பூஸ்துதி தமிழாக்க முயற்சி இரண்டாம் பகுதி (11-20)
[சுலோகங்களின் சுருக்கமான பொழிப்புரைகளைப் புத்தகத்திலிருந்து திரு ரகுவீரதயாள் அவர்கள் OCR மூலம் கையாள எளியவைகளாக ஆக்கிக் கொடுத்தார். அவருக்கு நன்றியுடன் அவற்றையும் இங்கே சேர்த்திருக்கிறேன்.]
க்ரீடா³வராஹத³யிதே க்ருʼதின꞉ க்ஷிதீந்த்³ரா꞉
ஸங்க்ரந்த³னஸ்ததி³தரே(அ)பி தி³ஶாமதீ⁴ஶா꞉ .
ஆமோத³யந்தி பு⁴வனான்யலிகாஶ்ரிதானாம்ʼ
அம்ப³ த்வத³ங்க்⁴ரிரஜஸாம்ʼ பரிணாமபே⁴தை³꞉ ..(11)
வராஹ மஹிஷியே, பாக்கியம் செய்த அரசர்களும், இந்திரன் முதலிய திக்பாலகர்களும், மற்றவர்களும் தமது வணங்கிய முடிகளில் படிந்த உன் பாதபங்கயத்தின் துகள்களின் விளைவாக உலகை மணக்கும்படி மகிழ்விக்கிறார்கள். ..(11)
ஆதிவ ராகனின் அன்புடை மனைவியே!
……அகிலமாள் அரசரும் அமரரின் தலைவனோ(டு)
ஏதிலார் அடங்கிய எண்டிசை மன்னரும்
……ஏற்றதம் பணிகளை இடையறா(து) என்றுமே
நீதியோ(டு) ஆற்றிடும் நேர்மையும் திறமையும்
……நெற்றியில் ஒட்டிட நேர்ந்தமண் துகளினைக்
கோதிலா நின்னடி கும்பிடும் போதவர்
……குடுமியை இடுகையில் கொண்டதால் பெற்றதே! ..(11)
[ஏதிலார் = மற்றவர்; கோது = மாசு; குடுமி = தலை உச்சி.]
பூ⁴தேஷு யத்த்வத³பி⁴மானவிஶேஷபாத்ரம்ʼ
போஷம்ʼ ததே³வ ப⁴ஜதீதி விபா⁴வயந்த꞉ .
பூ⁴தம்ʼ ப்ரபூ⁴தகு³ணபஞ்சகமாத்³யமேதத்
ப்ராயோ நித³ர்ஶனதயா ப்ரதிபாத³யந்தி .. 12..
பஞ்சபூதங்களுள் உனது விசேஷ அபிமானத்தைப் பெற்றது எதுவோ, அதுவே உயர்ந்தது – உபயோககரமானது என்று எண்ணிய பெரியோர்கள், இவ்விஷயத்தில் சப்தம் ஸ்பர்சம் ரூபம் ரஸம் கந்தம் என்ற ஐந்து குணங்களும் பொருந்திய முதல் பூதமாகிய ப்ருதிவியையே உதாஹரணமாகக் காட்டுவர். ..(12)
கஞ்சமென் மலரினன் காசினிப் படைப்பினில்
……காணுயிர் பலவிலுன் கருத்தினைக் கவர்ந்ததே
விஞ்சிவ ளத்தொடு விளையுமாம்! இயல்பிது
……விளங்கிய சிந்தையர் விளக்கிட ஏதுவாய்
அஞ்சுபூ தங்களின் அமிசமும் கொண்டமண்
……அன்னையாம் உன்னையே அவற்றினுள் முதலெனச்
செஞ்சொலார் சொல்வதன் சிறப்பினைச் சுட்டுவர்!
……தேவிநின் பெருமைகள் செப்பிடத் தீருமோ! ..(12)
[கஞ்சம் = தாமரை; மலரினன் = பிரம்மா; செஞ்சொலார் = சான்றோர்.]
காந்தஸ்தவைஷ கருணாஜலதி⁴꞉ ப்ரஜானாம்ʼ
ஆஜ்ஞாதிலங்க⁴னவஶாது³பஜாதரோஷ꞉ .
