வெண்பாவில் சங்கத் தமிழ் விளக்கம்: பதிற்றுப் பத்து

358 views
Skip to first unread message

sai...@gmail.com

unread,
Jun 8, 2022, 1:25:36 AM6/8/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
வெண்பாவில் சங்கத் தமிழ் விளக்கம்:
பதிற்றுப் பத்து
குருநாதன் ரமணி
.
நூல் அறிமுகம்: பதிற்றுப் பத்து
• சேர மன்னர்களைப் பற்றி மட்டுமே பாடும் இலக்கியம்.
• முதல், இறுதிப் பத்துகள் கிடைக்கவில்லை.
• 2-9 பத்துகளில் பாடப்படும் சேர மன்னர்கள்:
2. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்,
3. இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன்
4. களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
5. கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்
6. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
7. செல்வக் கடுங்கோ வாழியாதன்
8. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
9. குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை
• 2-9 பத்துகளில் பாடிய புலவர்கள்:
2. குமட்டூர்க் கண்ணனார்
3. பாலைக் கௌதமனார்
4. காப்பியாற்றுக் காப்பியனார்
5. பரணர்
6. காக்கைபாடினியார் (நச்செள்ளையார்)
7. கபிலர்
8. அரிசில் கிழார்
9. பெருங்குன்றூர் கிழார்
• தொகுத்தவர் பெயர் தெரியவில்லை.
• முழுவதும் பாடாண் திணையில் அமைந்துள்ளது.
• ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் துறை, வண்ணம், தூக்கு, பாடலின் பெயர்
குறிப்பிடப்பட்டுள்ளன.
.
பதிகம்
• கிடைத்துள்ள ஒவ்வொரு பத்துக்கும் பதிகம் ஒன்று காணப்படுகிறது.
• அது பாடல் மன்னன் மெய்க் கீர்த்திபோல் நின்று,
• பாடினோர், பாடப்பட்டோர், பாடிய பாட்டு,
• பாடிப்பெற்ற பரிசில், பாடல் வேந்தன் ஆட்சிக் காலம் ஆகிய விவரங்களைத் தருகிறது.
• பதிகங்கள் பழைய உரையில் இருந்தாலும் மூல ஏடுகளில் இல்லை.
.
தூக்கு
• தூக்கு என்பது செய்யுள் அடிவரையறை கொண்டு இன்ன பா என்று
பாக்களைத் துணிப்பது.
• செந்தூக்கு என்பது அளவடியால் இயலும் நேரிசை ஆசிரியப்பா.
• வஞ்சித் தூக்கு என்பது வஞ்சியடிகள் இயல்வன.
• இரண்டும் விரவி வருவதை இந்நூலிற் சில பாடல்களிற் காணலாம்.
• இவ்வாறு வருவதைச் செந்தூக்கும், வஞ்சித் தூக்கும் என்று குறிப்பர்.
.
வண்ணம்
• பாடல் சீர்களில் வரும் சந்த வேறுபாடு.
• தொல்காப்பியர் தரும் 20 வண்ணங்களில் ஒழுகு வண்ணம், சொற்சீர் வண்ணம்
ஆகிய இரண்டும் பதிற்றுப் பத்தில் காணப் படுகின்றன.
• ஒழுகிய ஓசையால் செல்லும் சந்தம் ஒழுகு வண்ணம் ஆகும்.
• சொற்சீர் அடிகளால் செல்வது சொற்சீர் வண்ணம்.
• சொற்சீர் அடி என்பது அளவடியில் குறைந்து, வஞ்சி ஓசை இல்லாமல்
அகவல் ஓசை கொண்டு வருவது.
.
★★★
பதிற்றுப்பத்து: ப02.03. பூத்த நெய்தல்
(இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மேல் குமட்டூர்க் கண்ணனார் பாடியது;
ஒழுகு வண்ணம், செந்தூக்கும் வஞ்சித் தூக்கும்)
.
குறிப்புரை
• அகவற் பாக்களை வெண்பாவாக எழுதுகையில், பெரும்பாலும்,
• செந்தூக்கு அளவடிகளில் இயற்சீர் வெண்டளை பயிலுமாறும்,
• வஞ்சித் தூக்கு அடிகளில் வெண்சீர் வெண்டளை பயிலுமாறும் அமைத்துள்ளேன்.
• இவ்வாறு ஓர் அகவற் பாடல் முழுவதும் கலிவெண்பாவாக அமைதல் காணலாம்.

சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பகைவர் நாட்டைச் சீரழித்த விதமும், அவன் தன் நாட்டைக் காக்கும் விதமும் சொல்வது.

பகைவர் நாட்டு வளம்
(பஃறொடை வெண்பா)
.
ஆனிரைகள் புல்மேய ஆரல்மீன் துள்ளிவிழும்
ஏனங்கள் செய்போரில் ஏருழவே இல்லாமல்
ஈனங்கொள் சேற்றினிலே வித்திடுவர் வேளாளர்
கன்னல் விளைநிலம் நெய்தல் கமழ்நிலம்
பென்னம் பெருங்கண் எருமை இருத்தும் 5
.
கலித்த துணங்கை நடனக் களத்தில்
தலைவளை ஆனிரை ஆம்பலை வாய்கொளும்
ஓங்கிவளர் தென்னைமரம் பூதவத்தில் புள்ளொலிக்கும்
வாங்குபுனல் கால்வாய்கள் பூம்பொய்கை ஆரப்
புலவோர் புகழும் நாடு. 10
[பூதவம்: பூமருது; பதிநிறை: ஊர்கள் நிறைந்த]
.
★★★
மூலம்
பதிற்றுப்பத்து: இரண்டாம் பத்து
பாடப்பட்டோன்: இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன்
பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார்
2.3. பூத்த நெய்தல்
.
தொறுத்தவயல் ஆரல்பிறழ்நவும்
ஏறுபொருதசெறு உழாதுவித்துநவும்
கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல்
இருங்கண் எருமையின் நிரைதடுக் குநவும்
கலிகெழு துணங்கை ஆடிய மருங்கின் 5
வளைதலை மூதா ஆம்பல் ஆர்நவும்
ஒலிதெங்கின் இமிழ்மருதின்
புனல்வாயில் பூம்பொய்கைப்
பாடல் சான்ற பயம்கெழு வைப்பின்
நாடு... 10
.
★★★★★

