாட்சிமை கூரிய மாவெழிற் கண்கள்?
----
வானக் குடும்பம்
செம்மை படர்ந்தது, சீர்விண் ணென்னும்
நம்மை மயக்கும் நங்கை முகமதில்
இறைவன் *கதிரெனும் இதழ்குவித் தவள்தன்
குறைவிலா எழிலுடைக் கன்னத் திலொரு
அமுதுறை அழகு அதர பானம்
தமதன்(பு) அளிப்பாய்த் தந்திட் டதுமே!
இரவின் கொடுமையின் இறுதியாய்ப் பனித்துளிக்
கண்ணீர் வானம் மண்ணிலே சிந்த
ஆதவன் அரவணைப்பில் ஆவியாய் மறையும்!
நாளே இரவு! நாளெலாம் கூடல்!
இன்பமே ஒளிக்கதிர்! இனிய மக்கள்
தண்மை அளிக்கும் மென்னிள முகில்கள்!
(3-ம் அடி: *கதிர் – கதிரவன்)
---
நிலவு
நீலத்திரைச் சேலையிலோர்
நித்திலம்போல் இன்பமவிழ்த்
தோலமிடும் கடற்புனலில்
ஓடமென மிதக்கின்றாய்!
கோலமெல்லாம் உன்னிடத்து
கூடித்திரண் டெழிற்கோலம்
ஞாலத்திற் கொளியூட்டென்
நெஞ்சத்துநீ தவழ்கின்றாய்!
---