அஹ்னாய விஶ்வஜனனி க்ஷமயா ப⁴வத்யா
ஸர்வாவகா³ஹனஸஹாமுபயாத்யவஸ்தா²ம் ..(13)
லோகமாதாவே, கருணைக் கடலாகிற உன் கணவன் பகவான் - ஜனங்களின் தவற்றைக் கண்டு திருவுள்ளம் கலங்கிக் கிட்ட ஒண்ணாதிருக்கும்போது, ஒரே நொடியில் பொறுமையின் உருவான உன்னாலே, அணுகி அநுபவிக்கத் தக்கவனாக்கப்படுகிறான். ..(13)
கருணையின் கடலுன காந்தனே! ஆயினும்
……கறைமிகும் தீயரைக் கடிபவன்! அன்பரும்
தருமமற்(று) எல்லையைத் தாண்டிடில் சினந்துதன்
……தயைதனைக் கரப்பவன்! தனதருங் காதலி
அருகினில் பொறுமையின் அழகிய வடிவுநீ
……அணுகிடக் கண்டதும் அடக்கொணா வெள்ளமாய்ப்
பெருகிடும் கருணையால் பிழையெலாம் தள்ளுவான்
……பேறெலாம் கேட்டவர் பெற்றிட ஈவனே! ..(13)
ஆஶ்வாஸனாய ஜக³தாம்ʼ புருஷே பரஸ்மின்
ஆபந்நரக்ஷணத³ஶாமபி⁴னேதுகாமே .
அந்தர்ஹிதேதரகு³ணாத³ப³லாஸ்வபா⁴வாத்
ஔத³ன்வதே பயஸி மஜ்ஜனமப்⁴யனைஷீ꞉ ..(14)
அம்மா, ஸம்ஸார ஸாகரத்தில் மூழ்கிப்போன தன் ப்ரஜைகளைக் கைதூக்கிவிடப் பரமபுருஷன் பல அவதாரங்களைச் செய்ய நினைக்கும் போது, நீ அதற்காகத் தைரியம் முதலிய மற்றக் குணங்களை மறைக்கும் பெண்மைக்குச் சேரப் பயந்து பாசத்தாலே ப்ரளயகால வெள்ளத்தில் குதித்தே விட்டாய். ..(14)
வெற்றிமற்(று) அறிகிலா வீரமும் ஆண்மையும்
……மிக்கவன் ஒப்பிலான் மெல்லிடை நின்கரம்
பற்றினான் பரம்பொருள், பணிந்தவர் துயரெலாம்
……பாற்றுவான் என்றெலாம் பக்கமே நின்றுநீ
கற்றவள் கற்பெனும் கனலுனில் இருப்பினும்
……கணவனின் பெருமையைக் காட்டவே அபலையாய்
அற்றைநீ உகந்தனை ஆழியில் மூழ்கவே
……அல்லையோ? நாடகம் ஆடிய அன்னையே! ..(14)
[பாற்றுதல் = நீக்குதல்; அபலை = மென்மையான பெண்; அற்றை = அன்று; உகந்தனை = விரும்பினாய்]
பூர்வம்ʼ வராஹவபுஷா புருஷோத்தமேன
ப்ரீதேன போ⁴கி³ஸத³னே ஸமுதீ³க்ஷிதாயா꞉ .
பாதா³ஹதா꞉ ப்ரலயவாரித⁴யஸ்தவாஸன்
உத்³வாஹமங்க³லவிதே⁴ருசிதா ம்ருʼத³ங்கா³꞉ ..(15)
முன்பு கோலவராகமாக வந்த புருஷோத்தமன் பாதாள லோகத்தில் உன்னைக் கண்டான். உடனே காதல் கொண்டான். அப்போது அங்கு நடந்த உங்கள் திருமணத்துக்கு அவன் காலடியில் கொந்தளிக்கும் கடல் ஒலிகளே மங்கள வாத்திய இசையாயின. ..(15)
முன்னமோர் வராகமா முகங்கொடு புருடருள்
……முதலவன் மகிழ்ச்சியால் முறுவலின் முகிழ்வொடு
பன்னக உலகிலுன் பார்வையை ஈர்த்தசீர்ப்
……பரிணய வரிசைகள் பலவரும் வேளையில்
தன்னருந் தாமரைத் தாள்களால் எற்றிய
……தரங்கமார் பிரளயச் சாகரம் தக்கநல்
இன்னிசை மத்தளம் இனிதவண் முழங்கியே
……எம்பெரு மானுடன் இணைத்தது நின்னையே! ..(15)
[முகிழ்வு = மலர்ச்சி; பன்னக உலகம் = நாகலோகம்; பரிணயம் = திருமணம்; தரங்கமார் = அலையோசை மிகுந்த]
வ்யோமாதிலங்கி⁴னி விபோ⁴꞉ ப்ரலயாம்பு³ராஶௌ
வேஶந்தலேஶ இவ மாதுமஶக்யமூர்தே꞉ .
