கவியரங்கம் நிறைவுக்கு வருகிறது
போராட வாயிந்தப் போது
கவியரங்கில்
பாராட்டும் வண்ணம் படைப்புகளை நாம்பெற்றோம்
காலம் கணிக்கும் கருத்துப் போராட்டத்தில்
ஞாலம் நடத்துகிற நாடகத்தில் நாமெல்லாம்
பண்பாட்டுச் சீரழிவைப் பார்த்துக்கொண் டேகுகிறோம்
திண்டாட்டத் தைக்கூடக் கொண்டாட்ட மாய் ஏற்று
நம்மையே ஏமாற்றி நாம்வாழக் கற்கின்றோம்
அம்மவோ என்சொல்ல ? அல்லல்களே ஏராளம்
நீதி அழிவதையும் நேர்மை விழுவதையும்
சாதனையாய்ப் போற்றும் சழக்கர்களைப் போற்றுகிறோம்
உள்ளே பகைமை உருவாக்கி வைக்கின்ற
கள்ளத்தை எங்கெங்கும் கற்றுக் கொடுப்பதனால்
பண்பாட்டைக் கூடநாம் பாதகமாய்ப் பார்க்கின்றோம்
கண்பார்த்து நாம்வளர்த்த கண்னியங்கள் பாழாக
சீரழிவைக் கூடச் சிறப்பாய்க் கருதுகிற
பேரழிவைப் பெற்றோர்க்குப் பிள்ளைகள் நல்குகிறார்
வேதனைதான்
என்றாலும் வேரில் பலமின்னும்
ஆதரவாய் உள்ளதனால் யாம்வாழ்வோம் என்கின்ற
நம்பிக்கை
யோடே நம் நாள்கள் கடத்திடுவோம்
அம்பிகை காப்பாள் அறி