தேடிச் சோறு நிதம் தின்று - விளக்கவுரை

8,126 views
Skip to first unread message

Anand Ramanujam

unread,
Jan 2, 2023, 7:33:27 PM1/2/23
to santhav...@googlegroups.com


"தேடிச் சோறு நிதம் தின்று" என்னும் பாரதியின் எழுச்சிமிகு பாடல் சொல்ல வரும் கருத்தினை நான் உணர்ந்தவாறு விளக்க முயன்று இக்கட்டுரைத்தொடரை எழுதுகின்றேன். இவ்விழைக்கு அன்பும் ஆதரவும் அளிக்குமாறு வேண்டுகிறேன்.

பாடல் வரிகள்

தேடிச் சோறுநிதந் தின்று -- பல
  சின்னஞ் சிறுகதைகள் பேசி -- மனம்
வாடித் துன்பமிக உழன்று -- பிறர்
  வாடப் பலசெயல்கள் செய்து -- நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி -- கொடுங்
  கூற்றுக் கிரையெனப்பின் மாயும் -- பல
வேடிக்கை மனிதரைப் போலே -- நான்
   வீழ்வே னென்றுநினைத் தாயோ?

- மகாகவி பாரதியார்


பாடல் விளக்கம்

முன்னுரை:

உலகெலாம் ஓர் பெருங்கனவு அஃது உளே
உண்டு உறங்கி இடர் செய்து செத்திடும்
கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கை
ஓர் கனவிலும் கனவாகும்

- பாரதி (சுயசரிதை)

"உலகம் முழுதும் ஒரு பெரிய கனவுத் தோற்றம்.  அந்தப் பெரிய கனவுக்குள் ஒரு சிறு கனவுதான் மனித வாழ்க்கை.  இந்தக் கனவை நிஜமென்று எண்ணி உண்டு உறங்கி இடர் செய்து செத்திடும் மனிதர்கள், நெருப்பைக் கனியென்று நினைத்து அதில் வீழ்ந்து மடியும் விட்டில் பூச்சிகள் போன்றவர்கள்." - இந்த மெய்ஞ்ஞானப் புரிதலுடன் தொடங்குகிறது பாரதியின் சுயசரிதைப் பாடல்.  தான் தெளிந்துணர்ந்த இவ்வுண்மையை உலகத்திற்கு எடுத்துரைக்க முனைந்தான் பாரதி. 'ஊருக்கு நல்லது சொல்வேன், எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்' என்று உபதேச மொழி அளித்தான்.  'நெஞ்சு பொறுக்கு திலையே' என்று உணர்வெழப் பாடினான். ஆனால், தனது சொற்கள் சமுதாயத்தில் எந்த விதமான மாற்றத்தையும் விளைவிக்காததைக் கண்டு கொதித்தான்;  மனம் வருந்தினான். இந்த வீண்படு பொய்யை விரும்பிடும் மனிதர்களின் இழிநிலையைத் தெய்வத்திடம் சொல்லி முறையிட்டான். இவ்வேடிக்கை மனிதர்களைப் போல் தன்னையும் வீழ்ந்து மடிய விடாமல், சொல்லில் சுடரும், தோளில் வலிமையும், வையத் தலைமையும் அருள வேண்டினான்.  இப்படிச் சிறுமை கண்டு பொங்கும் உணர்ச்சிப் பிரவாகமே, துதியாய் ஒலிபெற்று 'தேடிச் சோறு நிதம் தின்று' என்னும் 'யோக சித்தி' பாடலாக உருவெடுத்தது.     

'நல்லதோர் வீணை'யாக இறைவனால் படைக்கப்பட்ட மனிதனின் வாழ்க்கை தன்னலமென்னும் திரை மூட, நரை கூட, பிணி சேரக் காலனுக்கு இரையாக முடிந்து விடக் கூடாது. இந்த அக்கறையும் அன்பும் சேர்ந்து இடித்துரைக்கும் பாங்குடன் எழுந்த ஆவேச வெளிப்பாடே 'தேடிச் சோறு நிதம் தின்று'  என்னும் இந்தப் பிரார்த்தனைப் பாடல். 

பராசக்தியைப் பார்த்துப் பாரதி பாடிய இந்தப் பாடல், நமக்குள் இருக்கும் உள்மன அழுக்குகளையும் குற்றம் குறைகளையும் அப்பட்டமாகச் சுட்டிக் காட்டும் நிலைக்கண்ணாடி போலவும் திகழ்வதை யாரும் மறுக்கமுடியாது. 'தேடிச் சோறு நிதம் தின்னும்' விலங்குகளின் பொதுப் பண்புகளைப் பின்பற்றி வாழ்ந்து பின் மாண்டு போய்விடக்கூடாது. மனித வாழ்வு தாவர வாழ்விலிருந்தும் விலங்கின வாழ்விலிருந்தும் மாறுபட்டுப் பயனுள்ள செயல்கள் செய்து வாழ்ந்ததற்கான அடையாளத்தை நிலைநிறுத்த வேண்டும். பாரதியார் காட்டும் இந்த முக்கியமான வாழ்க்கைப் பண்பை நாம் உணர வேண்டுமென்றால், இதை வெறும் தோத்திரப் பாடல்தானே என்று அலட்சியமாக நோக்காமல், இப்பாடல் அறிவுறுத்தும் உன்னதமான வாழ்நெறியைப் புரிந்து கொள்ளுதல் அவசியம்.

வாழும் வாழ்வைப் பயனுள்ளதாக்காமல் வீணடிக்கும் மனிதர்களைப் பார்த்து ஏளனமும், வெறுப்பும், மனவேதனையும், 'இவர்கள் திருந்தி வாழ மாட்டார்களா' என்னும் ஏக்கமும் ஒருங்கே வெளிப்படும் இப்பாடலின் உட்பொருளை இக்கட்டுரையில் நாம் சற்று விரிவாகக் காண்போம்.


- இரா. ஆனந்த்

Girija Varadharajan

unread,
Jan 2, 2023, 7:58:05 PM1/2/23
to santhav...@googlegroups.com

Anand ramanujam,

 

Good beginning. Waiting for subsequent postings.

 

A K Varadharajan

 

Sent from Mail for Windows

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/DF9DA15B-83F9-43A6-A9FA-D86844E1FC4C%40gmail.com.

 

Anand Ramanujam

unread,
Jan 2, 2023, 8:14:35 PM1/2/23
to santhav...@googlegroups.com
Thank you very much for your support!

-  Anand

Kaviyogi Vedham

unread,
Jan 2, 2023, 9:38:14 PM1/2/23
to santhav...@googlegroups.com
very good viLakkam. vazga,
 yogiyar

Anand Ramanujam

unread,
Jan 2, 2023, 9:54:12 PM1/2/23
to santhav...@googlegroups.com
யோகியாருக்கு மிக்க நன்றி!

- இரா. ஆனந்த்

Anand Ramanujam

unread,
Jan 3, 2023, 8:02:03 AM1/3/23
to santhav...@googlegroups.com

இருவகைத் தேடல்கள்

'தேடி உனைச் சரணடைந்தேன் தேச முத்து மாரி' - சக்தியிடம் சரண்புகும் இந்தப் பாடல் வரியில் வெளிப்படும் தேடல் ஆன்மீகத் தேடல்; ஞானம் முதிர்ந்த மனத்தினால் கடவுளை நாடும் தேடல்;  பராசக்தியின் அருளை மட்டுமே விரும்பி அன்புத் திரியிட்டு உணர்வென்னும் விளக்கேற்றி உள்ளத்தில் தேடும் தேடல்.  ஆனால், 'தேடிச் சோறு நிதம் தின்று' வாழும் மனிதர்களின் இழிவான தேடலோ, லெளகிகத் தேவைகளை மட்டும் பூர்த்திசெய்ய திரவியம் தேடித் திரிந்து உழலும் தேடல்;  குறிக்கோளற்ற வாழ்வினால் திசைதடுமாறி அலையும் தேடல்; ஆன்ம நாட்டம் இல்லாமல் வெறும் பொருள்வேட்கை மிகுந்த தேடல். 

'ஆறறிவு அதுவே அவற்றொடு மனனே' என்பார் தொல்காப்ப்பியர்.  மனத்தேடல், பணத்தேடல் என்னும் இந்த இருவேறு தேடல்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்து, மனமாகிய ஆறாவது அறிவை நன்முறையில் பயன்படுத்தும்போதுதான் மனிதன் உயர்நிலையை அடைகிறான்; 'தேடிச் சென்று திருந்தடி ஏத்தும்' பக்குவத்தைப் பெறுகிறான். அத்தகைய உயர்ந்த தேடலின் முடிவில் 'சென்றே புகும் கதி இல்லை' என்ற புரிதலுடன் தேடலும் அசைவும் அற்ற நன்னிலையும் வாய்க்கப்படுகிறான். இந்தப் பேருண்மையை உணர்ந்தால் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர்களும் விழிபெற்று உயர முடியும்; ஈயும் கருட நிலைக்கு முன்னேற முடியும். விழிப்புற்று உயர்ந்த இந்நிலை அனைவருக்கும் வாய்த்து, ஊரும் உலகமும் 'தொல்லை வினை தரும் தொல்லை அகன்று' துலங்கவேண்டும் என்று விழையும் தன்னலமற்ற பார்வையும் பாரதியின் 'தேடிச் சோறு நிதம் தின்று'  என்னும் இந்தப் பாட்டில் காண முடிகிறது. 

பாரதி காட்டுகின்ற இந்தப் பரிவும் கண்டிப்பும் தாயுமானவர் வார்த்தைகளிலும் மிளிர்வதைக் காணலாம்.  "நிலையில்லாத உலக வாழ்க்கையை மெய்யென்று நம்பி வாழும் மதியிலா மனிதர்களின் வாழ்வொழுக்கத்தைப் பற்றி நான் என்ன என்று சொல்வேன்?  அவர்களுடைய பொழுதுபோக்கு என்னவென்றால் தம் பொய்யான உடலைப் பெருக்கும் பொருட்டு  உணவைத் தேடி அலைந்து திரிதல். பின்பு உண்ட களைப்பு தீரப் படுத்து உறங்குதல்.  இவ்வாறு வாழ்தல் தம்மையும் ஊரையும் ஏமாற்றும் வஞ்சனை செயல்தானே? அன்றி இது பெரிய தவச்செயலாகுமா? இவ்வாறு இவர்கள் வாழ்வை வீணடிப்பது, கண்பார்வை இல்லாத குருடர்களுக்குக் கூட வெளிப்படையாகத் தெரியுமே! அப்படியிருந்தும் இந்த வீணர்களைக் கண்டிப்பார் யாரும் இல்லையா?  இம்மாதிரி மனிதர்களை விட்டு விலகி அவர்கள் முகத்திலேயே விழிக்காமல் நான் தனித்து நிற்கும் காலம் எக்காலம்? " என்று கேட்கும் தாயுமானவரின் பாடல், பாரதியின் 'தேடிச் சோறு நிதம் தின்று' கவிதையின் மூலப் பாடல் போன்று தோன்றுவதை ஒப்பு நோக்கி மகிழலாம்.

பொய் திகழும் உலக நடை என்சொல்கேன்! என்சொல்கேன்!
பொழுதுபோக்கு ஏது என்னிலோ
பொய் உடல் நிமித்தம் புசிப்புக்கு அலைந்திடல்
புசித்தபின் கண் உறங்கல்
கைதவம் அலாமல் இது செய்தவம் அது அல்லவே
கண்கெட்ட பேர்க்கும் வெளியாய்க்
கண்டது இது விண்டு இதைக் கண்டித்து நிற்றல் 
எக்காலமோ! அதை அறிகிலேன்
- தாயுமானவர்

தாயுள்ளம் படைத்த தாயுமானவரையே வருந்தி விலக வைக்கும் வேடிக்கை மனிதர்களை நோக்கித் தவயோகியாகிய திருமூலர் இவ்வாறு விளிக்கிறார்: "உழைப்பின்றிச் சோற்றினை உண்டு வயிற்றை நிரப்பும் பொருட்டுப் பொய்யான தவவேடங்களைப் பூண்டு மக்களை மயக்கி அச்சுறுத்திப் பிழைப்பு நடத்தித் திரியும் பேதைகளே!"