ஸத்³ய꞉ ஸமுத்³ரவஸனே ஸரஸைரகார்ஷீ꞉
ஆனந்த³ஸாக³ரமபாரமபாங்க³பாதை꞉ .. 16..
நாற்புறமும் சூழ்ந்த கடலுடை தரித்த தேவியே, ஆகாயமளாவிய பிரளய வெள்ளம் ஒரு குட்டை போலத் தமது கணுக்காலளவாகும்படி நிமிர்ந்து நிற்கும் வராகப் பெருமானின் உள்ளத்தில், நீ உனது ஸரஸ க்ரீடைகளால், அளப்பரிய ஆனந்த வெள்ளத்தைத் தூண்டிவிட்டாய். ..(16)
வானையும் விழுங்கிடும் ஊழிநாள் வாரிதி
……வரைகரை சொலவொணா வராகனுக்(கு) ஒருதுளி
தான்!ஐயன் திருமலர்த் தாள்நனைத் தில(து)அது!
……தாரணி வடிவளே சாகரச் சேலையோய்!
கோனையும் மூழ்க்குமுன் கூர்விழிக் காதலார்
……கொண்டல்நீர் கொட்டியே கூடிய மாகடல்!
ஏனையோர் தவங்களுக்(கு) எட்டிடாப் பரம்பொருள்
……எளியநின் அன்பினுக்(கு) ஏங்குவான் போலுமே! ..(16)
[ஊழி = பிரளயம்; வாரிதி = கடல்; தாரணி = உலகம்; சாகரம் = கடல்; கொண்டல் = மழைமேகம்]
த³ம்ʼஷ்ட்ராவிதா³ரிதமஹாஸுரஶோணிதாங்கை꞉
அங்கை³꞉ ப்ரியஸ்தவ த³தே⁴ பரிரம்ப⁴லீலாம் .
ஸா தே பயோதி⁴ஜலகேலிஸமுத்தி²தாயா꞉
ஸைரந்த்⁴ரிகேவ வித³தே⁴ நவமங்க³ராக³ம் .. 17..
ஆதிவராஹமூர்த்தி தன் பற்களால் பிளக்கப்பட்ட ஹிரண்யாக்ஷனின் ரத்தக்கரை படிந்த மேனியால் உன்னை அணைக்கும்போது, அது சிறிது முன்னே - ப்ரளய ப்ரவாஹத்திலே குளித்தெழுந்த உனக்கு, பணிப்பெண் போல, உடலெங்கும் செஞ்சந்தனப் பூச்சை விளைவித்தது போலும். ..(17)
கோரமா அசுரனைக் கோரைவெண் எயிற்றினால்
……கொலைபடக் கிழிக்கையில் குறுதியும் பீச்சிட
வீரமா வராகனின் மின்னுடல் நனைந்(து)அது
……வெற்றியின் சின்னமாய் விளங்கிட மகிழ்ச்சியில்
நீரலை ஆடிய நினதெழில் மேனியை
……நெருங்கியே தழுவிட நிமலைநின் சேடியர்
சூரணச் செம்பசை சொரிந்தது போலவே
……சுந்தரி நின்னுடல் சுடர்ந்ததெம் அன்னையே! ..(17)
[நீரலை = கடல்; சுடர்ந்தது = சுவாலை போல் ஒளிர்ந்தது]
அன்யோன்யஸம்ʼவலனஜ்ருʼம்பி⁴ததூர்யகோ⁴ஷை꞉
ஸம்ʼவர்தஸிந்து⁴ஸலிலைர்விஹிதாபி⁴ஷேகா .
ஏகாதபத்ரயஸி விஶ்வமித³ம்ʼ கு³ணை꞉ ஸ்வை꞉
அத்⁴யாஸ்ய ப⁴ர்துரதி⁴கோன்னதமம்ʼஸபீட²ம் .. 18..