sai...@gmail.com

unread,
Jun 9, 2022, 3:14:36 AM6/9/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
பதிற்றுப்பத்து: ப02.03. பூத்த நெய்தல்
(இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மேல் குமட்டூர்க் கண்ணனார் பாடியது;
ஒழுகு வண்ணம், செந்தூக்கும் வஞ்சித் தூக்கும்)
.
பகைவர் நாட்டுச் சீர்கேடு
(பஃறொடை வெண்பா)
.
நாட(து) அழிவுகொள் நாமமுண் டாக்கியே
கூடது நாடிய கூற்றுவன் போல
வெகுண்டுநீ தங்கியே முற்றுகை இட்டுத்
தகர்த்துநீ தாக்கச் சிறப்பழி பாக்கம்
கரும்புக் கழனிகள் புல்லெனக் காண 5
.
திரிகாய் விடத்தரொடு காருடை ஒங்க
பிரிந்த தலைமயர்ப் பேய்மகள் சுற்றித்
திரியக் கழுதுபேய் ஊர்தி இவர்ந்தே
நெருஞ்சி பரவிய நீறார் களத்தினில்
தாதெரு அற்றொலிச் சீரழி மன்றினில் 10
.
யாதொரு உள்ளமும் நாடுதல் அஞ்சியே
தீதுறக் கெட்டன சீர்.
.
[நாமம்: அச்சம்; கூடு: யாக்கை; திரிகாய் விடத்தர்: முறுக்கிய காய்கொண்ட விடத் தேரை மரங்கள்; காருடை: கரிய உடையென்னும் மரங்கள்; தாதெரு: சாணப்பூச்சு]
.
மூலம்
பதிற்றுப்பத்து: இரண்டாம் பத்து
2.3. பூத்த நெய்தல்
நாடுகவின் அழிய நாமம் தோற்றிக் 10
கூற்(று)அடூஉ நின்ற யாக்கை போல
நீசிவந்(து) இறுத்த நீர்அழி பாக்கம்
விரிபூங் கரும்பின் கழனி புல்எனத்
திரிகாய் விடத்தரொடு காருடை போகிக்
கவைத்தலைப் பேய்மகள் கழு(து)ஊர்ந்(து) இயங்க 15
ஊரிய நெருஞ்சி நீ(று)ஆடு பறந்தலைத்
தா(து)எரு மறுத்த கலிஅழி மன்றத்(து)
உள்ளம் அழிய ஊக்குநர் மிடல்தபுத்
துள்ளுநர் பனிக்கும் பாழா யினவே
.
★★★★★
 

sai...@gmail.com

unread,
Jun 10, 2022, 2:55:18 AM6/10/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
பதிற்றுப்பத்து: ப02.03. பூத்த நெய்தல்
(இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மேல் குமட்டூர்க் கண்ணனார் பாடியது;
ஒழுகு வண்ணம், செந்தூக்கும் வஞ்சித் தூக்கும்)
.
மன்னவன் நாடு
(கலிவெண்பா)
.
காடு முனிவரர் நாடும் இடமாகும்
ஈடறு முல்லைமண் எங்கும் விழைவுடன்
ஒள்ளிழை மங்கைய ரோடுதாம் கூடியே
மள்ளர் உறையும் இடங்களாய் மாறும்
பெருவழி யாவையும் இன்னியல் பாகும் ... 5
.
ஒருகுடி எண்வகைக் கூலம்விற் போரின்
திருவினை ஓம்பிப் பெருங்குடி மக்கள்
புரக்கும் சுமைகொளும் காணியாளர் சுற்றம்
சிறப்புறப் பேணியே செவ்வாய்க்கோள் செல்லும்
விறல்கொள் இடத்தினில் வெள்ளிசெலா மையால் ... 10
.
மழைவேண்டும் மண்ணெலாம் மாரி நிலைத்தே
தழைத்த பயிர்களால் தண்வளம் பெற்றே
நலிபசி நோய்பிற நாட்டில் அகன்றே
பொலிவுறும் நீகாத்த நாடு.
.
★★★
மூலம்
பதிற்றுப்பத்து: இரண்டாம் பத்து
2.3. பூத்த நெய்தல்
.
காடே கடவுள் மேன புறவே 20
ஒள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன
ஆறே அவ்வனைத்(து) அன்றியும் ஞாலத்துக்
கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக்
குடிபுறம் தருநர் பாரம் ஓம்பி
அழல்சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது 25
மழைவேண்டு புலத்து மாரி நிற்ப
நோயொடு பசிஇகந்(து) ஒரீஇப்
பூத்தன்று பெருமநீ காத்த நாடே.
.
பெயர்: பூத்த நெய்தல் (3)
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
வண்ணம்: ஒழுகு வண்ணம்
.
★★★★★

sai...@gmail.com

unread,
Jun 12, 2022, 2:58:37 AM6/12/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
பதிற்றுப்பத்து: ப03.01. அடுநெய் யாவுதி - 01
(பல்யானைச் செல்கெழு குட்டுவன் மேல் பாலைக் கெளதமனார் பாடியது;
ஒழுகு வண்ணம், செந்தூக்கு)
.
ஐந்தும் கற்று வேள்வி போற்றும் மன்னன்!
(பஃறொடை வெண்பா)
.
சொல்லும் பொருளும் தொகைகொள் இலக்கணம்
நல்லன அல்லன சோதிடம் நல்கும்
செவிகளாற் கற்றோதும் சீர்மிகு வேதம்
நிவிர்த்திதரும் பக்தியை நெஞ்சிருத்தும் ஆகமம்
செவ்வையாய்க் கற்றவை சீர்துணை யாகவே 5
எவ்வுயிர்க்கும் தீங்கெண்ணாக் கொள்கை இயல்பாய்
இரவியைப் போலச் சிறந்தவாய் மையால்
உருசூழ் முறைமைக் கடவுளைப் பேண
உருத்தவேள் வித்தீச் சுடரெழு தோறும்
விரும்பிய(து) உள்ளம் உடலில் பரவும் 10
பெரும்பொருள் ஆவுதி யால்காண் புகையால்
வரும்புகழ் காணும் வளம்.
.
[சோதிடம் நல்கும்: நல்கும் சோதிடம் என அன்வயித்துக் கொள்க. நிவிர்த்தி: பந்தத்திலிருந்து விடுதலை;]
.
★★★
மூலம்
பதிற்றுப்பத்து: மூன்றாம் பத்து
பாடப்பட்டோன்: பல்யானைச் செல்கெழு குட்டுவன்
பாடியவர்: பாலைக் கெளதமனார்
3.1. அடுநெய்யாவுதி
.
சொல்பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம்என்(று)
ஐந்(து)உடன் போற்றி அவைதுணை ஆக
எவ்வம் சூழாது விளங்கிய கொள்கைக்
காலை அன்ன சீர்சால் வாய்மொழி
உருகெழு மரபின் கடவுள் பேணியர் 5
கொண்ட தீயின் சுடர்எழு தோறும்
விரும்புமெய் பரந்த பெரும்பெயர் ஆவுதி
.
★★★★★
 

