கம்பன் கவிதை

858 views
Skip to first unread message

Meenavan M

unread,
Sep 3, 2018, 2:47:16 AM9/3/18
to santhav...@googlegroups.com, mint...@googlegroups.com

1

கவிச்சக்கரவர்த்தி கம்பன்

கவியெழுதக் கற்றவர்கள் காப்பியத்தைக் கற்கவில்லை

காப்பியத்தைக் கற்றவர்கள் கவியெழுதக் கற்கவில்லை

கம்பன் எழுதியது காலத்தை  வென்றகவி

மூலத்தின் சாரத்தை  முதலாக்கி  வென்றகவி

படுத்துக் கிடந்தவனைப் பாட்டெழுதத் துரண்டியே

முடுக்கிவிட்ட கலைமகளின் முதல்மகனாய்  ஆனகவி

உயிருள்ள காவியத்தை உலகறிய வைத்தமையால்

நாட்டரசன் தன்னைவிடப் பாட்டரசன் உயர்ந்தமையால்

ஏட்டரசைப் போவென்றே இயம்பிய மன்னவனை

மன்னவனும் நீயோஇவ் வளநாடும் உன்னதோ

எனப்பாடி நாடுவிட்டே ஏகியவன் நம்கம்பன்

கற்பனையில் வற்றாத கடலின் மறுபிறவி

பொன்னி கரைபுரளப் பூந்தேனும் பொங்கிவரச்

சொல்லும்சொல் அத்தனையும் அமுதிலே தோய்த்தெடுத்து

மாபலா தேன்கதலி மற்றவற்றின் சுவைமறக்கப்

2

பாடியவை அத்தனையும் பாட்டுலக முத்திரைகள்

மதிமுகத்து மைதிலியை மாகனகப் பொன்மகளை

மிதிலைநகர் மின்மினியை மின்னிகர்த்த இடையவளைக்

கற்பதனை உலகறியக் கவிதையிலே தான்பாடி

குகனோடு வானரத்தைக் கூர்த்தமதி வீடணனைத்

தங்கள் உடன்பிறப்பாய்த் தானேற்றுக் கொண்டவனைக்

கோதண்ட  வில்கொண்டு தசமுகனைக் கொன்றவனைப்

பாட்டிலே அடக்கிப் பலர்வணங்கச் செய்தவனைத்

தயரதன்தன் தலைமகனைத் தாமரையாள் நாயகனை

உலகறியத் தான்வைத்தே உயர்ந்த  கவியரசை

வெண்ணெய்வாழ் சடையப்பன் வீடளித்த நெய்ச்சோறு

கருத்தாய்க் கற்பனையாய்க் கள்வடியும் கவிதைகளாய்க்

கேட்பார் செவிபாயும் தேனாய் இனித்திருக்க

எழுதிவைத்த கவியேடு எந்தமிழ்த்தாய் கையேடு

தன்னிகரில் கம்பனுக்குத் தாய்வீடு தேரழுந்துரர்

சோறளித்த திருநாடு சோணாடு வற்றாத

3

பொன்னி வளநாடு புகழ்க்கம்பன் தாய்நாடு

எங்கிருந்து தான்வந்தான் எங்கள்தமிழ்க் கவியரசன்

ஈரசைச்சீர்க் குதிரைகளை இணைத்தொன்றாய்த் தான்பூட்டி

மூவசைச்சீர்க் கயிறிணைத்து முன்னாலே தளைபூட்டி

நாற்கவிதைக் கடிவாளம் நயந்து கைப்பிடித்துத்

துள்ளிக் குதிக்கின்ற சந்தங்கள் துணையாகக்

கம்பீர நாட்டையைப்போல் கச்சிதமாய்ப்  பாய்ந்துவர

எழுத்தாணி  ஏடுகளை மாணாக்கர்  ஏந்திவரத்

தென்பொதிகைத் தமிழன்னை தேரிலே வீற்றிருக்கத்

தாளம் பிறழாமல் தாவிவரும் விருத்தங்கள்

சலங்கைபோல்  கொஞ்சிவரச்  சபையோர் தலையசைக்கத்

தொண்ணுரற்றாறு வண்ணங்கள் துணையாக ஓடிவரும்

கம்பன்தேர் இன்றுவரை கச்சிதமாய்ச் செல்கிறது

புகழேந்தி கூத்தர்எனப்  புலவர்  பலரிருந்தும்

கம்பனை ஒருகவியாய்க் காணாமல் காவலன்பால் புறங்கூறிப்

போவென்று சொல்லிடினும் புகழ்மறைக்க இயலாமல்

4

பொன்னிவள  நாட்டுப் புலமைமிக்க கவியரசைப்

போவென்று  சொன்னமையால் பொன்னி வறண்டுதமிழ்