ஒன்றுடன் ஒன்று மோதித் தூரிய நாதம் முழங்கும் பிரளய காலக்கடல் வெள்ளத்தில் அபிஷேகம் செய்து, உன் நாதனின் நெடிதுயர்ந்த புயங்களாகிற பீடத்திலேறி, உன் குணங்களால் உலகமனைத்தையும் ஒரு குடையின் கீழ்க் கொணர்ந்து ஆள்கிறாய். ..(18)
ஊழியின் உததிகள் உரசிட ஓங்கிடும்
……ஒலியிசை முழங்கிட உலகினுக்(கு) அரசியாய்
ஆழியின் நீரினில் ஆட்டியுன் நாயகன்
……அணிமிகு தோளினில் ஆசன முந்தர
ஏழிரண்(டு) உலகையும் எழிலுடன் அறத்துடன்
……இயல்பினில் தோன்றிய இணையிலாக் குணங்களால்
வாழியென்(று) அனைவரும் வாழ்த்திட ஆள்கிறாய்
……வானென விரிந்ததோர் வெண்குடை மாண்பிலே! ..(18)
[உததி = கடல்]
ப⁴ர்துஸ்தமாலருசிரே பு⁴ஜமத்⁴யபா⁴கே³
பர்யாயமௌக்திகவதீ ப்ருʼஷதை꞉ பயோதே⁴꞉ .
தாபானுப³ந்த⁴ஶமனீ ஜக³தாம்ʼ த்ரயாணாம்ʼ
தாராபதே² ஸ்பு²ரஸி தாரகிதா நிஶேவ ..(19)
நிலமகளே, தமாலம் என்னும் வ்ருக்ஷம் போல் கறுத்த மாதவனின் மார்பில் கோயில் கொண்டு, கடல்நீர்த் திவலைகள் ஆங்காங்கு முத்துப்போல் உனது திருமேனியில் தெறிக்க விளங்கும் நீ, ஸகல லோகதாபஹரமான, ஆகாயத்தில் நக்ஷத்திரங்கள் நிறைந்த கோடை இரவுபோலப் பிரகாசிக்கிறாய்...(19)
புத்தெழில் அடர்கரும் பச்சிலை போன்றநின்
……புருடனின் பருத்தமா மார்பில்நீ பொலிகையில்
சத்தமும் சலனமும் வீசிடும் சமுத்திரத்
……தண்புனல் துளிகளுன் தனுவிலே பரவிட
நித்திலம் போலவை நிறைந்திடத் தாரைகள்
……நிசிதனில் மின்னிடும் நெடுங்கரு நீலவான்
ஒத்ததாய்க் காணுமே உலகுகள் மூன்றிலும்
……உறுதொடர் துயரெலாம் ஒழிக்குமோர் தேவியே! ..(19)
[தனு = உடல்; நித்திலம் = முத்து]
ஆஸக்தவாஸவஶராஸனபல்லவைஸ்த்வாம்ʼ
ஸம்ʼவ்ருʼத்³த⁴யே ஶுப⁴தடித்³கு³ணஜாலரம்யை꞉ .
தே³வேஶதி³வ்யமஹிஷீம்ʼ த்⁴ருʼதஸிந்து⁴தோயை꞉
ஜீமூதரத்னகலஶைரபி⁴ஷிஞ்சதி த்³யௌ꞉ .. 20..
அம்மா, ஆகாயம் அழகிய மின்னற் கொடிகள் பின்னப்பட்ட இந்திர தநுஸ்ஸு என்னும் வண்ணத் தளிர்மாலைகளாலே தேவதேவ திவ்யமஹிஷியான உன்னை அலங்கரித்து, ஆகாய கங்கையின் நீர் நிறைந்த மேகக் குடங்களினால், லோக க்ஷேமத்துக்காக அபிஷேகம் செய்து வைக்கிறது. ..(20)
கொண்டலாம் இரத்தினக் குடத்தினில் மின்னலாம்
……கோடிநூல் ஆடையும் கோலமா வண்ணமார்
விண்டல வில்லெனும் விரைதளிர் சரங்களும்
……வியத்தகு கவின்மிக விளங்கிட விரிந்தஇம்
மண்டலம் சூழ்அலை வாரிதி நீர்கொடு
……மன்பதை நலம்நனி வளர்ந்திட வானமே
அண்டமாள் அரசனுக்(கு) அரசியுன் புனிதநீர்
……ஆட்டலை ஆற்றிட அற்புதக் காட்சியே! ..(20)
[கொண்டல் = மேகம்; கோடி = புதிய; விண்டல வில் = வானவில்; விரை = நறுமணம்; மண்டலம் = நிலப்பரப்பு; வாரிதி = கடல்; மன்பதை = சமுதாயம்]
நல்வாழ்த்துகள்
கோபால்
[15/03/2026]