sai...@gmail.com

unread,
Jun 13, 2022, 12:27:12 AM6/13/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
பதிற்றுப்பத்து: ப03.01. அடுநெய் யாவுதி - 02
(பல்யானைச் செல்கெழு குட்டுவன் மேல் பாலைக் கெளதமனார் பாடியது;
ஒழுகு வண்ணம், செந்தூக்கு)
.
இல்லங்களில் எழும் ஆவுதி!
(பஃறொடை வெண்பா)
.
வருவோர் வரையின்றி உண்ணல் விழைந்தும்
விருந்தினர் வேறிடஞ் செல்லாதே உண்ணவும்
பட்டை மரந்தனில் பாசவர் கொத்தியே
வெட்டும் இறைச்சியில் வெள்ளைக் கொழுப்பைக்
கனலால்தா ளிக்கக் கடலொலி போலத் 5
தினமெழும் இல்லச் செழுமை நகரில்
அடிசிலின் ஆவுதி நெய்.
[பாசவர்: ஆட்டிறைச்சி விற்கும் வணிகர்]
.
★★★
மூலம்
பதிற்றுப்பத்து: மூன்றாம் பத்து
3.1. அடுநெய் யாவுதி
.
வருநர் வரையார் வார வேண்டி
விருந்துகண் மாறா(து) உணீஇய பாசவர்
ஊனத்(து) அழித்த வால்நிணக் கொழும்குறை 10
குய்யிடு தோறும் ஆனா(து) ஆர்ப்பக்
கடல்ஒலி கொண்டு செழுநகர் நடுவண்
அடுமை எழுந்த *அடுநெய் ஆவுதி*
.
★★★★★

sai...@gmail.com

unread,
Jun 13, 2022, 11:50:58 PM6/13/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
பதிற்றுப்பத்து: ப03.01. அடுநெய் யாவுதி - 03
(பல்யானைச் செல்கெழு குட்டுவன் மேல் பாலைக் கெளதமனார் பாடியது;
ஒழுகு வண்ணம், செந்தூக்கு)
.
மன்னன் படை வளம் பேணுதல்!
(பஃறொடை வெண்பா)
.
அடிசிலிற் பெய்தநெய் ஆவுதிக் குய்யில்
உடன்கமழ் வாசனை உம்பரின் வானில்
நிலைகொள் கடவுளும் நேயமுறப் பேணி
குலையா வளம்நிறை குற்றமில் சீரிய
மாரிபோல் மிக்கே மகிழ்தரும் கள்ளுடன்
போரில்வல் யானைமேல் போர்முரசு ஆர்க்கவே
சீர்பெருஞ் செல்வம் திறைபகை வர்தர
மார்பினில் சாந்தணி மன்!
[குய்: தாளிப்பு]
.
★★★
மூலம்
பதிற்றுப்பத்து: மூன்றாம் பத்து
3.1. அடுநெய் யாவுதி
.
இரண்(டு)உடன் கமழும் நாற்றமொடு வானத்து
நிலைபெறு கடவுளும் விழைதகப் பேணி 15
ஆர்வளம் பழுனிய ஐயம்தீர் சிறப்பின்
மாரிஅம் கள்ளின் போர்வல் யானைப்
போர்ப்(பு)உறு முரசம் கறங்க ஆர்ப்புச்சிறந்து
நன்கலம் தரூஉம் மண்படு மார்ப
.
★★★★★
 

sai...@gmail.com

unread,
Jun 15, 2022, 9:25:23 AM6/15/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
பதிற்றுப்பத்து: ப03.01. அடுநெய் யாவுதி - 04
(பல்யானைச் செல்கெழு குட்டுவன் மேல் பாலைக் கெளதமனார் பாடியது;
ஒழுகு வண்ணம், செந்தூக்கு)
.
மழவர் கவசம்!
(பஃறொடை வெண்பா)
.
முல்லை மலர்மாலை உச்சியில் சூடிய
பல்வகை யான பசுகொளும் கோவலர்
புல்லார்ந் தகன்ற புலத்தினில் மேயவிட
கல்லார்ந்த காட்டில் கதிர்மணி கொள்ளும்
செருப்பெனும் வெற்புடை பூழியர் கோநீ 5
திரள்கண்ணி வீரர்மெய்க் காப்பு!
.
[கதிர்மணி: ஒளிதிகழ் மணி; செருப்பு: மலையின் பெயர்]
.
★★★
மூலம்
பதிற்றுப்பத்து: மூன்றாம் பத்து
3.1. அடுநெய் யாவுதி
.
முல்லைக் கண்ணிப் பல்ஆன் கோவலர் 20
புல்உடை வியன்புலம் பல்ஆ பரப்பிக்
கல்உயர் கடத்(து)இடைக் கதிர்மணி பெறூஉம்
மிதிஅல் செருப்பின் பூழியர் கோவே
குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை
.
★★★★★

sai...@gmail.com

unread,
Jun 16, 2022, 1:58:39 AM6/16/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
பதிற்றுப்பத்து: ப03.01. அடுநெய் யாவுதி - 05
(பல்யானைச் செல்கெழு குட்டுவன் மேல் பாலைக் கெளதமனார் பாடியது;
ஒழுகு வண்ணம், செந்தூக்கு)
.
அயிரை மலை நாட!
(பஃறொடை வெண்பா)
.
பயன்நிறை காடுகள் பற்பல கொண்ட
பயன்நிறை கோடு பரந்தே உயரத்தில்
நீர்விழும் பக்கம் தவிர்த்தொரு நீள்தொலைவில்
பார்வைநுண் கொக்கின் பரிவேட்புக் கஞ்சாத
சீர்கொளும் நாட்டில் பகைவரின் போர்தவிர்த்தே
நேர்கோட் டயிரைக்கோ வே!
.
[பரிவேட்பு: விரைந்து வந்து கொத்துதல்; அயிரை: மலையின் பெயருமாம்.]
.
★★★
மூலம்
பதிற்றுப்பத்து: மூன்றாம் பத்து
3.1. அடுநெய் யாவுதி
.
பல்பயம் தழீஇய பயம்கெழு நெடுங்கோட்டு 25
நீர்அறல் மருங்கு வழிப்படாப் பாகுடிப்
பார்வல் கொக்கின் பா஢வேட்(பு) அஞ்சாச்
சீர்உடைத் தேஎத்த முனைகெட விலங்கிய
நேர்உயர் நெடுவரை அயிரைப் பொருந
.
★★★★★
 

