--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வல்லமையின் வழியாக வல்லமை பெறுவீராக!
மீ.விசுவநாதன்
(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)
முதல் வகுப்புக்கு அவனுக்குக் கண்ணம்மா டீச்சரும், சுப்புலட்சுமி டீச்சரும் பாடம் எடுத்தார்கள். கண்ணம்மா டீச்சர் கையில் ஒரு பிரம்போடுதான் இருப்பாள். நல்ல “கிணீர்” என்ற குரலில் வாய்ப்பாடு சொல்லித்தருவாள். மனப்பாடம் செய்ய வைத்து, திரும்பத்திரும்பக் கேட்டு மனதில் பதிய வைக்கும் அழகில் ஒவ்வொரு குழந்தையும் தன் அம்மாவின் அருகில் இருப்பதைப் போல உணர்ந்து கொள்ள முடியும். “அம்மா, ஆடு, இலை, ஈ, உரல், ஊர், எருது, ஏணி, ஐந்து, ஒன்று, ஓடம், ஒளவைப்பாட்டி, ஆயுத எழுத்து அக்கன்னா” என்று தமிழின் உயிர் எழுத்துக்களையும், ஆயுத எழுத்தையும், “கசடதபற” வல்லினம், “ஙஞணநமன” மெல்லினம், “யரலவழள” இடையினம் என்று தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று ராகம் போட்டுக் கற்றுத் தந்தது இன்னும் அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவனுக்குத் தமிழ்ப்பாலூட்டிய தாய்தான் கண்ணம்மா டீச்சர். வாய்ப்பாடு தப்பாகச் சொன்னாலோ வலது கை மணிக்கட்டில் பிரம்பால் ஒரு தட்டு தாட்டுவாள். அவன் கண்ணம்மா டீச்சரிடம் மணிக்கட்டில் நிறைய அடி வாங்கி இருக்கிறான். ஒவ்வொரு முறை அடிக்கும் பொழுதும் அவன் தன் வலது கையை சடக்கெனப் பின்னல் இழுத்துக்கொள்வதும், டீச்சர் அவனது கையைப் பிடித்து இழுத்து வைத்துக்கொண்டு “கவாஸ்கரை”ப்போல் குறிப்பார்த்து மணிக்கட்டில் பிரம்பால் தட்டுவதும், டீச்சர் கையை ஓங்கும் பொழுதே அவன் கிரிகெட் ரசிகர்கள் போல “ஓவென”க் கத்துவதும், “கோழி கிண்டின மாதிரி எழுதிட்டுக் கத்த வேற செய்யறயா” என்று மீண்டும் அவனுக்கு பிரம்படி உற்சவம் நடத்துவதும் தினசரி நடக்கும். அவன் அதை அம்மாவிடம் சென்று ஒரு முறை முறையிட்டான். அம்மா அவனது கையைப் பிடித்துக் கொண்டு அடுத்த நாள் நேராக டீச்சரிடம் வந்தாள். பேசினாள். நடந்ததைத் தெரிந்து கொண்டு,”டீச்சர் இவன்…மணிக்கட்டே போனாலும் சரி ..இவன நன்னா திருத்திக் கொண்டு வாங்கோ…அதுபோரும் எனக்கு” என்று அம்மாவும் டீச்சர் பக்கமே பந்தடித்ததில் அவனுக்கு முகம் “இஞ்சி தின்ன குரங்கு” போலாகி விட்டது. உடனே கண்ணம்மா டீச்சர் அவன் கையைப் பிடித்து தன் பக்கம் இழுத்துக் கொண்டு “விஸ்வநாதன் நல்ல புள்ள இல்ல…நல்லப் படிப்பான்”..என்று அவன் கண்களைப் பார்த்துக் கொஞ்சுவது போலச் சொன்னாள். அவன் நல்ல படிப்பாளியாக இருந்தானோ இல்லையோ , அந்த டீச்சரை அவன் எப்போதும் நினைத்துக் கொண்டுதான் இருக்கிறான். அன்று அந்த மணிக்கட்டில் கொடுத்த அடிதான் அவனது எழுத்து “மணிமணி”யாக இருக்கக் காரணமானது.
அதே வகுப்புக்கு செல்லப்பா சாரும் வந்து பாடம் நடத்துவார். முக்கியமாக வாய்ப்பாடு சொல்லித்தருவார். அதுவும் வேடிக்கையாகச் சொல்லித்தருவார். அதனால் மனதில் நன்கு பதியவும் செய்யும், வகுப்பில் தூக்கமும் வராது. கரும்பலகையில் ஒவ்வொரு வாய்ப்பாடும் ராகம் போட்டபடி எழுதுவார். உடனே ஒவ்வொரு மாணவரையும் எழுந்து நின்று கொண்டு உரக்கப் படிக்கச் சொல்லுவார். மாணவர்களின் கவனம் பாடத்தில் இருக்கிறதா என்று கவனிப்பார். அதற்கு அவரே வாய்ப்பாடு சொல்லி பிள்ளைகளைத் திரும்பச் சொல்லச் சொல்லுவார். ” ஒரோன்னு ஒண்ணு, ஈரொண்ணு ரெண்டு , மூவொண்ணு மூணு , நாலொண்னு சாப்பாடு” என்பார். உடனே,” சார் தப்பு. நாலொண்னு நாலு” என்று சொல்லும் பிள்ளைகளைப் பார்த்து,”நீங்க கவனிக்கரெளான்னு பார்த்தேன்” என்று கூறிச் சிரிப்பார். அப்படிதான் ஒருமுறை அவன் “நாலொண்ணு சாப்பாடு” என்றான். ஆமாம் இங்க வா சாப்பாடு தரேன் என்று அவன் கையில் பிரம்பால் ஓங்கி ஒரு முத்தம் கொடுத்தார். அவன் கையைப் பின்னல் எடுத்தபொழுது அந்தப் பிரம்படி செல்லப்பாசார் முழங்காலில் பட்டுவிட்டது. கோபத்தில் அவர் அவனைப் பார்த்ததும் அவன் அந்த வகுப்புக்குள்ளேயே ஓட்டமெடுத்தான். அவரும் சுற்றிச் சுற்றி வந்து அவனை பிடித்து, அவனது இடது தோள்பட்டைக்குக் கீழே உள்ள சதைப்பகுதியை நன்றாக நிமிட்டியபடி,”பாடத்துல ஒழுங்கா கவனம் இருக்குமா..சொல்லு இருக்குமா” என்று கேட்க அவனும் கண்களில் நீர் தளும்ப,”இருக்கும் சார்…” என்றான். அது அவனுக்கொரு பாடம். இன்று வரை அவன் எந்த நிகழ்ச்சிக்குப் போனாலோ, எந்தக்கதையோ கட்டுரையோ, கவிதையோ படித்தாலோ மனதில் நன்கு பதிய வைத்துக்கொள்கிறான். அப்போதெல்லாம் அவனுக்குச் செல்லப்பாசார்தான் நினைவில் வந்து செல்வார். அவர் அவனது வீட்டிற்குப் பக்கத்திலேதான் குடி இருந்தார். நல்ல மனிதர். நேரம் தாழ்த்தி ஒருநாளும் அவர் பள்ளிக்குச் சென்றதில்லை. பள்ளியில் மிகுந்த சுறுசுறுப்பாக இயங்கிகொண்டிருப்பார். ஒவ்வொரு வருடமும் விஜய தசமி அன்று குழந்தைகள் எல்லோரும் ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், தட்சிணையோடு வந்து அவரவரது வகுப்புக்குரிய ஆசிரியர்களை நமஸ்காரம் செய்வார்கள். அவர்கள் எல்லோருக்கும் அனைத்து ஆசிரியர்களும் ஆசிதருவார்கள். அதன் பிறகு வகுப்பு வாரியாக எல்லா மாணவ மாணவியர்களையும் ஒரு வரிசைக்கு நான்கு பேர்களாக நிற்கவைத்து பெருமாள் கோவிலின் தெற்கு மாடவீதி, மேலமாட வீதி, வடக்கு மாட வீதி, சன்னதிதெரு வழியாக ரதவீதி சுற்றி மீண்டும் பள்ளிக்கூடம் வரை நாகஸ்வர மேளத்துடன் ஊர்வலமாக அழைத்து வருவார்கள். வீதி முழுக்க மனிதர்களை, அன்பு முகங்களைக் காண ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஊர்வலம் அவனது வீட்டு வாசலுக்கு வரும் பொழுது அங்கே நின்று கொண்டிருக்கும் அவனது தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, சித்தப்பா, சித்தி, அத்தை, அக்கா என்ற அன்புக் கூட்டத்தைப் பார்த்து அவன் கையை அசைத்து சிரித்து மகிழ்வான். ஊர்வலம் நிறைவு பெற்றவுடன் அனைவருக்கும் ஒரு பழம், கொஞ்சம் அவல், ஏதேனும் ஒரு இனிப்பு என்று பிரசாதமாகத் தருவார்கள். அந்தக் கலாச்சாரமே ஒரு வரப்பிரசாதம்தான். அனேகமாக நாகஸ்வரம் “சித்திரை”க் கம்பர்தான் வாசிப்பார். அவர்தான் அந்த கிராமத்தின் ஆஸ்தான வித்வான். அவர் நாகஸ்வரம் வாசிக்கும் பொழுது அவரது இரண்டு கன்னங்களும் கொழக்கட்டையை அடக்கி வைத்தது போல இருக்கும். அவன் அதைக் காட்டி அவரிடம்,” இது என்ன பலூனா” என்று சுவாரஸ்யமாக அவர் வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது கேட்டான். அப்பொழுது அங்கு வந்த சுந்தர வாத்தியாரிடம்,” சாமி இந்தப் புள்ள எதாவது எடக்குப் பண்ணிக்கிட்டே இருக்கு” என்று சித்திரைக் கம்பர் புகார் செய்தார். ” பெரியவாள அப்படியெல்லாம் கேலி பண்ணக் கூடாது விஸ்வம்…” என்று செல்லமாகச் சொல்லி அழைத்துச் சென்றார். நல்ல வேளை செல்லப்பா சார் இல்லை..அவர்ட்ட புகார் சொல்லி இருந்தால் அவன் கன்னத்தில் ரெண்டு கொடுத்து அவனை அனுமன் ஜாடையாகப் பண்ணி இருப்பார். சித்திரைக் கம்பரிடம் அவனக்குத் தனியான ஒரு அன்பு இருக்கத்தான் செய்தது. அவரது எளிமையான தோற்றமும் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். அந்த ஊரில் உள்ள பெருமாள் கோவில், சிவன் கோவில், முருகன் கோவில்களுக்கெல்லாம் அவர்தான் நாகஸ்வரம் வாசிப்பார். கொடுத்ததைப் பெற்றுக் கொள்ளும் குணவான்.
கே.வி அண்ணபூர்னா
அன்று அவனுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. மாலையில் விளையாட டுண்டிவிநாயகர் தெருவுக்குப் போனான். அங்குதான் அவனது மாமா தாத்தா வீடு இருக்கிறது. நண்பர்களோடு விளையாடி விட்டு மாலை ஆறு மணிக்கெல்லாம் கைகால்களைக் கழுவிக்கொண்டு பிள்ளையார் கோவிலுக்கு மாமா தாத்தாவுடன் சென்றான். சுவாமி தரிசித்துவிட்டு வெளியில் வரும் பொழுது அங்கு நின்று கொண்டிருந்த சுந்தர வாத்தியாரிடம் அவனுக்குத் தாத்தா பேசிகொண்டிருந்தார். பேச்சு வாக்கில் சித்திரைக் கம்பரை அவன் கேலி செய்த விபரம் வெளியானது. “அப்படியா” என்று அவனுக்கு மாமாத்தாத்தா அவனைப் பார்த்துக் கேட்டார். “இல்லையே” என்றான் அவன். “இல்லையா..விஸ்வம் பொய் சொல்லக் கூடாது..பாவம்” என்றார் சுந்தர வாத்தியார். அவன் மெதுவாக “இனிமேல் பொய் சொல்ல மாட்டேன் சார்..” என்றான். அப்பொழுது சுந்தர வாத்தியார் அவர்களுடன் பிரதட்சிணமாக வந்தார். வந்து கொண்டே இருந்தவர் “விஸ்வம் இங்கவா..ஒனக்கு ஒரு கதை சொல்லறேன் …” என்று அவனுக்கு நண்பன் சுப்பாமணியின் வீட்டின் வாசலில் (L. M .சுந்தரம் ஐயர் வீடு) கிழக்குப் பார்த்த சின்னத் திண்ணையில் அமர்ந்து கொண்டார். அவனுக்குக் கதை கேட்க மிகவும் பிடிக்கும். அவருக்குக் கீழே தரையில் அவன் அமர்ந்து கொண்டான். தாத்தா அவர் வீட்டிற்குச் சென்று விட்டார்.
“ஒனக்கு …அக்கரக்கோவில் கதை தெரியுமோ…” என்று கேட்டார். தெரியாது சார் என்றான். இப்ப நான் உனக்குச் சொல்லறேன் என்று ஆரம்பித்தார். நம்ம ஆத்தங்கரைக்கு அக்கரைல இருக்கறதால அத அக்கரக்கோவில்னு சொல்லுவா.. ஆனா அதுக்கு இன்னொரு பேரு எரித்து ஆட்கொண்டார். அந்த சிவனுக்கு காசிவிஸ்வநாதர் என்று பெயர். அம்பாளுக்கு மரகதாம்பிகை என்று பெயர். அது ஒரு அழகான கோவில். மொதல்ல ஒரு பெரிய பிராகாரம் உண்டு. அங்க நெறைய பூச்செடியும், மரங்களுமா அழகா இருக்கும். உட்ப்ராகரம் உண்டு. அதற்குள்ள கர்பகிரஹத்தில் கிழக்குப் பார்த்த சிவலிங்கமும், தெற்குப் பார்த்த அம்பாளும் இருக்கா…ஒரு நாள் ஒரு கன்னட பிராமணர் இந்தக் கோவிலுக்கு வந்தார். சுவாமி தரிசனம் பண்ணினார். அவர்ட்டக் கொஞ்சம் தங்கக் கட்டிகள் இருந்தது. அத, அந்தக் கோவில்ல பூஜை பண்ணற பட்டர் கிட்டக் கொடுத்து ,”சுவாமி ..நான் காசிக்குப் போயிட்டு வரலாம்னு இருக்கேன்..இந்த தங்கக் கட்டிகள நீங்க வைச்சுண்டிருங்கோ..நான் திரும்பி வந்து வாங்கிக்கறேன்” என்று சொன்னார். சரின்னு அந்தப் பட்டரும் அந்த தங்கக்கட்டிகளை வாங்கி வைத்துக் கொண்டார். கொஞ்ச மாசம் கழிஞ்சி, காசிக்குப் போன அந்த கன்னட பிராமணர் திரும்ப வந்து அந்த பட்டரப் பாத்து,” சுவாமி ..நான் காசிக்குப் போயிட்டு வந்துட்டேன்,.நன்னா தரிசனம் பண்ணினேன்…இந்தாங்கோ உங்களுக்கு பிரசாதம் என்று கொடுத்துட்டு தான் கொடுத்துட்டுப் போன தங்கக்கட்டிகளைக் கேட்டார். பட்டரும் உடனே அந்தத் தங்கக் கட்டிகளை அந்தக் கன்னட பிராமணர் எப்படிக் கொடுத்திருந்தாரோ அப்படியே அந்தப் பையை அவரிடம் திரும்பத்தந்தார். கன்னட பிராமணர் பையைத் திறந்து பார்த்தார். அதுல தங்கக் கட்டிகள் இல்லை. எல்லாமே செங்கல் கட்டிகளா இருந்தது. அவர் ஒடனே பட்டரைப் பார்த்து,”சுவாமி ..நான் கொடுத்தது தங்கக்கட்டி ..நீங்கள் தந்ததோ செங்கல் கட்டியா இருக்கே”ன்னு கேட்டார். “நீங்க கொடுத்தத அப்படியே பிரிக்காம சுவாமி முன்னால வைச்சிருந்தேன்..இப்ப அத அப்படியே எடுத்து உங்கள்ட்டக் கொடுத்தேன்…” என்றார் பட்டர்.. “நீங்க பொய் சொல்லறேள்..”என்றார் கன்னட பிராமணர். “நீர்தான் பொய் சொல்லரீர்” என்றார் பட்டர். “சரி…நாளைக்குக் காலைல வரேன்..நீர் இந்த சிவலிங்கம் முன்னாடி சத்தியம் பண்ணும்..நான் ஒப்புக்கொள்கிறேன்” என்று கன்னட பிராமணர் சொன்னார். சரி என்று பட்டரும் ஒப்புக் கொண்டார். சுவாமிக்கு முன்னால் சத்தியம் என்று பொய் சொல்ல முடியுமா..அதனால் அந்தப் பட்டர் சிவலிங்கத்துக்குள்ள சக்தியை கோவிலுக்கு வெளிப் பிராகாரத்திலுள்ள ஒரு வில்வமரத்துக்கு தனது மந்திர சக்தியால் மாற்றி வைத்தார். காலைல அந்த கன்னட பிராமணர் வந்து கேட்டால் இந்த சிவலிங்கம் முன்னால தைரியமா சத்தியம் பண்ணலாம். இப்பதான் அதுல சக்தி இல்லையே என்று நினைத்தார். இந்தச் செய்தியை சிவபெருமான் அந்த கன்னட பிராமணரின் கனவில் சொல்லி, “சிவலிங்கம் முன்னாடி சத்தியம் பண்ண வேண்டாம்..கோவில் பிராகாரத்திலுள்ள வில்வ மரத்தில் சத்தியம் செய்தால் போதும் என்று சொல்” என்று கூறி மறைந்தார்.
