ஐ025. வெண்பாவில் வெறியாடல்!

88 views
Skip to first unread message

sai...@gmail.com

unread,
May 21, 2022, 10:24:08 PM5/21/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
வெண்பாவில் சங்கத் தமிழ் விளக்கம்: ஐங்குறுநூறு
குருநாதன் ரமணி
ஐ241. வெறிப்பத்து
ஐங்குறுநூறு 241-250, கபிலர்
(திணை: நெய்தல்: செவிலித் தாய் கேட்குமாறு தோழி தலைவியிடம் சொன்னது)
.
பின்னணி
இல்லத்தில் அடைபட்ட தலைவியின் உடல் மெலிவு நோயின் காரணத்தை அறிய அவள் தாயும் செவிலித் தாயும் வெறியாடலுக்கு ஏற்பாடு செய்தனர். வெறியாடல் அல்லது வெறியயர்தல் பற்றி வித்துவான் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் தம் நூலில் அளித்த விளக்கம் கீழே வெண்பாக்கள் யாப்பில்.
.
ஐ025. வெண்பாவில் வெறியாடல்!
(வித்துவான் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் அளித்த உரைநடை விளக்கத்தினின்று
பிறந்த வெண்பாக்கள்)
.
(நேரிசை/இன்னிசை வெண்பா)
வெறியாம் நறுமணம், வேலன், முருகன்;
வெறுமையாய் மாறா விளமை — நறுமை
அழகொளித் தேற்றில் அவனி நடத்தும்
முழுமுதல் வத்தாம் முருகு. ... 1
[நறுமை: நறுமணம்; தேற்று: தெளிவு; முழுமுதல் வத்து: முழுமுதற் பொருள்]
.
செங்கதிரோன் போல்நிறச் சேயோன் முதற்கண்டு
அங்கம் அகமகிழப் போற்றினர் — துங்கக்
குறிஞ்சிநில மக்கள் குரவைக்கூத் தாடி
மறியறிந்து பூத்தளிரு வந்து. ... 2
[மறி: ஆட்டுக் குட்டி]
..
முதன்மகன் உள்ளம் முருகன்கண் தோய
புதுத்தளிரும் தேன்மலரும் பூப்பலியாய்த் தந்த
முதல்வழி பாடு; உயிர்ப்பலியும் பின்னே
பொதுவான ஏத்துவழிப் போக்கு. ... 3
.
பூவும் தளிரும் புகையும் நறுமணமாய்
மேவி நிலவிய வேலவன் வாசம்
வெறிக்களம், ஆடல் வெறியயர்தல் என்பர்
வெறியென்றே வேலனுக்கும் பேர். ... 4
[வாசம்: இருப்பிடம்]
.
வெறிமனை மக்கள் நெறியோ டொழுக
வெறியறி சீர்கொளும் வெவ்வாயன் வேலனென்று
வேற்படைக் கையேந்தி மூத்தோனாய் ஓர்மனிதன்
காற்பதம் காட்டநிற் பான். ... 5
.
வெறிக்கள வட்டநடு வேற்படை நட்டு
வெறிமனை சந்துகள் மேவும் இடத்தைச்செல்
லாற்றுக் கவலை எனவே முருகனைப்
போற்றுமிடம் கொள்ளும் புகழ். ... 6
[செல்லாற்றுக் கவலை: பல தெருக்கள் கூடுமிடம்]
.
வெறியயர வேண்டுவோர் வேலற் குணர்த்த
வெறிமனை மேற்சொற் கவலை இடத்தில்
புதுமணல் நன்கு பரப்பியே, போற்றும்
பொதுவேல் நடுவிருத்து வான். ... 7
.
செந்நெல்லின் வெண்பொரியும் வாசமிகு பூக்களும்
அந்நிலம் எங்க்கும் சொரிந்தே அழகுறுத்தி
மேற்பந்தர் வேய்ந்து மிகவினிய காட்சியாய்
வேற்கொண்டு காணும் வெறி. ... 8
.
மறியறுத்துச் செந்தினையில் செங்குருதி பெய்து
வெறிமனையில் தூவிப்பல் வேறியங்கள் ஓசையில்
கைமணி ஆர்க்கக் கரப்புகை, பூப்பலி
மைமகள்கு றிஞ்சிப்பண் பாட்டு. ... 9
[இயங்கள்: வாத்தியங்கள்; மைமகள்: மையுண் விழி மகளிர்]
.
வனப்பிளமை கொண்ட மகள்நலம் குன்றின்
கனத்த முதுமகளிர் மூலம் கழங்குகட்டு
கொண்டே நலிவுக் குறைதீர அன்னையவள்
கண்டாராய் தல்முதற் கண். ... 10
.
வேலனைக் கொண்டு மெலிவுக்குக் காரணம்
கோலின், வெறியயர்தல் கூத்தினால் நோய்தீரும்
என்பான் மகளின்தாய் ஏற்றால் வெறியாடல்
என்னும் சடங்கின் நிகழ்வு. ... 11
[கோலின்: ஆலோசித்தால்]
.
இளமகளை நீராட்டி ஒப்பனை செய்து
களத்தில் நிறுத்தியபின் கூத்து தொடங்கும்;
முருகவேள் தன்மேல்வந் துற்றதாக வேலன்
பரவசத் தோடாடு வான். ... 12
.
வெறியாட்டம் ஓய்ந்ததும் வேலன் முருகன்
குறிசொல்வான் கொட்டிக் கழங்குகள் அள்ளியெடுத்(து)
எண்ணி முருகால் மெலிவுநோய் வந்ததென்பான்
திண்ணம் அவனது தீர்ப்பு. ... 13
.
மகளிர் சிலரும் மருண்டாடல் செய்வர்
உகந்தே முருகனைப் பாடி இசைப்பர்
முருகனால் உண்டான நோய்க்கு வேலன்
மருந்தாய் அளிப்பான் மலர். ... 14
.
★★★★★