ஆடம்பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்!
                        - திருமூலர் திருமந்திரம்

'அன்ன விசாரம் அதுவே விசாரம் அது ஒழிந்தால், சொன்ன விசாரம் தொலையா விசாரம்' என்று பட்டினத்தடிகள் சொல்வதையும் இங்குக் கருத்தில் கொள்ளலாம். அதாவது, "நம் வாழ்வில் ஏதாவது ஒரு கவலை இருந்து கொண்டே இருக்கிறது. முதலில் உணவு கிடைக்கவேண்டுமே என்னும் கவலை. அந்தக் கவலை தீர்ந்தபின் பொன் பொருள் சேர்க்கவேண்டுமே என்னும் கவலை. பின்னர் நல்ல மனையாள் அமையவேண்டுமே என்னும் கவலை. இவ்வாறு கவலைகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றிக்கொண்டே இருந்தால் எவ்வாறு நாம் வாழ்வில் உயர்ந்த குறிக்கோள்களைக் கொண்டு வாழ்ந்து இறைவனடியை நாடுவது?" என்று கடவுளிடம் முறையிட்டு வருந்துகிறார் பட்டினத்தார்.

தாயுமானவரையும் திருமூலரையும் பட்டினத்தாரையும் கற்றுணர்ந்த தூயகவியாகிய பாரதியும், இவர்கள் மூவரின் கருத்தையும் ஒன்று திரட்டித் 'தேடிச் சோறு நிதம் தின்று' என்னும் தமது புதுமை ததும்பும் பாடல் மூலம் பாமரரும் அறிந்து உணரும் பொருட்டு எளிய தமிழில் நமக்கு அளித்திருக்கிறான்.

இவ்விடத்தில் வில்லியம்  வோர்ட்ஸ்வர்த் என்னும் ஆங்கில மகாகவியின் இந்த வார்த்தைகளையும் சிந்தித்துப் பார்க்கலாம்.

The world is too much with us; 
Late and soon,
Getting and spending, we lay waste our powers.
- William Wordsworth

இவ்வுலகம் தரும் சுகங்களை நுகர்வதில்  நாம் மிகவும் ஈடுபாடு காட்டுகிறோம்;
எப்போதும் பணத்தைச் சம்பாதிப்பதும் செலவழிப்பமாகப் பொழுதைக் கழிக்கிறோம்;
அதனால் நமது திறமைகளை எல்லாம் வீணடிக்கிறோம். 
- வில்லியம் வோர்ட்ஸ்வர்த்

(கட்டுரை தொடரும்)

- இரா. ஆனந்த்

NATARAJAN RAMASESHAN

unread,
Jan 3, 2023, 8:05:50 AM1/3/23
to santhav...@googlegroups.com
super nice 


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Pas Pasupathy

unread,
Jan 3, 2023, 8:10:02 AM1/3/23
to santhav...@googlegroups.com
மிக அருமை! ஆழமான உரை. பாராட்டுகள்!

On Tue, Jan 3, 2023 at 8:02 AM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:

இருவகைத் தேடல்கள்

'தேடி உனைச் சரணடைந்தேன் தேச முத்து மாரி' - சக்தியிடம் சரண்புகும் இந்தப் பாடல் வரியில் வெளிப்படும் தேடல் ஆன்மீகத் தேடல்; ஞானம் முதிர்ந்த மனத்தினால் கடவுளை நாடும் தேடல்;  பராசக்தியின் அருளை மட்டுமே விரும்பி அன்புத் திரியிட்டு உணர்வென்னும் விளக்கேற்றி உள்ளத்தில் தேடும் தேடல்.  ஆனால், 'தேடிச் சோறு நிதம் தின்று' வாழும் மனிதர்களின் இழிவான தேடலோ, லெளகிகத் தேவைகளை மட்டும் பூர்த்திசெய்ய திரவியம் தேடித் திரிந்து உழலும் தேடல்;  குறிக்கோளற்ற வாழ்வினால் திசைதடுமாறி அலையும் தேடல்; ஆன்ம நாட்டம் இல்லாமல் வெறும் பொருள்வேட்கை மிகுந்த தேடல். 

Girija Varadharajan

unread,
Jan 3, 2023, 8:14:55 AM1/3/23
to santhav...@googlegroups.com
அன்புள்ள ஆனந்த், நன்றாக  ஆராய்ந்து எழுதப்பட்ட உரை.சிறந்த மேற்கோள்கள்.

அ கி வ

From: santhav...@googlegroups.com <santhav...@googlegroups.com> on behalf of Anand Ramanujam <anandbl...@gmail.com>
Sent: Tuesday, January 3, 2023 7:01:59 AM
To: santhav...@googlegroups.com <santhav...@googlegroups.com>
Subject: Re: தேடிச் சோறு நிதம் தின்று - விளக்கவுரை
 

Anand Ramanujam

unread,
Jan 3, 2023, 8:20:54 AM1/3/23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. தில்லைவேந்தன்!

- இரா. ஆனந்த்

Anand Ramanujam

unread,
Jan 3, 2023, 8:22:17 AM1/3/23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, பேராசிரியர் அவர்களே!

- இரா. ஆனந்த்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
Jan 3, 2023, 8:25:45 AM1/3/23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி!

- இரா. ஆனந்த்

Anand Ramanujam

unread,
Jan 6, 2023, 5:52:17 PM1/6/23
to santhav...@googlegroups.com

சிந்தனை கெடுக்கும் சின்னஞ் சிறு கதைகள்

உற்றவர் நாட்டவர் ஊரார் - இவர்க்கு
உண்மைகள் கூறி இனியன செய்தல்
நற்றவம் ஆவது கண்டோம்.

ஊருக்கும் உலகுக்கும் உண்மைகள் கூறுவதையே தவமாகக் கொண்டு வாழ்ந்தவன் பாரதி. அத்தகைய மெய்த்தவத்திற்கு மாறாகப் பொய்ம்மையே பேசி அறிவைக் கெடுப்பவர்களைக் கண்டு அவன் பொருமிய பாடல்கள் பலப்பல. 

'வேத உபநிடத மெய்ந்நூல்கள் எல்லாம் போய்
பேதைக் கதைகள் பிதற்றுவர் இந்நாட்டினிலே!'
என்று நம் பாரத நாட்டு மக்கள் பழம்பெருமையெல்லாம் மறந்து, ஞானநூல்களைப் பேணாமல், பேதைக் கதைகள் பேசிப் பிழைபட வாழ்வதை நினைத்து மனம் வாடினான்.

'தெய்வம் பலப்பலச் சொல்லிப் பகைத் தீயை வளர்க்கும்' மூடர்கள் சொல்லும் கட்டுக் கதைகளைத் தவிர்த்து, 'ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்' என்று சாற்றும் வேதங்களை மட்டுமே ஆதாரமாகக் கொள்ளுமாறு புவிமக்களுக்கு அறுவுறுத்தினான்.

'உண்மைகள் வேதங்கள் என்போம் 
பிறிது உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்.'
என்று சொல்லி வேதங்களையும் பொய்ந்நூல்களையும் வேறுபடுத்திக் காட்டி விளக்கினான்.

பொய்ந்நூல்கள் சொல்லும் பொருளற்ற வார்த்தைகளை மெய்யென நம்பி, தம் கொள்கைகளில் தெரியும் சின்னஞ்சிறிய வேற்றுமைகளைப் பெரிதுபடுத்திப் பிரிவினை வளர்ப்பவர்களைக் கண்டு நெஞ்சு குமுறினான். குடும்பத்தில் ஒற்றுமையைப் பேணி அன்பினை வளர்க்கவேண்டிய தந்தையும் மகனுமே பாம்பின் தலைகளைக் குறித்த மாறுபட்ட கொள்கைகளால் மனம்பிரிந்து மோதும் நிலை கண்டு எள்ளி நகைத்தான்.

ஐந்துதலைப் பாம்பு என்பான்-அப்பன் 
ஆறுதலை என்று மகன் சொல்லிவிட்டால் 
நெஞ்சு பிரிந்திடுவார்-பின்பு 
நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்.

'செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாம் என்றே எண்ணி' இருப்பவர்களைப் 'பித்த மனிதர்கள்' என்றும் அவர்கள் சொல்லும் சாத்திரம் 'பேய் உரையே' என்றும் சொல்லிச் சங்கை முழக்கினான்.

'வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவோம்' என்று இருக்கும் மானிடர்களுக்கு பாரதி சொல்லும் இவ்வுண்மைகள் புதிர்களாகவே தோன்றியது. அறிவில் தெளிவேற்றும் அவன் வார்த்தைகள் சொல்லும் வாழ்நெறியை உணர மறுத்த அவர்கள், கண்கெட்ட குருடரைப்போலப் பிறர் காட்டிய பொய்ம்மை வழியில் சென்று மாட்டிக்கொண்டு தவித்தனர்.

பொய்த்த இந்திர சாலம் - நிகர்
பூசையும் கிரியையும் புலைநடையும்
கைத்திடு பொய்ம்மொழியும் - கொண்டு
கண்மயக்கால் பிழைப்போர் பலராம்.

'பொய்ம்மொழியும் கண்மயக்கும்' கொண்டு பிழைப்பு நடத்தும் கயவர்களின் வஞ்சனைப் பேச்சில் மதிமயங்குவோர் பலர் இருக்கிறார்களே என்ற பாரதியின் உள்ளக் குமுறல், உலக நலத்தின் மீது அவனுக்கிருந்த  அக்கறையை வெளிப்படுத்துகிறது. 

பாரதியைப்போலவே நம் முன்னோர்களும் வெற்றுச் செருக்கும் வீண்பேச்சும் வெளிப்பகட்டும் நிறைந்த மனித வாழ்க்கையைச் சாடினர்.  இருப்பதையும் இல்லாததையும் சேர்த்து அள்ளிவிட்டுப் பேசுவதையும் வேகமாகச் செல்லக்கூடிய வாகனங்களில் ஊர்ந்து செல்வதையும் செல்வமாக அவர்கள் கருதவில்லை. தன்னைச் சேர்ந்தவர்கள் படுகின்ற துன்பத்தைக் கண்டு அதைத் துடைக்கும் உயர்ந்த பண்பையே செல்வம் என்றனர். மிளைகிழான் நல்வேட்டனார் என்னும் புலவர் நற்றிணை என்னும் சங்கத் தமிழ் நூலில் சொல்லும் இக்கருத்து உண்மையான செல்வம் எது என்பதை நமக்கு உணர்த்துகின்றது. 

நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்று;தன் செய்வினைப் பயனே!  
சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கட் செல்வம் செல்வம் என்பதுவே.
-  மிளைகிழான் நல்வேட்டனார்

தற்பெருமையே பேசி நீட்டி முழக்கிப் பொய்யுரைக்கும் வாய்ச்சொல் வீரர்களின் பகட்டான பேச்சையே 'நெடிய மொழிதல்' என்று சொல்கிறார் நல்வேட்டனார். அவ்வாறு ஒன்றும் இல்லாத விஷயத்தை மிகைப்படுத்திப் பேசுபவர்கள் தங்கள் செல்வச் செழிப்பைக் காட்டி மயக்கவும் தயங்கமாட்டார்கள். அவர்கள் காட்டும் அந்த மிடுக்குத் தோரணையை 'கடிய ஊர்தல்' (விரைவான வாகனங்களில் செல்லுதல்) என்றும் சொல்கிறார். இவர் குறிப்பிடும் 'நெடிய மொழிதலையும் கடிய ஊர்தலையும்' பாரதி குறிப்பிட்ட பொய்ம்மொழியோடும் கண்மயக்கோடும் ஒப்பு நோக்கிக் கருதலாம். 