காலையில் அந்த கன்னட பிராமணரும் வந்தார். எப்பொழுதும் போல கோவிலுக்குத் தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்களும் இருந்தா. பட்டர் கர்பகிரகத்தில் உள்ள சிவலிங்கம் இருக்கும் இடத்திற்கு அந்த பிராமணரை அழைத்தார். அந்த கன்னட பிராமணர், “சிவலிங்கம் முன்னாடி சத்தியம் பண்ண வேண்டாம்..கோவில் பிராகாரத்திலுள்ள வில்வ மரத்தில் சத்தியம் செய்தால் போதும்..பகவான்தான் எல்லா எடத்துலயும் இருக்கானே ..” என்றார். அங்கு வந்திருந்த பக்தாளும் அதையே சொன்னா. பட்டர் பயத்தோடவே சரின்னு சொன்னார். எல்லாரும் அந்த வில்வ மரத்துப் பக்கமாப் போனா. அந்தப் பட்டர் வில்வ மரத்துல கையைவைச்சு “இவர் கொடுத்தது செங்கல் கட்டிகள்தான் தங்கக்கட்டிகள் இல்லை ” என்று சொன்ன ஒடனே அந்த வில்வ மரமும், அந்தப் பட்டரும் அப்படியே தீப்பிடிச்சு எரிஞ்சு போய்ட்டா…அப்போ அங்க அசரீரியா,”நீ கொடுத்த இந்தத் தங்கக் கட்டிகள எடுத்து நல்லது பண்ணுன்னு” சிவபெருமானே சொன்னார். அதனால இந்த சுவாமிக்கு “எரித்து ஆட்கொண்டார்” என்ற பேரும் வந்தது. அதனால ஒருநாளும் பொய் சொல்லவே கூடாது, சத்தியம்தான் பேசணும் என்று அவன் தலையில் கைவைத்து ஆசீர்வாதம் செய்தார் சுந்தர வாத்தியார்.
அந்தக் கன்னட பிராமணர் அந்தத் தங்கக்கட்டிகளைக் கொண்டு ஒரு பெரிய கால்வாய் வெட்டத் தீர்மானித்தார். பொதிகைமலைச் சாரலில் தோன்றும் ஜீவநதியான தாமிரபரணியின் கரையில் அதை அமைக்க நினைத்தார் . ஒரு பசுமாடு அந்த மலை அடிவாரத்தில் இருந்து மெதுவாக நடந்து போச்சு. அது பின்னாடியே போனார். அது மூத்திரம், சாணி போடற எடத்த எல்லாம் குறிச்சிண்டார். அந்தப் பசு மலைஅடிவாரத்தில் இருந்து கிளம்பி கல்லிடைகுறிச்சி, வீரவநல்லூர், காருகுறிசின்னு நடந்து போய் ஒரு இடத்துல படுத்துண்டுருத்து. அந்த இடம்தான் பிரான்சேரி. அதுதான் பிரான்சேரிக் குளம். பேச்சு வழக்கில் அது பிளான்சேரி ஆயிடுத்து. அதுவரை அழகான கால்வாய் வெட்டினார். மூத்திரம் போன இடங்களில் ஒரு சிறு கிளைவழி வெட்டினார். சாணி போட்ட இடங்களில் குளங்களை வெட்டினார். இப்படி ஒரு பெரிய தர்மம் செய்த அந்த கன்னட பிராமணரின் நினைவாகத்தான் அந்தக் கால்வாயை “கன்னடியன் கால்வாய்” என்று இன்றும் அழைக்கிறார்கள். இதோ ஓடிண்டு இருக்கே இதுதான் கன்னடியன் கால்வாய் என்று பக்கத்தில் காண்பித்தார். பசு என்ற தேவதை நடந்த அந்த இடமெல்லாம் இன்றும் பசுமையாகவே இருக்கு…” என்று கதை சொல்லி முடித்த பொழுது அன்று இரவு ஏழு மணி ஆகி இருந்தது. அவனை மாமாத்தாத்தா வீட்டில் விடு விட்டு மெல்ல கிழக்கு நோக்கி அவரது வீட்டிற்கு நடந்து சென்றார் சுந்தர வாத்தியார்.
(03.04.2015)
இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….
--
ஒரு எளிய மனிதனின் சுயசரிதை
மீ.விசுவநாதன்
அத்தியாயம் : ஏழு
ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கோவில்
அவனுக்கு அந்த கிராமத்து சிவன்கோவில் மிகவும் பிடிக்கும். அது “பாட்டநயினார் புரம்” கிராமத்து பக்தர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. சில வருடங்களுக்கு முன்புதான் அறநிலையத்துறை இந்தக் கோவிலையும் தனது வரம்புக்குள் கொண்டு வந்துள்ளது.
இந்தக் கோவிலுக்கு அழகான சிறிய உட்பிராகாரமும், கோவில் வெளி மதிலைச் சுற்றிய பெரிய பிராகாரமும் உண்டு. சுவாமியின் பெயர் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர். அம்பாள் ஸ்ரீ சிவகாமி. உட்ப்ராகாரத்தில் ஸ்ரீ விநாயகர் ,ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ நடராஜருக்கென்று தனி மண்டபம், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் சந்நிதிகளும் உள்ளது.
வெளிப்ராகாரத்தில் அரிநெல்லி மரமும், நெல்லி மரமும், மா மரமும், நிறைய தென்னையும் பூச்செடிகளும் இருக்கும். தெற்குப் பிராகாரத்தில் அழகான கோரதமும், திருவாதிரைத் திருநாளுக்குரிய வாகனங்களும், உள்ளது. கோவிலின் வடக்குப் புறத்தில் தெளிந்த கன்னடியன் கால்வாய் ஓடுகிறது. கோவிலின் வாசலில் வடபுறத்தில் ஒரு பெரிய அரச மரமும், அதனடியில் ஒரு சிறிய விநாயகர் கோவிலும் உள்ளது. அதன் அருகிலேயே கன்னடியன் கால்வாய்ப் படித்துறையும் உண்டு. அதற்கு தகரத்தில் ஒரு கொட்டகை போட்டிருப்பார்கள். கிராமத்து சிறுவர்களும், வாலிபர்களும், அந்தத் தகரக்கொட்டகையில் ஓடி வந்து அந்தக் கால்வாயில் தாவிக்குதித்து நீந்துவார்கள். கோடை காலம் தவிர வாய்க்காலில் தண்ணீர் எப்போதும் நிறையவே ஓடிக் கொண்டிருக்கும். அப்படிக் குதித்து நீந்தி விளையாடும் பிள்ளைகளைப் பார்த்து அந்தப் படித்துறையில் குளித்துக் கொண்டிருக்கும் மாமிகள் ,” இராவணனை அழிச்சுட்டு ராமன் அயோத்திக்குப் போகும்போது கொஞ்சம் வானரங்கள இங்க கொண்டு வந்து விட்டானோ என்னமோ ..இதுகளெல்லாம் அந்தப் பாடுன்னா படுத்தறது…..” என்று அர்ச்சனை செய்வதுண்டு.
சிறுவயது முதலே இந்தக் கோவிலும், அதன் அருகில் ஓடிக் கொண்டிருக்கிற வாய்க்காலும் அவனுக்கு மிகவும் பிடித்தமான இடங்கள். அவனுக்குத் தண்ணீரில் நீந்த ரொம்பவும் பிடிக்கும். அதுவும் எதிர்நீச்சல் என்றாலே தனி குஷிதான். ரகு, சங்கர், குட்டிச்சங்கர், சன்னதித்தெரு கண்ணன், H.கிருஷ்ணன் , கபாலி, பிரபு, நீலகண்டன், சுரேஷ், மூர்த்தி, SV, RV, NR, சக்தி, கிட்டு, ராஜாமணி என்று ஒரு பெரிய நண்பர்களின் பட்டாளத்துடந்தான் அவன் குளிக்கவே செல்வான். காலையில் ஆறரை மணிக்குக் குளிக்கச் சென்றால் எட்டு மணிக்குத்தான் வீடு திரும்புவார்கள். அவனுக்கு அம்மா, “என்னடா அப்படி கண்ணு ரெண்டும் செவக்கச்செவக்க ஆத்தங்கரையே கதின்னு கெடக்கணுமா…பள்ளிக்கூடம் போகணுமேன்னு கொஞ்சம்கூட நெனப்பில்லியா..நீ என்ன தண்ணிப் பிசாசா….” என்று தினமும் அவனைக் கடிந்து கொள்வாள். அவனுக்கு அது ஒரு இனிய வாழ்தாகவேதான் இருந்தது.
“பிரும்மஸ்ரீ மகாதேவ கனபாடிகள்”
சிவன்கோவிலில் பூஜை செய்துவந்தவர் ப்ரும்மஸ்ரீ மகாதேவ கனபாடிகள். நன்கு வேதம் கற்ற பண்டிதர். எளிமையானவர். பேராசை இல்லாத மனிதர். அவர்தான் நீண்ட காலம் அந்த சிவன் கோவிலில் பூஜை செய்து வந்தார். எப்போதும் அவரது வாய் மந்திரத்தை முணுமுணுத்தபடியேதான் இருக்கும். அவரது நெற்றியில் விபூதிப் பட்டை எப்போதுமே இருக்கும். கச்சிதமாகக் கட்டிய பஞ்ச கச்சம், மார்பின் குறுக்காகப் போட்டபடி இருக்கும் அங்க வஸ்திரம் என்று அவர் சிவஸ்வரூபமாகவே இருப்பார். காலையில் எட்டு மணிக்கு மேல் அவர் லக்ஷ்மணவாத்தியார் வீட்டுத் திண்ணையிலோ அல்லது மேலமாடத் தெருவில் உள்ள குருசாமிப் பட்டர் வீட்டுத் திண்ணையிலோ அமர்ந்து கொண்டு வேத மந்திரங்களைச் சொல்லிப் பாடம் செய்து கொண்டிருப்பார். பல முறை அவர் “கணம்” சொல்வதை அவன் நின்று கேட்டிருக்கிறான். கேட்கவே அத்தனை சுகமாக இருக்கும். அவர் அவனைப் பார்த்துச் சிரித்தபடியே மந்திரம் சொல்லிக் கொண்டிருப்பார். கவனம் சிதறவே செய்யாது. கண்ட கண்ட வேளைகளில் உண்ணவும் மாட்டார். வம்பு பேசும் இடங்களில் நிற்கவும் மாட்டார். அப்படிப் பட்ட வேத வித்துக்களின் பார்வை அவன் மீது பட்டது அவனது பூர்வஜென்ம பலன்தான்.
காலையில் ஐந்தரை மணிக்கெல்லாம் கனபாடிகள் கோவிலைத் திறந்து விடுவார். அங்கு காவலாளியாக வேலைபார்த்து வந்தவர் முத்தையாப்பிள்ளை. கண்டிப்பானவர். கோவிலை சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருப்பவர். ஒரு ஈ, எறும்பு கூட அவருக்குத் தெரியாமல் அந்தக் கோவிலுக்குள் நுழைய முடியாது. மகாதேவ கனபாடிகளுக்கு முத்தையாபிள்ளையைப் பிடிக்கும். முத்தையாப்பிள்ளைக்கும் கனபாடிகளின்மீது மதிப்பும், நம்பிக்கையும் உண்டு. அது, அந்தக் காலத்தில் அந்தக் கோவிலுக்கு அறங்காவலராக இருந்த சந்திரா அப்பளம் டெப்போ சுப்பா மாமாவுக்கும், கிராம மக்களுக்கும் மிகவும் சந்தோஷமாகவே இருந்தது.
ஒவ்வொரு நாளும் கனபாடிகள் சிவனுக்கும், சிவகாமி அம்பாளுக்கும் அபிஷேகம், அர்ச்சனை செய்யும் வேளைகளில் அனேகமாக அவனும் தரிசனத்திற்கு வருவான். அப்பொழுது கனபாடிகளின் மந்திர உச்சரிப்பில் அவன் மெய்மறப்பான். அதைக் கேட்டுக் கேட்டே அவனுக்குச் சில பூஜா மந்திரங்கள் மனப்பாடம் ஆகிவிட்டது.