sai...@gmail.com

unread,
May 23, 2022, 9:46:02 PM5/23/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
வெண்பாவில் சங்கத் தமிழ் விளக்கம்: ஐங்குறுநூறு
குருநாதன் ரமணி
ஐ025. வெறிப்பத்து
ஐங்குறுநூறு 241-250, கபிலர்
(திணை: குறிஞ்சி: செவிலித் தாய் கேட்குமாறு தோழி தலைவியிடம் சொன்னது)
.
நந்துயரம் கண்டன்னை நாடினாள் வேலனை
வந்தனன் வேலனவன் வாக்கில்நம் துன்பம்
வெறிகமழ் நாடனின் கேண்மையால் என்றே
அறிந்துசொல் வானோ அறியானோ பெண்ணே
செறிபற்கள் கொண்டவளே சொல்! ... 241
.
அறியாமை யாலன்னை தன்மகள் துன்பம்
வெறியினால் தீருமென வேலன் முயன்றும்
ஒருபலனும் இல்லா(து) உழல்கிறாள் நாமதனால்
உண்மை உரைக்கா(து) இருத்தல் கொடிதாகும்
உண்கண் நிரையிதழ் கொள்மலர் ஒக்கும்
நிலைமாறி நேர்ந்த பசலையது அந்தத்
தொலைமலை நாடன்செய் நோய். ... 242
.
★★★
மூலம்
ஐங்குறுநூறு 241, கபிலர்
குறிஞ்சி: வெறிப்பத்து (241-250)
.
நாம்உறு துயரம் நோக்கி அன்னை
வேலன் தந்தாள் ஆயின்அவ் வேலன்
வெறிகமழ் நாடன் கேண்மை
அறியுமோ தில்ல செறி எயிற்றோயே. ... 241
.
அறியா மையின் வெறிஎன மயங்கி
அன்னையும் அரும்துயர் உழந்தனள் அதனால்
எய்யாது விடுதலோ கொடிதே நிரைஇதழ்
ஆய்மலர் உண்கண் பசப்ப
சேய்மலை நாடன் செய்த நோயே. ... 242
.
★★★★★