மிளைகிழான் நல்வேட்டனார் காட்டும் வாழ்நெறியைக் கடைப்பிடித்து ஒழுகும் தமிழ் மரபில் வந்த செம்மலாகிய பாரதியும் பொய்ம்மையே பேசிப் பொழுதினைச் சுருக்குபவர்களை வெறுத்தொதிக்கினான். வாழ்வுக்குச் சற்றும் உதவாத பேச்சுகளையும், மூட நம்பிக்கைகளையும், பிரிவினைவாதக் கொள்கைகளையும், பொய்ச் சாத்திரங்களையும் 'சின்னஞ் சிறு கதைகள்' என்றும் 'பேதைக் கதைகள்' என்றும் 'பேய் உரைகள்' என்றும் சொல்லிக் கண்டித்தான்.  

இவ்வாறு சின்னஞ் சிறு கதைகளைப் பேசுவதைச் சாடும் பாரதி, நம்முடைய பேச்சுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் நயம்பட வரையறுத்துக் காட்டினான்.

'பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பார் அளித்ததும் தர்மம் வளர்த்ததும்
பேரருள் சுடர்வாள் கொண்டு அசோகனார்
பிழைபடாது புவித்தலம் காத்ததும்
வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்'  போற்றுகின்ற பெருமைவாய்ந்த கதைகளைப் பேசவேண்டும் என்றான். அதே சமயம், 'மறைவாக நமக்குள்ளே பழங்கதைகளை மட்டும்' பேசிக்கொண்டு இருக்காமல், பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களையும் தமிழில் மொழிபெயர்த்துப் பேசவேண்டும். வாழ்வுக்குப் பயன்தரும் கல்வியைப் போதிக்கவேண்டும். 

எந்த ஒரு கருத்தையும் பழமை வாய்ந்த நூல்களில் சொல்லப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காகக் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொண்டுவிடக் கூடாது.  அதே சமயம், புதுமையான நூல்கள் சொல்லும் கருத்துகளையும் ஒதுக்கக்கூடாது. இன்றைய நூல்களிலும் அரும்பொருள் காணலாம். பாரதி சொல்லும் இதே கருத்தை உமாபதி சிவாசாரியாரின் அருள்வாக்கிலும் காண முடிகிறது.  

'தொன்மையவாம் எனும்எவையும் நன்றாகா இன்று
    தோன்றியநூல் எனும்எவையும் தீதாகா' 
- உமாபதி சிவாசாரியார் (சிவப்பிரகாசம்)

வாழ்வைச் செம்மைப்படுத்தி வீடுபேற்றைப் பெறுவதற்குண்டான வழியைத் தேடாமல், வெறும் 'டுக்ருண்கரணே' என்று இலக்கண விதிகளை மனப்பாடம் செய்து வாழ்நாளை வீண் நாளாக்கும் மூடர்களைக் கண்ட ஆதிசங்கரர் அவர்களுக்கு நன்னெறி போதிப்பதற்காக இயற்றிய நூலே 'பஜ கோவிந்தம்' என்பர். அதேபோல், வாழ்வுக்கு எந்தச் சிறப்பையும் சேர்க்காத பழங்கதைகளைப் பேசிப் பிதற்றும் மனிதர்களைப் பார்த்து அவர்கள் திருந்தவேண்டும் என்று கடிந்து கூறி அறிவுறுத்தும் நோக்குடன் 'தேடிச் சோறு நிதம் தின்று' என்னும் பாரதியின் பாடல் தோன்றியது எனலாம்.

- இரா. ஆனந்த்

M. Viswanathan

unread,
Jan 7, 2023, 12:28:34 AM1/7/23
to santhav...@googlegroups.com

அருமையான கட்டுரைகள். அனைத்தையும் தொகுத்து அச்சு நூலாகவும், மின்நூலாகவும் கொண்டு வாருங்கள் அன்பரே. நன்றி.
அன்பன்,
மீ.விசுவநாதன்
07.01.2022 10.58 am 

Rajja Gopalan

unread,
Jan 7, 2023, 12:52:24 AM1/7/23
to santhav...@googlegroups.com
தெளிவான கருத்து. நளினமான நடை.  
அருமையான கட்டுரை.   ஆழ்ந்த ஆய்வு.  

வாழ்த்துகள். 

மீ. ரா

Sent from my iPhone

On 7 Jan 2023, at 05:28, M. Viswanathan <meev...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
Jan 7, 2023, 5:19:32 AM1/7/23
to santhav...@googlegroups.com
தங்கள் அன்பான கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும்  மிக்க நன்றி, திரு மீ.ரா.

- இரா. ஆனந்த்

Anand Ramanujam

unread,
Jan 7, 2023, 5:20:58 AM1/7/23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. மீ.வி!

- இரா. ஆனந்த்
--

Anand Ramanujam

unread,
Jan 8, 2023, 10:33:44 PM1/8/23
to santhav...@googlegroups.com
மனம் வாடித் துன்பம் மிக உழன்று

'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பயிர் வாடத் தானும் வாடி நெஞ்சம் நெகிழப் பாடுவார் வள்ளலார். வள்ளல் பெருமான் காட்டும் இதே பரிவையும் ஜீவகாருண்யத்தையும் பாரதியின் கவிதைகள் பலவற்றில் காணலாம்.

'கஞ்சி குடிப்பதற்கிலார் -அதன் 
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்   
பஞ்சமோ பஞ்சமென்றே -நிதம் 
பரிதவித் தே உயிர் துடிதுடித்து 
துஞ்சி மடிகின்றாரே -இவர் 
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே'
என்று நெஞ்சு பொறுக்காமல் கொந்தளிக்கும் ஒரு கவிதை.

பீஜித் தீவில் இந்தியர்கள் அடிமைகளாகப் படும் துயரத்தைக் கண்டு 'கரும்புத் தோட்டத்திலே - அவர் கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி வருந்து கின்றனரே!' என்று மனம் குமுறும் மற்றொரு கவிதை.

பிற உயிர்களின் துன்பத்தைக் கண்டு வருந்தும் வள்ளலாரும் பாரதியும் படும் மனத்துயரம் புனிதமானது; தன்னலமற்றது. ஆனால், அறியாமையால் 'மனம் வாடித் துன்பம் மிக உழன்று' தவிக்கும் மக்கள் படும் வேதனையோ 'தேடிச் சோறு நிதம் தின்று சின்னஞ் சிறு கதைகள் பேசி' பொழுதை வீணாக்குவதால் ஏற்பட்ட துயரம்; ஆடுகள் போலத் தாவித் தாவிப் பொருள்களைத் தேடுவதால் உண்டான துன்பம்; செய்யும் செயலில் ஒரு சிறிய தடங்கல் வந்தாலும் அதற்கு அஞ்சித் தடுமாறுவதால் பிறக்கும் வருத்தம். 

தாழும் உள்ளத்தர்,சோர்வினர்,ஆடுபோல்
தாவித் தாவிப் பலபொருள் நாடுவோர்,
வீழும் ஓர் இடையூற்றினுக்கு அஞ்சுவோர்

இவ்வாறு ஆசையும், மடமையும், அச்சமும் பேய்களாகப் பிடித்தாட்ட மனம் வாடுபவர்களைத் 'தாழும் உள்ளத்தர்' என்கிறான் பாரதி. இவர்கள் பார்ப்பதற்கு மனிதர்கள் போல் காணப்பட்டாலும் எண்ணத்தாலும் செயலாலும் விலங்குகளைப் போன்றவர்களே என்பதால் ‘ஆடுபோல் தாவுவர்’ என்றான். 'உடல் உறுப்புகள் அமைந்து விட்டாலே ஒருவன் மனிதனாகி விடமுடியாது. பண்பாகிய ஒழுக்கமில்லையென்றால் அவன் மனிதனாகமாட்டான்’ என்று சொல்லும் வள்ளுவர் மொழியையும் இங்கு ஒப்பு நோக்கலாம்:

உறுப்புஒத்தல் மக்கள்ஒப்பு அன்றால் வெறுத்தக்க
பண்புஒத்தல் ஒப்பதாம் ஒப்பு.

'உழல்' என்னும் தமிழ்ச்சொல்லுக்கு 'அலைதல்' , ‘நிலைகெடுதல்’, ‘தடுமாறுதல்’ , ‘சுழலுதல்’ என்று பல பொருள்கள் உள்ளன. மன உறுதி இழந்து துயர்க்கடலில் மூழ்கித் தத்தளிக்கும் பேதை மனிதர் படும் கலக்கத்தையே 'மிக உழலுதல்' என்று சொல்கிறான்.  இந்த 'நிலைகெட்ட மாந்தர்' தாம் முன்னர் செய்த மடச்செயல்களையே மீண்டும் மீண்டும் செய்து, பட்ட துயரத்தையே மறுபடியும் பட்டு, துன்பச்சுழலில் மாட்டிக் கொண்டும் உழலும் அவல நிலையைக் கண்டு வாடுகிறான் பாரதி.

சரி, இந்த மனத்துயரைத் தீர்க்க மருந்து தான் என்ன? இந்தக் கேள்விக்கு விடையளிப்பதுபோல் பாரதி தந்த ஆத்திசூடியின் முதல் வாசகம் அமைந்துள்ளது. 'அச்சம் தவிர்!'. எல்லா விதமான மனத்துயருக்கும் மூலக் காரணம் பயமே ஆகும். அதனால், முதலில் பயத்தை விடவேண்டும். பயமெனும் பேய்தனைத் துணிவுடன் அடித்து விரட்டியவர்களுக்கு இந்த உலகமெல்லாம் அமுதமாகத் தெரியும்; துன்பமும் துயரும் மறையும். இந்தக் கருத்தைத் தன் வாழ்வில் உறுதியாகக் கடைபிடித்த பாரதி, 'கோவிலுக்குச் செல்வதாலும் பூசை செய்வதாலும் ஒருவன் பக்திமான் ஆகிவிடமுடியாது; எதற்கும் அஞ்சாத தைரியமே உண்மையான தெய்வ பக்திக்கு அடையாளம்' என்றும் கருதி வாழ்ந்தான். 'வீணாக அஞ்சுவதில் பயனில்லை; இவ்வுலகம் நம்மிடம் கருணையுடையது என்பதை நாஸ்திகரும் ஒப்புக்கொள்ளவேண்டும்' என்று சொல்லித் தெய்வபக்தி இல்லாதவர்களும் தைரியமாக வாழ ஊக்கமொழி அளித்த மகாமனிதன் பாரதி.

துன்பம் நெருங்கி வந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா
அன்பு மிகுந்த தெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா

பாப்பாப் பாட்டின் இந்த எளிய வரிகளில் எத்தனை அரிய பொருள் அடங்கியுள்ளது!   'நின்னைச் சரணடைந்தேன்' என்று தெய்வத்திடம் பக்தி வைத்தால் துன்பமெல்லாம் போய்விடும் என்னும் கீதையின் மொழியைக் குழந்தைகளுக்கும் புரியுமாறு சொல்லும் ஆற்றல் பாரதிக்கே உண்டு. ‘மரத்தை நட்டவன் தண்ணீர் நன்கு வார்த்து அதை ஓங்கிடச் செய்வான்; சிரத்தை உடையது தெய்வம்’ என்று சொல்லி ‘அன்பு செய்யும் தொழிலை மட்டுமே செய்து கொண்டிருங்கள்; மற்றதை இறைவன் பார்த்துக்கொள்வான்’ என்று  உறுதியுடன் சொன்ன தெய்வக் கவிஞன் பாரதி.