sai...@gmail.com

unread,
Jun 17, 2022, 12:23:24 AM6/17/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
பதிற்றுப்பத்து: ப03.01. அடுநெய் யாவுதி - 06 (இறுதிப் பகுதி)
(பல்யானைச் செல்கெழு குட்டுவன் மேல் பாலைக் கெளதமனார் பாடியது;
ஒழுகு வண்ணம், செந்தூக்கு)
.
வாழிய பல்லாண்டு!
(பஃறொடை வெண்பா)
.
பருவந்தப் பாதே பயன்தரும் மாரி
வருநோய் எதுவுமின்றி வாணாள்கொள் மாந்தர்
நறுநெய் இலாதே கமழ்மணம் கொண்டே
உறுகார் மலர்மணம் கொள்தாழ்கார் கூந்தலும்
வாவியில் பூத்த இரவுமலர் போல்காணும் 5
தாவும் விழிகளிவள் தண்முகம் கொள்ளவே
காந்தள் அசைநீர்க் கரைதனில் ஓங்கிய
மூங்கிலைப் போல்பெரும் தோள்கொள் இவளோடு
ஈங்குநீ வாழியபல் லாண்டு.
.
★★★
மூலம்
பதிற்றுப்பத்து: மூன்றாம் பத்து
3.1. அடுநெய் யாவுதி
.
யாண்டுபிழைப் பறியாது பயமழை சுரந்து 30
நோயின் மாந்தர்க்(கு) ஊழி ஆக
மண்ணா வாயின் மணம்கமழ் கொண்டு
கார்மலர் கமழும் தாழ்இரும் கூந்தல்
ஒ஡ணஇயின போல விரவுமலர் நின்று
திருமுகத்(து) அலமரும் பெருமதர் மழைக்கண் 35
அலங்கிய காந்தள் இலங்குநீர் அழுவத்து
வேய்உறழ் பணைத்தோள் இவளோ(டு)
ஆயிர வெள்ளம் வாழிய பலவே.
.
பெயர் - அடுநெய்யாவுதி (13)
துறை - செந்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கு
வண்ணம் - ஒழுகு வண்ணம்
.
★★★★★

sai...@gmail.com

unread,
Jun 18, 2022, 1:02:57 AM6/18/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
பதிற்றுப்பத்து: ப04.03.. வரம்பில் வெள்ளம்
(களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் மேல் காப்பியாற்றுக் காப்பியனார்;
ஒழுகு வண்ணம், செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்)
.
குறிப்பு
நான்காம் பத்தின் பாடல்கள் அந்தாதியாக அமைவன.
.
வெற்றிச் சிறப்பு!
(கலிவெண்பா)
.
கொடித்தேர் அரசே வியப்புப் பெரிதே
வடிவாய் அமைந்த மணிதழுவக் கால்கள்
திடமாய் உரல்முரசு போலத் திகழக்
கடிமரத்தில் கட்டிவைத்த யானைகளால் மாற்றான்
நெடுநீர்கொள் ஆழ்குளங்கள் நீர்கலங்க அந்நீரை 5
மூழ்கடித்தாற் போல்திரண்டு மொய்த்தபடை வந்துதங்க
வாழ்மா கெடுத்த வரம்பிலா வெள்ளம்போல்
வாட்படை ஆரையாய் வேற்படைகா வற்காடாய்
ஆட்கொல்லும் வில்விசை அம்புமுள் வேலியாய்
செவ்வாய்க் கலங்கள் வளைந்த அகழியாய் 10
கவ்வை முரசுகள் காரிடி யேறாகக்
காலாட் படைவீரர் வெல்லற் கரியராய்க்
கோலம் வலியதோர் கோட்டையாய் நின்படை
போரெதிர்கொள் மாற்றார் புறங்கொடுத் தேஓடும்
சீருனது வெற்றிச் சிறப்பு. 15
[வாழ்மா: வாழ்வுக்குறிய வயல்]
.
★★★
மூலம்
பதிற்றுப்பத்து: மூன்றாம் பத்து
4.3. வரம்பில் வெள்ளம்
.
இறும்பூதால் பெரிதே கொடித்தேர் அண்ணல்
வடிமணி அனைத்த பனைமருள் நோன்தாள்
கடிமரத்தான் களி(று)அணைத்து
நெடுநீர துறைகலங்க
மூழ்த்(து)இறுத்த வியன்தானையொடு 5
.
புலம்கெட நெரிதரும் *வரம்பில் வெள்ளம்*
வாள்மதில் ஆக வேல்மிளை உயர்த்து
வில்விசை உமிழ்ந்த வைம்முள் அம்பின்
செவ்வாய் எஃகம் வளைஇய அகழின்
கார்இடி உருமின் உரறும் முரசின் 10
கால்வழங்(கு) ஆர்எயில் கருதின்
போர்எதிர் வேந்தர் ஒரூஉப நின்னே.
.
துறை: வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர்: வரம்பில் வெள்ளம்
.
★★★★★
 

sai...@gmail.com

unread,
Jun 19, 2022, 10:37:46 AM6/19/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
பதிற்றுப்பத்து: ப05.05. ஊன்துவை அடிசில் - 01
(கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் மேல் காசறு செய்யுட் பரணர்;
ஒழுகு வண்ணம், செந்தூக்கு)
.
வெற்றிச் சிறப்பு!
(பஃறொடை வெண்பா)
.
பொற்றும்பைப் பூவும் பொறிகொளும் தூணியில்
புற்றரா போல ஒடுங்கிய அம்பும்
வளைந்திருக்கும் வில்லும் வளையாத நெஞ்சும்
களிறெறிந்து கூர்நுனி குன்றிய வேலும்
விழுமியோர் சூழ்ந்த வியன்ஞாட்பும் கொள்ளும் 5
எழுவர் முடிப்பொன்னைக் கொள்ளாரம் மார்பில்
கெழுமிய குட்டுவ னே!
.
[பொற்றும்பை: பொன்னால் ஆன தும்பை; பொறி: புள்ளி; தூணி: அம்புறாத் தூணி; புற்றரா: புற்றில் இருக்கும் பாம்பு; வியன்ஞாட்பு: அகன்ற போர்க்களம்; கெழுமிய: பொருந்திய]
.
★★★
மூலம்
பதிற்றுப்பத்து: ஐந்தாம் பத்து
5.5. ஊன்துவை அடிசில்
.
பொலம்பூந் தும்பைப் பொறிகிளர் தூணிப்
புற்(று)அடங்(கு) அரவின் ஒடுங்கிய அம்பின்
நொசி(வு)உடை வில்லின் ஒசியா நெஞ்சின்
களி(று)எறிந்து முரிந்த கதுவாய் எஃகின்
விழுமியோர் துவன்றிய அகன்கண் ணாட்பின் 5
எழுமுடி மார்பின் எய்திய சேரல்
.
★★★★★