 

sai...@gmail.com

unread,
May 24, 2022, 9:49:56 PM5/24/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
வெண்பாவில் சங்கத் தமிழ் விளக்கம்: ஐங்குறுநூறு
குருநாதன் ரமணி
ஐ025. வெறிப்பத்து
ஐங்குறுநூறு 241-250, கபிலர்
(திணை: குறிஞ்சி: செவிலித் தாய் கேட்குமாறு தோழி தலைவியிடம் சொன்னது)
.
மிளகுவளர் வெற்பின் கடவுளன்றி யாதும்
அறியாத வேலன் வெறியெனக் கூற
அதைமனத்தில் கொண்டுளைவாய் அன்னையே உன்பெண்
புதுமலர்த்தண் கண்நோய் புக! ... 243
.
தோழியே கேளாய் தொகையாகப் பன்மலர்ச்
சூழலாய்த் தண்மணச் சோலை பரந்திருக்கும்
நாட்டினைச் சேர்ந்த நெடும்புகழ் நாதனின்
குன்றம் முதற்கண் வழுத்தியே கூறுவதால்
மன்றேறும் ஆற்றல் மடுப்பவன் வேலனவன்!
குன்றத்தைப் பாடா தொழிந்தனன் என்றானால்
என்பயன்வே லற்கு வெறி. ... 244
.
★★★
மூலம்
ஐங்குறுநூறு 241, கபிலர்
குறிஞ்சி: வெறிப்பத்து (241-250)
.
கறிவளர் சிலம்பின் கடவுள் பேணி
அறியா வேலன் வெறிஎனக் கூறும்
அதுமனம் கொள்குவை அனைஇவள்
புதுமலர் மழைகண் புலம்பிய நோய்க்கே. ... 243
.
அம்ம வாழி தோழி பன்மலர்
நறும்தண் சோலை நாடுகெழு நெடுந்தகை
குன்றம் பாடான் ஆயின்
என்பயம் செய்யுமோ வேலற்குஅவ் வெறியே. ... 244
.
★★★★★

sai...@gmail.com

unread,
May 25, 2022, 10:22:46 PM5/25/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
வெண்பாவில் சங்கத் தமிழ் விளக்கம்: ஐங்குறுநூறு
குருநாதன் ரமணி
ஐ025. வெறிப்பத்து
ஐங்குறுநூறு 241-250, கபிலர்
(திணை: குறிஞ்சி: செவிலித் தாய் கேட்குமாறு தோழி தலைவியிடம் சொன்னது)
.
பொய்யா மரபுடைய ஊர்முது வேலனவன்
செய்யும் வெறியாட்டம் சீர்கொண்(டு) அமையக்
கழங்கு நிறுத்தியே கன்னமணி வித்து
வழங்கும் கடவுள் வரச்செய்தே ஆடிக்
கழங்குகள் எண்ணிமஞ்சள் காப்பினைக் கட்டி
முருகனே நோயிதன் மூலமென்று சொன்னால்
உரித்தாகு மோவ(து) இவள்களவின் பின்னே
வருந்தப் பிரிந்த வனுக்கு? ... 245
.
[கன்னம்: நோய் தணிவதற்குப் பண்ணிக் கொடுக்கும் மந்திரத்தகடு உள்ளே வைத்துக் கட்டிய தாயத்து; இது பொன்னாலும் செய்யப்படுவதுண்டு.]
.
வெறியைத் தொடங்குகிறான் வேலன் மிளகு
செறிந்த மலைக்குகை சேரும் வயப்புலி
புன்செய் நிலத்தில் புனவர் தினைவிதைத்து
நன்குபயிர் ஓங்க விலங்குகள் நாடி
அழிக்காத வண்ணமோர் பெண்புலி செய்து
கழங்குகளைக் கண்ணாய்ப் பொருத்தி இருத்தியதை
உண்மையெனக் கொண்டு புணர்ந்தவோர் ஆண்புலி
கொண்ட அயர்ச்சி குறைதீர்க்கும் மன்றுகொள்
குன்றம்வாழ் நாடனால் உண்டான திந்நோயே
என்னாகு மோவெறி இஃது. ... 246
.
★★★
மூலம்
ஐங்குறுநூறு 241, கபிலர்
குறிஞ்சி: வெறிப்பத்து (241-250)
.
பொய்யா மரபின் ஊர்முது வேலன்
கழங்குமெய்ப் படுத்துக் கன்னம் தூக்கி
முருகுஎன மொழியும் ஆயின்
கெழுதகை-கொல்இவள் அணங்கி யோற்கே. ... 245
.
வெறிசெறித் தனனே வேலன் கறிய
கல்முகை வயப்புலி கழங்குமெய்ப் படூஉப்
புன்புலம் வித்திய புனவர் புணர்த்த
மெய்ம்மை அன்ன பெண்பால் புணர்ந்து
மன்றில் பையுள் தீரும்        5
குன்ற நாடன் உறீஇய நோயே. ... 246
.
★★★★★
 