பயமென்னும் திரை விலகினால் அன்பு என்னும் ஒளி தானே வெளிப்படும். அதேபோல், உள்ளத்தில் அன்பின் ஒளி உண்டானால், பயம் என்னும் திரை விலகிப் போகும். பிறருடைய துன்பத்தைக் கண்டு நெஞ்சம் உருகும்போது, அதன் முன் நம்முடைய துன்பம் பொருளற்று, துச்சப்பட்டுப் போகின்றது. இந்த அன்பின் சக்தியினையே இந்த அற்புதமான பாடல் வரிகளில் நமக்கு உணர்த்துகிறான் பாரதி:

துன்ப நினைவுகளும் சோர்வும் பயமும் எல்லாம்
அன்பின் அழியுமடீ! - கிளியே - அன்புக்கு அழிவில்லைகாண்!
 
'காதல் இங்கே உண்டாயில் கவலையில்லை' என்று காணும் பாரதி, அன்பையும் இன்பத்தையும் வெவ்வேறாகப் பாரக்கவில்லை. அன்பு உண்டாயின் அந்த இதயத்தில் என்றும் இன்பம் நிலைத்திருக்கும். இந்தக் கருத்தினை வலியுறுத்துவதுபோல், 'ஜகத் சித்திரம்' என்னும் நாடகத்தில், நாகணவாய்ப் பறவை சொல்வதாக இந்த வசனத்தை அமைக்கிறான்:

'மனிதர்களுக்குள் இருப்பதைக்காட்டிலும் எங்களுக்குள்ளே காதலின்பம் அதிகம். ஆதலால் நாங்கள் அதிக சந்தோஷமும், பாட்டும், நகைப்பும், கொஞ்சு மொழிகளுமாகக் காலங்கழிக்கிறோம். இருந்தாலும், காலனுக்குத் தூதனாகிய மனக்குறையென்னும் பேய் எங்கள் குலத்தையும் அழித்துவிடத்தான் செய்கிறது. அதற்கு நிவாரணம் தேடவேண்டும். கவலையைக் கொல்வோம் வாருங்கள். அதிருப்தியைக் கொத்துவோம், கொல்லுவோம்.துயரத்தை அழிப்போம், கவலையைப் பழிப்போம், மகிழ்வோம், மகிழ்வோம், மகிழ்வோம்!'

'கவலைகளிலிருந்து நம்மை விடுவித்துக்கொண்டால் இந்த உலக வாழ்விலேயே நாம் மோட்சத்தை (மன-விடுதலையை) அடையலாம்' என்னும் வேதமொழியை உலகுக்குச் சொல்லி ‘கவலை துறந்து இங்கு வாழ்வது வீடு!’ என்று முழங்கியவன் பாரதி. கவலையை அழிக்க அருமருந்தாக அவன் காட்டிய  அச்சமின்மை, அன்பு காட்டுதல், இன்புற்று இருத்தல் என்ற மூன்றையும் நாம் கடைபிடிக்கவேண்டுமானால் முக்கியமான இரண்டை விடவேண்டும்: ஒன்று போனதை நினைத்து புலம்புவது, மற்றொன்று வருங்காலம் என்னாகுமோ என்று எண்ணி ஏங்குவது. 

சென்றது இனி மீளாது, மூடரே! நீர் 
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து 
கொன்று அழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து 
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்! 

என்று அறிவுறுத்தி, ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்னும் நினைப்பே நம்மை இன்புற்று வாழ வைக்க வல்லது என்பதைத் தெளிவுபட மொழிகின்றான்.

'எப்பொழுதும் கவலையிலே இணங்கிநிற்பான் பாவி!' என்று கவலைப்படுவதையும் ஒரு பாவச்செயலாகக் கருதும் பாரதி, இன்பம்-துன்பம்-வெறுமை இவை மூன்றில் எது வந்தாலும் களிப்போடு இருந்தால் அதுவே முக்திநிலையாகும் என்று ம் நமக்கு உணர்த்துகிறான். 

‘சிதையா நெஞ்சுகொள்’, ‘துன்பம் மறந்திடு’, ‘நன்று கருது’ என்னும் நல்லுரைகளைக் கேளாமல் மக்கள் மனம் வாடி வீணே மடிகின்றனரே என்ற மன வேதனையால் எழுந்த கவிதையே ‘தேடிச் சோறு நிதம் தின்று’ என்பதை ‘மனம் வாடி மிக உழன்று’ என்னும் சொற்கள் நமக்கு உணர்த்துகின்றன. 

(கட்டுரை தொடரும்)

- இரா. ஆனந்த்

Anand Ramanujam

unread,
Jan 10, 2023, 11:35:23 PM1/10/23
to santhav...@googlegroups.com
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து

"பசிக்குச் சோறு எப்படி வந்தாலும் சரி. பொழுது போக்க எதையும் பேசுவோம். இதயம் வாடுவோம்; இடர்களைப் புரிவோம்" என்னும் விலங்கு நிலையோடு முடிகிறது எண்ணற்றவர்களின் பிழைப்பு. இத்தகைய இழிந்த வாழ்வை வாழும் மனிதனின் அவலநிலைகளைப் பட்டியலிட்டுக் காட்டிப் பரிகசிக்கும் சொற்சித்திரமே 'தேடிச் சோறு நிதம் தின்று' என்னும் கவிதை. 

மனிதன் தன்னையே மையமாகக் கொண்ட தன்னல வாழ்வில் 'தேடிச் சோறு நிதம் தின்று' வயிற்றை நிரப்புகின்றான். 'நான் எனது' என்று எண்ணும் இந்தச் சிறுவட்டத்தில் சிக்கிக்கொண்டு, சின்னஞ் சிறு கதைகளைப் பேசிக் கலகத்தையும் பிரிவினையையும் காழ்ப்புணர்ச்சியையும் பெருக்குகிறான். இவ்வாறு பேதமிட்டுக் கலகமிட்டு வேலி கட்டிப் பொய்ச்சாத்திரம் பேசுவதால் மனம் வாடித் தவித்த மனிதன் தன் துன்பநிலைக்குச் சரியான காரணத்தைத் தேடாமல், யார் மீதாவது எதன் மேலாவது பழி சுமத்தப் பார்க்கிறான். முதலில் விதியின் மேல் பழிசுமத்துவான்; பின்னர் தன் நண்பர்களைத் தூற்றுவான்; பகைவர்களை நிந்திப்பான்; 'கடவுளே இல்லை' என்று நாத்திகம் கூடப் பேசுவான்; பல்வேறு சதிச்செயல்களிலும் ஈடுபடுவான். ஆனால், தன்னுடைய துன்பத்துக்குப்  பொறுப்பேற்று அதைக் களைய முற்படமாட்டான். 

விதியை நோவர், தம் நண்பரைத் தூற்றுவர்,
வெகுளி பொங்கிப் பகைவரை நிந்திப்பர்,
சதிகள் செய்வர்,பொய்ச் சாத்திரம் பேசுவர்,
சாதகங்கள் புரட்டுவர், பொய்ம்மை சேர்
மதியினில் புலை நாத்திகம் கூறுவர்.

ஒரு மனிதன் பிறருக்குத் தீங்கினைச் செய்ய எண்ணுவதற்கு முக்கியக் காரணம் அச்சமே எனலாம். தனக்குக் கிடைக்கவேண்டிய சோறும், உறைவிடமும் எங்கே தனக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்னும் அச்சம் பிறர் பங்கைத் திருடி வாழச் செய்கிறது. இந்தக் களவுச் செயல்களைக் கண்டு கண்டித்து ஊருக்கு நல்லது சொல்ல வந்த பாரதி,

வயிற்றுக்குச் சோறு உண்டு கண்டீர்! - இங்கு
வாழும் மனிதர் எல்லோர்க்கும்

என்று சொல்லி 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பினால் அனைவரும் உண்ணப் போதுமான உணவை இந்த உலகம் தரும்' என்னும் உண்மையை உணர்த்துகிறான்.

இடம் பெரிது உண்டு வையத்தில் - இதில்
ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்?

என்று 'வேலிகள் அற்று விரிந்து பரந்த இவ்வுலகில் எல்லாருக்கும் இருக்க இடம் நிறையவே உண்டு' என்பதைப் புரிய வைத்து நிலச்சச்சரவுகள் நீங்கி நிம்மதியாக வாழ வழிவகுக்கிறான்.'மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம்' ஒழிந்து, நிலங்கள் தனியுடைமையாகாமல் பொதுவுடைமையானால், உழைப்பில்லாமலேயே உணவு உண்டாகும் என்று கருத்துப் புரட்சி செய்கிறான்.

நேராக மானுடர்தாம் பிறரைக் கொல்ல
நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா;
ஆதலால் மானிடர்கள் களவை விட்டால்
அனைவருக்கும் உழைப்பின்றி உணவுண் டாகும்.  
  
'சரி, இந்த நீதிகளை எல்லாம் கேட்க மனமில்லையென்றாலும் இதையாவது கேளுங்கள்: மனிதர்களாக வாழ முயற்சியாவது செய்யுங்கள்' என்கிறான். ஏனெனில், தன்னை விட மெலிந்தோரை[ பிடித்துத் தின்று பிழைக்கும் பழக்கம் விலங்குகளுக்குத் தான் உண்டு; மனிதர்களுக்குக் கிடையாது. தன் நிறைவுக்காகப் பிறர் நலம் கெடுக்கும் தீய செயல்களைச் செய்பவர்களைப் பார்த்து இவ்வாறு இடித்துக் கேட்கிறான் பாரதி:
   
உடன் பிறந்தவர்களைப் போலே - இவ்
உலகினில் மனிதர் எல்லாரும்;
திடங்கொண்டவர் மெலிந்தோரை - இங்குத்
தின்று பிழைத்திட லாமோ?
தம்பி சற்றே மெலிவானால் - அண்ணன்
தான் அடிமை கொள்ள லாமா?

இவ்வாறு உலகம் அனைத்தும் ஒரு குடும்பமாகப் பாவிக்கும் சமத்துவத்தன்மையால் மனிதனுக்குத் அடிமைத்தனம் விலகுகிறது; சகோதரத்துவம் நிலைக்கிறது; விடுதலை கிடைக்கிறது. ஆங்கிலத்தில் 'Equality, Fraternity, Liberty' என்று மொழியப்படும் இந்த மூன்று உண்மைகளையும் பாட்டில் வடிக்கிறான் பாரதி:
பாருக்குள்ளே சமத்தன்மை - தொடர்
பற்றும் சகோதரத் தன்மை
யாருக்கும் தீமை செய்யாது - புவி
எங்கும் விடுதலை செய்யும்.
   
