வீர சுதந்திர மந்திரம் வந்தே மாதரம்
எப்பக் கத்தும் எதிரிகள்
ஏறிக் தாக்கும் போதிலும்
வெப்பம் வாட்டும் வெண்பனி
வெட்டிக் கொல்லும் போதிலும்
அப்ப ழுக்கில் லாதநம்
அன்னை நாமம் போற்றியே
சொப்ப னத்தில் கூடநாம்
சொல்வோம் வந்தே மாதரம் *
ஓடு கின்ற குரதியின்
ஓசை வந்தே மாதரம்,
நாடு நம்முள் மீட்டிடும்
நாதம் வந்தே மாதரம்,
வீடு நல்கும் நான்மறை
வேதம் வந்தே மாதரம்,
ஈடில் லாத மந்திரம்
இன்ப வந்தே மாதரம் *
அம்மா அம்மா என்னவே
அன்பு கூட்டும் மந்திரம்,
செம்மை யான சொந்தமாய்
தேசம் நம்மைக் காப்பதால்
இம்மண் மீது அனாதையே
இல்லை யாக்கும் மந்திரம்,
நம்முள் பொங்க வைக்கிற
நாதம் வந்தே மாதரம் *
சின்னச் சின்னக் கையினால்
தேடி வாயில் போட்டுநாம்
அன்று நின்ற மண்ணிது,
ஆத ரிக்கும் மண்ணிது,
நிறை கண்ணன் வாயிலே
தேர்ந்தே அண்டம் ஆனது,
அன்னை தன்னைப் போற்றியே
ஆர்ப்போம் வந்தே மாதரம் *
பள்ளிக் கல்வி தள்ளியே
பாய்ந்து பொங்கி அன்றுநாம்
வெள்ளைக் காரன் பூட்;டிய
விலங்கொ டிக்கப் பாடினோம்,
கொள்ளைக் காரர் நம்மவர்
கோடி கோடி சேர்க்கிறhர்
கள்ளர் வீய இன்றெழும்
கானம் வந்தே மாதரம் *
வீர மான சுதந்திரம்
வெல்ல வைத்த மந்திரம்
சூர ராகப் பற்பலர்
சூளு ரைத்த மந்திரம்
சார மான மந்திரம்
தாயைப் போற்றும் மந்திரம்
ஈர மான மந்திரம்
இதயமான மந்திரம்
இன்றைக்கோ,
உத்த ரத்தைச் சாய்க்கிறார்ர்
ஓடடி ஓடி ஏய்க்கிறார்
சத்த னைத்தும் மாந்தியே
சக்கை அள்ளி வீசுறார்
எத்த னைநாள் தாங்குவோம்
ஏமாற் றத்தில் ஏங்குவோம்
எத்தர் ஓயப் பாடுவோம்
இன்ப வந்தே மாதரம்
அன்று கொண்ட விலங்கினை
அறுத்துப் போட முடிந்தது
இன்று சொந்த மக்களே
இன்னும் பெரிய விலங்கினை
அன்னை கையில் பூட்டியே
ஆர்பாட் டங்கள் செய்கிறhர்
மின்னல் வாளாய் வெட்டவே
வேண்டும் வந்தே மாதரம்
கொட்டம் போட்டு மக்களைக்
குலைந டுங்க வைக்கிற
துட்டர் ஆட்டம் இன்னமும்
தொடர விட்டுப் பார்ப்பதோ ?
வெட்டிச் சாய்க்கும் கோடரி
வேர ருக்கும் வீரவாள்
சுட்டெரிக்கும் எரிமலை
சொல்வோம் வந்தே மாதரம்
உசுப்பு கின்ற மந்திரம்,
உயிர்கொ டுக்கும் மந்திரம்,
பசப்பு வார்த்தை பேசியே
பதுக்கு கின்ற பேர்களை
நசுக்கு கின்ற மந்திரம்
நலிவு போக்கும் மந்திரம்,
இசைக்க வேண்டும் இன்றுநாம்
இன்ப வந்தே மாதரம்