பிரதோஷ காலங்களில் மகாதேவ கனபாடிகள் செய்யும் பூஜையைப் பார்க்கவே பிறவி எடுத்து வரவேண்டும் என்று நினைக்கத் தோன்றும். அத்தனை ஒருமுகப்பட்ட நினைவுடன் அவர் பூஜை செய்வார். ரிஷப வாகனத்தில் சிவனை அமர்த்தி கோவிலின் வெளிப்பிராகாரத்தில் மூன்று பிரதக்ஷிணம் செய்வார்கள். சித்திரைக் கம்பர்தான் நாக ஸ்வரம். ஸ்ரீருத்ரம், சமகம் பாராயணம் செய்து கொண்டு, சில வைதீகர்களும், கிராம ஜனங்களும் சுவாமிக்குப் பின்னல் வருவார்கள். பூஜை முடிந்ததும் வெல்லம் போட்ட பச்சைப் பயிறுச் சுண்டல் தருவார்கள். அதை மடப்பள்ளி பனகுடி சங்கரநாராயணய்யர்தான் கோவில் வாசலில் வைத்துத் தருவார். ஒரு முறை அவன் அவருக்குப் பின்புறமாக உள்ள திணையில் ஏறி அந்தச் சுண்டல் பாத்திரத்தில் கையை விட்டான். அவருக்கு வந்த கோபத்தில் அந்தச் சுண்டல் பாத்திரத்தை அவன் தலையில் அப்படியே கவிழ்த்து விட்டார். அவன் சிரித்துக் கொண்டே ஓடினான். தலை வழியாக வழிந்து அவன் வாயில் விழுந்த சக்கரைப் பாகுடன் கலந்த பச்சைப் பயிறு நன்றாகத்தான் இருந்தது. அவனுக்கு அம்மா அன்று இரவில் கொடுத்த பிரம்படி அவனுக்குக் கசப்பாக இருந்தாலும் அது அவனைத் திருத்தியது. அவன் அந்த சிதம்பரேஸ்வரரைப் பற்றி சமீபத்தில் ஒரு பிரதோஷ தினத்தில் ஒரு கவிதையை இப்படி எழுதினான்.
“ஆடியும் நித்தம் ஓடியும் ஆனந்த நண்பர் கூடியும்
தேடிய சிவனைப் பாடியும் தேகத்தில் திருநீர் பூசிய
கோடியி லொருவ னாகியும் கொண்டாட்டம் போட்ட வாலிபம்
ஆடியே போன நாளிலும் அச்சிவனை மறக்கி லேனடி ! (1)
(வாய்பாடு: விளம், மா, விளம் . காய், மா, விளம்)
“சிதம்பரே சர்,சிவ காமி” சிரித்தருள் அழகிய கோவில் ,
அதற்கரு கிலேகுளிர் தண்ணீர் அலைகிற கனடியன் கால்வாய் ,
இதற்கெலாம் எழிலினைக் கூட்டும் இளம்பொதி கைதரும் காற்றில்
பதமென சிவபிர தோஷம் பலரினை இணைக்கிற தென்பேன் ! (2)
(வாய்பாடு: விளம், விளம், மா, விளம், விளம், மா )
(19.12.2014)
மகாதேவாஷ்டமி , அதுதான் “வைக்கத்தஷ்டமி” சிவனுக்கு முக்கியமான நாள். முந்தய தினம் இரவில் சுமார் எட்டு மணிக்கெல்லாம் மறுநாள் அன்னதானத்திற்கான காய்கறிகளை கிராம ஜனங்கள் மிகுந்த உற்சாகத்தோடு அரிந்து வைக்கத் துவங்குவர். அவனையும் அவனுக்கு அப்பாவும், தாத்தாவும் கோவிலுக்குத் தங்களுடன் அழைத்துச் செல்வார்கள். அவனும் அவனால் முடிந்த காய்கறிகளை எடுத்து அங்கிருக்கும் பெயரியோர்களிடம் தருவான். அவனைப் போலவே வைதியப்பபுரம் தெரு அப்பாத்துரை, ஸ்ரீராம், வேங்கடாஜலமையர் மகன் சிவராமன் (ஆசிரியர் சிவராமன்) சக்தி அப்பளாம் “கிருஷ்ணமூர்த்தி”, ராமசுப்பி மாமியின் மகன்கள் ராமசுப்ரமணியன், விஸ்வம், லெஷ்மணவாத்தியார் மகன் விஸ்வம், கிச்சன் போன்ற கிராம மகாஜனங்களும் கைங்கர்யம் செய்வார்கள். அனேகமாக அன்று இரவு ஒரு மணிக்கு மேலாகிவிடும். இரவில் வீட்டிற்க்குச் சென்று தூங்கி விட்டு காலை சுமார் நாலரை மணிக்கெல்லாம் ஆத்தங்கரைக்குச் சென்று குளித்துவிட்டு கோவிலுக்கு வந்து விடுவார்கள்.
மகாதேவாஷ்டமி அன்று காலையில் சுவாமிக்கு அபிஷேகம், அர்ச்சனைகள் முடிந்தவுடன் கிராம போஜனம் (அன்னதானம்) வெகு விமர்சையாக நடைபெறும்.
உட்பிராகாரத்திலும், வெளியில் நந்திக்குச் சுற்றுப் புறத்திலும் சாப்பாட்டுப் பந்திகள் நடைபெறும். அவனுக்கு அப்பாவும், சித்தப்பாவும், தாத்தாவும் பந்தியில் பரிமாறுவார்கள். அவன் பந்தியில், “சீதாள பாதாள பச்சைக் கற்பூர கங்காமிருதம்” என்று சொல்லிக் கொண்டே தண்ணீர் தருவான். அப்படிச் சொல்லித்தான் குடிக்கத் தண்ணீர் தரவேண்டும் என்பார்கள். ஒவ்வொரு உணவு வகையையும் ஒவ்வொரு பக்தர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அவனுடைய குடும்பத்தின் சார்பாக வெகு காலமாகவே வடையும், பழமும், மோரும் காணிக்கையாகச் செய்து வருகின்றனர்.
“ஆமண்ணா” மாமாதான் அனேகமாக சமையல் செய்வார். அவர் சமையல் மிகச் சுவையாக இருக்கும். கோவிலுக்குத் தெற்குப் பிராகாரத்தில் பெரிதாக நான்கு, ஐந்து அடுப்புகள் தோண்டி வைத்துப் பெரிய வார்ப்புகளில் சமையல் செய்வார்கள். பாயாசத்திற்கேன்றே ஒரு பெரிய வார்ப்பு இருக்கும். இரண்டு பேர்கள் பாயாசத்தைக் கிண்டிக் கொண்டே இருப்பார்கள். பார்க்கவே அழக்காக இருக்கும்.
சரியாகப் பகல் பன்னிரெண்டு மணிக்கு மேல் அன்னதானம் துவங்கினால் மதியம் மூன்று மணிவரை நடைபெறும். எல்லா கிராமத்து ஜனங்களும் இந்த சிவன் கோவிலில் வந்துதான் பிரசாதம் சாப்பிடுவார்கள்.
மாலையில் ஆறரை மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெறும். ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் புறப்பட்டு வைத்தியப்பபுரம் தெரு வழியாக கந்தப்பபுரம் தெரு கடந்து வடக்குரதவீதிக்கு வருவார். கந்தப்பபுரம் தெருவில் உள்ள ஸ்ரீ முருகன் கோவிலில் இருந்து ஸ்ரீ முருகன் புறப்பட்டு வடக்குரதவீதியில் உள்ள தனது தந்தையார் ஸ்ரீ சிதம்பரேஸ்வரரை மூன்று முறை பிரதக்ஷிணம் செய்துவிட்டு பக்கத்திலேயே நிற்பார். பொது தீபாராதனை நடைபெறும். உடனே இருவரும் சேர்ந்து வடக்கு ரதவீதி, மேலப்பாட்டநயினார்புரம் வழியாக வருவார்கள். இராமச்சந்திரபுரம் தெரு ஆரம்பத்தில் பொது தீபாராதனை நடைபெறும். ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் சிவன் கோவிலுக்கும், ஸ்ரீ முருகன் வைத்தியப்பபுரம் வழியாக ஸ்ரீ முருகன் கோவிலுக்கும் செல்வார்கள். அனேகமாக அன்று மழை பெய்யும். அந்த மழையிலும் சுவாமி நனையாமல் தாங்கள் நனைத்தபடி பக்தர்கள் சுவாமியின் சப்பரத்தைத் தள்ளிச் செல்வார்கள். அவன், அவனுடைய நண்பர்கள் நீலகண்டன், கிருஷ்ணசுப்ரமனியன் எல்லோரும் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் அமர்ந்திருக்கும் வண்டிச் சப்பரத்தை பின்னல் இருந்து தள்ளிக்கொண்டு வருவார்கள். அவர்கள் மீது சுவாமிக்கு முன்னால் தீவட்டி பிடித்துக் கொண்டிருக்கும் கோவில் காவல்காரர் முத்தையாப்பிள்ளை எப்போதும் ஒரு கண் வைத்துக் கொண்டிருப்பார். அதற்கான காரணத்தை பின்பு கூறுகிறேன்…….
(09.04.2015) இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….
மீ.விசுவநாதன்
ஒரு எளிய மனிதனின் சுயசரிதை
அத்தியாயம் : எட்டு
இவர்களிடம் அவன் என்ன கற்றான்?
அவனுக்கு அந்த கிராமத்தில் மிகவும் பிடித்த இடங்களாக, விளையாட்டுத் தலங்களாக இருந்தது முக்கியமாக சிவன் கோவிலும், லெஷ்மீபதி கோவிலும், அதன் பிராகாரங்களும்தான். பள்ளி விடுமுறை நாட்களில் அவனையும் அவனது நண்பர்களையும் அங்கேதான் பார்க்கமுடியும்.
விடுமுறை நாட்களில் காலை பதினோரு மணிக்கு அவனும் அவனது நண்பர்களும், முக்கியமாக குட்டிசங்கர், நீலகண்டன், யக்ஞமணி, சன்னதித்தெரு கண்ணன், கபாலி சகிதமாக சிவன் கோவில் தோட்டத்தில் உள்ள அரிநெல்லி மரத்திற்குச் செல்வார்கள். எப்படித்தெரியுமா? ராமச்சந்திரபுரம் தெருவில் உள்ள “சச்திரத்தின்” பக்கத்து வீட்டு மாடி வழியாக ஏறினால் சிவன் கோவில் அரிநெல்லி மரம் பக்கமாக இருக்கும்.
“முத்தையாப்பிள்ளை”
கோவிலில் முத்தையாப்பிள்ளை இருந்தால் பார்த்து விடுவாரே. அதனால் இந்த ஏற்பாடு. அப்படியே அந்த மரத்தில் அவர்களுக்குத் தேவையான அரிநெல்லிக் காய்களைப் பறித்து டிராயர்ப் பைகளிலே அடைத்துக் கொண்டு அந்த மரம் வழியாக மெதுவாகக் கீழே இறங்கி நெல்லிக் காய்களைக் கடித்துச் சுவைத்துக் கொண்டே கோவிலின் வடக்குப் பிராகரத்தில், கன்னடியன் கால்வாய்க்கரைக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு பெரிய மாமரத்தை நோக்கி அவர்களின் கவனம் திரும்பும். நெல்லிக் காய் சுவை என்றால், அந்தச் சிவன் கோவில் மாங்காய்கள் அமிர்தமாக இருக்கும். கொத்து கொத்தாகக் காய்த்து உலுப்பும் அந்த மரம். கல்லெடுத்து அந்த மரத்தில் எறிந்தால் நிச்சயம் ஓரிரு மாங்காய்கள் கீழே விழத்தான் செய்யும். அதுவும் சில சமயம் வாய்க்காலிலும் விழுந்து விடும்.
அவனும், நண்பர்களும் விரைந்து பெண்கள் படித்துறை வழியாகச் சென்று வாய்க்கால் பாலத்தில் இறங்கி சரியாக அந்தக் காய்களை எடுத்துப் பைக்குள் போட்டுக் கொள்வதைப் படித்துறையில் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருக்கும் வேலைக்காரிகள்,” இருங்க இருங்க முத்தையாப்பிள்ளை வரட்டும் சொல்லிக் கொடுக்கறோம்” என்று கத்துவார்கள். அந்த வார்த்தைகளை எல்லாம் அவர்கள் லட்சியம் செய்ய மாட்டார்கள். காரணம் முத்தையாப்பிள்ளை அநேக மாக அந்த நேரத்தில் கிராமத்தில் வீடுகளுக்கு விறகு வெட்டச் சென்றிருப்பார். அதனால்தானே அவர்களுக்கு இந்தக் கொண்டாட்டம். ஆனால் மரத்தில் எத்தனை காய்கள் இருக்கிறது, கோவில் கதவுகளும், பெண்கள் படித்துறைக் கதவும் தான் பூட்டியபடி இருக்கிறதா என்றும் முத்தையாப்பிள்ளை திரும்பி வந்ததும் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து கொண்டு விடுவார்.
அவனுடைய வீட்டிற்கும் முத்தையாப்பிள்ளைதான் விறகு வெட்டிக் கொடுப்பார். அப்படி ஒருநாள் அவர் விறகு வெட்டிக் கொண்டிருக்கும் பொழுது, அவனுக்கு அம்மா ஒரு சொம்பில் நீர்மோரும், வெல்லமும் அவனிடம் தந்து முத்தையாப்பிள்ளையிடம் தரச் சொன்னாள். அவரும் தன் உடம்பு வியர்வையைத் துடைத்துக்கொண்டே அதைக் குடிக்கத் துவங்கினார். “முத்தையாப் பிள்ளை …மோருக்கு உப்பு வேணுமா…” என்று அம்மா கேட்டாள். ” வேண்டாம் தாயி…உப்புப் போட்டுக் குடிச்ச வீட்டுக்குத் துரோகம் செய்யக் கூடாதுல்ல …நம்ம வீட்டுப் புள்ளைங்க ஏதாவது தப்புத் தண்டாப் பண்ணினா என்னால சத்தம் போட முடியாது.. அதனால நான் கிராமத்துல வேலைக்குப் போற வீட்ல உப்பு சேக்கரதில்லை…” என்று சொல்லிக் கொண்டே அந்த மோரைக் குடித்து, அந்த வெல்லத்தையும் ஒரு வாய் போட்டுக் கொண்டார். பக்கத்தில் நின்றிருந்த அவன், “முத்தையாப்பிள்ளை எனக்குக் கொஞ்சம் வெல்லம் தாங்கோளேன் ” என்றான். அதைக் கேட்ட அவனுக்கு அம்மா,”அவர்ட்டப் போய்த்தான் வாங்கித்தின்னணுமா….” என்றுஅதட்டினாள். அதுகேட்ட முத்தையாப்பிள்ளை,”அம்மா…சாமி நல்லவருதான்…ஆனா அவரு கிரகமுல்லா இப்படிப் படுத்துது…கோவில்ல வந்து மாங்காய், நெல்லிக்காய் எல்லாம் பறிக்கறது எனக்குத் தெரியாதுன்னா நெனைக்கீறு..ஒரு நா ஒங்க எல்லாத்தையும் அந்த மரத்தோட வெச்சுக் கட்டிபுடறேன் பாத்துக்கிட்டேரும்….” என்று கர்ஜனை செய்தார். “சொல்லாதேயும் கட்டிவெச்சு உரியும்” என்றாள் அவனுக்கு அம்மா. அவன் ஒன்றுமே தெரியாதவன் போல அப்பாவியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
முத்தையாப்பிள்ளைதான் இரவில் கோவிலுக்குக் காவல். கிராமத்தை விட்டு வெளியில் வாய்க்கால்கரை ஓரமாகக் கோவில் இருப்பதால் இரவில் ஒன்பதுமணிக்குமேல் யாரும் தனியாக அந்தப் பக்கம் செல்ல மாட்டார்கள். இப்பொழுதைப் போல முன்பெல்லாம் அந்த வழிக்கு விளக்குகள் கிடையாது. ஏதோ ஒன்றிரண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒளிர்ந்து கொண்டிருக்கும். முத்தையாப்பிள்ளைக்கு நல்ல தைரியம் உண்டு. ஒருநாள் யாரோ ஒருவன் இரவில் மாங்காய்ளைத் திருட வந்த பொழுது தனி ஆளாக அவனைப் பிடித்து அடித்த அடியில் அவன் தன் வேட்டி அவிழ்ந்து விழுந்தது கூடத் தெரியாமல் ஓடிவிட்டான். அந்த வேஷ்டியை அவர் அதே மாமரத்தில் தொங்க விட்டு, கோவில் வாசலில் அவரிடம் கேட்போருக்கு,”இனிமேல் எவனாவது சிவன்கோவில் சொத்தைத் திருடினால் அவனுக்கும் இதே கதிதான்…” என்று உரக்கச் சொல்லும் போது, அவனும் அவனது நண்பர்களும் ஆற்றங்கரைக்குக் குளிக்கச் சென்று கொண்டிருந்தனர். உள்ளுக்குள் அவனுக்கு அது மந்திரம் போலத்தான் பதிந்தது.