விடுதலை என்றால் என்ன என்பதற்கும் ஒரு புதிய வரையறை வைக்கிறான் நம் பெருங்கவிஞன். 'பிறருக்குக் காயம் இல்லாமலும், பிறரை அடிக்காமலும், வையாமலும், கொல்லாமலும், அவர்களுடைய உழைப்பின் பயனைத் திருடாமலும், மற்றப்படி ஏறக்குறைய நான் பிரியப்படும் எதுவும் செய்யலாம் என்ற நிலையில் இருந்தால் மாத்திரமே என்னை விடுதலையுள்ள மனிதனாகக் கணக்கிடத்தகும்' என்பது பாரதியின் கருத்து. இக்கருத்தினையொட்டியே, மனித இனத்திற்கு இந்த வேண்டுகோள் விடுக்கிறான்: "அடா மனிதர்களே! எத்தனை சாத்திரங்களுக்கும், ஆக்கினைகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் நாம் உட்பட்டு இருக்கவில்லையா? ஒரு புதுக் கட்டுப்பாடு செய்து கொள்வோமே. அந்தக் கட்டுப்பாடு என்னவென்றால், 'ஒருவர்க்கு ஒருவர் மனத்தாலும் தீங்கு நினைப்பதில்லை. ஒருவரை மற்றொருவர் அச்சுறுத்த மாட்டோம்.' மானிடரே, இந்த விரதம் எடுத்துக் கொள்ளுங்கள். இதுவே பிழைக்கும் வழி. தெருவில் நடக்கும்போதே முன்பின் தெரியாத மனிதர்கள்கூட ஒருவருக்கொருவர் கோபம் அல்லது அவமதிப்பு அல்லது பயத்தோடு பார்த்துக் கொள்கிறார்கள். மனிதனுக்கு மனிதன் இயற்கையில் விரோதம் என்ற நிலையில் உங்களுடைய மூடத்தனமான மனித நாகரிகம் வந்து சேர்ந்து இருக்கிறது. இதை மாற்றி, அன்பை மூலாதாரமாக்க வேண்டும்".

மனிதனின் நிறைவாழ்வுக்கு வளம்சேர்க்கும் செயல்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று வசனக் கவிதையிலும் வாய்மொழிகிறான் பாரதி:
நமக்குச் செய்கை, இயல்பாகுக. ரசமுள்ள செய்கை, இன்பமுடைய செய்கை, வலிய செய்கை, சலிப்பில்லாத செய்கை, விளையும் செய்கை, பரவும் செய்கை, கூடிவரும் செய்கை, இறுதியற்ற செய்கை, நமக்கு மஹாசக்தி அருள் செய்க. கவிதை, காவல், ஊட்டுதல், வளர்த்தல், மாசெடுத்தல், நலந்தருதல், ஒளிபெய்தல் - இச்செயல்கள் நமக்கு மஹாசக்தி அருள்புரிக.

'இது பொறுப்பதில்லை தம்பி - எரிதழல் கொண்டுவா!' என்று அடிமைத்தனத்தை எதிர்த்துச் சீறுவான் பாஞ்சாலி சபதம் போற்றும் வீமன். தானும் வாழாமல் மற்றவர்களையும் வாழ விடாமல் தீங்குகள் இழைப்போரைக் கண்டு இதே சீற்றத்துடன் பொங்கி எழுகின்றான் பாரதி. இந்த உணர்வின் கொந்தளிப்பை 'தேடிச் சோறு நிதம் தின்று' என்னும் இந்தக் கவிதையில் நம்மால் உணர முடிகின்றது. 


(கட்டுரை தொடரும்)

- இரா. ஆனந்த்


Anand Ramanujam

unread,
Jan 13, 2023, 11:08:17 PM1/13/23
to santhav...@googlegroups.com
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி

மையறும்‌ புகழ்‌ வாழ்க்கை பெறற்கெனச்‌
செய்யும்‌ செய்கையி னின்னருள்‌ சேர்ப்பையால்‌... 
கொற்றவா, நின்‌ குவலய மீதினில்‌
வெற்று வாழ்க்கை விரும்பி அழிகிலேம்‌.

வெற்று வாழ்க்கை வாழ்வதை வெறுத்து, வெற்றியைத் தரும் புகழ் வாழ்க்கை வாழ்ந்திடக் கொற்றவனின் அருளை வேண்டி நிற்கும் வீரக் கவிஞன் பாரதி. சாதாரண மனிதர்களைப் போலத் தின்றுத் தூங்கித் துயர்கொண்டு வாடிப் பின்பு தலைநரைத்து வீணே மடியும் வாழ்க்கை அவனுக்குத் திருப்தி அளிக்கவில்லை. தான் வாழ்ந்ததற்கான பாதச்சுவடுகளை நிலத்தில் பதியச் செய்து வருங்காலச் சந்ததியினருக்கு ஒரு வழிகாட்டும் விளக்காகத் தன் வாழ்க்கை விளங்கவேண்டும் என்று விரும்பினான். 'உயர்ந்த நோக்கங்கள் நிறைவேறுமாறு நூறு வயது புகழுடன்‌ வாழும் வாழ்க்கை' வாய்க்காமல் நிலச்சுமையென வாழ்ந்திடும் நிலை தனக்கு ஏற்பட்டால், தன் உயிரைச் சாய்த்துவிடுமாறும் இறைவனைக் கேட்கின்றான்.

அக்கினியின் சக்தியில் குஞ்சென்றும் மூப்பென்றும் இல்லையென்ற உண்மையைக் கண்ட பாரதி, இளமையில்‌ வலிமையும்‌ வாய்ப்பும்‌ இருந்தபோது பின்பற்றப்பட்ட சீரிய கொள்‌கைகளும் நன்னெறிகளும் முதிய வாழ்விலும்‌ தொடரப்பட வேண்டும் என்று கருதினான். தன் உடல் தளர்ந்து மெலிவுற்று வயதான பின்னும் பிறர் அளிக்கும் சோற்றுக்காகக் கைகட்டிச் சேவகம் செய்யாமல் சிங்கம் போல வாழவேண்டும் என்றும், 'நெறி இழந்தபின் வாழ்வதில் இன்பமும் சிறப்பும்' கிடையாது என்றும் சாற்றும் அவனது கருத்து
'அங்கமே தளர்வு எய்திய காலையும் அங்கோர் புன் நரி தந்திடும் ஊன் உண்ணாச் 
சிங்கமே என வாழ்தல் சிறப்பு
என்னும் வரிகளில் மின்னுவதை நாம் உணரலாம். 

வயது முதிர்ந்து விடினும்‌ - எந்தை
வாலிபக்‌ களையென்றும்‌ மாறுவதில்லை
துயரில்லை மூப்பு மில்லை - என்றும்‌ 
சோர்வில்லை நோயொன்றும்‌ தொடுவதில்லை.

கண்ணனைத் தன் தந்தையாகப் பாவித்து வடித்த இந்தக் கவிதையில் காட்டப்படுவதுபோல் 'ஒரு கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், நடுவயதிற்குண்டான மனத் திடமும், இளைஞருடைய உற்சாகமும், குழந்தையின் மாசற்ற இதயமும் எப்போதும் இருந்துவிட்டால் துயரமும் சோர்வும் நோயும் நம்மை அணுகாது' என்பதை உணர்த்துகின்றான் நம் பெருங்கவிஞன்.  

மூத்தவர்கள் வாழ்ந்து காட்டும் முறையை வைத்தே இளையவர்கள் வாழ்வைச் செம்மைப்படுத்த முடியும்.  பெரியோர்களின் வாழ்க்கையைப் பார்த்துக் கற்றுக்கொண்டால் அந்த ஒழுக்கம் என்றும் நிலைக்கும். வெற்றுவார்த்தைகள் என்றுமே உபதேசம் ஆகாது. 'என் வாழ்க்கையே என் உபதேசம்' என்று காந்தியடிகள் மொழிவதைப்போல், முதியவர்கள் நல்ல நீதியைப் புகட்டுவதாக தம் வாழ்க்கையை அமைக்க அறிவையும் ஆற்றலையும் நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு நற்செயல்களைச் செய்யாத முதியவர்களைப் 'பயனின்றி மூப்படைந்தவர்கள்'(பயனில் மூப்பு) என்று சொல்லும் நரிவெரூஉத்தலையாரின் இந்தப் புறநானூற்றுப் பாடலும் இங்குக் காணத்தக்கது: 

பயன் இல் மூப்பின் பல் சான்றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ,  5
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்!

நரைகூடிக் கிழப்பருவம் அடைந்து, அறிவு முதிர்ச்சியில்லாமல் பயன் அற்ற முதுமையை உடைய பெரியவர்களைப் பார்த்து, 'யாருக்கும் நல்லது செய்யவில்லை என்றாலும் சின்னஞ் சிறு கதைகள் பேசிக் கலகத்தை உண்டாக்கிப் பிறர் வாடப் பல செயல்கள் செய்து சமுதாயத்தைச் சீரழிக்காமலாவது இருங்கள்' என்று அறிவுரை கூறும் நரிவெரூஉத்தலையாரின் கடிந்துரைக்கும் பாங்கு பாரதியின் 'தேடிச் சோறு நிதம் தின்று' என்னும் இந்தப் பாடலிலும் நம்மால் காணமுடிகின்றது.

'நரைகூடி' என்பதை 'அறிவும் அனுபவமும் முதிராமல் தலை முடி மட்டுமே நரையால் முதிர்ந்து' என்று நாம் பொருள் கொள்ளவேண்டும். மேலும், 'கிழப்பருவம்' என்னும் இடத்திலும், யாருக்கும் பயன் இல்லாமல் முதுமை அடைந்தவர்களை வெறும் 'கிழவர்கள்' என்று பழித்துரைக்கிறான் பாரதி. வாழ்நாள் முழுவதும் தம் இளமைக்காலம் தொட்டுத் தேடிச் சோறு நிதம் தின்று, சின்னஞ் சிறு கதைகளைப் பேசிப் பொழுதைப் போக்கி, மனம் வாடி, பிறரையும் வருத்தி வாழ்ந்தவர்கள் எந்த வித அறிவையும் தெளிவையும் தம் முதுமைக்காலத்திற்கு சேர்த்துவைக்கத் தவறியவர்களே ஆவர். அவர்களது கிழப்பருவத்தில் அன்பும் அறமும் இன்பமும் குறைந்து வெறும் நரையே கூடுகிறது. தன் வாழ்வின் முடிவில்  'பயனில் மூப்பு' உடைய முதுபெருங்கிழவனாகத் தன்னை ஆக்காமால் காக்க வேண்டும் என்று பராசக்தியிடம் பாரதி வேண்டிக்கொள்வது, நம் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியையும் வீணாக்காமல் நல்லறம் செய்யவேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை நமக்கு அறிவுறுத்தும்வகையில் அமைந்திருப்பதை நாம் உணர்ந்தொழுகலாம்.

- இரா. ஆனந்த்

Anand Ramanujam

unread,
Jan 26, 2023, 10:10:38 PM1/26/23
to santhav...@googlegroups.com

கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்

உண்டிக்கும்  உடைமைக்கும்  ஆசைப்பட்டு உணர்விழந்து பகைவளர்த்து மனம்தாழ்ந்து மடிகின்ற கலக மானுடப் பூச்சிகளின் அவல நிலை கண்டு இரங்குகிறான் பாரதி. 

ஆம், இவர்கள் விட்டில் பூச்சிகள் போலத் தீமையைத் தேடிச் சென்றுத் தாமாக மாட்டிக்கொண்டு மடியும் மூடர்கள் தாம்.இருப்பினும், இவர்கள் வாழ்க்கையின் இறுதியில் நரை கூடி, தடி ஊன்றி, தளர்வு அடைந்து அன்றோ இருக்கிறார்கள்! இந்நிலையில் இவர்கள் மனம் வாடி மெலிவுற்று இருக்கும்போது கொஞ்சமும் கருணை காட்டாமல் காலன் இவர்களது உயிரைக் கவர்கின்றானே! இது மிகவும் வேதனைக்குரியது தானே! இவர்கள் தாம் வாழும் காலத்தில் அன்பும் அறமும் வளர்த்திருந்தால் இந்தத் துயர நிலையைத் தவிர்த்துத் தன்னைப் போல் சாகா வரம் பெற்றிருக்கலாமே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து நினைத்து பாரதியின் மனத்தில் எழுந்த துயரத்தின் எதிரொலிப்பை  'கொடுங்கூற்றுக்கு இரை எனப் பின் மாயும்' என்னும் சொற்களில் உணர முடிகின்றது.

