தென்நைமிசவரசே வரமருள்!
( கட்டளைக் கலித்துறை)
அடியார்க்கடியான்
(புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்)
வாழ்வை விரிசெயத் தென்நைமி சத்தில் வரமெனவே
பேழ்வாய் சிரிப்பில் பலரை மயக்கும் பெருமையனே
ஆழ்வார் அழகுத் தமிழில் மயங்கிடும் அன்புடையாய்
ஆழ்வோம் தினமுன் கருணை விழிகள் அருளதிலே 1
அன்னம் நமக்கவன் நாம வனன்னம் அதிசயமே
முன்னம் முழுமுதல் மூவு லகாளும் முகிலுருவே
தென்நை மிசம்வாழ் தகவுடைத் தீர்த்தமே தொல்பொருளே
அன்னம் மடியுடை அன்பே அடைந்தோம் அருளெமக்கே 2
வண்ணம் புதிதாய் வருசிங்கா நும்மை வழுத்தினமே
வண்ணம் இதுபோல் புவியில் இருக்க வழியுளதோ
வண்ணம் எதுவோ அதிலுனைச் சேர வகையிடுவாய்
வண்ணம் தருதென் நயிமிசா வாழ்வின் வழித்துணையே 3
(முதலடி வண்ணம்.வடிவு ; இரண்டாமடி .குணம் மூன்றாம் அடி .சாதி நான்காம் அடி அழகு)
உள்ளம் நிலைத்து நலமெலாம் எண்ண உதவிடுவாய்
கள்ளம் தவிர்த்த தினங்கொளக் காப்பாய்க் கரமிடுவாய்
வள்ளல் அருளில் இரவில் உறக்கம் வளர்த்திடவே
துள்ளும் மனத்தில் நரசிங்கா சொல்லத் தொடரருளே 4
நகைத்த முகமே நலன்செய நின்றோம் நடைதனிலே
பகைத்த வினையே பலதிசை ஓடிப் பறந்ததுவே
திகைத்த வெமையே திறம்படச் செய்தவோர் தீங்கரும்பே
அமைத்த திருத்தென் நமிசமே கண்டோம் அருளெமக்கே 5
திருவுடைத் தேவே திகழ்ச்சக் கரத்தாய் தெருளுடைத்தாய்
அருளுடைத் தென்நை மிசம்வளர் வேள்வி அதிசயனே
கருடனைத் தூய்க்கொடி கொண்ட குழகனே கற்பகமே
உருவொளி ஓங்குதென் நைமிசா உன்தாள் ஒளிர்ந்தனமே 6
செயல்நும் அருளெனில் நற்பலன் நும்முடைச் சொந்தமன்றோ
இயல்விரி முத்தமிழ் ஆழ்வார் இதயத்தின் இன்னருளே
புயல்நிற வண்ணா புகுந்தோம் உனதடி புக்கவர்க்கே
வயல்சூழ் இடமுடைத் தென்நை மிசமது வாழ்விடமே 7
திருமுடி யொன்றே உரைசெயும் தேவாதி தேவனென்று
திருமடி காண அருளுண் டெனவேயாம் தேர்வதுண்டே
ஒருபடி உன்றன் குணமெலாம் உள்ளி உயர்வதுண்டோ
வருகுடி உய்யத்தென் நைமிசம் சேர்ந்தாய் வணங்கினமே 8
ஏற்கும் உனதெழில் வையத்த னைத்தும் எடுத்தியம்பும்
ஏற்கும் மனமதைத் தாவென் றிறைஞ்சியாம் இங்கிருக்க
ஏற்கும் புகழெலாம் எங்கள் மனத்தில் எழுந்திடவே
ஏற்கும் உனபாதம் தென்நைமி சத்தா இயல்பினிலே 9
வேதச் சிரசே விரித்த றிவிக்குமுன் விந்தையெல்லாம்
பாதச் சிறப்பை இதிகாசம் காட்டிடும் பண்புடைத்து
நாத வுனக்காள் எனத்தென் நயிமிசம் சேர்ந்தவெம்மை
ஆதி வினைபோக் கியடி யிருத்தி அருளிறையே 10
அடிய னெனவைத் தருள்தென் நமிசத்(து) அரியெனத்தான்
அடியைப் புகழ்ந்தே அருள்வேண்டி அண்டி அடையநிற்கும்
அடியார்க் கடியன் இடும்பா இவைபத்தும் ஆளரிதன்
அடியன் எனவாக்கி ஆழ்த்தும் அவனடி ஔடதமே 11