எனது உளம் எழுந்தருள்க - எவ்வுள் வீரராகவர் துதி
(அறுசீர்ச் சந்த விருத்தம்)
(தனதனன தானனா தனதனன தானனா
தனதனன தானதனனா)
கனலுமிழும் ஆழியும் கவினொழுகு சங்கமும்
… கரமிலகு வீரவடிவே!
வனம்வளரும் வண்டுழாய் மலர்மருவு மார்வினாய்!
… மறைபுகழும் வானினமுதே!
வினையிருளை வாங்கியோர் விழிதுயிலில் ஆழ்ந்திடும்
… மிகுகருணை எவ்வுளொளியே!
இனியமலர் தூவிநின் கழலிணைகள் ஏத்தினேன்
… எனதுளமெ ழுந்தருள்கவே.
பதம் பிரித்து:
கனல் உமிழும் ஆழியும் கவின் ஒழுகு சங்கமும்
… கரம் இலகு வீர வடிவே!
வனம் வளரும் வண் துழாய் மலர் மருவு மார்வினாய்!
… மறை புகழும் வானின் அமுதே!
வினை இருளை வாங்கி ஓர் விழி துயிலில் ஆழ்ந்திடும்
… மிகு கருணை எவ்வுள் ஒளியே!
இனிய மலர் தூவி நின் கழல் இணைகள் ஏத்தினேன்
… எனது உளம் எழுந்து அருள்கவே.
அருஞ்சொற்பொருள்:
கனல் உமிழும் ஆழி = நெருப்புப் பொறிகளை இறைக்கும் திருச்சக்கரம்
சங்கம் = வலம்புரிச் சங்கு
கரம் இலகு = திருக்கரத்தில் விளங்குகின்ற
வண் துழாய் = வளம் மிக்க துளசி
இருளை வாங்கி = இருளை ஒழித்து
ஓர் விழி துயிலில் = ஓர் ஒப்பற்ற யோக நித்திரையில்
- இமயவரம்பன்