வேதம் ஓதுவதிலும், ஒழுக்க நெறியிலும் எப்படி ப்ரும்மஸ்ரீ மகாதேவ கனபாடிகள் வாழ்ந்தாரோ அதேபோலத்தான் “முத்தையாப்பிள்ளையும்” நாணயமாக சிவன்கோவிலுக்குத் தொண்டு செய்தார். அவர்கள் இல்லாத சிவன் கோவிலை அவனால் இன்றும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவன் எப்பொழுதெல்லாம் அந்தக் கோவிலுக்குச் செல்கிறானோ அப்பொழுதெல்லாம் அந்த சிவ ரூபமாகவே அவர்களை அவன் மனதாலே வணங்கி வருகிறான்.
“ஈஸ்வர கிருஷ்ண ஐயர்”
ஆதிவராகப் பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை உற்சவம் மிக விமர்சையாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். அந்த மாதம் வரும் நான்கு சனிக்கிழமைகளில் முதல் சனிக்கிழமை R. s. A. சங்கர ஐயர் (ஒருவருடம்), காசி ஐயர் (மறுவருடம்), சஹஸ்ரநாம ஐயர் (மறுவருடம்) என்றும், இரண்டாவது சனிக்கிழமை Royal Enfield K. R. சுந்தரம் ஐயர் (முதல் வருடம்), Easun Eng. ஈஸ்வர கிருஷ்ண ஐயர் (இரண்டாவது வருடம்), மூன்றாவது சனிக்கிழமை இந்தியா சிமிண்ட்ஸ் S .S .N. சங்கரலிங்கம் ஐயர் குடும்பத்தினர், நான்காவது சனிக்கிழமை நடேச ஐயர் குடும்பத்தினரும் கட்டளைக் காரர்களாக இருந்து பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்து வருகின்றனர். ஐந்தாவது சனிக்கிழமை வந்தால் முன்பு பட்டாம்பிச் சங்கர ஐயர் சில வருடங்களும், அதன் பிறகு ஜவுளிக்கடை இசக்கியாபிள்ளையும், அவருக்குப் பின்னல் காயங்குளம் அத்தை (சங்கரநாராயண ஐயர்) குடும்பத்தினரும் கட்டளைக்காரர்களாக இருந்தனர். சமீபகாலத்தில் காருகுறிச்சி ஆடிட்டர் ரெங்கசாமி ஐயங்கார் குடும்பத்தினர் கட்டளைக் காரராக இருந்துவருகின்றனர்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளின் வண்டிச் சப்பரம் தள்ளிக்கொண்டு செல்வதில் அவனுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அவனுடைய அந்த ஆசைக்குப் பெற்றோர் தடை சொன்னதே கிடையாது. முந்தியதினம் வெள்ளிகிழமை மூலஸ்தான ஆதிவராகப் பெருமாளுக்கு மாக்காப்பு அணிவிப்பார்கள். சனிக்கிழமை அன்று காலையில் பெருமாளுக்கு அபிஷேகம், அர்ச்சனைகள் முடிய மதியம் ஒரு மணி ஆகிவிடும். அதன் பின்பு பஞ்சாமிர்தமும், சக்கரைப்பொங்கலும் பிரசாதமாகத் தருவார்கள். அவனுக்கு ஈஸ்வர ஐயர் வீட்டுக் கட்டளை என்றால் தனி குஷிதான். காரணம் அவரது கம்பீரமான குரலும், தோற்றமும், கனிவான குணமும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் அவரைப் பக்கத்தில் நின்று பல முறை உன்னிப்பாக கவனித்து வந்திருக்கிறான்.
“ஈஸ்வர ஐயர்”தான் தன் கைகளாலேயே பக்தர்களுக்குப் பிரசாதம் தருவார். அதுவும் சென்னையில் இருந்து வரவழைக்கப் பட்ட அழகிய ஆழமான தொன்னைகளில் நிறையத் தருவார். வரிசையில் ஒழுங்காக வரவேண்டும் என்று விரும்புவார். ஒரு முறை அவனுக்கு நண்பன் கபாலி ஒரு கையில் வாங்கியதை மறைத்துக் கொண்டு, மறுகையை நீட்டினான். உடனே அவனை அப்படியே தூக்கி பக்கத்தில் நிறுத்திவிட்டார். எல்லோருக்கும் கொடுத்தபிறகு மீண்டும் அவனுக்குக் கொடுத்து விட்டு, “ஒரு முறை வாங்கிவிட்டால் மறுமுறை கேட்காதே..எல்லோருக்கும் கொடுத்துவிட்டு இருந்தால் உனக்கு இரண்டாவது முறையும் தருவார்கள்…சரியா..” என்று கபாலிக்கு மீண்டும் தந்தார்.
இரவில் கருடசேவை. சுவாமி புறப்பாடு ஒன்பது மணிக்குத் துவங்கும். தெற்கு மாடத் தெரு, மேலமாடத் தெரு, வடக்கு மாடத் தெரு, சன்னதித் தெரு வழியாக மகாமேரு வந்து பெரிய அழகான வண்டிச் சப்பரத்தில் சுவாமியை எழச் செய்து ரதவீதி சுற்றி வந்து மீண்டும் கோவிலுக்குள் சுவாமி வரும் பொழுது மறுநாள் காலை நான்கு மணி ஆகிவிடும். கூடவே சென்று வர ஆனந்தமாக இருக்கும்.
அப்படி ஒருமுறை ஈஸ்வர ஐயர் சுவாமிகூடவே மிகவும் ரசித்துக் கொண்டும், மாட வீதிகளில் சுவாமி வரும் பொழுது ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் நின்று சுவாமி தரிசனம் செய்யும் பெரியவர்களை கனிவோடு விசாரித்துக் கொண்டு அவர்களுக்குத் தன் கைகளாலேயே நல்ல வாசனையுள்ள சந்தனத்தை அவர்களின் கைகளிலும், மார்பினிலும் தடவி விடுவார். கம்பீரமாக வாய்விட்டுச் சிரித்து மகிழ்வார். அது அப்போது சுவாமிக்குக் காட்டப்படும் மத்தாப்பூ போல அழகாக இருக்கும். அவரது கட்டளை என்றால் பன்னிரெண்டு பெரிய தீவட்டிகளை, சுவாமிக்கு முன்னால் வரிசைக்கு ஆறுபேர்களாக சுமந்து கொண்டு வருவார்கள். பல நேரங்களில் ஈஸ்வர ஐயேரே தன் கைகளால் அந்தத் தீவட்டிக்கு எண்ணை விடுவார்.
அப்போது சுவாமி சன்னதித் தெருவில் வந்து கொண்டிருந்தார். திடீரென ஈஸ்வர ஐயர், தீவட்டி பிடித்துக் கொண்டிருந்த ஒருவரின் கையைப் பிடித்துக்கொண்டு,” ஏய்…நீ மாடசாமி தானே…நான் ஒங்கூடப் படிச்சேண்டா…ஞாபகம் இருக்கா…நீ என்ன இப்ப “டேய்..ஈஸ்வரா”ன்னு கூப்புடு..” என்று அவரின் கைகளிலும் மார்பிலும் சந்தனத்தைத் தடவினார். தீவைட்டி பிடித்துக் கொண்டிருந்தவர் கூச்சத்தில் நெளிந்தார். ஈஸ்வர ஐயர் அவரை விடுவதாக இல்லை. அவரை அப்படியே கட்டிக் கொண்டார். அந்த மாடசாமி நண்பருக்கு மகிழ்ச்சி தங்கவில்லை. இதை எல்லாம் பக்கத்தில் இருந்து அவன் கவனித்து வந்ததால் இன்றும் ஈஸ்வர ஐயரின் எளிமையையும், தான் பிறந்த கல்லிடைக்குறிச்சி ஊரின் மீதும், வாழும் மக்கள் மீதும் அவர் கொண்டிருந்த அன்பை எண்ணியும் பெருமிதம் கொள்வான்.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தி ஏழில், தேசியத் தலைவர் ஜெயப்ரகாஷ் நாராயணன் அவர்கள் சென்னைக்கு வந்திருந்த பொழுதில் ஆழ்வார்பேட்டையில் இருக்கும் தேசிகாச்சாரி சாலையில் உள்ள ஈஸ்வர ஐயர் வீட்டில்தான் தங்கி இருந்தார்.
தூர்தர்சன் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் ,”நீங்கள் பெரிய தொழில் அதிபர். உலகமெல்லாம் சுற்றி இருக்கிறீர்கள். உங்களுக்குப் பிடித்த ஊர் எது” என்ற கேள்விக்கு,” பிறந்த கல்லிடைக்குறிச்சிதான் எனக்குப் பிடித்த ஊர். ஆத்தங்கரைக்குக் குளிக்கப் போகும் பொழுது வயல் காட்டின் வரப்புகளில், என் வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நடந்து செல்வேன். அந்த சுகம் எனக்கு எந்த ஊரில் கிடைக்கும்…” என்று பளிச்செனச் சொன்னார் ஈஸ்வர ஐயர். அவர் உள்ளத்தாலும் உயர்ந்த மனிதர். அவரது ஆளுமையை அவன் மிகவும் நேசித்தான். இன்றும் நேசித்துக் கொண்டிருக்கிறான்.
(16.04.2015) இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….
--
மீ.விசுவநாதன்
அத்யாயம்: ஒன்பது
“தீதும் நன்றும் பிறர்தர வாரா”
அவனுக்கு ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு நிகழ்ச்சியே குருவாக இருந்து அவனை வழிநடத்தி வருகிறது என்பதை அவன் நம்புகிறான். இளமைக் காலத்தில் கல்லிடைக்குறிச்சி கிராமத்தில் அவனது வாழ்க்கை அமைந்ததை அவன் எப்பொழுதும் பெருமையாகவே எண்ணுகிறான். அது அவனது அறியாமையைக் கேலிசெய்தும், அவனை அறிவுடையோனாக ஆக்கியதுமான நல்ல தருணங்கள். அந்த இளமை வெள்ளத்தில் அவனை அடித்துச் செல்லாமல் அதிலே எதிர்நீச்சல் போடவைத்தது. நிறை குறைகளைக் கற்றுக் கொடுத்தது. களவும் கற்றுக் கொடுத்து அதன் தண்டனையும் பெற்றுத் தந்து அவனுக்கு தர்ம நியாயங்களைப் புரியவைத்தது. அவனுக்குத் தீது வராமல் தடுக்க அவனை அணைத்தபடி ஒரு கை எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அது காலம் அவனுக்குக் கொடுத்த நன்கொடை.
சிறுவயதில் அவன் கூட்டுக் குடும்பத்தில் ஆனந்தமாகவே வாழ்ந்தான். அவன் சிரித்தாலும் அழுதாலும் கவனித்துக் கனிவு காட்ட தத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சித்தப்பா, அத்தை, அக்கா, மாமா என்றும், அவனுக்குக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள், அன்பான மனிதர்கள், நண்பர்கள் என்றும் நிறைய உறவுகள் இருந்தன. அவன் தைரியமாக சிவன்கோவில் காளைபோல வலம்வந்தான்.
“வாழைக்காய் விற்று கற்ற படிப்பு”
ஐந்தாம் வகுப்பு முடிந்து அவனுக்குக் கோடை விடுமுறை துவங்கிய நேரம். ஆதிவராகப் பெருமாள் கோவிலில் சித்திரைத் திருநாள் துவங்கியது. அந்தத் திருவிழாவை அவன் ரொம்பவே எதிர்பார்த்திருப்பான். பதினோரு நாட்களும் கொண்டாட்டம்தான். கண்ணாடிச் சப்பரம், சிங்கவாகனம், அனுமார் வாகனம், நாகவாகனம், கருடசேவை வண்டிச் சப்பரம், அன்ன வாகனம், யானை வாகனம், மூடு பல்லக்கு, கோரதம் (இன்றும் இரண்டு காளை மாடுகள் பூட்டி இழுத்து வருகிறார்கள்), குதிரை வாகனம், எட்டுமுக்குச் சப்பரம், புன்னை மரவாகனம், தேரோட்டம், தீர்த்த வாரிக்குத் தாமிரபரணிக்குச் சென்று நீராடுதல், மதியம் பெருமாள் கோவிலில் வெளிப்பிராகாரம் அடைத்து கிராம போஜனம், இரவில் வான வேடிக்கையுடன் ஸ்ரீ லக்ஷ்மீபதி தாயாருடன் அழகான பூப்பல்லக்கில் வீதி உலா வருதல் என்று ஒவ்வொரு நாளும் கோலாகலமாகவே இருக்கும்.
