இப்பொழுதும் நடக்குமா?

6 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Feb 3, 2026, 12:08:41 AM (4 days ago) Feb 3
to santhavasantham

தனிப்பாடல்


இன்றைக்கும் அப்படி உண்டா?

நான் சமீபத்தில் சென்னையில் தங்கியிருந்த போது, எனது இரசிகரான இளங்கவிஞன் முகுந்தன் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டான்.

“ ஐயா , நீங்கள் இன்னும் இரண்டு வாரத்தில் அமெரிக்காவிற்குத் திரும்பிப் போவதாகக் கேள்விப்பட்டேன். அதற்குள் உங்களைச் சந்தித்தாக வேண்டுமே!” என்றான்.

“ எப்பொழுது வேண்டுமானாலும் வா. இன்னும் ஒருவாரத்துக்கு வெளியில் செல்லும் நிகழ்ச்சிகள் இல்லை. வீட்டில் தான் இருப்பேன்” என்றேன்.

மறுநாளே வந்துவிட்டான்.

“ஐயா, உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும்” என்றான்

“கேள். எனக்குத் தெரிந்த அளவுக்கு விடையிறுக்கிறேன்” என்றேன்

“ சமீபத்தில் தனிப்பாடல் திரட்டுகள் இரண்டு தொகுதிகள் பார்த்தேன்.  கடைசியாகத் தனிப்பாடல்களைத் தொகுத்து 100 ஆண்டுகளுக்கு மேலிருக்கும் என்று தெரிகிறது. . இப்பொழுதெல்லாம் எவரும் தனிப்பாடல்கள் எழுதுவதில்லையா?” என்று கேட்டான்
. தனிப்பாடலுக்கு  என்று சில தகுதிகள் உண்டு..  பொதுவாக எட்டு வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இரண்டு வரிகளில் கூட உண்டு. சுவையாகவும், புதிராகவும் புதுமையாகவும் அமைய வேண்டும். சவாலை எதிர்கொண்டதாக அமைவனவும் உண்டு. இப்பொழுதும் பல கவிஞர்கள் எழுதியுள்ளார்கள். என்னுடைய நண்பர் அமரர்  சந்தக் கவிமாமணி தமிழழகன் நிறையத் தனிப் பாடல்கள் எழுதியுள்ளார். அவற்றை அவர் ஒரு முனைப்பாகவே எழுதினார்.. நான் பொறுப்பாளராக இருக்கும்  கூகுள் குழுமமாகிய சந்த வசந்தத்தில் பலர் எழுதியிருக்கிறார்கள். நான் எழுதியிருக்கிறேன். வேறு சில குழுமங்களிலும் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவற்றைத் தொகுப்பவர்கள் தான்  இல்லை

“தனிப்பட்டவர்கள் செய்யக் கூடாதா அய்யா?”

“ஏன் கூடாது?  அந்தக் காலத்திலே பல தனிப்பட்டவர்களும் தமிழ்ச்சங்கங்களைச் சேர்ந்தவர்களும் செய்திருக்கிறார்கள்.   தமிழ் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட பல ஜமீந்தார்களும், குறு மன்னர்களும் தமிழ்ச் சங்கங்களும்  மடாலயங்களும்  தொகுப்பவர்களை ஆதரித்திருக்கிறார்கள் .  ஆனால் இப்பொழுதெல்லாம் அந்த  ஆதரவு அருகி விட்டது.. தொகுத்தாலும் அதை வெளியிட  ஆதரவில்லை.  இன்னும் சில கொடுமைகளை நான் வெளியிலே சொல்ல விரும்பவில்லை”

“இப்பொழுது தொகுக்கக் கூடாதா?”