கூற்று என்றால் காலன் என்று பொருள். காலன் கண்பார்வை சரியில்லாதவன். தான் கவர நினைத்த உயிர்களை எல்லாம் நல்லவர் தீயவர் என்று பாராமல் காட்டுவெள்ளம் போல அடித்துச் செல்பவன். ‘நுண்மாண் நுழைபுலம்’ கொண்ட நூலறிவாளர் என்றோ, எழில்நலம் கொண்ட இனியவர் என்றோ பார்க்க மாட்டான்.

நேத்திரம் கெட்டவன் காலன் - தன்முன்
 நேர்ந்த(து) அனைத்தும் துடைத்து முடிப்பான்.
நன்றென்றும் தீதென்றும் பாரான் - முன்பு
 நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடும் காட்டுவெள்ளம் போல் - வையச்
 சேர்க்கை அனைத்தையும் கொன்று நடப்பான்.

அறுசுவை உணவு உண்டு களித்து கண் அயர்ந்து படுத்திருக்கிறார்கள் என்றும் கூடக் கருதமாட்டான். அவ்வாறு கிடக்கப் படுத்தவர்கள் படுத்த படுக்கையாகவே போய் ஒழியுமாறு செய்பவன். இந்த உண்மையைக் கீழ்வரும்  திருமந்திர மொழிகளால் அறியலாம்.

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் ... 
கிடக்கப் படுத்தார் கிடந்து ஒழிந்தாரே.

கூற்றுவனின் இந்தக் கருணையற்ற செயல்களால் வெகுண்ட பாரதி அவனைக் ‘கொடுங்கூற்று’ என்று தூற்றுகிறான். 

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு.
- திருக்குறள்

’நேற்று உயிர்வாழ்ந்தவன் இன்று இல்லை’ என்று வள்ளுவப் பெருந்தகை சொல்வதுபோல்,   மனிதர்கள் சற்றும் எதிர்ப்பாராத நேரத்தில் அவர்களது உயிரைக் கவர்வதால்,  இரையைத் தின்னும் மிருகத்துக்கும் சமமாகிறான் காலன். 

இத்தகைய காலனை வெற்றிகொள்ள நம் முன்னோர்கள் பலப்பல  யுத்திகளைக் கையாண்டுள்ளனர். 'தவத்தால் பெறுகின்ற ஞானமும் வலிமையும் கொண்டவர்களுக்குக் கொடிய காலனையும் வெற்றி கொள்ள முடியும்' என்கிறார் வள்ளுவர்.

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.
(குதித்தல் = வெற்றிகொள்ளுதல், நோற்றல் = தவம், ஆற்றல் = ஞானமும் வலிமையும்)

வள்ளுவரைப் போலத் தவத்தின் பயனை நன்கறிந்த யோகியான திருமூலர், 'மூச்சுக் காற்றை உள்ளிழுத்தும் வெளிவிட்டும் செய்யும் யோகப் பயிற்சியே காலனை உதைத்து விரட்ட வல்லது' என்கிறார்.

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே.

இவ்வாறு, வள்ளுவரும் திருமூலரும் குதித்தும் உதைத்தும் விரட்டிய காலனை வெட்டித் தள்ளாமல் விடமாட்டேன் என்று முழங்குவார் அருணகிரிநாதர். 'அடக்கமுடியாத எருமைக்கடாவின் மீது ஏறி வரும் காலனே! உன்னை வெட்டித் தள்ளித் தோல்வியுறச் செய்யாமல் நான் விடமாட்டேன்; வேற்படையை ஏந்திய முருகனின் சந்நிதியில் நான் நிற்கிறேன்; வேலவனின் அருள் சக்தியாகிய வாளும் என் கையில் இருக்கின்றது. அதனால் உன்னுடைய படைகளை எல்லாம் திரட்டிக்கொண்டு என்னுடன் சண்டைக்கு வா; நான் உன்னை ஒருகை பார்க்கிறேன்' என்று தெய்வ பக்தியையே படையாகக் கொண்டு காலனுடன் போர் தொடுக்கிறார் அருணகிரியார்.    

பட்டிக் கடாவில் வரும் அந்தகா உனைப் பார் அறிய
வெட்டிப் புறம்கண்டு அலாது விடேன் வெய்ய சூரனைப்போய்
முட்டிப் பொருத செவ் வேல் பெருமாள் திருமுன்பு நின்றேன்
கட்டிப் புறப்படடா, சத்திவாள் என்றன் கையதுவே.

அருணகிரிநாதரின் அருள்மொழிகளைக் கற்றுணர்ந்த தெய்வக் கவியாகிய பாரதியும், காலனுக்குச் சவால் விடுகிறான். வேலாயுதப் படையை நெஞ்சில் பதித்து, தன் காலால் காலனை மிதித்து அழிக்கத் துணிந்து நிற்கின்றான். 

காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன்
காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன்
வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன்

’கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்' என்னும் சொற்றொடரில், 'பின்' என்பதற்கான பொருளைச் சற்று ஆராய்ந்து பார்ப்போம். ‘பின்’ என்றால் ‘எதற்குப் பின்?’ என்னும் கேள்வி எழுகிறது.  வள்ளுவரைப் போல் தவம் இயற்றாமலும், திருமூலரைப் போல் மூச்சைச் சீராக்காமலும், அருணகிரியாரைப் போல் சக்திவாள் ஏந்தாமலும், பாரதியைப் போல் வேலாயுதத்தை வணங்காமலும் ஆடும்வரை ஆடிவிட்டுக் கடைசியில் மாண்டு போகின்றவர்கள் மூடர்கள். அதனால், 'இயன்றமட்டும் பொருள்சேர்த்து இருக்குமட்டும் இடர்செய்து நரைத்த தலையர்களாக ஞானம் குன்றி வாழ்ந்து சாகும் வேளை வந்தபின்' என்பதே ‘பின்’ என்னும் ஒற்றை வார்த்தைக்குப் பொருத்தமான பொருள்.

'பின் மாயும்'வரைப் பலியாடுகள் போல் காத்திருக்காமல், 'இன்றே அறம் செய்க' என்று நாலடியார் சொல்லும் ஞானமொழியையும் இங்கே கருத்தில் கொள்ளலாம். "இப்போதுதான் ஒருவன் இங்கே நின்றான் இருந்தான் படுத்தான். அடுத்த நொடியே தன் உறவினர்கள் அலறி அழும் படி இறந்துவிட்டான்" என்னும் எச்சரிக்கையுடன்  "இப்போதே நல்ல செயல்களைச் செய்யவேண்டும்" என்ற அறிவுரையும் கலந்து  கொடுக்கும் நான்கு அடிகள் இதோ:

புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றுஎண்ணி
இன்னினியே செய்க அறவினை ; - இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
சென்றான் எனப்படுத லால்.

இனியவை நாற்பதும் 'கூற்றம் வரவு உண்மை, (இதை) சிந்தித்து வாழ்வு இனிதே' என்று சொல்லிக் காலன் வருவது நிச்சயம் என்றும், அதனால் நன்முறையில் சிந்தித்து வாழ்ந்தால் வாழ்க்கை இனிமையாகும் என்றும் நமக்கு அறிவுறுத்துகிறது.

 தருமம் தழைக்க அயராது உழைத்து, கவலைகளை அகற்றி, சினம் வென்று, பொய் விலக்கி, அச்சமும் மோகமும் அழித்து நெறியுடன் வாழ்ந்தால் மரணத்தையும் வெல்ல முடியும் என்னும் பாரதியின் அறிவுரையும் நம்மைச் சிந்திக்கச் செய்து மனத்துக்கு உறுதி அளிக்கின்றது.     

கவலையினைச்‌ சினத்தைப் பொய்யை
அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்‌ 
அப்போது சாவுமங்கே அழிந்து போகும்‌.

Anand Ramanujam

unread,
Feb 16, 2023, 9:50:33 AM2/16/23
to santhav...@googlegroups.com
பல வேடிக்கை மனிதர் போலே

Life is a tale told by an idiot, 
full of sound and fury,
Signifying nothing.
- Shakespeare (Macbeth)

பொய்யாய்ப் பழங்கதையாய் கனவாய் மெல்லப் போனதுவே.
- பட்டினத்தார்

உயர்ந்த குறிக்கோள் இல்லாத வாழ்க்கை ஓர் அர்த்தமற்ற பழங்கதை; மாயத்தோற்றம் மிகுந்த மனக்கனவு; இலக்கில்லாத நெடும்பயணம்; குருட்டாட்டம் ஆடிக் குழியில் விழும் கண்மூடி வாழ்க்கை. 'தேடிச் சோறு நிதம் தின்று' என்னும் பாடலின் முதல் மூன்று அடிகளில் இந்தக் கருத்தை ஆணித்தரமாக உணர்த்துகிறான் பாரதி. 'இத்தகைய வீண்வாழ்க்கை வாழும் வேடிக்கைக்காரர்களைப் போல நானும் பயனற்று வீழ்ந்து மடியமாட்டேன்' என்று முழங்கும் நான்காம் அடியோ இந்தப் பாட்டுக்கு மகுடம் வைத்தாற்போல் வெடித்துச் சிரிக்கின்றது. 

எள்ளல் இளமை பேதைமை மடன்என்று
உள்ளப் பட்ட நகைநான்கு என்ப
-தொல்காப்பியர்

தொல்காப்பியர் சிரிப்பை நான்கு விதமாக வகைப்படுத்துகிறார். அவை முறையே எள்ளல்,இளமை, பேதைமை,மடமை எனப்படும். எள்ளல் என்பது பிறரது இழிவான நிலையைப் பார்த்துச் சிரிப்பது அல்லது கேலி செய்வது. சினம் கொண்டு சிரித்தலும் எள்ளலுள் அடங்கும். இளமை என்றால் பின் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் செயல்பட்டுப் பின் இடறி விழுபவர்களைப் பார்த்துச் சிரிப்பது. பேதைமை என்பது அறியாமையைக் கண்டு சிரித்தல். 

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.

ஏதம் கொண்டு ஊதியத்தைப் போக விடுவதற்குப்பேர் தான் பேதைமை என்கிறார் வள்ளுவர். ஏதம் என்றால் 'துன்பம் தருபவை' என்றும் ஊதியம் என்றால் 'நன்மை தருபவை' என்றும் அர்த்தம். அதாவது, தனக்குத் துன்பம் தருவனவற்றை எப்பாடு பட்டாவது அடைய நினைப்பதும் நன்மை தருவனவற்றை அறவே ஒதுக்குவதும் பேதைமை ஆகும். 

மடமை என்பது எதையும் ஆராயாமல் உடனே நம்புவதையும் 'தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்' என்று சாதிப்பதும். இது 'கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமல்' இருப்பதையும் குறிக்கும்.

'வேடிக்கை மனிதர்கள்' என்று சொல்லும் போது, இந்த நான்கு வகை நகைச்சுவை மெய்ப்பாடுகளையும் காட்டுகிறான் பாரதி. முதலில் தேடிச் சோறு நிதம் தின்று ஒரு சிறுவட்டத்துக்குள் தம்மைச் சிறைப்படுத்திக்கொண்டு வாழும் மனிதர்களின் சிறுமையைக் கண்டு சிரிக்கிறான்.'காக்கைக் குருவி எங்கள் ஜாதி' என்று விரிந்து பரந்த மனப்பான்மை கொள்ளாமல், என் வீடு என் மக்கள் என்னும் தன்னல வலையில் சிக்கி நன்னலம் இழக்கும் மனிதர்களின் மடமையைக் கண்டு வெகுண்டெழுகிறான்.