அந்த வருடம் ஆராட்டு உற்சவம் முடிந்து அடுத்ததினம் ரகுவின் வீட்டு நடையில் கோவிலில் இருந்து கொடுவரப்பட்ட நான்கு பெரிய வாழை மரங்களை வைத்திருந்தார்கள். நல்ல பெரிய பெரிய வாழைப் பூவும், காய்களும் அதில் இருந்தன. ரகுவும், சங்கரும் இன்னும் சில நண்பர்களும் அந்த வாழைக்காய்களை எடுத்து அவனிடமும், ராமு என்ற ராமுக்கிளியிடமும் ஆளுக்குப் பத்து வாழைக் காய்களைத் தந்து , ஒரு பைசாவுக்கு ஒரு வாழக்காய் என்று விற்று வருமாறு அனுப்பி வைத்தனர். அதில் கடலை மிட்டாய் வாங்கித் தின்னலாம் என்றனர். ராமுக்கிளி வைத்தியப்பபுரம் தெருவிலும், அவன் குத்துக்கல் தெருவிலும் “வாழக்காய்…வாழக்காய்” என்று கத்திக்கொண்டே சென்றனர். அவன் குத்துக்கல் தெருவில் “காவன்னா லக்ஷமையர்” வீட்டில் ஐந்து வாழக்காய் விற்று ஐந்து காசு வாங்கிக் கொண்டான். மீதி ஐந்து காய்களைக் கையில் வைத்துக் கொண்டு “வாழக்காய்…வாழக்காய்” என்று கத்திக் கொண்டே சென்றான். அப்பொழுது அந்தத்தெருவில் அவனுக்குச் சித்தப்பா (சின்னம்பிச் சித்தப்பா) சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவனருகில் வந்து,” இது எங்க இருந்தது? யாரு விக்கச் சொன்னா?” என்று கேட்டார். அவன் பயந்து கொண்டே,”ரகு, சங்கர்” என்றான். அவர் உடனே அவனது இடது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்து,”இது கோவில் சொத்து….இத்தத் தொடக்கூடாது..எந்த ஆத்துக்கெல்லாம் இதக் கொடுத்தாய்…வா காட்டு” என்று அவன் கழுத்துப் பகுதியைப் பிடித்துத் தள்ளியபடி வந்தார். அவன் வீட்டைக் காட்டினான். அவர் அந்த வீட்டுக் காரர்களிடம் விபரம் சொல்லி, ஐந்து பைசாவைத் திரும்பத் தந்து வாழைக் காய்களை வாங்கி அவன் கழுத்தில் தொங்க விட்டபடி ரகுவின் வீட்டிற்குக் கூட்டி வந்தார். இதற்குள் ராமுக்கிளி வைத்தியப்பபுரம் முடுக்கு வழியாக குத்துக்கல் தெருவுக்குள் நுழைத்தான். சித்தப்பா, ராமுக்கிளியையும் பிடித்து வந்தார். ரகுவின் அப்பா அவர் வீட்டு நடையில் நின்றிருந்தார். சித்தப்பா அவரிடம்,”அண்ணா…கண்ணன் இந்த வாழைக் காய்களை எடுத்துவிட்டான்…இது கோவிலச் சேந்தது ..நான் இவனைக் கண்டிக்கறேன்…” என்ற பொழுது “சின்னம்பி ….கொழந்தைகள் எதோ விளையாட்டாச் செஞ்சுடுத்து..விட்டுடு…” என்று ஆதிவராக மாமா சொன்னார். அதற்கு சின்னம்பிச் சித்தப்பா,”அண்ணா…இத இப்ப கண்டிக்காம விட்டுட்டேன்னா பிற்காலத்துல இவன்தான் கஷ்டப் படுவான். அப்பறம் இவனைத் திருடன்னு எல்லாரும் சொல்லுவா…நீ தாப்பா நெனச்சுக்காதே…பணக்காரா எது செஞ்சாலும் ஊர் எதுவும் பேசாது…இல்லதவாளப் பேசும்…” என்று சொல்லிவிட்டு நேராக அவனுக்குப் பக்கத்து வீடான “ஐம்பத்தி ஐந்தாம் எண்” வீடு வாசல் ஜன்னல்க் கம்பியில் சாய்த்து அவனது இருகைகளையும் கம்பியோடு கட்டினார். அவனது இரண்டு கன்னங்களிலும் தலையை வாரிக்கொள்ளும் சீப்பினால் மாற்றி மாற்றி அடித்தார். ஒவ்வொரு முறையும்,”மற்றவா பொருளுக்கு ஆசைப் படாதே” என்று சொல்லிச் சொல்லி அடித்தார். அவனுக்கு அம்மாவும்,” சின்னம்பி அவன நானா அடி…ஊர்ப் பொருளுக்கு ஆசைப் படாதேன்னு சொல்லி அடி…” என்று அவள் பங்குக்கு அடித்தாள். தெருவில் போவோர் வருவோரெல்லாம் பார்த்துக்கொண்டே சென்றது அவனுக்கு அவமானமாக இருந்தது. கொஞ்ச நேரம் சென்ற பிறகு அவனுக்குச் சித்தப்பா சாப்பாடு ஊட்டி விட்டார். ஊட்டும் பொழுதே,”இப்படிச் செய்யாதே கோந்தே….நீ நன்னா இருக்கணும்னுதான் ஒன்ன அடிச்சேன்…” என்று என்னைக் கட்டிக்கொண்டார். சின்னம்பிச் சித்தப்பாவின் அன்பும், நேர்மையும், கண்டிப்பும் அவனுக்குப் பிடித்திருந்தது. அவர்மீது ஒருநாளும் அவன் கோபம் கொண்டது கிடையாது. அந்தச் சித்தப்பாவையும், அம்மாவையும் அவன் எப்பொழுதுமே நினைத்துக் கொண்டுதான் இருக்கிறான். அவர்கள் அன்று கண்டிக்கவில்லையானால் அவனுக்கு இன்று ஏது அமைதி?. இதுதான் கூட்டுக் குடும்ப வலிமை. ஒருகை அடிக்கும் மறுகை அணைக்கும்.
பெருமாள் கோவில் திருநாள் முடிந்ததும், அவனும், அவனுக்கு நண்பர்களான ரகு, சங்கர், நீலகண்டன், சுரேஷ், குட்டிச்சங்கர், மூர்த்தி, சன்னதித்தெரு கண்ணன், கபாலி, கிச்சன், SV, RV, NR, பிரபு, இராஜாமணி, ராமு (ராமுக்கிளி என்று செல்லமாக அழைப்போம்) இன்னும் பல நண்பர்களும் சேர்ந்து பெருமாள் கோவில் உற்சவம் போலவே பதினோரு நாட்கள் சுவாமி வைத்து பூஜை செய்து விளையாடுவார்கள். நீலகண்டன் வீட்டில் இருந்து சுவாமி, அம்பாள், அனுமார், கருடசேவை போன்ற வாகனக்களும், பூஜை சாமான்களும் எடுத்து வருவான். அதை ரகுவின் வீட்டு நடையில் (எம்.ஆர்.ஆதிவராஹ ஐயரின் வீடு) வைத்து பூஜை செய்து குத்துக்கல்தெரு, மேலமாடத்தெரு, வடக்கு மாடத் தெரு, தெற்கு மாடத்தெரு, சன்னதித்தெரு என்று தினமும் சுவாமி புறப்பட்டு ஊர்வலமாகச் சென்று மீண்டும் ரகுவின் வீட்டிற்கே வந்து சுவாமிக்கு நெய்வேத்யம், தீப்பராதனைகள் எல்லாம் விமர்சையாக நடத்துவார்கள். குழந்தைகளை வைத்துத் தள்ளிக்கொண்டு போக பச்சை வண்ணத்தில் ஒரு வண்டி ரகுவின் வீட்டில் இருந்தது. அதில்தான் “பூப்பல்லக்கு அலங்காரம்” செய்வார்கள். குழந்தைகளை உற்சாகப் படுத்தவே “சிண்டாப் பாட்டி” (ரகுவின் அப்பா வழிப் பாட்டி ) சுவையான நெய்வேத்தியங்கள் செய்து தருவாள்.
ரகு மிக நன்றாக நாடகங்கள் எழுதுவான். திருவிளையாடல் படத்தின் தாக்கத்தில் “பர்பியாடல்” என்றொரு நாடகம் சிவராத்திரி அன்று போட்டான். அதில் கதா பாத்திரங்கள் எல்லாம் பருப்பு, உளுந்து, சக்கரை என்றுதான் இருக்கும். நல்ல நகைச்சுவையான அந்த நாடகம் ரகுவின் பக்கத்து வீட்டுத் திண்ணையில்தான் நடந்தது. ரகுவும் அவனும்தான் சென்னையில் “வசந்தா மேன்ஷன்” விடுதியில் அறை எண் பதிமூன்றில் தங்கி இருந்தனர். எத்தனை உயர்ந்த பதவிகளில் இருந்தாலும் ரகுவின் சாத்வீக குணமும், ஒழுக்கமும், பண்பும், பணிவும் அவனுக்கு இன்றும் ஆதர்சமாகத்தான் இருக்கிறது. நல்ல நட்பு வரமல்லவா…
“G. R. நாராயணன் சார்”
அவனுக்கு ஐந்தாம் வகுப்பில் ஆங்கிலப் பாடம் கற்றுத் தந்தவர் “G. R. நாராயணன் சார்”. கண்டிப்பும், ஒழுக்கமும் நிறைந்த சீலர். மிக அழகாக ஆங்கில இலக்கணங்களைப் புரிய வைப்பார். மாணவர்களின் முழுக் கவனமும் அவரிடம் இருக்கும்படிப் பார்த்துக் கொள்வார். ஆங்கில உச்சரிப்பு சரியாக வரும்வரை விடமாட்டார். “திஸ் இஸ் அ பில்லர்” என்று சொல்லி “பில்லர்”ல் “ர்” உச்சரிப்பு இல்லாமல் சொல்லச் சொல்வார். அந்த வகுப்பறையில் ஒரு பெரிய தூண் இருக்கும். அதைக் காட்டி பல்வேறு விதமாக “திஸ் இஸ் அ பில்ல” என்று ஒவ்வொரு விதமாகக் கற்றுத்தருவார். முன்பெல்லாம் ஐந்தாவது வகுப்பில்தான் ஆங்கிலப் பாடம் துவங்கும். ஆங்கிலத்தில் “அட்ஜெக்டிவ்” (உரிச்சொல்) எப்படி, எங்கு வரும் என்று அவர் கூறும் உதாரணங்களே அருமையாக இருக்கும். ஓரளவுக்கு அவனுக்கு ஆங்கிலம் தெரிகிறதென்றால் அது அவர் போட்ட பிச்சைதான். அவரும் அவன் வசித்து வந்த அதே தெருவில்தான் வசித்து வந்தார். அவன், வீட்டில் ஏதேனும் முரண்டு பிடித்தால் அவனுக்கு அம்மா G. R. சாரிடம் சொல்லறேன் என்றுதான் அவனை அடக்குவாள். அவர் தினமும் காலையில் ஆறரை மணிக்கு ஆத்தங்கரைக்குக் குளிக்க அவனது வீட்டைக் கடந்துதான் செல்வார். அந்த நேரம் அவன், வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு அவர் கற்றுத்தந்த பாடங்களை உரக்கப் படிப்பான். அவர் அவனைப் பார்த்து ஒரு புன்னகை செய்தபடியே செல்வார். அது அவனுக்கு ஏதோ பரிசு கிடைத்த மகிழ்ச்சியாக இருக்கும். அவன் பிற்காலத்தில் சென்னையில் இருந்து ஊருக்குத் திரும்பும்பொழுது ஒவ்வொரு முறையும் அவரைப் பார்த்து நமஸ்கரிப்பான். அவனை அவர் மனம் குளிர ஆசீர்வதிப்பார். நிறையப் படி. படிப்பதர்க்கென்று நேரத்தை ஒதுக்கிகொள் என்று மிகுந்த வாஞ்சையுடன் சொல்வார். அவரது இளைய மகன் N. R. அவனுக்கு நண்பன். சில மாதங்கள் சென்னையில் அவனோடு திருவல்லிகேணியில் விடுதியில் சேர்ந்து தங்கி இருக்கிறான். இப்பொழுது மும்பையில் “ராம சுப்ரமணிய சாஸ்த்ரிகளாக” இருக்கிறான். மன்னிக்கவும் இருக்கிறார். ஊரில் சாஸ்தா கனபாடிகளிடம் வேதம் கற்றுக் கொண்டபலன் இன்று சௌகர்யமாக இருக்கிறேன் என்று சொல்வார். நண்பர்கள் சந்தோஷமாக இருப்பதைப் பார்க்க அவனுக்கு எப்போதுமே பிடித்திருந்தது.
(23.04.2015) இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….
படங்கள் உதவி: K.V. அன்னபூர்ணா
--
--
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மீ.விசுவநாதன்
அத்யாயம்: பத்து
அவனுக்குக் கதை கேட்கும் அனுபவத்தைத் தந்தது, வடக்கு மாடத் தெருவில் இருக்கும் பஜனை மடம்தான். இன்னும் ஓரிரு வருடங்களில் அதற்கு நூறு ஆண்டுகள் ஆகப் போகிறது. எத்தனையோ கச்சேரிகளும், திவ்யநாம பஜனைகளும், கதை நிகழ்ச்சிகளும், ருக்மிணி, சீதா கல்யாண வைபவங்களும் அங்கு நடந்திருக்கிறது. இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. கோகுலாஷ்டமி , கிருஷ்ணனின் பிறந்த தினத்தில் இருந்து (ஆவணி மாதம் அஷ்டமி முதல்) பத்து தினங்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படும். இறுதி நாளில் ஸ்ரீ ஆஞ்சநேயர் உற்சவம் நடைபெறும். அன்று இரவு ஸ்ரீ ஆஞ்சநேயரைப் போல வேடம் அணிந்து ரதவீதி சுற்றி வருவார்கள். அனேகமாக லக்ஷ்மண வாத்தியார் வீட்டு “விஸ்வம்”தான் ஆஞ்சநேயராக வேடம் போட்டுக் கொள்வார். இரவு நேரம் ஆனதால் வீதியில் தங்கள் வீட்டு வாசலில் சிலர் கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களைத் திடீரென எழுப்பி அவர்கள் முன்பாக ஆஞ்சநேயர் வேடம் தாங்கிய விஸ்வம் “ஹோய்” என்று கத்துவார். தூக்கத்தில் விழித்த அவர்கள் பயந்தாலும், அந்த “அனுமனின்” முகத்தைப் பார்த்துக் கும்பிட்டுக் கொள்வார்கள்.

அவனது பள்ளி நாட்களில், கோகுலாஷ்டமி உற்சவத்திற்கு வடக்கு மாடத் தெருவில் பாதித்தெருவுக்கு மேல் நன்றாக அடைத்துப் பந்தலிட்டு, பந்தலின் ஒவ்வொரு தூணிலும் மின்விளக்குக் கட்டியும், தோரணங்களால் அழகு செய்தும் இருப்பார்கள். பந்தலின் முகப்பில் கட்டி இருக்கும் பெரிய வாழைமரங்கள் அவனையும், அவனது நண்பர்களையும் “வா வா …வந்து இங்கே விளையாடுங்கள்” என்று அழைக்கும். அவர்கள் ஒவ்வொரு பந்தல் தூண்களையும் ஓடி ஓடிப் பிடித்து விளையாடுவார்கள். “எலேய்…பாத்துடா…கீழ விழுந்துடாதேங்கோடா” என்று வெங்கட்ராமையர் மென்மையாக அவர்களை கடிந்து கொண்டே பஜனை மடத்துக்குள் செல்வார். அவர்தான் இந்த பஜனை மடத்திற்கு முக்கியமான பெரிய மனிதர். நிறைய நல்ல தர்மங்களை பஜனை மடத்திற்கும், ஸ்ரீ ஆதிவராகர் கோவிலுக்கும் அவர் செய்திருக்கிறார்.
பஜனை மடத்தில் ஸ்ரீராமர், சீதை, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர்தான் முக்கிய ஆராதனை தெய்வங்கள். கிருஷ்ணரும் உண்டு. ஸ்ரீராமநவமி ஒரு நாளும், ஸ்ரீராம அகண்ட நாமம் ஒருநாளும், தீபப் பிரதக்ஷிணம், சனிக்கிழமை பஜனை என்று கோலாகலமாகத்தான் இருக்கும். கண்ணனின் கோகுலாஷ்டமியையும் மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். கோவிலின் பூஜைகளை நீண்டகாலம் ஸ்ரீ ஐயாத்துரை வாத்தியார்தான் செய்து வந்தார். நல்ல ஆசார சீலர். வேதம் அறிந்தவர். மிகுந்த சிரத்தையுடன் தனது இறுதி காலம் வரை பூஜைகள் செய்து வந்தார்.