“தொகுக்கலாமே. இந்தக் காலத்தில் தொகுப்பது எளிது.  ஆர்வம் உள்ளவர்கள் குழு ஒன்றை அமைத்துத் தொகுக்கலாம்.. இணையம் வெகுவாகக் கை கொடுக்கும்.” என்றேன்

“தொகுக்கப் படாத தனிப்பாடல்கள் தங்களுக்குத் தெரிந்தால் ஒன்றிரண்டு சொல்லுங்களேன்” என்றான்

“தமிழழகன்  அவரே  அவரது பாடல்கள் பலவற்றை என்னிடம் படித்துக் காட்டியிருக்கிறார். வெகுநாளாகிவிட்டதாலே எனக்கு இப்பொழுது நினைவில்லை. அருமையான பாடல்கள் பல அவற்றில் உண்டு. அவர் நூலாக வெளியிட்டதாகத் தெரியவில்லை.  காளமேகம் போன்ற பெரிய புலவர்கள் பாடிய சில தனிப் பாடல்கள் சில  இன்னும் செவிவழியாகவே உள்ளன. எந்தத் திரட்டிலும் இடம் பெறவில்லை. நான் தான்  காளமேகத்தின் ஒரு பாடலை வெளிப்படுத்தியிருக்கிறேன்”

“காளமேகத்தின் பாடலையா?” என்று ஆச்சர்யத்தோடு கேட்டான் அவன்

“ஆமாம்” என்றேன்.

“ஐயா, கேட்க ஆவலாக இருக்கிறது சொல்லுங்களேன்” என்றான்.

ஆமாம். மதுரையை அடுத்த வேம்பத்தூர் என்னும் ஊர் பரம்பரையாகவே புலவர்கள் வாழும் ஊர். இன்றைக்கும் அங்கே புலவர்கள் வாழ்கிறார்கள். சிலேடைப்புலி வேம்பத்தூர் பிச்சுக்கவிராயர் மிகவும் பிரசித்தம்.  

1962ம் ஆண்டு. தூத்துக்குடியில் வேம்பத்தூர் புலவர்கள் பரம்பரையில் வந்த  அம்பிகாபதி பாரதியைச் சந்திக்க நேர்ந்தது, அவர் ஊருக்குக் கிளம்பிக்கொண்டிருந்த போது காகம் இடம் போயிற்று. அது சகுனத் தடை. உடனே அவர் என்னைப் பார்த்து” இராமசாமி, நீ ஒரு கவிஞன்.  . நீ கவி சொன்னால் காகம் கேட்கும் " வாயசமே போவாய் வலம்" என்று வெண்பாப்பாடு என்றார். அப்பொழுது எனக்கு இருபது  வயது. அந்த ஈற்றடிக்குப் பாடல் எழுதினேன். அந்தப் பாடல் இதோ:  இதில் வேடிக்கை என்னவென்றால் கவிஞன் வேண்டுகோளுக்குச் செவி மடுத்துக் காகம் வலம் போனது

 

சுற்றம் அழைத்துச் சுவைத்துப் பகுத்துண்ணும்
பெற்றம் உடைய பெருமையுளாய் - கற்றகவி

ஏயும் சகுன இடரின்றி ஊர்செல்ல

வாயசமே போவாய் வலம்.

 

 

 

 

காகம் வலம் போகப் பாடிய பாடலுக்குப் பரிசாக அம்பிகாபதி பாரதி எனக்குச் சொன்ன பாடல் தான் அச்சில் ஏறாத காளமேகத்தின் தனிப்பாடல்

வேம்பத்தூருக்குக் காளமேகம் வந்தபோது காளமேகத்தைத் திணறடிக்கவேண்டும் என்று அவ்வூர்ப் புலவர்களில் ஒருவர் கொடுத்த ஈற்றடி இது "கண்டங்கத்தரிக்கொத்துக் காய். காட்டில் அவர்கள் நடந்துகொண்டிருந்த போது கண்டங்கத்தரி கொத்துக்கொத்தாய்க் காய்த்திருந்தது. அதைப்பார்த்துக் கொடுத்த ஈற்றடி. உடனே காளமேகம் மிக அழகான பின்முடுகு வெண்பாப்பாடினார்.

. கண்டங்கத்திரி ஒரு  ஒரு சகல ரோக நிவாரணி.