sai...@gmail.com

unread,
Jun 20, 2022, 1:00:25 AM6/20/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
பதிற்றுப்பத்து: ப05.05. ஊன்துவை அடிசில் - 02
(கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் மேல் காசறு செய்யுட் பரணர்;
ஒழுகு வண்ணம், செந்தூக்கு)
.
பிணங்குவிந்த போர்!
(பஃறொடை வெண்பா)
.
ஆழ்ந்த இடங்கொள் அகழிமதில் பற்பல
சூழ்ந்து கடந்து தொலைத்தவற் றைவென்று
முன்னர்ப் பலகாலம் உள்நுழைந்து கொண்டழித்தே
நாடுசூழ ஆண்ட நனங்கொள் அரண்கதவைக்
கூடிநின்று காக்கும் கணையமரம் போன்ற
திணிதோள் உயர்த்தி நிலம்பல கொண்டு 5
பிணங்குவிந்த போரில் துணங்கைக்கூத் தாடி
நிணங்கொள்வர் வீரர் நினது.
.
[நனம்: அகலம்; கணையமரம்: கோட்டைக் கதவில் குறுக்கே கோடாகத் தடையிடும் எழு]
.
★★★
மூலம்
பதிற்றுப்பத்து: ஐந்தாம் பத்து
5.5. ஊன்துவை அடிசில்
.
குண்டுகண் அகழிய மதில்பல கடந்து
பண்டும் பண்டும்தாம் உள்அழித்(து) உண்ட
நாடுகெழு தாயத்து நனம்தலை அருப்பத்துக்
கதவம் காக்கும் கணைஎழு அன்ன 10
நிலம்பெறு திணிதோள் உயர ஓச்சிப்
பிணம்பிறங்(கு) அழுவத்துத் துணங்கை ஆடிச்
.
★★★★★
 

sai...@gmail.com

unread,
Jun 21, 2022, 1:21:34 AM6/21/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
பதிற்றுப்பத்து: ப05.05. ஊன்துவை அடிசில் - 03
(கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் மேல் காசறு செய்யுட் பரணர்;
ஒழுகு வண்ணம், செந்தூக்கு)
.
உன்போல் யாருளர்!
(பஃறொடை வெண்பா)
.
ஊன்குழைந்து சோற்றில் துவைந்த உணவினைத்
தான்புறந் தந்தோடாப் பீடுடை யோர்க்கே
அவர்கள் இருக்கும் இடத்தில் அளித்து
உவந்தே பகைவர் துரகபலம் உள்வரா(து)
முள்வேலி கொள்வ தறியாதை எல்லையும்
வில்லம்பைத் தாங்குகின்ற வெண்கே டகத்தையும்
கொண்டிலங்கும் சேனைகொளும் கொற்றவன் உன்போலப்
பண்புளர் என்றும் இலர்.
.
★★★
மூலம்
பதிற்றுப்பத்து: ஐந்தாம் பத்து
5.5. ஊன்துவை அடிசில்
.
சோறுவே(று) என்னா *ஊன்துவை அடிசில்*
ஓடாப் பீடர் உள்வழி இறுத்து
முள்இடு(பு) அறியா ஏணித் தெவ்வர் 15
சிலைவிசை அடக்கிய மூரி வெண்தோல்
அனைய பண்பின் தானை மன்னர்
இனியார் உளரோநின் முன்னும் இல்லை
.
★★★★★

sai...@gmail.com

unread,
Jun 22, 2022, 2:07:50 AM6/22/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
பதிற்றுப்பத்து: ப05.05. ஊன்துவை அடிசில் - 04 (இறுதிப் பகுதி)
(கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் மேல் காசறு செய்யுட் பரணர்;
ஒழுகு வண்ணம், செந்தூக்கு)
.
இனியிலர் முன்னர் இலர்!
(பஃறொடை வெண்பா)
.
முகில்கள் முகத்தலால் நீர்குறையா நிற்கும்
மிகுநதி வெள்ளத்தால் நீர்நிறையா நிற்கும்
தடுக்கும் வளித்திரட்டால் தானசைசூல் மேகம்
இடியேற்று மின்னல்போல் வேலைச் செலுத்தி
பனிக்கடல் ஆர்க்கப் பகைவரைக் கொன்றோர்
இனியிலர் முன்னர் இலர்.
.
★★★
மூலம்
பதிற்றுப்பத்து: ஐந்தாம் பத்து
5.5. ஊன்துவை அடிசில்
.
மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது
விலங்குவளி கடவும் துளங்(கு)இரும் கமம்சூல் 20
வயங்குமணி இமைப்பின் வேல்இடுபு
முழங்குதிரைப் பனிக்கடல் மறுத்திசி னோரே.
.
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: ஊன்துவை அடிசில்
.
★★★★★
 

sai...@gmail.com

unread,
Jun 27, 2022, 1:05:12 AM6/27/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
பதிற்றுப்பத்து: ப06.01. வடுஅடு நுண்ணயர் - 01
(ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் மேல் காக்கைபாடினியார் நச்செள்ளையார்;
ஒழுகு வண்ணனும் சொற்சீர் வண்ணமும், செந்தூக்கும் வஞ்சித் தூக்கும்)
.
புனைவுகளால் தோன்றும் பொலிவு!
(பஃறொடை வெண்பா)
.
அசைகின்ற நீர்ப்பரப்பைக் காற்று கலக்க
விசையோ(டு) அலைகள் இடிபோல் முழங்கும்
கடற்கரைச் சோலைக் குடதிசை செல்லும்
தடந்தாள்கொள் நாரை தவித்தே இரையிலாது
வண்டுறை பூங்கொத்து ஞாழல் கிளைதங்கும் 5
தண்கடல் நீர்ப்பரப்பில் ஆர்ந்த கொடியடும்பு
மண்கரையில் நண்டுகள் ஊர்ந்த சுவடுகளின்
நுண்மணலை வாடைவளி தூக்கி எறியும்
பனைமரத் தோப்பினில் சாலினி மங்கை
புனைவுகளால் தோன்றும் பொலிவு. 10
[சாலினி: வெறியாடுபவள்]
.
★★★
மூலம்
பதிற்றுப்பத்து: ஆறாம் பத்து
6.1. வடுஅடு நுண்ணயர்
.
துளங்குநீர் வியலகம் கலங்கக் கால்பொர
விளங்(கு)இரும் புணா஢ உருமென முழங்கும்
கடல்சேர் கானல் குடபுலம் முன்னிக்
கூவல் துழந்த தடந்தாள் நாரை
குவிஇணர் ஞாழல் மாச்சினைச் சேக்கும் 5
வண்(டு)இறை கொண்ட தண்கடல் பரப்பின்
அடும்(பு)அமல் அடைகரை அலவன் ஆடிய
*வடுஅடு நுண்அயிர்* ஊதை உஞற்றும்
தூஇரும் போந்தைப் பொழில்அணிப் பொலிதந்(து)
.
★★★★★