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
விருந்தினர்களைப் பேணாமல் 'சோறு நிதம் தின்று' வாழும் மூடர்கள் செல்வம் இருப்பினும் ஏழைகளே என்னும் வள்ளுவர் முழக்கத்தில் பாரதியின் உள்ளக் குமுறல் எதிரொலிப்பதைக் காணலாம். 

இதேபோல், நன்னெறி காட்டும் ஞான நூல்கள் ஆயிரம் இருந்தாலும் சின்னஞ் சிறு கட்டுக்கதைகளையே பெரிதென எண்ணிப் பிதற்றுபவர்களின் அறிவு முதிர்ச்சியின்மையைக் கண்டும் சிரிக்கிறான் பாரதி.  மேலும், உலகம் முழுவதும் இன்பங்கள் அமுத வெள்ளமாகக் கொட்டிக் கிடப்பதை உணராமல் எப்பொழுதும் கவலையில் வாடி நரகத்தில் உழலும் மனிதர்களின் பேதைமையைக் கண்டு நகுகின்றான். 'தாழ்வு பிறர்க்கு எண்ணத் தான் அழிவான்' என்று சாத்திரங்கள் சொல்வதைக் கேளாமல் கேடு நினைத்துக் கெட்டழிகின்ற மனிதர்களைக் கண்டும் நகைக்கின்றான். நாள்கள் எல்லாம் வாள்கள் ஆகித் தாம் வாழும் காலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டித் தள்ளுவதைக் கூடக் கவனிக்காமல் தம் மனம் போன போக்கில் வாழ்ந்து முதுமை அடைந்து இறந்து மடியும் மனிதர்களின் மூடத்தனத்தையும் எண்ணி ஏளனத்துடன் சிரிக்கின்றான். 

தேவரே அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.
மனம் போன போக்கில் வாழ்வதையே 'மேவன செய்தொழுகல்' என்கிறார் வள்ளுவர். அவ்வகையில் பார்த்தால், சான்றோர்கள் கயவர்கள் என்று இரண்டு விதமானவர்களும் தமது விருப்பத்திற்கேற்ப வாழ்பவர்கள். அதனால், கயவர்களும் சான்றோர்களைப் போன்றவர்களே என்று சொல்கிறார் வள்ளுவர். இங்குக் கயவர்களைப் புகழ்வது போல் தோன்றினாலும், உண்மையில் அவர்களைப் பார்த்துப் பழித்துச் சிரிக்கிறார். ஏனென்றால், மேம்போக்காகப் பார்த்தால், இவர்கள் இருவரது போக்கும் ஒத்திருந்தாலும், கூர்ந்து கவனித்தால் பல வேறுபாடுகளைக் கண்டறியலாம். நன்னெறியைப் பேணும் சான்றோர்களின் மனம் சீரானது. மாசு மறுவற்றது.  யாருடைய கருத்துத் திணிப்பும் தம் மனத்தைப் பாதிக்காதவாறு தம் மனம் சொல்லும் அறிவுரையின்படியே நின்று நடப்பவர்கள். அதனால் அச்சான்றோர்கள் மனம் போன போக்கில் வாழ்வதில் தவறில்லை. ஆனால், கயவர்களின் விஷயத்தில் அப்படியில்லை. அவர்கள் மனம் குழப்பம் அடைந்து தடுமாறும் இருட்டுக் குழி. அவர்கள் இந்த மதிகெட்ட மனம் சொல்வதைக் கேட்டு நடப்பதால் பிறருக்குப் பல தொல்லைகளைக் கொடுத்துத் தாமும் கெட்டொழிகின்றனர். அதனால், அவர்கள் அவ்வாறு மனம் விரும்பியவாறு வாழ்வது சிறப்பன்று. 

இவ்வாறு மனம் போன போக்கில் வாழ்வை நடத்திப் பொய்ம்மையே பேசிப் பொழுதினைச் சுருக்கி இறுதியில் கொடுங்கூற்றுக்கு இரையென மாய்பவர்களைப் பார்த்து ஊரே கைகொட்டிச் சிரிக்கும். 'உன் அருள்கிடைக்கப்பெறாமல் நான் மாண்டால், உலகத்தார் என்னைப் பார்த்துப் சிரிப்பார்களே! அதனால், உன்னைப் பிரிந்து வாடிக் கிடக்கும் என்னை உன் அடியார் கூட்டத்தில் ஒருவனாகச் சேர்த்துக்கொண்டு அருள்புரியவேண்டும்' என்று இறைவனை இறைஞ்சும் அப்பரின் நெஞ்சுருக்கும் பாடல் இங்குக் கருதிக்களிக்கத் தக்கது. 
மருளார் மனத்தோடு உனைப்பிரிந்து
வருந்து வேனை வாவென்றுஉன்
தெருளார் கூட்டம் காட்டாயேல்
செத்தே போனால் சிரியாரோ?
- திருநாவுக்கரசர்

Siva Siva

unread,
Feb 16, 2023, 10:00:06 AM2/16/23
to santhav...@googlegroups.com
Nice.

/அப்பரின் நெஞ்சுருக்கும் பாடல் இங்குக் கருதிக்களிக்கத் தக்கது. 
மருளார் மனத்தோடு உனைப்பிரிந்து
வருந்து வேனை வாவென்றுஉன்
தெருளார் கூட்டம் காட்டாயேல்
செத்தே போனால் சிரியாரோ?
- திருநாவுக்கரசர்/

Minor correction.
It is Manikkavasagar song.
8.21.8 - 21 கோயில் மூத்த திருப்பதிகம்

V. Subramanian


On Thu, Feb 16, 2023 at 9:50 AM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:
பல வேடிக்கை மனிதர் போலே

Life is a tale told by an idiot, 
full of sound and fury,
Signifying nothing.
- Shakespeare (Macbeth)

பொய்யாய்ப் பழங்கதையாய் கனவாய் மெல்லப் போனதுவே.
- பட்டினத்தார்

......

Anand Ramanujam

unread,
Feb 16, 2023, 10:03:13 AM2/16/23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி! திருத்திக்கொள்கிறேன்.

- இரா. ஆனந்த்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Lalitha & Suryanarayanan

unread,
Feb 16, 2023, 9:31:52 PM2/16/23
to santhav...@googlegroups.com
மிக அருமையான விளக்கம். ஒன்றன் மேல் ஒன்றாக உயர்ந்த விளக்கங்கள் போட்டி போட்டுக் கொண்டு பவனி வருகின்றன. பாராட்டுகள்.

சிவசூரி.

NATARAJAN RAMASESHAN

unread,
Feb 16, 2023, 9:45:11 PM2/16/23
to santhav...@googlegroups.com
திரு சிவசூரியின் கருத்தை நான் வழிமொழிகிறேன்
திரு ஆனந்த் அவர்கள் கவிதையில் கலக்குகிறார்.
அரிய விளக்கங்களாலும் கலக்குகிறார்

             —தில்லைவேந்தன்

                 


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
Feb 16, 2023, 9:51:24 PM2/16/23
to santhav...@googlegroups.com
திரு சிவசூரி அவர்களுக்கும் திரு தில்லை வேந்தன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி! 

இரா. ஆனந்த்

Anand Ramanujam

unread,
Feb 17, 2023, 5:02:57 PM2/17/23
to santhav...@googlegroups.com
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ

'வீழ்வு தடுக்கும் விறலே சக்தி' - பாரதியார்

வீழ்வு என்னும் சொல்லுக்குத் தாழ்வு, இழிவு, இறக்கம், தடுமாற்றம், தளர்வு, இறப்பு என்று பல பொருள்கள் உண்டு.  'தாழ்ந்து நடவேல்' என்று புதிய ஆத்திச்சூடியில் போதிக்கும் பாரதி, கீழான முறையில் நடந்து கொண்டு மனிதர் என்னும் நிலையிலிருந்து தாழ்ந்து வீழ்பவர்களின் இழிகுணத்தைச் சாடுகிறான். 

அந்நியர்க்கு அடிமையாதல் எத்தனை இழிவானதோ அதை விடக் கீழ்த்தனமானது நம் ஐம்புலன்களுக்கு அடிமை ஆதலே ஆகும். மனிதர்கள் தன்னலம் பேணி, வீண்கதைகள் பேசி, துயரத்தில் அழுந்தி, துன்புறுத்தி வாழும் போது பேராசை, மதிமயக்கம், சோகம், காழ்ப்புணர்வு போன்ற உணர்ச்சிகளின் வலையில் சிக்கித் தவிக்கிறார்கள்.  இந்தத் தாழ்வு நிலைமையையே 'புல்லடிமைத் தொழில்' என்று சொல்கிறான் பாரதி. மடமை, சிறுமை, துன்பம், பொய், வருத்தம், நோவு போன்றவைபோல் இந்த அடிமை மனோபாவமும் போக வேண்டும். அப்போதுதான் அழுகுதல், சாதல், அஞ்சுதல் போன்ற இழிவுகள் யாவும் விலகும். 'வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது வாழ்வதற்கு ஒப்பாமோ?' என்று வினவும் பாரதி அத்தகைய அடிமை வாழ்வை 'வாழ்வு' என்று பார்க்காமல் 'வீழ்வு' என்றே கருதினான்.

'நாடி அதிர்ச்சியே மரணம்' என்னும் அறிவியல் சான்றுக்கேற்ப அதிராத மனம் முதிராத உடலை வளர்க்கும். அறவழியின் மீதும் அன்பு நெறியின் மீதும் திடமான நெஞ்சின்மீதும் இவையாவும் நிலைத்திடச் செய்யும் தெய்வத்தின் மீதும் அசையாத நம்பிக்கை வைத்திருத்தல் அவசியம். அசைவற்ற மனமே வாழ்வு பெருக்கும். அசைவும் அதிர்வும் வீழ்வு கொடுக்கும். 

வீழ்வு என்னும் சொல்லுக்கு விரும்புதல் அல்லது ஆசைப்படுதல் என்று மற்றொரு அர்த்தமும் இருக்கிறது. ஆரமுதத்தை உண்ணுவதற்கு ஆசைகொண்டவர்கள் கள்ளின் பக்கம் தம் நாட்டத்தைக் காட்டமாட்டார்கள். அதேபோல், ஆன்ம ஒளிக்கடலில் மூழ்கித் திளைக்கும் பேரின்பத்தையே நாடும் மனம், சிற்றின்பச் சுவை தேடிச் சோற்றுக்கு அலைவதிலும் பொருள் குவிப்பதிலும் தற்பெருமை பேசுவதிலும் தன் துன்பத்திற்குப் பிறர்மீது பழிசுமத்தித் துன்புறுத்தி மகிழ்வதிலும் விருப்பம் காட்டி வீழ்ந்து அழியாது.

'நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ' என்று கேட்கும் போது நெஞ்சுறுதி, பெருமிதம், இகழ்ச்சி ஆகிய உணர்ச்சிகளைக் காட்டுவதுடன் நெறி தவறாமை, தாழ்ந்து நடவாமை, சிற்றின்பம் விழையாமை, பிறர்நலம் பேணுதல் என்னும் நற்பண்புகளையும் நாட்டுகின்றான் பாரதி. வறுமை வந்து வாட்டும் போதும், துயரம் வந்து ஆழ்த்தும் போதும், அறமும் அன்பும் விலகிடாமல் வாழ்ந்து காட்ட வந்த சித்தன் அவன். எனவே மலையே வந்து விழுந்தாலும் தான் வீழ மாட்டேன் என்னும் உரமும் மனவலிமையும் அவனுக்கு மிகுந்திருந்தது.  