 

வேம்பத்தூர் புலவர்கள் கொடுத்த ஈற்றடிக்குக் காளமேகப் புலவர் பாடிய பின் முடுகு வெண்பா


விரவு
சிறுகுயிலே, வெண்மதியே மாரன்

வரவு தனித்திருக்க மாட்டாள் - இரவதனில்

கண்டங்கத் தரிக்கொத்துக் காயங்கம் தரிக்கப்பின்

கண்டங்கத்தரிக்கொத்துக் காய்

 

பொருள்

இந்தப் பெண்ணுடைய கணவன் வெளியூர் சென்றிருக்கிறான். இந்த நேரத்தில் போய் கத்திக்கொண்டிருக்கக்கூடிய , குயிலே, காய்ந்து கொண்டிருக்கக்கூடிய வெண்மதியே, இந்த இரவுப்போதில் ம்ன்மதன் அம்பின் தொல்லையை அவளால் தாங்க முடியவில்லை. அவள் அங்கம் காய்கிறது. எனவே இப்பொழுது கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். அவள் கணவன் திரும்பி வந்த பிறகு குயிலே நீ உன் கண்டத்தினால் கத்து, வெண்மதியே உன் அரிக்கொத்து(கிரணக்கொத்தால்) எவ்வளவு வேண்டுமானாலும் காய்ந்துகொள்.” என்பது இப்பாட்டின் பொருள்.

அம்பிகாபதி பாரதி  ஊருக்குக் கிளம்புமுன் என்னுடன் ஒருநாள் தங்கியிருந்தார். 

ஒரு பெண்  அவரிடம்  பெண்ணுக்கும் வளையலுக்கும்  சிலேடை பாடுங்களேன்” என்று கேட்டாள். சிரித்துக் கொண்டே  ஆசு கவியாக அவர் சொன்ன பாடல்.

“பலநிறம் மேவியே, பண்பாய் வளைந்து
தலமிசை கரமுற்ற தாலே- அலைகடல்சூழ்
தண்ணார் புவியில் தக்கமங்கை மாவளையல்
கண்ணாரக் கண்டு களி” 

 

அவருடைய தந்தையார்  சௌந்தர பாரதி  ஒருதுறைக்  கோவை என்ற நூலுக்கு அகமாகவும் புறமாகவும் உரை எழுதிய பெரியவர்.  அவர் எழுதிய சில பாடல்களை அம்பிகாபதி பாரதி என்னிடம் சொன்னார்.

 

திருப்பனந்தாள் மடக் கட்டளைத்தம்பிரான் சொக்கலிங்கத்தம்பிரான் அவரைப் பார்த்து”  நீரில்லை, சேறில்லை, தாமரை பூக்குமா? பூக்கும் என்று பாடவேண்டும் “ என்றார்.  உடனே அவர் பாடியது

ஏத்திடும் மெய்யன்பர் இதயத் தடாகத்துள்

பூத்தொளிரும் ஈசனிடப் பொற்கமலம் – தோத்திரஞ்செய்
சீர்மருவும் தண்டலைசூழ் தென்பனசைக் காவலனாம்
கூர்மதியாய் நீயறிந்து கொள்”

இன்னொரு அன்பர் கொய்யப்படுகிற பழத்தைக் கொய்யாப் பழமென்று ஏன் சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.

“சௌந்தர பாரதி சொன்ன விடை

 

“கொய்யும் பழமதனைக் கொய்யாப் பழமெனவே
வையகத்தார் கூறும் வழக்கென்னே?- ஐயமின்றி
விந்தையுடன்  காராட்டை வெள்ளா டெனத்துணிந்து
புந்தியினாற் சொல்லுதலைப் போல்” என்று சொன்னாராம்.

வேம்பத்தூரில் இன்றும் புலவர் பலர் இருக்கிறார்கள்.  கேட்டால் பல தனிப் பாடல்கள் கிடைக்கும். 

“ இவற்றையெல்லாம் தொகுக்க வேண்டும் ஐயா. நீங்களும் எழுதியிருப்பதாகச் சொன்னீர்களே! அப்பாடல்களைச் சொல்லுங்களேன்.” என்றான் முகுந்தன்.

