"கொட்டிக் கிடக்கும் அழகு"
(மீ. விசுவநாதன்)
பார்க்கும் பொருள்கள் பரசிவமே - எனப்
பார்க்கும் மன(த்)துள் பரவசமே
(வேறு)
நீரு பொழியும் கருமுகில்கள்
நெளிந்து சிரிக்கும் நதியலைகள்
சோறு போடும் பசு(ம்)வயல்கள்
சொக்க வைக்கும் இசைக்குயில்கள்
(பார்க்கும் பொருள்கள் )
கண்ணைக் கவரும் இளங்காலை
விண்ணின் விந்தை நிறப்பாதை
வண்ண வண்ண மலர்ச்சோலை
மண்ணின் வாச எழில்லீலை
(பார்க்கும் பொருள்கள்)
பட்டுப் பூச்சி பறக்கையிலே
தொட்டுப் பார்க்க மனம்விரும்பும்
கொட்டிக் கிடக்கும் அழகெல்லாம்
எட்ட நின்றே ரசித்திடனும்
(பார்க்கும் பொருள்கள்)
நொடியில் மாறும் படைப்பெல்லாம்
பிடியில் கொள்ள முடியாது
விடியும் முடியும் ஒளியிறையின்
நெடிய பயணம் விளங்காது.
(பார்க்கும் பொருள்கள்)
(20.03.2026. 21.38 pm)