நாட்டிலே நுழையாமல் நம்மைத் தவிக்கவிட்டாள்

கம்பன்எனும் கவியரசைக்  காத்தநீர் அகத்தியனின்

கும்பத்து வாய்வழியே கொட்டியநீர் கன்னடர்பால்

கும்பிட்டு நாம்கேட்கக் குடத்துள்  அடங்கியதே

கவிதையிலே சுவையேற்றிக் கற்பனையால் திசைமாற்றிக்

கருத்துப்  புதையல்களைக் கற்பார் மனங்குளிர

விருத்தப்  பாகொண்டு விதைத்துவந்த கவியரசு

தமிழகத்து மேடைகளில் தலைதுரக்கி நிற்கின்றான்

சொல்லெல்லாம்  வைரங்கள் சுவைகூட்டும் கற்கண்டு

ஏட்டிலே  உழுதெடுத்த இராமகதைப் பயிராலே

ஒழுக்கத்தைச் சமத்துவத்தை ஒருதார தத்துவத்தைப்

போரில்லா  வையகத்தைப் புகழுக்கே வாழ்கவென

நம்மை  அறியவைத்த நாயகன்தான் தமிழ்க்கம்பன்

கம்பன்எனும் கவிமன்னன்  காலடியைப் பின்தொடர்ந்து

5

சோனா முருகப்பா  சொல்லரிய புகழ்கொண்ட

கம்பன் அடிப்பொடியாம் கணேசப் பெருமகனார்

தமிழ்க்கடலார் சொக்கலிங்கர் தமிழ்வீரர் ஜீவா

அருமைக் குரலுடைய ஆசீரா  எனும்பெரியார்

ஏற்றமுடன் பேசுகின்ற எஸ்ஆர்கே எனும்தமிழர்

பைந்தமிழ்சொல் பால்நாடார் பாண்டி அருணகிரி

அழகுதமிழ் பேசும்ஆ  முத்துசிவன் வள்ளுவம்செய்

வா.சுப.மா ஆறாகக் கவிபாடும் அமிர்தலிங்கம்

கனலைச் சொல்லாக்கும் கவியரசு முடியரசன்

வித்தகராம் புதுவை வெங்கடசுப்பா ரெட்டியார்

கல்விக்கடல் கவிராம ராசனார் கவுண்டர்

திசையெல்லாம் தேன்பாயத் தென்றலுக்கும் சுகம்கிடைக்க

இசைபாடி நடமாடி எழுந்துவரும் தமிழ்ச்சொற்கள்

கம்பனிடம் நின்றதுபோல் கைகட்டிக் கவியரசர்

பாட்டுக்கு மயங்கும் பலர்மகிழத் தெடர்ந்துவர

வானத்தைச் சொல்லாலே வளைத்திட்ட கவிவாலி

6

திருச்சிநகர் இராதா இரசிகமணி டீ.கே.சி

பாரறிந்த இரண்டுமொழிப் பண்டிதமா மணியான

பூங்குன்ற நாட்டுப் புகழ்மிகுந்த கதிரேசர்

இனிய கருத்துரைக்கும் இஸ்மாயில் நீதிபதி

தென்னன் தமிழறிந்த குருநாதர் தெ.பொ.மீ

அனுமனைப்போல் அறிவுடைய அ..ஞா எனும்பெரியார்

இவர்களுக்கு  முன்னர் இங்கிருந்த பெரும்புலவர்

கூட்டமெலாம் கம்பனையே கும்பிட்டுப் பின்தொடரக்

கம்பன் அடிசூடி கைகட்டிப் பின்தொடர

வடக்கிருந்த கம்பன்தான் வாழ்நாடு தனைநீங்கிப்

புறப்பட்டு நாட்டரசன் கோட்டைக்குச் சென்றதுபோல்

வடக்கிருந்து மேற்கே வருகின்ற கம்பனுக்குத்

தேவகோட்டைச் சேவுகனார் எதிர்கொண்டு முன்வந்து

பூரண கும்பமுடன் பூத்துரவி வரவேற்றுத்

தன்னுடைய கிருஷ்ணா மண்டபத்தின் தலைவாயில்

7

முன்னாலே தோரணங்கள் முழுதும் அலங்கரிக்க

எங்கள்கவிச் சக்ரவர்த்தி இருக்கட்டும் எனச்சொல்லக்

கம்பனிங்கே கால்வைத்தான் கால்வைத்த நாளிருந்து

விருந்தோடு விழாநடத்தி வென்றதமிழ்க் கம்பனுக்குத்

தண்டனிட வந்திருக்கும் தமிழர்களே நீங்களெலாம்

எட்டறிவீர்  பத்தறிவீர்  பத்துடனே  எட்டறிவீர்

அத்தனையும் நுரல்செய்த ஐயரையும் நீரறிவீர்

சிலம்பறிவீர் மேகலையும் சேர்த்தறிவீர்  இயலான