 

“அந்தக் காலத்திலே  அதாவது 40 ஆண்டுகளுக்கு முன் என்று வைத்துக் கொள்ளேன். நானும் சக கவிஞர்கள் சிலரும் கவியரங்குகளில் கலந்து கொள்வதற்காக  பல ஊர்களுக்குச் செல்வதுண்டு. இரயிலில் பயணம் செய்யும் போது  ஒருவர் ஏதாவது கேட்க இன்னொருவர் பதில் சொல்ல என்று சுவையான பாடல்கள் சொல்பவதுண்டு. சில அதீத சிருங்காரக் கவிதைகளாகவும் இருக்கும். சிலவற்றை வெளியிலே சொல்ல முடியாது. சில சமயங்களில் அறையில் கவிஞர்கள் ஓய்வாகத் தங்கியிருக்கும்  போதும் கவிதைகள் சொல்வதுண்டு. அவற்றிற்கு இன் கேமரா கவிதைகள் என்று பெயர்.  

ஒரு முறை என்னிடம் ஒரு கவிஞர் “ இலந்தை, சேலை அவிழ்ந்தது” என்று தொடங்கி ஒரு  வெண்பா  சொல்லுங்கள் என்று  சொன்னார்

இரண்டு தினங்களுக்கு முன்புதான்   சமீபத்தில் திருமணமாகியிருந்த  ஒரு பெண்ணின்   கணவன்  வெளியூர் சென்றிருந்தான்.   அப்பொழுது அவளது சேலை அவிழ்ந்தது.

சேலை அவிழ்ந்தது, செய்ய நகத்தழும்புக் 
கோலம் தெரியக் குமைந்தனள்- சாலவே
ஓடிய நாட்கள் உளத்தை வருத்திட 
வாடியே நின்றாள் மலர்.

அதே தொடக்கத்தில் இன்னொரு பாடல்.  இதில் விரசம் கொஞ்சமும் கிடையாது

 திரௌபதியைத் துகிலுரிதல்

சேலை அவிழ்ந்தது தீயதுச் சாதனன்
மேலும் இழுத்து வியர்த்தனன்- ஓலமிட்டே
கண்ணா எனவே கதறினாள், பொங்கியதே

வண்ணப்பொன் சேலை வளர்ந்து

இதை நான்  சந்தவசந்தத் தளத்தில் இட்டிருந்த போது கவிஞர்  ஹரிகிருஷ்ணன்   இதே தொடக்கத்தில் அருமையான  வெண்பா ஒன்று எழுதியிருந்தார்.

சேலை அவிழ்ந்தது; தீண்டிச் சரிசெய்தான்
காலைக் கடமைசெய் காளையவன்கோலக் 
கடைப்பொம்மை ஒன்றுக்குக் காஞ்சிபுரம் பட்டுப்
புடைவை உடுத்துகின்ற போது-

புலவர் இராம மூர்த்தி எழுதிய பாடல்

சேலை அவிழ்ந்தது சீண்டிய பிள்ளையோ
பாலுக்  கழுதான்! பரிவோடே - மேலும்
விலக்கியே ஊட்டினாள் வேண்டும் அமுதை
நலத்துடன் உண்டான் நனி!

இதைப் படித்து விட்டு  நண்பர் ஒருவர்  வேட்டி அவுருது என்று தொடங்கிப் பாட வேண்டும் என்றாராம்.

அன்பர் கவிஞர் அனந்த் அதற்கு மிக அழகாக எழுதினார்

”வேட்டி அவுருதுங்க!” என்றுவியா பாரிசொலக்

கேட்டதுமென் கைஇடுப்பைத் தொட்டவுடன் ”நீர்எடுத்த

வேட்டி அவுருதென்றேன் வேண்டுமெனில் வேறொன்றைக்

காட்டுகிறேன் பாரு”மென்றார் காண்

 

ஒரு சமயம் ஓரன்பர் என்னிடம்   வெண்பா விரசமாகத் தோன்ற வேண்டும். ஆனால் விரசமாகஇருக்கக் கூடாது. அப்படி ஒன்று எழுதுங்களேன் “ என்றார்.

அதற்கு நான் எழுதியளித்த பாடல். ஒரு குழந்தை தாயிடம் பால் குடிக்கிற காட்சி.