கோகுலாஷ்டமி, கண்ணனின் பிறந்த தினம். பஜனை மடத்தில் அன்று மாலை ஏழு மணிக்கு “ஸ்ரீ கிருஷ்ண ஜனனம்” கதையை ப்ரும்மஸ்ரீ வேங்கடசுப்ரமணிய சாஸ்திரிகள்தான் சொல்லுவார். அவரை “கீனா சார்” என்று எல்லோரும் அன்பாக அழைப்பார்கள். அவனும், நண்பர்களும் அவருக்கு முன்பாக அமர்ந்து கொண்டு “ஸ்ரீ கிருஷ்ண ஜனனம்” கதையை நிறையக் கேட்டிருக்கிறார்கள். கூட்டத்தில் யாரேனும் பேசிக் கொண்டிருந்தாலும் அவர் அதையெல்லாம் கவனிக்காமல் கதையை ரசித்துச் சொல்லிக் கொண்டிருப்பார். அவனும் அதைக் கூர்ந்து கவனித்து கண்ணனின் கதைகளை ரசித்துக் கேட்பான். அவனுக்கு விளையாட்டுப் புத்தி இருந்தாலும் கதை கேட்பதில் ஒரு தனி ருசி இருந்தது.
“கீனா சார்”தான் பின்னாளில் (1987ல்) சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் குருநாதர் ஸ்ரீ பாரதீ தீர்த்தரின் தியான ஸ்லோகமான “அக்யானாம் ஜான்ஹவி தீர்த்தம் வித்யாதீர்த்தம் விவேகினாம் ஸர்வேஷாம் சுகதம் தீர்த்தம் ஸ்ரீ பாரதீ தீர்த்தம் ஆஸ்ரயே” என்ற மந்திரத்தைக் கூறி, அவனை மூன்று முறை சொல்லச் சொல்லி , “கங்கை எப்படி நம் புற அழுக்குகளை நீக்குகிறதோ அதுபோலத் தூய அறிவு நமது அக்ஞானத்தை நீக்கும். அப்படிப பட்ட உயர்ந்த ஞானத்தை, நல்லறிவை அருளக் கூடிய குருநாதர் ஸ்ரீ பாரதீ தீர்த்தரை நான் ஆராதிக்கிறேன்.” என்று அர்த்தமும் கூறி அவனுக்கு ஆசிரியருமானார். “ஸ்ரீ சாரதா மாதா” என்று அவன் எழுதிய சிறிய கவிதைப் புத்தகத்தில் வரும்,
“ கிண்ணத்தில் அமுது வைத்துக்
கிட்டத்தில் இருந்து கொண்டு
எண்ணத்தில் தூய்மை யோடு
இந்தா “சாரதை” என்றால்
பண்ஒத்த பண்பு கொண்டாள்
பருகுவாள் பசியும் தீர்ப்பாள்”
வரிகளை அவனிடம் சொல்லி ,” நீ நானா எழுதிருக்காய்..இத நான் பூஜையின் போது சொல்லி அம்பாள நமஸ்காரம் பண்ணறேன் தெரியுமோ..” என்று அவன் தலையில் தன் வலது கைவைத்து ஆசீர்வதித்தார். அவன் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பொழுது அவர்தான் “இந்தி” ஆசிரியர். அப்பொழுது எழுந்த இந்தி எதிர்ப்பலையில், அவனுக்குத் தமிழின் மீது உள்ள காதலால் இந்திப் பக்கமே திரும்பவில்லை. அப்படி ஒரு மொழியைக் கற்காமல் விட்டது அவனுக்கு இழப்புதான் என்று இப்போது நன்கு உணர்கிறான். கற்காமல் விட்டதில் உள்ள ஒரே நன்மை, அவனை இந்தியில் யார் திட்டினாலும் அவன் பதிலுக்குப் புன்னகைக்கத் தெரிந்து கொண்டிருப்பதுதான்.
பஜனை மடத்தில் கிருஷ்ண பாகவதரின் கதை கட்டாயம் இருக்கும். அவர் அம்பாசமுத்திரத்திலிருந்து புறப்பட்டு மாட்டு வண்டியில் மாலை ஐந்தரை மணிக்கு வெங்கட் ராமையர் வீட்டில் வந்து இறங்குவார். அங்கு சிறிது நேரம் இருந்து விட்டு ஆறரை மணிக்கு பஜனைமடத்திற்கு வருவார். சுவாமி தரிசனம் செய்தபின் ஏழு மணிக்குக் கதையை “பலபீமா..பலபீமா” என்ற பாட்டுடன் துவங்குவார். பந்தல் நிறைத்து கூட்டம் இருக்கும். அவருக்கு பக்க வாத்தியமாக மிருதங்கத்துக்கு “நானாச்சி” மாமாவும், ஹார்மோனியத்துக்குச் “சங்கரனும்” இருப்பார்கள். நானாச்சி மாமா பஜனைக்கும், கச்சேரிகளுக்கும் மிருதங்கம் வாசிப்பார். வெளியூர்களில் இருந்து வரும் பெரிய பாகவதர்களுக்கெல்லாம் அவர் மிருதங்கம் வாசித்திருக்கிறார். கச்சேரி நாட்களில் வெள்ளை வேஷ்டியும், காதுகளில் கடுக்கனும், நெற்றியில் விபூதிக் குங்குமமுமாக அழகாய் இருப்பார். பஜனை மடத்துக்கு சுவாமி நெய்வேத்தியமும் அவர்தான் செய்வார். மேலமாடத் தெருவில் ஒரு வாடகை வீட்டில் அவர் குடி இருந்தார். அப்பொழுதெல்லாம் அவன் மதியம் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் பொழுது, நானாச்சி மாமா அவர் வீட்டு வாயிற் திண்ணையில் அமர்ந்து கொண்டு மிருதங்கம் பயிற்சி செய்து கொண்டிருப்பார். அவன் சிறிது நேரம் ஒரு தூணில் சாய்ந்த படி அதைக் கேட்டுக் கொண்டிருப்பான். அவனுக்கு மிருதங்க நாதம் மிகவும் பிடிக்கும். அவனுக்கு நண்பன் ரகு, நானாச்சி மாமாவிடம் சிறிது காலம் மிருதங்கம் கற்றுக்கொண்டான். போதுமான வருமானம் இல்லாத காரணத்தால் நானாச்சி மாமா சமையல் வேலை, பிராம்மணார்த்தம் என்று தனது கடேசி காலத்தைக் கழித்து விட்டார். கிருஷ்ண பாகவதர் “பக்த ராமதாஸ்” கதையை மிகவும் சுவாரஸ்யமாகச் சொல்லுவார். இடையில் “தானிஷா” என்று ஒரு சத்தம் கொடுப்பார். அதற்கு நானாச்சி மாமா மிருதங்கத்தில் பதில் கூறும் நாதம் இப்பொழுதும் அவன் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவரை நாயகனாக்கி “மிருதங்கம்” என்ற சிறுகதையை அவன் எழுதி இருந்தான். அதை மஞ்சரி ஆசிரியாராக இருந்த “லெமன்” என்று அழைக்கப் படும் லக்ஷ்மணன் (சாருகேசியின் சகோதரர்) அவர்கள் விரும்பி மஞ்சரியில் வெளியிட்டார்கள். அந்தக் கதை இருபதாம் நூற்றாண்டின் சிறந்த சிறுகதைகள் என்ற தலைப்பில் கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட தொகுப்பில் இடம்பெற்றது.
கிருஷ்ணபாகவதரின் பாட்டுக்கு ரொம்ப அழகாக “சங்கரன்” தனது ஹார்மோனியத்தில் வாசிப்பதைக் கேட்பது ஒரு தனி ஆனந்தம். விரல்கள் ஹார்மோனியத்தில் புகுந்து விளையாடும். சிரமமே இல்லாமல் வாசிப்பார். கதைக்கு நடுவில் பாகவதர் ஒரு ராகம் பாடி விட்டு சங்கரனைப் பார்ப்பார். சங்கரன் தனது ஹார்மோனியத்தில் அந்த ராகத்தை விரல்களால் வீடு கட்டி கிரஹப்பிரவேசமே செய்து விடுவார். சிறந்த வித்வானின் கைகளில் கலைமகள் தானே வந்து சேவை செய்வதைப் பார்த்துப் பார்த்து அவன் வியந்திருக்கிறான்.
கிருஷ்ண பாகவதர், கிருஷ்ணனின் லீலைகளைச் சொல்லும் பொழுது பெண்களைப் போலவே நளினமாக ஜாடை செய்து ,”ஏண்டி …எசோதே ஒன்னோட புள்ள செய்த காரியாத்தப் பாருடி..” என்று நடித்துக் காட்டுவார். அந்த பாணி அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் அவர் சொன்ன கதைகளெல்லாம் அவனது மனதில் பசுமரத்தாணிபோல நன்றாகப் பதிந்திருக்கிறது. முன்பெல்லாம் ஹரிகதை சொல்பவர்களுக்கு இந்தக் காலத்தைப் போல அப்படி ஒன்றும் அள்ளிக் கொடுத்து விட மாட்டார்கள். கதை சொல்பவர்களும் பணத்துக்காகச் சொன்னவர்களும் இல்லை. ஆத்மார்த்தமாக இருந்தார்கள். பக்தியுடன் இருந்தார்கள். அதனால்தான் அவனைப்போல எத்தனையோ சிறுவர்கள் கதையில் இறைவனைக் கண்டு வணங்கினார்கள். கேட்கும் கதைகளால் பாடம் கற்றார்கள். இன்று அவனுக்குக் கதை, கவிதை சொல்வதற்கும், எழுதுவதற்கும், வேத வாழ்வில் ஆழ்ந்த நம்பிக்கை ஏற்படுவதற்கும் காரணமே அந்த எளியோர்களின், போலித்தனம் இல்லாத வெளிப்படையான நடத்தையும், வெள்ளையான வாக்கும்தான். கிராமமல்லவோ அவனுக்கு ஆசிரியனாக இருந்து இவைகளையெல்லாம் கற்றுக் கொடுத்தது. கிராமத்தானாகவே இருப்பது எத்தனை சுகமானது. அதனால் அவன் கிராமத்தானேதான்….
--
அப்படியா? இலக்கியவேல் கவியோகியும். வல்லமை விசுவும் ஒருவரை ஒருவர் விஞ்சுகின்றர்! நல்லவேளை. நான் பிழைத்துக்கொண்டேன். - புலவர் இராமமூர்த்தி.
மீ.விசுவநாதன்
அத்யாயம்: பதினொன்று
S. N. N. சங்கரலிங்கம் ஐயர்

அவனிருக்கும் வீட்டிற்குப் பின்புறத்தில்தான் இராமச்சந்திரபுரம் தெரு இருக்கிறது. அது ஒரு அழகான அக்கிரஹாரம். இருபுறமும் வரிசையாக அழகான வீடுகள் உண்டு. தெருவின் கடேசியில் ஸ்ரீ ராமர் கோவில். ஸ்ரீராமர், லக்ஷ்மணர், சீதாதேவி, ஆஞ்சநேய சமேதராக இருக்கும் மூலஸ்தானம். இடதுபுறத்தில் லக்ஷணமான பெரிய வலம்புரி விநாயகர் சந்நிதி. அதற்கு முன்பாக சிறு ஹோமகுண்டம். தங்கக் குங்குமச் சிமிழ் போல இருக்கும் இந்தக் கோவில். அதன் பின்புறம் தெளிந்து பாயும் கன்னடியன் கால்வாய். தென்புறத்தில் ஏழு வீடுகள் கொண்ட எழாபுரம் அக்கிரஹாரம். கன்னடியன் கால்வாய்க்கு மேற்குப் பகுதியில் பழமையான, உயிர்ப்புடன் கூடிய ஒரு “கல் மண்டபம்” படித்துரையுடன் இருக்கும். இப்பொழுது கால்வாயை விரிவு படுத்துகிறோம் என்று பொதுப்பணிதுறையினர் அந்த மண்டபத்தை இடித்து விட்டனர். கால்வாயில் தண்ணீர் நிறைந்து ஓடும். அது அவனுக்கும் அவனது நண்பர்களுக்கும் கொண்டாட்டந்தரும். அவர்கள் அந்த மண்டபத்தின் மேலே இருந்து தண்ணீரில் குதித்து நீந்தியபடியே சிதம்பரேஸ்வரர் கோவில் படித்துறையில் வந்து கரை ஏறுவார்கள். அந்த மண்டபத்திற்கு மேற்கே கண்ணுக்கெட்டும் தூரம்வரை பசுமையான வயல்காடுகள்தான். “ஒரு காலத்தில் இந்தத் தெருவில் “மாத்வ பிராமணர்கள்”, அதாவது ராயர் குடும்பத்தினர் அதிகமாக வாழ்ந்திருக்கின்றனர். அவர்களின் வழிபாட்டுத் தெய்வமான ஸ்ரீ ராமனுக்குக் கோவில்கட்டி வழிபட்டு வந்திருக்க வேண்டும். அதற்க்குச் சான்றாக இன்றும் சில மாத்வகுடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் கோவில் சித்திரைத் திருநாளின் மூன்றாம் திருநாள் “ஆஞ்சநேயர் வாகனக்” கட்டளைக் காரர்கள் ராயர்குடும்பத்தினர்தான். அந்தத் திருநாள் செலவுக்கென்றே “வயலை” எழுதி வைத்திருந்தனர். அதில் விளையும் நெல்லை விற்றுவரும் பணத்தில் சுவாமி கட்டளையைச் செய்யவேண்டும் என்று இந்த ஏற்பாடு. சிலவருடங்களுக்கு முன்புதான் இந்தக் கட்டளைக்காரர்கள் மாறினார்கள்” என்று பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து ஒய்வு பெற்று, அதே தெருவில் வசித்து வந்த, இலக்கியத்திலும், வரலாற்றிலும் ஈடுபாடுள்ள “பேங்க் கிருஷ்ணமூர்த்தி மாமா” அவனிடம் ஒருமுறை கூறி இருக்கிறார். ஸ்ரீ ராமர் கோவிலுக்கு அந்த கிராம மக்களே கைங்கர்யம் செய்து வருகின்றனர். முக்கியமாக சங்கரலிங்கமையர் குடும்பத்தினரின் பங்கு அதிகமாக இருக்கும்.
