நெல்லை மாவட்டத்தில் தென்காசி அருகே ஆய்க்குடி என்னும் கிராமத்தில், 1981-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அமர் சேவா சங்கம் என்னும் ஒரு சேவை நிறுவனம், உடல், மன வளர்ச்சி குன்றியவர்களுக்குப் புதுவாழ்வு கொடுக்க மிகச்சிறப்பாகப் பணிபுரிந்து வருகிறது. (சங்க கால வள்ளல்களில் ஒருவனான ஆய் என்பவனின் இருப்பிடமாக இருந்த இவ்வூர் இன்று ஆயக்குடி, ஆயிக்குடி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது). அமர் சேவா சங்கத்தின் தாபகரான திரு. இராமகிருஷ்ணன் என்பவரும், அவருடன் சேர்ந்து இந்நிறுவனத்தைப் பெரிய அளவில் பணிபுரிய வைப்பதற்குக் காரணமான திரு. சங்கரராமன் என்பவரும், தங்கள் கழுத்துக்குக் கீழ் உடல் இயக்கம் இல்லாமல் சக்கர நாற்காலிகளிலேயே தங்கள் வாழ்க்கையை நடத்தி வரும் மனிதக் கடவுளர்கள். சிறப்புக் குழந்தைகள் என்று அன்புடன் அழைக்கப்படும் உடல், மனக்குறைவு உள்ள நூற்றுக்கணக்கான சிறுவர்களும் இளைஞர்களும் தங்கும் விடுதிகள், பள்ளிகள், செயற்கை உறுப்புத் தொழிற்சாலை, மருத்துவமனை, இந்திரா காந்தி திறந்தவெளிப் பல்கலைக் கழகச் (open university) சிறப்புக் கல்வி மையம், கைத்தொழில்கள் (புத்தகம் கட்டுதல், குறிப்புப்புத்தகங்கள் தயாரித்தல், தையல்) கணினிப் பயிற்சித் தலங்கள் ஆகிய பன்முகமான வசதிகளுடன் தற்போது பெருமளவில் நடைபெற்றுவரும் இந்த சேவை மன்றம், பல தொண்டர்கள், சேவையாளர்கள் துணையுடன், இங்கு வளர்ந்து பயிற்சி பெற்ற இளைஞர்களைத் தற்சார்புள்ளவர்களாக (self-dependent, empowered) ஆக்கவும் செயல்பட்டு வருகிறது. அத்தோடு, சென்னை, பங்களூர் போன்ற இடங்களில் இவ்விளைஞர்கள் குறிப்பிட்ட துறைகளில் மேலும் பயிற்சி பெற வசதி செய்து கொடுக்கிறது. டொராண்டோ நகரில், திரு. சங்கரராமனின் தமக்கையார் அ.சே.சங்கத்திற்கான பொருளுதவிக்காகவும், சேவையாளர்களை அனுப்புவதற்காகவும், Handicare International (https://www.amarseva.org/) என்ற ஒரு அமைப்பைத் தொடங்கி வைத்துத் தமது கணவரின் துணையுடன் அதை மிகச் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். அண்மையில், ஆய்க்குடியிலும் சென்னையில் உள்ள பயிற்சி இல்லத்திலும் சில வாரங்கள் தங்கி அமர் சேவா சங்கத்தின் பணிகளைக் கண்கூடாகப் பார்த்துப் பயன்பெறும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. கீழ்க்காணும் பாடல் சிலநாட்களுக்கு முன் ஆய்க்குடியில் நடந்த சிறப்புக் கல்விக் கூடத் திறப்பு விழாவை ஒட்டி அமைக்கப் பட்டது. நாளை இங்கு (டொராண்டோவில்) நிதி திரட்டும் விழா நடக்கவிருக்கிறது.
<> ஆயக்குடியில் அமர சேவை <>
ஆயக் குடியென்னும் ஊரினிலே - ஒரு
.. மாயம் நடப்பதைக் கண்டுவந்தேன்
நேயம் நிறைநெஞ்சம் கொண்டவர்கள் - அன்பு
.. தோய நிகழ்த்தும்ஓர் விந்தை கண்டேன்!
ஊனமெ னும்சொல்லே ஊனப்பட்டு - எங்கோ
.. ஓடி ஒளிந்திட்ட காட்சிகண்டேன்
வானவர் போல வனப்புடனே - நன்கு
.. வாழத் தெரிந்தோர் உலவக் கண்டேன்!
எல்லா அவயவம் பெற்றிருந்தும் - ஈன
.. எண்ணத்தோர் போலன்றி அங்கம்பல
இல்லா இளைஞரும் மற்றவரும் - மன
.. ஏற்றம் ஒளிர்ந்திட வாழக் கண்டேன்!
எத்தனை யோவகைக் கட்டிடங்கள் - அவை
.. எல்லாம் இறைவனின் ஆலயங்கள்
சித்தத்தில் அன்பு நிறைந்தவர்கள் - அங்கு
.. சேர்ந்து புரிகின்றார் அற்புதங்கள்!
காசு பணத்தின் சலசலப்பை - அங்குக்
.. காணவில் லைஆனால் தேவதைகள்
பேசிச் சிரிக்கும் கலகலப்பின் - ஒலி
.. பேரலை யாகப் பரவக் கண்டேன்
எண்ண எண்ணஎன்றன் நெஞ்சுக்குள்ளே - எழும்
.. இன்பத்தைக் கூறிட வார்த்தையில்லை!
மண்ணில் அனைவரும் ஆயக்குடி - சேவா
.. மன்றத்தோர் போல மனம் பெறட்டும்!
...அனந்த்
29-5-2009