"ஶ்ரீ ராமன் கதையைப் படி"
(மீ. விசுவநாதன்)
ராமன் கதையைப் படிக்கப் படிக்க - மனம்
நாமும் அவன்போல் வாழப் படிக்கும்
பாசம் பக்தி பண்பு வீரம் - அறக்
காதல் கொண்ட பாதை நடக்கும்
(ராம கதையைப் படிக்க)
அன்னை யிடத்தில் பாசம் பொழியும் - தன்
அத்தன் வாக்கை மதித்து நடக்கும்
முன்னம் குருவின் மொழியைக் கேட்டு - தன்
முழுமை பக்திப் பணிவைக் காட்டும்
(ராமன் கதையைப் படிக்க)
மிதிலை சீதை காதல் கொண்டு - கண்
பதிலை உணர்ந்து வில்லை ஒடித்தான்
விதியின் வலியால் காட்டில் அலைந்தான் - நல்
வேளை பார்த்துப் பட்டம் ஏற்றான்.
(ராமன் கதையைப் படிக்க)
அறத்தைக் காக்க அறமாய்ப் பிறந்தோன் - பொய்
அரக்க குணத்துக் குலத்தை அழித்தோன்
திறத்தில் வீர ராக வனாகப் - புகழ்
மேரு மலையாய் உயர்ந்து சிறந்தோன்
(ராமன் கதையைப் படிக்க)
(இன்று ஶ்ரீ ராம நவமி தினம் - 27.03.2026)