எழுத்தறிவீர்சொல்லறிவீர்பொருளியலும் இணைத்தறிவீர்

பழுதற்ற நுரல்கள்பல படித்தறிவீர் சங்கநுரற் பாவாணர்

வழங்குநுரல் பயின்றறிவீர் வள்ளுவன்முப்  பாலறிவீர்

அழகப்பன் கொடைபோல அமைந்ததமிழ் நீர்அறிவீர்

காலத்தை  வென்றுவரும் கட்டிளமைத் தமிழறிவீர்

குமரிக் கப்பாலும் கொலுவிருந்த தமிழறிவீர்

பாலையெனும் நுரலளித்த பாவலர்க்குப் பரிசளித்த

கரிகாலன் புகழறிவீர் கல்லணையின் சிறப்பறிவீர்

8

தஞ்சைப் பெருங்கோவில் தன்பெருமை நீர்அறிவீர்

ஆயிடினும் கம்பன் அவன்பெருமை அறியீரோ

கற்பனையாம் அணிபூண்டு கவிதைகளாம் ஆடைகட்டி

விருத்தச் சிலம்பணிந்து விரைந்துவரும் தமிழன்னை

பெற்றெடுத்த திருமகனாம் பெருங்கவிதைக் கம்பனின்று

தோழனாய்க் காதலனாய் துரயதொரு சற்குருவாய்த்

தெய்வமாய் வருகின்றான் தீந்தமிழ்க் கவிஞரெலாம்

பாவிசைக்க வந்துள்ளார் பாட வழிவிடுவேன்

ஆரணத்தைப் பூரணமாய் அறிந்திட்ட வால்மீகி

பூரணமாய்ப் பாடிவைத்த புகழ்மிக்க காவியத்தை

காரணமும் கணக்கும்தான் நீத்துவந்த காகுத்தன்

சீரளந்த கம்பனுக்குச் சிரம்தாழ்த்தித் தாள்பணிந்து

தோரண வாயில்கட்டித் துலக்கமுற அழைக்கின்றேன்

வாயில்வழி வந்தகம்பன் வருகின்றான் கவியரங்கம்

பாட்டரசை வரவேற்றுப் பாடுங்கள் கவிஞர்களே

நாட்டரசன் கோட்டையிலே பங்குனியில் பார்ப்போமா

9

              காகுத்தன்  பேர்சொல்லும் காவியம்அது

                     கம்பன் படைத்திட்ட தமிழ்ஓவியம் - செம்

              பாகொத்த சொல்பேசும் சீதையைஉயர்

                     பாற்கடல் நாயகன் தேவியைப் பெருங்

              கற்பினுக் கணியெனச் சொன்னவன்அவன்

                     கம்பன் அடிப்பொடி மன்னவன்சீதை

              பொற்பினைக் கவிதையில் போற்றினான் அவள்

                     புகழை உலகறியச் சாற்றினான்ஒரு

              மாருதி ஆழியைத் தாண்டினான்இராமன்

                     மாதினைக் காணவே வேண்டினான்

              இலங்கையில்  தீயை வைத்தவன்அவன்

                     ஏற்றத்தைப் பாட்டிலே தந்தவன்தமிழ்

              நலம்பெறப் பாடிய நாயகாஉன்னை

10         

                     நானிங் கழைத்தேன் ஓடிவா

                     

Kaviyogi Vedham

unread,
Sep 3, 2018, 12:59:11 PM9/3/18
to santhavasantham
mika azagu. vaazga,
 yogiyar
    சக்தி  அருள்கின்றாள், சலனமே வேண்டா!
    மிக அன்புடன்
   கவியோகி வேதம்,
 




On Mon, Sep 3, 2018 at 2:47 AM Meenavan M <meen...@gmail.com> wrote:

1

கவிச்சக்கரவர்த்தி கம்பன்

கவியெழுதக் கற்றவர்கள் காப்பியத்தைக் கற்கவில்லை

காப்பியத்தைக் கற்றவர்கள் கவியெழுதக் கற்கவில்லை

கம்பன் எழுதியது காலத்தை  வென்றகவி

Reply all
Reply to author
Forward
0 new messages