கொங்கை பிடித்திழுப்பான், கூடவே வாய்புதைப்பான்
எங்கேயும் முத்த இதம் பெறுவான்   சங்கையின்றி
ஆடையும் இன்றி அலைவான், இதைப்பார்த்துப்

பீடையெனத் திட்டப் பெறான்  .

 

“சிலேடைப் பாடல்கள், எதிரொலிப் பாடல்கள்,  சமிக்ஞை கொடுக்கப்பட்டுப் பாடிய  பாடல்கள்,  அடிமுடிப் பாடல்கள் , சாமர்த்தியமான பாடல்கள் என நிறையக் கிடைக்கும். சந்தவசந்தத்தில் தேடினால் நிறையப் பொறுக்கலாம். வேறுபல தளங்களிலும் கிடைக்கும்” என்றேன்

 

தனிப்பாடல் போலவே எனக்கு இன்னொரு கேள்வியும் இருக்கிறது. அந்தக் காலத்தில்  திருநாவுக்கரசர்  கோவில் கதவு திறக்கப் பாடினார். சம்பந்தர் மன்னன் வலி தீர்க்கப் பாடினார். அவை அந்தக் காலத்தில் நடந்தவை. இந்தக் காலத்தில்தமிழில்  கவிதை சொல்லி நிகழ்த்திக் காட்டிய நிகழ்ச்சிகள் உண்டா?” என்று கேட்டான்

“ தமிழ் வடமொழியைப் போலவே மந்திர சக்தியுள்ள  மொழி. அன்றென்ன, இன்றைக்கும்  தமிழ் நடத்திக் கொடுத்த நிகழ்ச்சிகள் பல உண்டு. அதைப் பற்றிச்  சாப்பாட்டுக்குப் பிறகு சொல்கிறேன். வா. சாப்பிடப் போகலாம்” என்ற சொல்லி அழைத்துச் சென்றேன்.

 

இலந்தை

 


Ram Ramakrishnan

unread,
Feb 3, 2026, 9:42:31 AM (4 days ago) Feb 3
to santhav...@googlegroups.com
மிக அருமையான பதிவு, தலைவரே.

எப்பேர்ப்பட்ட கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள் என்றுணரச் செய்த அற்புத இடுகை.

ரசித்தேன் மிகவே.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 3 Feb 2026, at 12:08 AM, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBBJrLXZ4fsODeZ7kto2iTzWqpLjCHwgyzupo0UcUMO%3DBw%40mail.gmail.com.

Siva Siva

unread,
Feb 3, 2026, 11:35:48 AM (4 days ago) Feb 3
to santhav...@googlegroups.com
Very nice recollection!

V. Subramanian

On Tue, Feb 3, 2026 at 12:08 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

தனிப்பாடல்


இன்றைக்கும் அப்படி உண்டா?

நான் சமீபத்தில் சென்னையில் தங்கியிருந்த போது, எனது இரசிகரான இளங்கவிஞன் முகுந்தன் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டான்.

....

ஒரு சமயம் ஓரன்பர் என்னிடம்   வெண்பா விரசமாகத் தோன்ற வேண்டும். ஆனால் விரசமாகஇருக்கக் கூடாது. அப்படி ஒன்று எழுதுங்களேன் “ என்றார்.

அதற்கு நான் எழுதியளித்த பாடல். ஒரு குழந்தை தாயிடம் பால் குடிக்கிற காட்சி.

...

Arasi Palaniappan

unread,
Feb 3, 2026, 11:47:06 AM (4 days ago) Feb 3
to சந்தவசந்தம்
அற்புதம் தலைவரே!

Swaminathan Sankaran

unread,
Feb 3, 2026, 3:14:50 PM (3 days ago) Feb 3
to santhav...@googlegroups.com
அருமையான பதிவு.
மிக, மிக ரசமாகவும், ரசிக்கும்படியாகவும் இருக்கிறது.
நன்றி.

சங்கரன் 



--
 Swaminathan Sankaran
Reply all
Reply to author
Forward
0 new messages