'தேடிச் சோறு நிதம் தின்று' என்னும் இப்பாடல் 'யோக சித்தி' என்னும் தலைப்பில் அமைந்த வரம் கேட்கும் பாடல் தொகுப்பில் முதலாம் பாடல். வரம் கேட்கும் இந்தப் பாடலில், 'நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ' என்று கவிஞன் ஏன் சற்று கடுமையாகச் சொல்கிறான் என்று நாம் சிந்திக்க வேண்டும். கேட்பவர்களுக்கெல்லாம் வரமருளும் கருணையுள்ளம் கொண்டவள் பராசக்தி. ஆயினும், மனிதர்களின் மனத்தன்மையைப் பொறுத்து அவரவர்களுக்குத் தகுந்தவாறே வரம் அருள்வாள். தன்னை வென்றாளும் திறமையற்றவர்களுக்கு வையத் தலைமை என்னும் வரம் அளித்தால் வரம் வாங்கியவருக்கும் கேடு, உலகத்துக்கும் அதுபெருங் கேடாய் முடியும். அதனால், தேடிச் சோறு தின்று கதைபேசி மனம் வாடிப் பிறரை வாட்டுபவர்களுக்கு அவர்கள் சுமூகமாக வாழ்ந்து மடிவதற்கான சாதாரண வரங்களையே அருள்வாள். ஆனால், பாரதியோ அத்தகைய சாதாரண மனிதன் அல்லன். பாட்டுத் திறத்தால் வையத்தைப் பாலித்திட வந்தவன். தனது அறவேட்கையையும் அகத்தூய்மையையும் அன்பாற்றலையும் பாராமல் எங்கே தன் புறத்தோற்றத்தை மட்டுமே பார்த்து அந்த வேடிக்கை மனிதர்களின் கூட்டத்தில் தன்னையும் ஒருவனாகப் பராசக்தி கருதிவிடுவாளோ என்று எண்ணினான். அதனால்,'நான் சாதாரண வாழ்க்கையில் திருப்தியடையும் சராசரி மனிதன் அல்லேன்; நான் செய்யவேண்டிய செயற்கரிய செயல்கள் பல உள்ளன; நாட்டுக்கு உழைத்தலும் சோர்வற்று இருத்தலும் சாகாவரம் பெற்ற கவிதைகள் இயற்றலும் போன்ற அரிய கடமைகள் எனக்கு உள்ளன; இந்தக் கடமைகள் யாவும் இனிதே நிறைவேற நான் வீழ்ந்து மடியாமல் இருக்கவேண்டும். அதற்கு வேண்டிய வரங்களை நேரே இன்று எனக்குத் தா' என்று சொல்லும்போது, தான் அந்த வேடிக்கை மனிதர்களிலிருந்து வேறுபட்டவன் என்னும் உண்மையைப் பராசக்திக்கு நினைவுறுத்தும் வகையிலேயே 'நானும் வீழ்பவன் என்று நினைக்காதே' என்கிறான். 

அதேசமயம், வீழ்ந்து மடியும் மனிதர்களின் இழிநிலைமையை இகழ்ந்துரைக்கும் பாங்கையும் இங்குப் பார்க்கலாம். மனித வாழ்வை மேம்படுத்த வந்த மகாகவிஞன் பாரதி. அதனால், 'தேடிச் சோறு நிதம் தின்று' என்னும் இந்தப் பாடலின் முக்கிய நோக்கம், பிறரை இழிவுபடுத்தித் தன்னை உயர்த்திக் காட்டுவதோ, தனக்குப் பெருவரங்கள் கேட்பதோ கிடையாது. மனித மனத்தின் அழுக்கினைக் காட்டும் ஒரு கண்ணாடியாகத் தன்னைப் பாவித்து, மானிட சமுதாயத்தின் மடமை, சிறுமை, பேதைமைகளைச் சுட்டிக் காட்டித் திருத்த முனையும் பாடல் தான் இது என்பதை நாம் மறக்க வேண்டாம்.

இரா. ஆனந்த்

இவ்வாறு மனம் போன போக்கில் வாழ்வை நடத்திப் பொய்ம்மையே பேசிப் பொழுதினைச் சுருக்கி இறுதியில் கொடுங்கூற்றுக்கு இரையென மாய்பவர்களைப் பார்த்து ஊரே கைகொட்டிச் சிரிக்கும். 'உன் அருள்கிடைக்கப்பெறாமல் நான் மாண்டால், உலகத்தார் என்னைப் பார்த்துப் சிரிப்பார்களே! அதனால், உன்னைப் பிரிந்து வாடிக் கிடக்கும் என்னை உன் அடியார் கூட்டத்தில் ஒருவனாகச் சேர்த்துக்கொண்டு அருள்புரியவேண்டும்' என்று இறைவனை இறைஞ்சும் மாணிக்கவாசகரின் நெஞ்சுருக்கும் பாடல் இங்குக் கருதிக்களிக்கத் தக்கது. 
மருளார் மனத்தோடு உனைப்பிரிந்து
வருந்து வேனை வாவென்றுஉன்
தெருளார் கூட்டம் காட்டாயேல்
செத்தே போனால் சிரியாரோ?
- திருவாசகம்

Lalitha & Suryanarayanan

unread,
Feb 17, 2023, 8:28:22 PM2/17/23
to santhav...@googlegroups.com
எண்ணமாம் மலைமேல் ஏறி வண்ணம் பற்பல கண்டு வார்த்தையில் ஜாலம் செய்து விளக்கங்கள் குன்றெனக் குவிக்கும்
ஆற்றல் உடைய உங்களைப் போற்றுதல் அன்றி யாதொன்றும் அறியேன். முண்டாசுக் கவிஞனையும் அவனது கூர்வாள் போன்ற மீசையையும் வெண்கலக் குரலையும் கண்கள் முன்னம் கண்டு களிக்கும்படி எழுதும் எழுத்துக்குச் சொந்தக்காரர் நீங்கள். பாராட்டுகள்.

சிவ சூரியநாராயணன்.

On Sat, Feb 18, 2023 at 3:32 AM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:

Anand Ramanujam

unread,
Feb 17, 2023, 9:38:31 PM2/17/23
to santhav...@googlegroups.com
எழுத்தைப் படித்தின்புற் றென்மேல்பா ராட்டைப்
பொழிந்தசிவ சூரியார் பூஞ்சொல் - நுழைந்தென்றன்
உள்ளத்துள் மேவி உணர்வில் கலந்துறையும் 
தெள்ளுற்ற தேன்போல் சிறந்து.

அன்பார்ந்த பாராட்டுக்கு மிக்க நன்றி சிவசூரியாரே!

- இரா. ஆனந்த்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Feb 18, 2023, 1:24:46 AM2/18/23
to santhav...@googlegroups.com

Anand Ramanujam

unread,
Feb 18, 2023, 4:37:02 AM2/18/23
to santhav...@googlegroups.com
திரு தில்லைவேந்தன் அவர்களே,

தாங்கள் இட்ட பின்னூட்டத்தை என்னால் காண இயலவில்லை. மீண்டும் ஒருமுறை தங்கள் கருத்தை அனுப்புமாறு வேண்டிக்கொள்கிறேன்.

மிக்க நன்றி,
- ஆனந்த்

NATARAJAN RAMASESHAN

unread,
Feb 18, 2023, 5:13:53 AM2/18/23
to santhav...@googlegroups.com
வெண்பா மிகச் சிறப்பு 
தங்கள் பாடலும் சிறப்பு- உரையும் சிறப்பு

Anand Ramanujam

unread,
Feb 18, 2023, 5:18:57 AM2/18/23
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி!

- இரா. ஆனந்த்

Anand Ramanujam

unread,
Feb 18, 2023, 4:37:59 PM2/18/23
to santhav...@googlegroups.com
முடிவுரை

The great poets are judged by the frame of mind they induce. 
- Ralph Waldo Emerson

படிப்பவர் உள்ளத்தில் என்ன சிந்தனையைக் கிளறுகின்றனரோ, அதனைக் கொண்டே பெருங்கவிஞர்கள் மதிப்பிடப்பெறுகின்றனர்.
- எமர்சன்

பாரதி, மனிதனை மகிழ்விக்கும் பாடல்களுடன் மனித மனத்தை உணர்வித்துச் சிந்தை தெளிவிக்கும் கருத்தாழம் மிகுந்த கவிதைகளையும் இயற்றியவன்; இன்பத்தோடு வாழ்வின் குறிக்கோளையும் இன்னதென்று காண்பித்தவன்; தான் உணர்த்தும் கருத்துகளின் ஊடே பயணம் செய்பவர்களின் மனத்தில் பிரிவுகளைத் தகர்த்து விரிவினை ஏற்படுத்துபவன். ஆதலால் தான், அவன் வான்புகழ் கொண்ட மகாகவியாகப் போற்றப்படுகிறான். நம் உள்ளத்தில் உறைந்திருக்கும் மானுடத் தன்மையைத் தட்டி எழுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்துவதால், 'நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா' என்றும் போற்றப்படுகிறான்.   

தீராத ஆன்ம தாகம் கொண்ட அந்த மகாகவிஞனின் மனத்தில் கனன்று எழுந்த அக்கினிக் குஞ்சுதான் 'தேடிச் சோறு நிதம் தின்று' என்னும் கவிதையாக உருவெடுத்து வெளிப்பட்டது. ஜகன்மாதாவான பராசக்தியிடம் வரம் வேண்டிப் பாடிய இப்பாடல்,  வேண்டலுடன் வேதவாழ்வினைக் கைப்பிடிக்கத் தூண்டலையும் உயர்நோக்கமாகக் கொண்ட நயமிகுந்த நற்பாடல்; ஊருக்கு நல்லது சொல்ல விழையும் கவிஞன் உணர்வெழ உரைத்த உபதேச மொழி; கவலையிலா மானுடத்தையும் கலகமிலா உலகத்தையும் படைக்க முழங்கிய சங்கினொலி.

முப்புரத்தையும் சிரித்தே எரித்த சிவபெருமானைப் போல், நம் மனத்தில் வேரூன்றி வளர்ந்த சிறுமை, பேதைமை, மடமை என்னும் மூன்றனையும் பார்த்து எள்ளி நகைத்தே எரித்தழிக்க முயலும் பாரதியின் அருளுள்ளத்தில் எழுந்த அருங்கவிதை இது. இக்கவிதை சொல்லும் கருத்தை மறைமொழியாக நெஞ்சில் நிறுத்தி வாழ்வைத் திருத்தி உயர்வோமாக.

----------------------------------------------------------------------------------------------
இத்துடன் 'தேடிச் சோறு நிதம் தின்று' என்னும் இவ்விழையில் நான் எழுதிய விளக்கவுரை முடிவடைகின்றது. இவ்விழையைத் தொடங்கும் போது, 'ஆழமான உரை' என்று பாராட்டிய பேராசிரியர் பசுபதி அவர்களுக்கு இந்த விளக்கவுரையை சமர்ப்பணம் செய்கின்றேன். இவ்விழையை நான் எழுதுவதற்கு எனக்கு அன்பும் ஆதவும் அளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்விளக்கவுரை முழுவதையும் PDF வடிவத்தில் படிக்க இங்கே சொடுக்கவும்:

- இரா. ஆனந்த் (இமயவரம்பன்)

Anand Ramanujam

unread,
Feb 25, 2023, 6:30:48 AM2/25/23
to santhav...@googlegroups.com
‘தேடிச் சோறுநிதந் தின்று’ என்னும் இந்தப் பாடலின் தாள நடை குறித்த எனது இந்தக் கேள்விகளுக்கு பதில் அளித்துத் தெளிவுறுத்துமாறு அவையோரைக் கேட்டுக் கொள்கிறேன்  :

இந்தப் பாடல் எவ்வகைச் சிந்துப்பாடல் அமைப்பைச் சார்ந்தது?
இந்தப் பாடல், மும்மையும் நான்மையும் கொண்ட கலப்பு நடை கொண்ட பாடலா? 

- இரா. ஆனந்த்

Reply all
Reply to author
Forward
0 new messages