sai...@gmail.com

unread,
Jun 28, 2022, 9:19:56 AM6/28/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
பதிற்றுப்பத்து: ப06.01. வடுஅடு நுண்ணயர் - 02
(ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் மேல் காக்கைபாடினியார் நச்செள்ளையார்;
ஒழுகு வண்ணனும் சொற்சீர் வண்ணமும், செந்தூக்கும் வஞ்சித் தூக்கும்)
.
மெல்லியனோ நீ!
(கலிவெண்பா)
.
நடந்தும் அசைந்தும் நடமாடு கின்ற
மடமகள் தெய்வ மருள்மேல் இவர
வளைந்தாடல் போல வழியிலே தோன்றி
நெளிந்தும் நெகிழ்ந்தும் குறுக்கிட்டே ஓடும்
அரிய மணிகொளும் பாம்புகள் வாழும் 5
பெரிய இமயப் பெருந்தேவ னின்மலை,
சங்கொலிக்கும் தண்ணீர்ப் பரப்புறும் தென்கடல்,
இங்கே குடதிசை அங்கே குணதிசையாம்
நான்கெல்லை சூழ்நிலத்தில் நாடாளும் மன்னரும்
சான்றோரும் கூடிய பந்தராம் பாங்கினில் 10
மேலிடம் முற்றிலும் வேய்ந்து புனைந்தவையாம்
மாலைகள் வண்மை மலர்ந்தவிழி போல்நெய்தல்
தேன்மலர் புன்னையும் சேர்ந்து மணங்கமழக்
காண்சுடர் நெற்றியும் கள்ளமில் நோக்கும்
ஒளியால் மிகுந்து பொலிவினைப் பெற்றுப் 15
பளிச்சிடும் பற்களும் வானமுதம் போல்சொல்
விளம்பும் அசைநடைச் செவ்வாய் விறலி
துளங்கும் வழுத்தலில் தோய்ந்தே உறைதலால்
வெள்வேல் அரசனிவன் மெல்லியன் போலுமென
உள்ளுவரோ உன்னையுண ரார்? 20
.
★★★
மூலம்
பதிற்றுப்பத்து: ஆறாம் பத்து
6.1. வடுஅடு நுண்ணயர்
.
இயலினள் ஒல்கினள் ஆடும் மடமகள் 10
வெறிஉறு நுடக்கம் போலத் தோன்றிப்
பெருமலை வயின்வயின் விலங்கும் அருமணி
அரவழங்கும் பெரும்தெய்வத்து
வளைஞரலும் பனிப்பெளவத்துக்
குணகுட கடலோ(டு) ஆயிடை மணந்த 15
பந்தர் அந்தரம் வேய்ந்து
வண்பிணி அவிழ்ந்த கண்போல் நெய்தல்
நனைஉறு நறவின் நா(டு)உடன் கமழச்
சுடர் நுதல் மடநோக்கின்
வாள்நகை இலங்(கு)எயிற்(று) 20
அமிழ்துபொதி துவர்வாய் அசைநடை விறலியர்
பாடல் சான்று நீடினை உறைதலின்
வெள்வேல் அண்ணல் மெல்லியன் போன்மென
உள்ளுவர் கொல்லோநின் உணரா தோரே
.
★★★★★
 

sai...@gmail.com

unread,
Jun 29, 2022, 8:48:10 AM6/29/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
பதிற்றுப்பத்து: ப06.01. வடுஅடு நுண்ணயர் - 03 (இறுதிப் பகுதி)
(ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் மேல் காக்கைபாடினியார் நச்செள்ளையார்;
ஒழுகு வண்ணனும் சொற்சீர் வண்ணமும், செந்தூக்கும் வஞ்சித் தூக்கும்)
.
கலக்கம் தரும்கா வலன்!
(கலிவெண்பா)
.
கார்முகில்கள் ஊர்ந்துவரும் சீர்கொள்ளும் பேர்குன்றம்
ஆர்நஞ்சு கொண்டுறையும் பாம்புகளைத் தாக்கியே
மிக்கசினம் கொண்டவற்றின் மேல்விழுந்து மூரியழி
சிக்கலிடி பேர்முழங்க வீழ்மின்னல் போன்றவன்நீ!
பூணனி கொம்பிடைப் புக்கதடத் தும்பிக்கை 5
காணும் பகைவர் கரியிரு கொம்புகள்
வாளொரு வீச்சில் வதைத்தே அரிந்தெறியும்
ஆளுடை வீரர்கள் நின்படை வாழ்வர்
பனைவெள்ளைத் தோடு புனைதலைக் கண்ணி
வனைந்து சிவக்கப் பருந்துண்ண நோக்கவே 10
உன்வில் கிழித்த உறழ்வினர் மத்தளம்
தன்கரம் தட்டி இசைத்தல் தவிர்க்க
குலையாச் சினங்கொள் கரும்பெரும் கூற்றம்
வலைவிரித்த நோக்கு அலைபோர்க் களத்தில்
கலக்கம் தரும்கா வலன். 15
.
★★★
மூலம்
பதிற்றுப்பத்து: ஆறாம் பத்து
6.1. வடுஅடு நுண்ணயர்
.
மழைதவழும் பெருங்குன்றத்துச் 25
செயிர்உடைய அர(வு)எறிந்து
கடும்சினத்த மிடல்தபுக்கும்
பெரும்சினப்புயல் ஏ(று)அனையை
தாங்குநர், தடக்கை யானைத் தொடிக்கோடு துமிக்கும்
எஃ(கு)உடை வலத்தர்நின் படைவழி வாழ்நர் 30
மறம்கெழு போந்தை வெண்தோடு புனைந்து
நிறம்பெயர் கண்ணிப் பருந்(து) ஊ(று)அளப்பத்
தூக்கணை கிழித்த மாக்கண் தண்ணுமை
கைவல் இளையர் கையலை அழுங்க
மாற்(று)அரும் சீற்றத்து மாஇரும் கூற்றம் 35
வலைவி஡஢த் தன்ன நோக்கலை
கடியையால் நெடுந்தகை செருவித் தானே.
.
★★★★★

