( தொடரும்)
..
3)முல்லை நிலத்து வாழ்வு!
(நேரிசை வெண்பா)
கானிருக்கும், மானிருக்கும், காணும் சுனையிருக்கும்,
வானிருக்கும் மேக மழையிருக்கும்- ஆனிருக்கும்,
ஆயர் குலமிருக்கும், ஆழியுடன் சங்கிருக்கும்
மாயன் துணையிருக்கும் வாழ்வு!
குறிப்பு
முல்லைத் திணையின் சில முதற் பொருள்களையும்
(காடு, மழைக்காலம்), கருப் பொருள்களையும் (மான்,சுனை,ஆன்,ஆயர், மாயன்) இப்பாடல் கூறுகின்றது.
முல்லை நிலத்தின் உரிப்பொருள், இருத்தலும், இருத்தல் நிமித்தமும் என்பதைப் பாடலில் பலமுறை வரும் "இருக்கும்" என்ற சொல் குறிப்பாக உணர்த்துகின்றது..
– தில்லைவேந்தன்
…
.....
. மொய்புகழ் முல்லை
(முல்லை நிலத்தின் முறுவல்)
. 4) கோடையோ இப்பொழுது?
எழிலி இலையோ? இடிமின்னல் சேர்ந்து
பொழிமழை ஏதுமிலை போலும்!- வழிகுளிரும்
வாடை வரவிலையோ? மன்னவன் சென்றவிடம்
கோடையோ இப்பொழுது?- கூறு!
(எழிலி- மழைமேகம்)
விளக்கம்:
கார் காலம் வருவதற்குள் திரும்புவதாக உறுதி மொழி தந்து, பிரிந்து சென்ற தலைவன், மழை பெய்யத் தொடங்கியும் வரவில்லை.
வருந்திய தலைவி தன் தோழியிடம், " தலைவன் சென்ற இடத்தில், மழைமேகம் இல்லையோ? இடி மின்னலோடு பெய்யும் மழை இல்லையோ? குளிரடிக்கும் வாடைக் காற்றும் இல்லையோ? ஒரு வேளை அந்த இடத்தில் இப்பொழுது கோடைப் பருவமோ? என்று கேட்கிறாள்.
– தில்லைவேந்தன்
.....
. மொய்புகழ் முல்லை(முல்லை நிலத்தின் முறுவல்)
. 5)மருந்துண்டோ மாலை மயற்கு?
(நேரிசை வெண்பா)
நீரருந்தி மான்கூட்டம் நில்லாமல் கான்மறையும்;தேரிறங்கி எல்லாழி சென்றுறையும்; - சேரும்பெருந்துயரம் தந்து,பிறைவான் விரையும்,மருந்துண்டோ மாலை மயற்கு?(எல்- கதிரவன்)( ஆழி - கடல்)(மயல்- மயக்கம்)விளக்கம்:மான்கள் சுனையில் நீரருந்திக் காட்டுக்குள் சென்று மறையும்.கதிரவன், தன் தேரை விட்டு இறங்கிக் கடலுக்குள் தங்குவதற்குச் செல்வான். நிலவும், தன் பங்குக்கு, வானத்தில் விரைந்து வந்து துன்பம் தருவதால் வருகின்ற, இந்த மாலை நேரத்து மயக்கத்துக்கு மருந்து உண்டோ?
– தில்லைவேந்தன்
..
.........
..
. மொய்புகழ் முல்லை(முல்லை நிலத்தின் முறுவல்)
7) துத்தம் முரலும் வண்டு!
(நேரிசை வெண்பா)
முத்தமென வானில் முழுமதியம் ஆரமுதைஇத்தரை மேல்பொழியும் இம்மாலை - துத்தம்முரல்வண்டு முல்லைமலர் மொய்த்துத்தேன் உண்ணவரல்கண்டு வாடும் மனம்!— தில்லைவேந்தன்
..
. மொய்புகழ் முல்லை
(முல்லை நிலத்தின் முறுவல்)
.
8)உண்மையும் பொய்யாகும்!
(நேரிசை வெண்பா)
காதலர் கூறிய கார்காலம் ஈதென்று
போதலர்ந்து சொல்கின்ற பூக்களே! - தீதிழைக்கும்,
நன்மை பயவா, நயமில்லா உண்மை,தன்,
தன்மையால் பொய்யாகும் தான்!
விளக்கம்
கார் காலத்தில் மலரும் பூக்கள், தம் இதழ்களை விரித்துக் கார் வந்து விட்டதென்ற உண்மையைச் சொல்லும்.
ஆனால் அந்த உண்மை தலைவிக்குத் துன்பத்தையே செய்யும்.
நன்மை செய்யாத,,சிறிதும் நயமே இல்லாத உண்மையும், துன்பம் உண்டாக்கும் தன்மையால் பொய்யாகக் கருதப்படும் என்று தோழி பூக்களிடம் சொல்கிறாள்.
– தில்லைவேந்தன்
....
..
நிறைவுப் பாடல்கள்:
. மொய்புகழ் முல்லை
(முல்லை நிலத்தின் முறுவல்)
9)அங்கிருந்து காண்பது நன்றன்று!
தீங்குழலும் வெம்மையைச் செய்கின்ற புன்மாலை
ஓங்கியவிண் வந்தொளிரும் ஒண்ணிலவே - ஈங்கொரு
மங்கை மனம்வருந்தி வாடுவதை நீமகிழ்ந்(து)
அங்கிருந்து காண்பதுநன்(று) அன்று!
10) வண்டே உரைப்பாய்!
கோட்டில் கொழிக்கும்பொற் கொன்றை இணர்மலர்கள்
ஊட்டும்தேன் நாடி உறுவண்டே - நாட்டில்
மழைபொழிந்து கார்காலம் வந்ததை மன்னன்
உழைசென்(று) உரைப்பாய் உவந்து!
மரக் கிளைகளில் கொத்தாகப் பூக்கின்ற பொன்னிறமுடைய கொன்றை மலரகளின் தேனை நாடிவரும் வண்டே! இப்பொழுது இங்கு மழை பொழிந்து கார் காலம் தொடங்கி விட்டதை வேற்றூரில் உள்ள என் தலைவனிடம் போய்ச் சொல்வாயாக!
– தில்லைவேந்தன்
......
..