sai...@gmail.com

unread,
May 26, 2022, 10:50:52 PM5/26/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
வெண்பாவில் சங்கத் தமிழ் விளக்கம்: ஐங்குறுநூறு
குருநாதன் ரமணி
ஐ025. வெறிப்பத்து
ஐங்குறுநூறு 241-250, கபிலர்
(திணை: குறிஞ்சி: செவிலித் தாய் கேட்குமாறு தோழி தலைவியிடம் சொன்னது)
.
அன்னை விரும்பியதே ஆவ(து) அறிவேன்நான்
பொன்நகர் போலும் பொலியும் வெறிமனையில்
கன்னம் அணிந்தே களத்துவெறி யாடி
முருகே இவள்நோய்க்கு மூலமென்றால் அஃதே
அருமலைநா டன்பேரா மா? ... 247
.
புதுமணல்ப ரப்பிய முற்றத்(து) அழகில்
அதன்கண் வெறிமனை ஆக்கியே வேலன்
சிலம்புவான் கொண்ட சினமுருகன் வேலை
வலக்கரம் ஏந்தி மனைவெறி ஆடிக்
கழங்கினால் தீர்வினைக் காணுதல் என்றால்
வழியிது நன்றாய் வழங்குமோ இந்தக்
கழலணி மங்கைநிலை கற்பு. ... 248
[சிலம்பு: மலை]
.
★★★
மூலம்
ஐங்குறுநூறு 241, கபிலர்
குறிஞ்சி: வெறிப்பத்து (241-250)
.
அன்னை தந்தது ஆகுவது அறிவென்
பொன்நகர் வரைப்பில் கன்னம் தூக்கி
முருகுஎன மொழியும் ஆயின்
அருவரை நாடன் பெயர்-கொலோ அதுவே. ... 247
.
பெய்ம்மணல் முற்றம் கவின்பெற இயற்றி
மலைவான் கொண்ட சினைஇய வேலன்
கழங்கினான் அறிகுவது என்றால்
நன்றால் அம்ம நின்றஇவள் நலனே. ... 248
.
★★★★★

sai...@gmail.com

unread,
May 27, 2022, 11:23:04 PM5/27/22
to சந்தவசந்தம்
#ரமணி_வெண்பாவில்_சங்கத்தமிழ்
வெண்பாவில் சங்கத் தமிழ் விளக்கம்: ஐங்குறுநூறு
குருநாதன் ரமணி
ஐ025. வெறிப்பத்து
ஐங்குறுநூறு 241-250, கபிலர்
(திணை: குறிஞ்சி: செவிலித் தாய் கேட்குமாறு தோழி தலைவியிடம் சொன்னது)
.
பெய்ம்மணல் வீட்டோர எல்லை வெறிமனை
மெய்ம்மை எனக்கழங்கு வைத்தன்னை காண
மொழிகிறான் வேலன் முருகனால் ஆன
உழல்விவள் நோயென வேயவன் வாழ்க!
அருவி ஒளிரும் வெருவுமலை தெய்வம்
முருகன் அறியான் அவன். ... 249
.
பொய்யுரைக் காதெனப் போற்றும் கழங்குகளே!
மெய்யேதான்! நீலமலை மேவி மடமயில்
ஆடும் விரிந்தகொடி வள்ளிக் கிழங்குகான்
நாடன் விறல்கொள் முருகவேள் அல்லனிவள்
பூண்கொள் இளமுலை புல்லி அணங்கிய
ஆண்டகை யோனே அவன். ... 250
.
★★★
மூலம்
ஐங்குறுநூறு 241, கபிலர்
குறிஞ்சி: வெறிப்பத்து (241-250)
.
பெய்ம்மணல் வரைப்பின் கழங்குபடுத்து அன்னைக்கு
முருகுஎன மொழியும் வேலன் மற்றுஅவன்
வாழிய இலங்கும் அருவி
சூர்மலை நாடனை அறியா தோனே. ... 249
.
பொய்படுபு அறியா கழங்கே மெய்யே
மணிவரை கட்சி மடமயில் ஆலும்நம்
மலர்ந்த வள்ளிஅம் கானம் கிழவோன்
ஆண்டகை விறல்வேள் அல்லன்இவள்
பூண்தாங்கு இளமுலை அணங்கி யோனே. ... 250
.
★★★★★
 
Reply all
Reply to author
Forward
0 new messages