sai...@gmail.com

unread,
Jun 30, 2022, 2:34:35 AM6/30/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
பதிற்றுப்பத்து: ப07.01. புலாஅம் பாசறை - 01
(செல்வக்கடுங்கோ வாழிஆதன் மேல் கபிலர்;
ஒழுகு வண்ணம், செந்தூக்கு)
.
குறிப்பு
பரிசில் வேண்டி வந்த கபிலர் மன்னனிடம், 'இதுவரை எம்கோ பாரி எம்மைப் புரந்தான். இப்போது அவன் மேலுலகம் போய்விட்டான். உன்னிடம் நான் இரந்து வரவில்லை, உன்னைப் பற்றி மிகைப்படவும் பாடேன்! உன்பால் எம்மை ஈர்த்தது எதுவென்று சொல்கிறேன்...' என்ற பீடிகையுடன் தன் ஏழாம் பத்துப் பாடல்களைத் தொடங்குகிறார். எத்துணை குடல்வலி (guts) புலவருக்கு! மன்னனும் அவரை மெச்சிப் பரிசில் பற்பலவும் கொடுத்தான்!
.
பரலோகம் சென்றான்!
(கலிவெண்பா)
.
பலாவின் மரத்தில் பழுத்து வெடித்தே
ஒழுகும் அரியலன்ன சாற்றின் மணத்தினை
வாடை வெளியில் வழிகளெங் கும்பரப்பும்
நாடு பொருந்திய நற்றிறம் கொண்டோனும்
ஓவியம் போன்ற வொருவீட்டில் வாழ்பவனாம் 5
பாவையைப் போன்றவெழில் கொண்டாள் பதியவனும்
பொன்மணி போலிருக்கும் பூக்கொண்ட சிற்றிலையும்
புன்மையடி உன்னப் பகையெமக்குக் கோவும்
புலர்சாந்து மார்பன் புலராக் கொடையோன்
மலர்ந்தகன்ற மார்பினன் மாவள்ளல் பாரி 10
முரசுகொளும் மார்ச்சனைமண் வாடி உலர
இரவலர் ஈவோர் இலாது வருந்தப்
பரலோகம் சென்றான் படுத்து.
.
[அரியல்: கள்; வாடை: வாடைக்காற்று; பதி: கணவன்; மார்ச்சனை மண்: முழவின் ஒலிநயம் பெறப் பூசப்படும் கருந்சாந்து.]
குறிப்பு
சங்ககாலத்தில் இருந்த உன்னமரம் மெலிதான அடிமரம் கொண்டது. இம்மரம் தழைத்திருந்தால் போரில் வெற்றி என்றும் காய்ந்திருந்தால் போரில் தோல்வி என்றும் நிமித்தம் கண்டனர்.
.
★★★
மூலம்
பதிற்றுப்பத்து: ஏழாம் பத்து
7.1. புலாஅம் பாசறை
.
பலாஅம் பழுத்த பசும்புண் அரியல்
வாடை துரக்கும் நாடுகெழு பெருவிறல்
ஓவத் தன்ன வினைபுனை நல்லில்
பாவை அன்ன நல்லோள் கணவன்
பொன்னின் அன்ன பூவின் சிறிஇலைப் 5
புன்கால் உன்னத்துப் பகைவன் எங்கோ
புலர்ந்த சாத்தின் புலரா ஈகை
மலர்ந்த மார்பின் மாவண் பாரி
முழவுமண் புலர இரவலர் இனைய
வாராச் சேண்புலம் படர்ந்தோன் அளிக்(க)என 10
.
★★★★★
 

sai...@gmail.com

unread,
Jul 1, 2022, 12:58:20 AM7/1/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
பதிற்றுப்பத்து: ப07.01. புலாஅம் பாசறை - 02 (இறுதிப் பகுதி)
(செல்வக்கடுங்கோ வாழிஆதன் மேல் கபிலர்;
ஒழுகு வண்ணம், செந்தூக்கு)
.
உன் புகழ்!
(கலிவெண்பா)
.
அருள்செய் எனக்கென்றே மன்னா உனைநான்
இரந்துவர வில்லை! மிகைப்படக் கூறேன்!
கொடுப்பதால் உன்மனம் குன்று வதில்லை
கொடுத்தல் தொடர்ந்தால் மனங்களிப்ப தில்லை
கொடுக்கும் பொழுது குறையாத வள்ளண்மை 5
உள்ளவன் என்று உலகோர் நவிலவந்த
நல்லிசை ஈர்க்கவுனை நாடியே நான்வந்தேன்
ஒள்ளொளி வாள்கொளும் வீரர் படையும்
வலிமிகு யானைப் படையும் வசிக்க
பலமாய்ப் புலால்மணம் வீசுமுன் பாசறை 10
வெண்ணிலவு போலொளிர் வேலினைப் பாடுகின்ற
தண்குரல் பாடினி தன்கை முழவின்
ஒலிக்கேற்ப ஆட்டுகின்ற உன்னிருப்பில் உள்ளம்
கலித்துநான் வந்தேன் களம்.
.
★★★
மூலம்
பதிற்றுப்பத்து: ஏழாம் பத்து
7.1. புலாஅம் பாசறை
.
... அளிக்(க)என 10
இரக்கு வாரேன் எஞ்சிக் கூறேன்
ஈத்த(து) இரங்கான் ஈத்தொறும் மகிழான்
ஈத்தொறும் மாவள் ளியன்என நுவலும்நின்
நல்இசை தரவந் திசினே ஒள்வாள்
உரவுக் களிற்றுப் *புலாஅம் பாசறை* 15
நிலவின்அன்ன வெள்வேல் பாடினி
முழவின் போக்கிய வெண்கை
விழவின் அன்னநின் கலிமகி ழானே.
.
★★★★★