S. N. N. சங்கரலிங்கம் ஐயர்தான் இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவனத்தின் ஆணிவேர். அவர் மாட்டு வண்டியில் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள கிராமங்களுக்குச் சென்று இந்தியா சிமிண்ட்ஸ் துவங்குவதற்குத் தேவையான இடத்தையும், “ஜிப்சம்” போன்ற மூலப்பொருட்கள் கிடைக்கும் இடங்களையும் தேடிக் கண்டு தாழையூத்தில் சிமென்ட் தொழிற்சாலையை நிறுவினார் என்றும் அவனது கிராமத்துப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறான். அவர் ஒரு சிறந்த நிர்வாகி. தினமும் காலையில் எட்டு மணிக்கெல்லாம் அவரது கருப்பு நிறக் காரில் அவரும், அவரது மனைவி திருமதி. பிச்சு சங்கரலிங்கம் அம்மாள் (பிச்சுக்குட்டி மாமி) அவர்களும் கல்லிடைகுறிச்சியில் இருந்து தாழையூத்திற்குச் சென்று இரவு எட்டு மணிக்குத் திரும்புவதை அவன் பலமுறை பார்த்திருக்கிறான். கிராமத்தில் படித்த இளைஞர்களுக்கு தனது தொழிற்சாலையில் வேலை கொடுத்திருக்கிறார். அப்படி வேலைக்குச் சேர்ந்து பணியில் இருந்து ஓய்வு பெற்ற மனிதர்கள் சங்கரலிங்கம் ஐயர் அவர்களின் நல்ல குணங்களையும், செய்த உதவிகளையும் அவனிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவனுக்கு இன்றும் நினைவில் இருப்பது சங்கரலிங்கம் ஐயர், R. S. A. சங்கர ஐயர், ராயல் என்பீல்ட் K. R. சுந்தரம் ஐயர், ஈசன் குழுமத்தின் ஈஸ்வர ஐயர் போன்ற பெரியோர்கள் சேர்ந்து ப்ரும்மஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதரின் மகாபாரத உபன்யாசத்தை 1966ம் வருடம் ஆடிமாதம், நாற்பத்தெட்டு நாட்கள் ஏற்பாடு செய்திருந்ததுதான். இராமச்சந்திரபுரம் தெருவில் ஸ்ரீ ராமர் கோவிலுக்கு முன்பாக பெரிய பந்தல் போட்டிருந்தார்கள். தெரு முழுவதும் மக்கள் வெள்ளம் போல அமர்ந்து கேட்பார்கள். ஒலிபெருக்கி வடக்கு ரதவீதி (குத்துக்கல் தெருவின் கடேசி வரை) கடேசி வரை வைத்திருப்பார்கள். ஒரு பெரிய கல்யாண உற்சவம் போலத்தான் அது நடந்தது. தினமும் மாலை ஆறு மணிக்கெல்லாம் அவனுக்கு அம்மா அவன் நெற்றியில் விபூதி இட்டு அவனை அந்த மகாபாரத உபன்யாசம் கேட்கச் சொல்லி அனுப்புவாள். அவனுடன் அவனது நண்பன் நீலகண்டனும் வருவான். அவனுக்கு விளையாட்டில் தான் முதலில் கவனம் இருந்தது. இந்த உபன்யாசம் கேட்பதில் விருப்பம் இருக்கவில்லை. அம்மாவின் வற்புறுத்தலால் முதல்நாள் சென்றான். சரியாக ஏழு மணிக்கு,”தாபிஞ்ஜஸ் தப கர்த்விஷே தனுபிருதாம் தாரித்ர முத்ராத்விஷே” என்று அனதராம தீட்சிதரும், அவரது சீடர்களும் தியானஸ்லோகம் கம்பீரமாக ஒரே குரலில் சொன்னதைக் கேட்டு அதிலேயே அவன் சொக்கித்தான் போனான். தீட்சிதரின் கதை சொல்லும் பாணி அவனுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அவன் அந்தக் கதைக்குள்ளேயே சென்று விடுவான். மகாபாரதம் அவனைக் கட்டிப் போட்டது. அதில் உள்ள சூஷ்ம தர்மங்களை தீட்சிதர் சொல்லச் சொல்ல அவன் கவனமாகக் கேட்டு வந்தான்.
சூதாட்ட சர்க்கத்தில் தர்மன் ஒவ்வொன்றாகப் பணயம் வைக்க, சகுனி பகடை உருட்ட “நான் ஜெயித்தேன்..அடுத்தது என்ன …” என்று சகுனி கேட்க, மீண்டும் தர்மன் தன் தம்பியரைப் பணயம் வைக்க, சகுனி கள்ளத்தனமாக எல்லோரையும் வென்ற பின்பு, தர்மா இன்னும் பாஞ்சாலி இருக்காளே…அவளைப் பணயம் வைத்தாடு என்று மகா பாபி சகுனி அந்தப் பதிவ்ரதையைக் கேட்டான்.. தர்மன் சரி பணயம்ன்னு சொல்லரத்துக்குள்ளே அவள ஜெயுச்சுட்டேன்னு…சபைல குதிச்சான்…தர்மர் சொக்கட்டானையே பாத்துண்டிருந்தார்….சூதாடரவாளுக்கு நாம அடுத்தாப்புல ஜெயுச்சுடலாம்னுதான் தோணுமாம்…. பட்டத்திரி குருவாயூரப்பனப் பார்த்து,
“ஏய் குருவாயுரப்பா…நீ கண்கண்ட தெய்வமாச்சே….அந்த பாபி சகுனி சூதாட்டத்துல தர்மபுத்திரர்ட்டேந்து எல்லாத்தயும் ஏமாத்தி ஜெயிச்சுட்டானாமே..உனக்குத் தெயரியுமான்னு கேட்டாளாம்..அதுக்கு சுவாமி குருவாயூரப்பன் “ஆமாந்நாளாம்” என்று கதையின் உச்சத்தை கேட்பவரின் மனதில் பதிய வைத்தார்.
அவர் சொன்ன “யஷப்ப்ரச்னம்” அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று. தாகத்திற்க்காகத் தண்ணீர் எடுக்கத் தன் தம்பியர்
ஒவ்வொருவராக அந்தக் குளத்தை நோக்கி அனுப்புவதையும், அந்தக் குளக்கரையில் உள்ள மிகப் பெரிய மரத்தில் இருக்கும் “யக்ஷன்” என்ற தர்ம தேவதையையும் தீட்சிதர் சொல்லச் சொல்ல, அந்த இயற்கைக் காட்சிகளும், பஞ்ச பாண்டவர்களும், அந்தச் சூழ்நிலையின் அடர்ந்த காட்டு மரங்களின் வாசனையும் ஒரு பிம்பமாக அவனுக்குள்ளே பதிந்து விட்டது. அவன் ஆற்றங்கரையில் சுடுகாட்டில் இருக்கும் அந்தப் பெரிய இலுப்பைமரத்தை நினைத்துக் கொள்வான். இப்பொழுதும் அந்த மரத்தைப் பார்க்கும் பொழுது “யக்ஷன்” நினைவுதான் அவனுக்கு வரும். அது தீட்சிதர் உரையின் உருவங்கள். இன்றும் அதே உருவங்கள்தான் அவனோடு உயிராக இருக்கிறார்கள். யக்ஷன் தர்மராஜனிடம் நூற்றிஎட்டு கேள்விகள் கேட்கிறான். அனைத்திற்கும் தர்மர் விடை கூறுவதை தீட்சிதர் தெளிவாகக் கூறினார். அந்த வயதில் அவனுக்குச் சில எளிய தர்மங்கள்தான் மனதில் பதிந்தது. குளத்தில் நீர்குடிக்கச் சென்ற தம்பியர்கள், குளத்தின் உரிமையாளர் சொல்லைக் கேட்காமல் தண்ணீர் குடித்தனர். மயங்கி விழுந்தனர். தர்மபுத்திரர் யக்ஷன் சொல்லை மதித்தார். தனக்குத் தெரிந்த பதிலைத் தந்தார். தர்மதேவதை அவரது தம்பியர்களை மீட்டுக் கொடுத்தார். அதனால் பிறர் பொருளை, அவரது உரிமை இல்லாமல் தொடாதே என்ற பாடத்தை அறிய முடிந்தது.
“உலகில் ஆச்சரியமானது எது” என்ற கேள்விக்கு ,”தினமும் மனிதர்கள் இறக்கிறார்கள் என்று தெரிந்தும் நான் என்றும் இருப்பேன் என்று நினைக்கிற அறியாமைதான் ஆச்சர்யமானது” என்ற தர்மபுத்திரரின் பதில் அவனுக்குப் பிடித்திருந்தது. அதற்குப் பிறகு அவன் அந்த கிராமத்திலோ, அவனது குடும்பத்திலோ யாரேனும் இறந்தால் இந்த தர்மபுத்திரரின் விடைதான் அவனது மனதில் ஒலிக்கும். அதுவும் தீட்சிதரின் குரலிலேயே.
அவர் கர்ணனின் கதையைச் சொன்னார். அவன் அன்று அழுதே விட்டான். ஆற்றில் மிதந்துவரும் தொட்டிலைத் தேரோட்டி எடுத்து வருவான். குழந்தை இல்லாத தன் மனைவியிடம் தருவான். ஒரு தாய் குழந்தையைத் தொட்டிலில் வைத்து ஆற்றிலே விட்டாள். இன்னொருத்தி அதையே அன்பாக அணைத்துக்கொண்டு தாயானாள். தீட்சிதர் அப்படிச் சொன்னபொழுது அன்று அவனுக்கு அந்த கிராமத்தில் யாருக்கெல்லாம் குழந்தைகள் இல்லையோ அவர்களுக்கெல்லாம் அவன் குழந்தையாக இருக்க வேண்டும் என்று விரும்பினான். இதுவும் மகாபாரதம் சொல்லும் சூஷ்ம தர்மம்தானே. போர்க்களத்தில் கர்ணன் தேர்ச் சக்கரத்தைத் தூக்கும் பொழுது, கிருஷ்ணர் சொல்லி அர்ச்சுனன் அம்பு விட அது கர்ணனின் மார்பில் தைக்கிறது. கீழே சரிகிறான் கர்ணன். மீண்டும் அர்ஜுனன் விடும் அம்பெல்லாம் கர்ணனுக்கு மாலையாக விழும்படிச் செய்கிறாள் தர்மதேவதை. கண்ணன் போய் கர்ணனிடம் அவனுடைய புண்ணியத்தை தானமாகக் கேட்கிறான். தன் ரத்தத்தால் அதைக் கண்ணனுக்குத் தாரை வார்க்கிறான். கண்ணன் கர்ணனுக்குத் தன் விஸ்வரூபம் காட்டுகிறான். இந்த நிகழ்ச்சியைக் கதறக்கதறச் சொல்லி, “ஏய்..குருவாயூரப்பா..கர்ணனுக்கு நீ விஸ்வரூம் காட்டினயாமே…உண்மைதானான்னு பட்டத்ரி கேட்டார். அதுக்கு குருவாயூரப்பன் “ஆமாந்நாளாம்” என்று தீட்சிதர் கதை சொல்லும் அழகே அழகு. பின்னொருநாள் அவன் அவனுக்குப் பெரியம்மாவுடன் அம்பாசமுத்திரம் கிருஷ்ணா தியேட்டரில் கர்ணன் திரைப்படம் பார்க்கப் போனான். கர்ணன் இறக்கும் பொழுது அவனும் அழுது, படம் முடியும் முன்பே தியேட்டரை விட்டு வெளியில் வந்ததை அவனுக்குப் பெரியம்மா அவனிடம் அடிக்கடி நினைவு கூறுவாள். அவன் கர்ணன் திரைப்படத்தை எத்தனையோ முறை பார்த்து விட்டான். அதைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குரலிலும் தீக்ஷிதரின் குரலையே அவன் அடிநாதமாகக் கேட்கிறான். அதே போல அபிமன்யு, பீஷ்மர், துரோணர் , நளசரித்ரம் எல்லாமே அவனுக்குள் அவர் அன்று நட்ட விதைகள்தான். பின்னாளில் அவன் மகாபாரதக் கதைகளுக்குள் தன்னைத் தொலைத்ததற்கு சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதரே காரணம் என்றால் அந்த உபன்யாசத்தை ஏற்பாடு செய்த சங்கரலிங்கம் ஐயர் போன்ற பெரியோர்களின் தர்ம சிந்தனையும் முக்கிய காரணம்.
சங்கரலிங்கம் ஐயர் மறைந்த பிறகு, அவரது பிறந்த தினமான ஜனவரி 31ம் தேதி துவங்கி பதினைந்து தினங்கள் ப்ரும்மஸ்ரீ தூப்புல் லக்ஷ்மிநரசிம்ஹன் அவர்களது உபன்யாசத்தை அவரது குடும்பத்தினர், குறிப்பாக K.S. ராமன் முன்னின்று நடத்தி வந்தார். தூப்புல் லக்ஷ்மிநரசிம்ஹன் செய்த “பிரகலாத சரித்திரம்” சொற்ப்பொழிவை அதே தெருவில் பலவருடங்களுக்குப் பிறகு கேட்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. தூணில் இருந்து அந்த நரசிம்மன் வெளியில் வரும் காட்சியை அவர் அழகு தமிழில் நெருப்புப் பொறி பறக்கச் சொன்ன பொழுதும், ஹிரண்ய வதம் முடிந்து, சினம் தணிந்து ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ஹனாகப் பிரகலாதனுக்குக் காட்சி அளித்ததைக் கூறும் பொழுதும் அவன் கண்கள் பனித்தன. அன்று அங்கு அந்தக் கதையைக் கேட்க வந்திருந்த L. M. சுந்தரம் ஐயர் (அவனுக்கு நண்பன் சுப்பாமணியின் அப்பா ) “கேட்டாயா விஸ்வநாதா…இப்படி உடம்பே புல்லரிக்கும்படியா எத்தனைபேர் கதை சொல்லறா” என்று வியந்தார். இப்படி எல்லாம் கிராமத்தில் தர்மத்தை வளர்த்தனர். அவனைப் போன்ற எத்தனையோ இளைஞர்களின் மனம் உயரக் காரணமே கிராமத்துப் பெரியோர்கள் செய்த நல்ல தர்ம காரியங்கள் என்பதை அவன் நம்புகிறான்.
(07.05.2015) இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….
மீ. விசுவநாதன் has written 33 stories on this site.
பணி : காட்பரி நிறுவனம் (ஓய்வு) தற்சமயத் தொழில் : கவிதை, சிறுகதை, குறுநாவல், கட்டுரைகள் எழுதுவது. இலக்கியம், ஆன்மீகச் சொற்பொழிவு. பள்ளி மாணவ, மாணவியர்களுக்குக் கதைகள் சொல்வது. சுபமங்களா, கணையாழி, தினமணிகதிர், தாமரை, அமுதசுரபி, கலைமகள், புதியபார்வை ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது. நூல்கள்: "இரவில் நனவில்" என்ற சிறுகதைத் தொகுதி, மனிதநேயம், "காலடி சங்கரரின் கவின்மிகு காவியம்" கவிதைத் தொகுதிகள். இரவில் நனவில் சிறுகதைக்கு கோயம்புத்தூர் "லில்லி தேவசிகாமணி" இலக்கிய விருது இரண்டாம் பரிசு கிடைத்தது.(வருடம் 1998): பாரதி கலைக்கழகம் 2003ம் ஆண்டு "கவிமாமணி" விருதளித்துக் கௌரவம் செய்தது.
(மீ.விசுவநாதன்)
அத்யாயம்: 12
“திலகர் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளி”
அவன் 1966ம் வருடம் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் மாதத்தில் திலகர் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் ஏழாவது வகுப்பில் சேர்ந்தான். அவனது வீட்டில் இருந்து இருபது நிமிடத்தில் அந்தப் பள்ளியை அவன் அடைந்து விடுவான். அந்தப் பள்ளியின் தோற்றமே ஒரு பெரிய கல்லூரியைப் போன்றிருக்கும். அழகான முகப்பும், ஏராளமான வேப்பமரங்களும், நாவல் மரமும் நிறைந்து படிக்கத் தூண்டும் சூழல் கொண்டது இந்தப் கல்விச் சாலை. பள்ளிக்குள் நுழைந்தவுடனேயே இடது பக்கத்தில் ஒரு அழகான சுடலை மாடன் சிலை இருக்கும். வலதுபுறம் மிகப்பரந்த வெளியும் சுற்றுச் சுவரின் பக்கத்தில் வரிசையாக வேப்ப மரங்களும் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கும். முகப்புக் கட்டிடத்திற்குப் பின்புறம் ஒரு மேடை உண்டு. அதன் அருகில்தான் நூல்நிலையம் இருந்தது. பகல் உணவுக்குப் பின்பும், ஓய்வு வேளைகளிலும் அவன் அந்த நூல் நிலையத்தில் அமர்ந்து கதைப் புத்தகங்களைப் படிக்கவே விரும்புவான். சிலவேளைகளில் நண்பர்களுடன் சறுக்குமரம் விளையாடுவதும் உண்டு.
