பாரதியார் ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்று எழுதவே இல்லை. பாரதியார் என்ன எழுதினார், அது எப்படி மாறியது என்பதை பாரதியாரின் படைப்புக்களை முழுவதாக பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் அடங்கிய 16 பகுதிகளில் காலவரிசைப்படுத்திய சீனி.விஸ்வநாதன் ஆதாரத்துடன் விளக்கி இருக்கிறார்.
தன் வாழ்நாள் முழுவதும் பாரதியின் படைப்புக்களும், அவரைப் பற்றிய குறிப்புக்களும் எங்கெங்கே இருக்கின்றன என்று டெல்லி உள்பட நாடு முழுவதும் அலைந்து தேடி, அதை தவம் போல் செய்து, கால வரிசைப்படுத்தி தமிழ் மக்களிடம் அளித்துப் பெரும் பணி ஆற்றியவர் சீனி விஸ்வநாதன்.
அவரது படைப்பை அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டு, உலகம் முழுவதிலும் பரப்பி வருகிறது. அதில் 9-ஆம் பகுதியில், 146 தொடங்கி 149 பக்கங்களில் ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாரதியார் எழுதவில்லை என்று துல்லியமாக நிரூபித்திருக்கிறார் சீனி. விஸ்வநாதன்.
1915-ல் பாரதியார் எழுதிய முதல், அசல் பாப்பா பாட்டில் 13-ஆம் பத்தி இப்படி இருக்கிறது.
‘சாதிப் பெருமையில்லை பாப்பா - அதில்
தாழ்ச்சி யுயர்ச்சி செய்தல் பாவம்
நீதி தெளிந்தமதி அன்பு - இவை
நிறைய வுடையவர்கள் மேலோர்.
என்றுதான் பாரதியார் எழுதினார். அவர் எழுதிய அசல் பாப்பா பாட்டு ‘ஞானபானு’ பத்திரிகை (1915 மார்ச்) இதழில் (பக்-287-88-ல்) இருக்கிறது என்று கண்டுபிடித்தார் சீனி விஸ்வநாதன். இந்த அசல் பாட்டு எப்படி மாறியது என்பதையும் அவர் கண்டுபிடித்தார்.
பாரதியாரின் நண்பரும், அவரை பெரிதும் மதித்தவருமான நெல்லையப்பர் 1917-ல் கொண்டுவந்த பாப்பா பாட்டு புத்தகத்தில் இப்படி மாறிவிட்டது.
சாதிகள் இல்லையடிபாப்பா - குலத்
தாழ்ச்சி யுயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி உயர்ந்தமதி கல்வி - இவை
நிறைய வுடையவர்கள் மேலோர்
பாரதியாரின் அசல் பதிப்பில் இருக்கும் 13-ஆம் பத்தியை வைத்துப் பார்த்தால், பாரதியார் எழுதிய ‘ஆயிரம் உண்டிங்கு ஜாதி’ பாட்டுக்கும், ‘சாதி பெருமையில்லை பாப்பா’ பாட்டுக்கும் முரண்பாடு இல்லை. எனவே, இப்போது பாடப்படும் பாரதியார் பாப்பா பாட்டில் 13-ஆம் பத்தி 1915-ல் பாரதியார் எழுதிய அசல் பாட்டு அல்ல, நெல்லையப்பர் 1917-ல் பதிப்பித்த பாட்டுதான்.
இந்த முக்கியமான உண்மையை வெளிப்படுத்திய சீனி. விஸ்வநாதனையும், அதைப் பரப்பி வரும் அல்லயன்ஸ் பதிப்பகத்தையும் நாம் பாராட்டுகிறோம்.