sai...@gmail.com

unread,
Jul 3, 2022, 12:22:16 AM7/3/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
பதிற்றுப்பத்து: ப08.03. நிறந்திகழ் பாசிழை - 01
(பெருஞ்சேரல் இரும்பொறை மேல் அரிசில் கிழார்;
ஒழுகு வண்ணம், செந்தூக்கு)
.
உன் புகழ்!
(கலிவெண்பா)
.
கற்றோரை எண்ணினும் கல்லாரை எண்ணினும்
உற்றபெரு வேந்தேநீ ஒப்பு பிறர்க்கன்றி
மற்றவர் யாரும் உனக்கொப் பிலாதாரே!
கூந்தல் ஒளிர்நெற்றி கொள்ளும் அணிகலன்
பாந்தமாய்ச் சூடும் உயர்குலப் பெண்டிரும் 5
தெய்வத் தியல்புதரும் நெஞ்சகம் கொள்ளான்றோர்
செய்யுள் விளைபயிர் சீர்த்த மருத
வயல்களில் நாரை விரட்டும் மகளிர்
அயர்வர் குரவையாம் கூத்தைப் புதிதாய்
அருகில் அமைந்த இடங்கள் அனைத்தும் 10
உருவும் களித்தே மனமும் களிப்பெய்த!
பொன்னிநதி பாய்ந்து பொழில்கள் விரிக்குமெழில்
நன்புகார்ச் செல்வனே பூழியர் காப்புநீ
உன்புகழ் இங்ஙன் உவப்பு.
.
★★★
மூலம்
பதிற்றுப்பத்து: எட்டாம் பத்து
8.3. நிறந்திகழ் பாசிழை
.
உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும்
பிறர்க்குநீ வாயின் அல்லது நினக்குப்
பிறர்உவமம் ஆகா ஒருபெரு வேந்தே
கூந்தல் ஒண்நுதல் பொலிந்த
நிறம்திகழ் பாசிழை உயர்திணை மகளிரும்        5
தெய்வம் தரூஉ நெஞ்சத்து ஆன்றோர்
மருதம் சான்ற மலர்தலை விளைவயல்
செய்யுள் நாரை ஒய்யும் மகளிர் 5
இரவும் பகலும் பாசிழை களையார்
குறும்பல் யாணர்க் குரவை அயரும்
காவிரி மண்டிய சேய்விரி வனப்பிற்
புகாஅர்ச் செல்வ! பூழியர் மெய்ம்மறை!
.
★★★★★
 

sai...@gmail.com

unread,
Jul 4, 2022, 1:08:01 AM7/4/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
பதிற்றுப்பத்து: ப08.03. நிறந்திகழ் பாசிழை - 02 (இறுதிப் பகுதி)
(பெருஞ்சேரல் இரும்பொறை மேல் அரிசில் கிழார்;
ஒழுகு வண்ணம், செந்தூக்கு)
.
உன் புகழ்!
(பஃறொடை வெண்பா)
.
மூங்கில் விரிந்து முகில்தவழ ஓங்குமுச்சி
தாங்குகொல்லிச் சாரல் தலைவனே! ஓங்கிப்
பொலியும் கொடித்தேர்ப் பொறையனே நீகொளும்
செல்வமும் வீரமும் ஈகையும்நின் மக்கட்
தொகையின் பெரிதென நின்பகைவர் பால்நான்
உகுத்தே உரைப்பினும் கொள்ளார் உணர்வினில்;
வேறுபிற சான்றோர் விளக்கக்கொள் வாரெனில்
தேறுதல் இன்றித் திறம்புமதி கொண்டிருக்க
ஆறுதலி லாதுளைவேன் நான்.
.
★★★
மூலம்
பதிற்றுப்பத்து: எட்டாம் பத்து
8.3. நிறந்திகழ் பாசிழை
.
கழைவிரிந்(து) எழுதரும் மழைதவழ் நெடுங்கோட்டுக் 10
கொல்லிப் பொருந! கொடித்தேர்ப் பொறைய!நின்
வளனும் ஆண்மையும் கைவண் மையும்
மாந்தர் அள(வு)இறந் தனஎனப் பல்நாள்
யான்சென்(று) உரைப்பவும் தேறார் பிறரும்
சான்றோர் உரைப்பத் தெளிகுவர் கொல்லென 15
ஆங்குமதி மருளக் காண்குவல்
யாங்(கு)உரைப் பேன்என வருந்துவல் யானே.
.
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: நிறந்திகழ் பாசிழை
.
★★★★★

sai...@gmail.com

unread,
Jul 6, 2022, 12:05:04 AM7/6/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
பதிற்றுப்பத்து: ப09.05. நாடுகாண் நெடுவரை
(இளஞ்சேரல் இரும்பொறை மேல் பெருங்குன்றூர்கிழார்;
ஒழுகு வண்ணம், செந்தூக்கு)
.
உன் புகழ்!
(கலிவெண்பா)
.
நன்மரம் ஆர்ந்திருக்கும் நாடுபல வென்றெடுத்துப்
பொன்னொளி கொள்ளப் புனைந்த அணிகலன்கொள்
உன்னுடன் கொள்கையில் ஒன்றி வருதலிலான்
சென்னியர் வேந்தனை என்முன் கொணர்கவே
என்றுநீ சொன்னதும்தம் வெள்வேலைக் கீழெறிந்துன் 5
வென்றி உறுதிசெய் சோழநில வீரர்கள்
உன்குல முன்னோர்போல் நன்னெறி நின்றுநீ
இன்னீர்ச் சுனையார் பெருமா மலைச்சாரல்
கோடுபல கொண்டிலங்கும் நாடுகாண் நீள்வரையில்
கோடில் நறவூர்க் கொலுவிருக் கையில் 10
அவையோர் பணிய அறம்செய் துயர்ந்த
உவந்தே மறமும் தெளிந்தசொல் நாவும்
இழிவு கவலை மிகாவுளமும் கொள்ளும்
பழியில் கபிலன்தன் பாடலிற் பெற்றபல
ஊரினும் எண்ணில் உயர்ந்து. 15
.
★★★
மூலம்
பதிற்றுப்பத்து: ஒன்பதாம் பத்து
9.5. நாடுகாண் நெடுவரை
.
நல்மரம் துவன்றிய நாடுபல தாணஇப்
பொன்அவிர் புனைசெயல் இலங்கும் பெரும்பூண்
ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான்
இட்ட வெள்வேல் முத்தைத் தம்மென
முன்திணை முதல்வர் போல நின்று 5
தீம்சுனை நிலைஇய திருமா மருங்கின்
கோடுபல விரிந்த *நாடுகாண் நெடுவரைச்*
சூடா நறவின் நாள்மகிழ் இருக்கை
அர(சு)அவை பணிய அறம்புரிந்து வயங்கிய
மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின் 10
உவலை கூராக் கவலைஇல் நெஞ்சின்
நனவில் பாடிய நல்லிசைக்
கபிலன் பெற்ற ஊரினும் பலவே.
.
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகுவண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: நாடுகாண் நெடுவரை
.
★★★★★
 
Reply all
Reply to author
Forward
0 new messages