அவனுக்கு பச்சை நிறத்தில் அரைக்கால் டிராயரும், அரைக்கை வெள்ளைச் சட்டையும்தான் சீருடைகள். டிராயரின் இரண்டு பக்கத்துப் பைகளும் தட்டை, முறுக்கு, சீடை, நெல்லிக்காய், கடலை மிட்டாய் போன்ற தின்பண்டங்களை அடைத்து வைக்கும் “கோடவுனாகவே” அவனுக்குப் பயன்பட்டன.
இந்தப் பள்ளியின் தலைவர்களாக R. S. A. சங்கர ஐயர், A. வேலாயுத முதலியார், K. R. சுந்தரம் ஐயர் அகியோர் இருந்தனர். பிறகு இன்று வரை K. S. ராமன் தலைவராக இருக்கிறார். அதன் செயலாளர்களாக தியாகி. ய்க்யேஸ்வரசர்மா, சந்திரவிலாஸ் A. விஸ்வநாத ஐயர், ஸ்டோர் ராஜாமணி ஐயர் ஆகியோர் இருந்தனர், அதன் பிறகு1973ம் ஆண்டுமுதல் K. S. சங்கரசுப்ரமணியன் செயலாளராக இருந்து வருகிறார். பள்ளியின் வளர்ச்சிக்காக “வித்யா சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கி இன்று வரை நேர்மையான நிர்வாகம் என்ற பெயரை இப்பள்ளிக்கு அளித்து வருகின்றனர். இந்த வித்யாசங்கத்தின் இன்றைய தலைவராக K. S. ராமனும், செயலாளராக K. S.சங்கரசுப்ரமணியனும், பொருளாளராக M. ராகவனும், சங்க உறுப்பினர்களாக K. S. சுந்தரம், R. சங்கர், ராதிகா ராமன் ஆகியோருடன் பள்ளித் தலைமை ஆசிரியர் P. சுப்பையா, நூலக மேலாளர் L. ராமகிருஷ்ணன், ஆசிரியை உஷா போன்றோரும் இருக்கின்றனர்.
“தலைமை ஆசிரியர் N. ரங்கநாத ராவ்”
அவனுக்கு அப்பா அந்தப் பள்ளியில்தான் தலைமைக் கணக்கராக வேலை பார்த்து வந்தார். அவன் அந்தப் பள்ளியில் சேர்ந்த நேரத்தில் “N. ரங்கநாத ராவ்”தான் தலைமை ஆசிரியராக இருந்தார். நன்றாகச் சலவை செய்த மடிப்புக் கலையாத பச்சை நிறத்தில் முழுப் “பேன்ட்”ம், முழுக்கை வெள்ளைச் சட்டையும் அணித்து சரியான நேரத்தில் பள்ளியில் அவர் இருப்பார். கண்டிப்பானவர், அதேசமயம் கனிவானவர். அவரது கண்களில் அறிவின் தெளிவும், உறுதியும் இருக்கும். நல்ல ஆங்கிலப் புலமை உள்ளவர்.
1967ம் வருடம் அப்போதைய முதல் மந்திரி அண்ணாத்துரையைப் பள்ளிக்கு அழைத்திருந்தனர். அன்று வரவேற்புரையை தலைமை ஆசிரியர் ரங்கநாதராவ் நிகழ்த்தினார். மிகத் தெளிவோடும், நகைச்சுவையோடும் பேசியதை மாணவ, மாணவிகள் உற்சாகமாகக் கைகளைத் தட்டி ரசித்தனர். முதலமைச்சர் பேசும் பொழுது தலைமை ஆசிரியர் ரங்கநாதராவ் உரையின் அழகைப் பாராட்டினார். அதே போல 1971ல் கல்வி அமைச்சராக இருந்த இரா.நெடுஞ்செழியன் பள்ளிக்கு வந்திருந்த பொழுது தலைமை ஆசிரியர் மிகச் சிறப்பாகப் பேசியதும், கல்வி அமைச்சர்”கலையே வளர் தொழில் மேவிடு கவிதை புனை தமிழா, இலையே உணவிலையே இனியிலையே என்னும் எளிமை, இனிமேல் இலை எனவே முரசறைவாய் முரசறைவாய்” என்ற பாரதிதாசனின் கவிதையை ஓசை நயத்தோடு கூறியதும் அவனுக்குப் பசுமையாக நினைவிருக்கிறது.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் “இறை வணக்கம்” (Prayer) நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஏதேனும் ஒரு நல்ல கருத்தை மாணவர்களுக்குச் சொல்லுவார். மாணவர்கள் அமைதியாகக் கேட்பார்கள். அப்படி ஒரு காந்த சக்தி அவருக்கு இருந்தது. ஒரு முறை அவர் உரை நிகழ்த்தும் முன்பு “ஏமாறாதே ஏமாற்றாதே” என்ற திரைப்படப் பாடல் ஒலி காற்றில் மிதந்து வந்தது. மாணவர்களின் கவனம் அந்தப் பாடலில் சென்றதை அறிந்த தலைமை ஆசிரியர் ரங்கநாதராவ் அந்தப் பாடலையே அன்றைய உரைக்குக் கருவாக எடுத்துக் கொண்டு ஒரு ஐந்து நிமிடங்கள் பேசினார். எப்படி வாழ்வில் கவனமாக இருக்கவேண்டும் என்ற பொருளில் அமைந்த அந்த அவரது அற்புதமான உரையை அவன் இப்பொழுதும் அசைபோடத்தான் செய்கிறான். ஆசிரியர்கள் எப்படி ஒரு மாணவனின் வாழ்க்கையை நன்கு அமைத்துத் தருகிறார்கள், மாணவர்கள் அதை எப்படி உள்வாங்கிக் கொண்டு மேலே மேலே உயருகிறார்கள் என்ற கேள்விகளுக்கு இது போன்ற நிகழ்வுகளே சரியான பதில்கள். அவன் அவனுடைய தலைமை ஆசிரியரான “ரங்கநாதராவ்”வை அவர் உடல்நலம் பாதிக்கப் பட்டிருந்த சமயம் சென்று பார்த்து அவரை வணங்கி வந்தான். “கண்ணா…நீ என் மாணவன். இன்று நீ நன்னா இருப்பதைப் பார்க்க ரொம்ப சந்தோஷமாருக்கு” என்று அவர் அன்போடு அவன் தலையில் கைவைத்து ஆசிசெய்தார்.”சார்…அது உங்களைப் போன்ற ஆசிரியர்கள் போட்ட பிச்சை” என்றான்.
அவனது வீட்டிற்கு மூன்று வீடுகள் தள்ளி மேல்புறத்தில் உள்ள கடேசி வீட்டில்தான் அவர் குடி இருந்தார். ஆசாரமான மாத்வ குடும்பம். தெய்வ நம்பிக்கை மிக்கவர். தினமும் காலையில் ஏழு மணிக்கெல்லாம் ஆற்றங்கரையில் குளித்து, இடுப்பில் நார்மடிப் பட்டு கட்டி, வலது கையில் ஒரு செப்புச் சொம்பில் தண்ணீரும் கொண்டு எதோ மந்திரங்களை முணுமுணுத்தபடியே வருவார். காலையில் வீட்டில் அவர் பூஜை செய்யும் வேளை “டன்டட டட்டன் டன்டன்டன் டன்டட டட்டன் டன்டன்டன்” என்ற சந்தத்தில் “சேன்டி” அடிக்கும் மங்கல இசை அவனது வீட்டிற்குக் கேட்கும். அப்பொழுது மணி சரியாக ஏழேமுக்கால் என்று சொல்லிவிடலாம். அனேகமாக அவர் பள்ளிக்கு நடந்தேதான் வருவார். அவர் பள்ளிக்குச் செல்லும் முன்பாக அவனுக்கு அப்பாவை அவர் கூட்டிவரச் சொல்லி பள்ளியில் வேலை செய்யும் சுடலை முத்துவையோ, தளவாயையோ, பூதத்தானையோதான் அனுப்புவார். சில நாட்களில் பள்ளிக் காவலாளியாக இருந்த ஆதிமூலத் தேவரையோ அனுப்புவார். அந்த நேரத்தில் அவனோ, அவனுக்கு அக்காவோ வீட்டு நடையில்(முன் வாசலில்) இருப்பார்கள். அவர்களிடம், “அம்பி..அப்பாவ ஹெட்மாஸ்டர் ஐயா வரச்சொன்னாவ…அப்பாட்டச் சொல்லுதியா ” என்று அவர்கள் அன்பாகக் கூறுவார்கள். அப்படி அழைக்கும் ஆதிமூலத் தேவரை அவனுக்குப் பிடித்திருந்தது.
“பள்ளிக் காவலாளி ஆதிமூலத் தேவர்”
ஆதிமூலத்தேவரின் குரலில் ஒரு ஆண்மை இருக்கும். நல்ல நம்பிக்கையான தொழிலாளி. அவனுக்கு அப்பாவுக்கும்
ஆதிமூலத் தேவரிடம் மிகுந்த அன்புண்டு. அவனுக்கு அப்பா பள்ளியின் சம்பள தினத்தன்று அம்பாசமுத்திரம் அரசுக் கருவூலத்தில் இருந்து பள்ளியில் வேலை பார்பவர்களுக்கான சம்பளப் பணத்தை வாங்கி வருவார். அப்பொழுது அப்பாவுக்குத் துணையாக பூதத்தானோ, ஆதிமூலத் தேவரோதான் சைக்கிளில் கூடவே சென்று வருவார்கள். அவனுக்கு அப்பா அவர்களுக்கு நண்பன்தான். அப்படிப் பழகுவார். பூதத்தான் மூக்குப்பொடி போடுவார். அந்தக் கையை வீட்டுத் திண்ணைச் சுவரில் தேய்க்கும் பொழுது,” ஒய்..பூதத்தான் இப்படி செவரெல்லாம் நாசமாக்காதேயும்….ஒரூ துண்டக் கைல வைச்சுக்கப் படாதோ….” என்று அவனுக்கு அம்மா சொல்லுவாள். “அப்படியே பழகிடுச்சில்லேம்மா…” என்று பூதத்தான் நெளிவார்.
அருகில் இருக்கும் ஆதிமூலத்தேவர்,” அம்மா சொல்லுதாவல்லா…அந்த நல்லதக் கேட்டுக் கிடுமே…” என்று பூதத்தானைப் பார்த்துக் கூறுவார். அவர்கள் ஹெட்மாஸ்டர் வீட்டிற்கு வரும்பொழுதெல்லாம் அவனுடைய வீட்டுத் திண்ணையில் அமர்ந்துதான் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பேசும் முறை அவனுக்குப் பிடித்திருந்தது.
ஆதிமூலத் தேவர் பள்ளியில் இருந்து ஓய்வு பெற்றபின் அவருக்கான ஓய்வூதியப் பணத்தை அரசாங்கத்திடம் இருந்து விரைவில் பெற்றுத் தர அவனுக்கு அப்பா மிகுந்த உதவி செய்தார். அதனால் அவருக்கு அவனது குடும்பத்தினர் மீதே ரொம்பவும் ஒரு விஸ்வாசம் இருந்தது. அவர் பணி ஓய்வு பெற்றபின் காலை பதினோரு மணிக்கு மேல்தான் தாமிரபரணிக்குக் குளிக்கச் செல்வார். தனது வழுக்கைத் தலையில் நிறைய எண்ணை தடவி இருப்பார். கூடவே ஒரு ஆட்டுக் குட்டியையும், அதற்கான ஒரு சிறிய இலைகள் உள்ள குழையையும் ஒரு கையிலும், மறு கையில் ஒரு வெள்ளைத் துண்டை இரண்டாக மடித்து வைத்தபடியம் மெதுவாக நடந்து செல்வார். சில விடுமுறை நாட்களில் அவனும் அவனது நண்பர்களும் வாய்க்கால் பாலத்தின் சுவர்களில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அவனுக்கருகில் வந்து, “அம்பி ..இப்படி செவர்கட்டைல ஒக்கராதேயும்…தண்ணிக்குள்ள விழுந்திர மாட்டீரா” என்று கனிவோடு எச்சரிப்பார்.
ஒரு நாள் அவன், ஆதிமூலத் தேவர் ஆற்றங்கரையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மண்டபத்தை அவர் ஒருவராகவே சுத்தம் செய்வதை பார்த்தான். அந்த மண்டபச் சுவர்களில் நன்றாகப் படம் வரைபவர்களைக் கொண்டு அழகான படங்களை வரையச் சொன்னார். ஸ்ரீ கிருஷ்ணருக்கு முன்னால் இருக்கும் கல்விளக்கில் எண்ணை விட்டு தினமும் தீபம் ஏற்றினார். அந்த மண்டபத்தில் யாரேனும் அசுத்தம் செய்பவர்களைக் கண்டால் அவர்களிடம், “எலேய்…இங்கயா வந்து அசுத்தம் பண்ணுதே..ஒங்க வீட்ல பண்ணுவயாலே..இது சாமி இருக்கற இடம்ல .. சுத்தமா இருக்கட்டும்…” என்று சண்டை போடுவார். அதனாலேயே, அவரின் கண்டிப்பாலேயே அந்த இடம் இன்றும் சுத்தமாக இருக்கிறது. அவர் செய்த பணியை யாரேனும் இன்றும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். ஆற்றங்கரையில் படி இறங்கும் இடத்தில் ஒரு அரச மரமும், நெல்லி மரமும், வேம்பு மரமும் நட்டு வைத்தார். அது இன்று வானுயர ஓங்கி நிற்கிறது. அதன் அடியில் ஒரு சிறிய விநாயகர் சிலையும் வைத்து இன்று வருவோர் போவோர் எல்லாம் வணங்கி வருகின்றனர் என்றால் அதற்குஆதிமூலத் தேவரின் நல்ல உழைப்பும், பக்தியுமே காரணம். அவர் எப்போதுமே அந்த கிருஷ்ண மண்டபத்தின் மேலேதான் படுத்திருப்பார். அப்படி ஒருநாள் படுத்திருந்தவர் மீண்டும் எழுந்திருக்கவே இல்லை. தாமிரபரணியை நேசித்தவருக்கு அதன் கரையிலேயே, திறந்த வெளியிலேயே அமைதியான மரணம் அமைந்து விட்டது. அந்த ஸ்ரீகிருஷ்ண மண்டபத்தையும், கரையில் வானுயர நிற்கும் அரசமரத்தையும் இப்பொழுதும் அவன் பார்க்கத்தான் செய்கிறான். ஆதிமூலத் தேவரை நினைத்துக் கொள்கிறான்.
(14.05.2015) இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….
--
னது நண்பர்களு