ஶ்ரீ ஜம்புநாத ஐயரின் நான்கு வேத மொழிபெயர்ப்புகளை சமீபத்தில் ’அலைகள் வெளியீட்டகம்’ என்ற பதிப்பகம்
பிரசுரித்துள்ளது.
ருக் வேதத்திலும் சரி, குடும்ப வேதமான கிருஷ்ண யஜுர் வேதத்திலும் சரி, ஆங்காங்கே மிகச் சிற்சில
பகுதிகளே மேய்ந்தவன் நான் என்னும் நிலையில் இவரது மொழிபெயர்ப்புகள் (சமஸ்கிருதம் தெரியாதவர்களுக்கு)
வேதம் சொல்லும் உண்மை நிலைகள் பற்றி ஒரு விரைந்த பார்வைக்கு உதவும் என்று நினைக்கிறேன். தவிர, மூலமோ,
பதபாடமோ இன்றி இவர் மொழி பெயர்த்ததற்குக் காரணம் சொல்கிறார்:
"இத்தமிழ் வேதத்தைச் செய்வதில் ஒவ்வொரு வடமொழி பதத்துக்கும் தமிழ் உரையை எழுதி பரிட்சையில் விடை
எழுதும் மாணவன் அநுவாதம்போல் செய்யவேண்டு மென்னும் எண்ணத்துடன் இதைச் செய்யவில்லை. ஒரு மந்திரத்தைப்
பூரணமாய் படித்து அதனால் தோன்றும் உணர்வையே முதன்மையாகக் கருதி அதைப் புலனாக்குவதில் நமது முழு கவனத்தையுஞ்
செலுத்தி அப்பால் கூடியவரை வடமொழி பதங்களை யநுசரித்துள்ளோம். வேத உணர்வை தமிழில் உயிராக்குங்கால்
வேதபாஷ்யஞ்செய்யவோ அல்லது வேத விளக்கஞ் செய்யவேண்டுமென்னும் வேலையில் சாய்ந்துள்ளதாகவோ நாம் ஒருபொழுதும்
நினைக்கவே இல்லை. இத்தகைய விளக்கம் அவசியமே யாயினும் இருக்கும் சந்தர்பத்தைக் கருதி ஒருவனால் இதுமுடியாது
என்பதை முன்னரே யோசித்து இவ்வேலையில் ஈடுபடவில்லை. வடமொழி கற்றவன் வேதமொழிகளைச் செவியுற்றவுடன்
அம்மொழிகளில் சடாரென்று எக்கருத்துக்களை யெல்லா மடைகின்றானோ அவற்றையே தமிழ்மொழிகளில் இங்கு குவித்துள்ளோம்..."
--யஜுர் வேத மொழிபெயர்ப்பின் முகவுரையில் இருந்து.
***
வேத மந்திர மொழிபெயர்ப்புகளில் literal meaning மட்டுமே வரினும், உள்ளுறை ஆன்மீக உண்மைகளை
பிராமணம், உபநிடதம் போன்ற நூல்களில் இருந்து இவர் முகவுரையில் விளக்குகிறார்:
** தேவர் என்றால் நமக்கு உதவிசெய்யும் புருஷன் அல்லது நாம் பயன் செய்து கொள்ளும் எல்லா நற்பொருள்களுக்கும் பெயர்.
சில சமயங்களில் நமது அங்கத்திலுள்ள கண் காது மூக்கும் தேவர்கள் யெனப்படும்.
** யக்ஞமென்பது ஒரு மொழி சின்னமாகும். அது எல்லா நற்பணி நற்புருஷன் நற்பொருள் நற்செயல் முதலியவற்றைக்
குறிக்கும் பொது மொழியாகும். இயல்பில் நடைபெறும் செயல்களும் யக்ஞங்கள் என அழைக்கப்படும்...
** இருள் என்னும் அரக்கர்கள் சரி கீழ்த்திசையில் சற்று அக்கினியை வைக்க நிலை தருகிறோம், என்றவுடன் தேவர்கள்
யக்ஞனை உதய சூரியனாக அங்கு ஸ்தாபித்தார்கள். காலையில் வாமனாய்ச் சென்ற அவன் உச்சியில் வந்து தன் பாதங்கள்
என்னும் கிரணங்களால் மூவுலகை வியாபகமாக்கினான்.
** யக்ஞமென்றால் புவியில் உள்ள எல்லாச் செல்வங்களுக்கும் பெயர். ... விஷ்ணு என்னும் யக்ஞன் அதை
(அசுரர்கள் குவித்துள்ள வராஹன் என்பவனிடம் இருந்து) இந்திரன் உதவியால் பற்றினான்.
** யக்ஞமென்றால் எல்லா மேன்மைகளைச் சுமக்கும் ரதமாகும். நம்மை சலத்தில் கடத்திச் செல்லும் கப்பலுக்கு
யக்ஞமென்னும் நாமமுண்டு. நிலம் உழுது விதைத்துக் காத்து பயிர்செய்து தானியம் அறுப்பதற்கும் இன்னும் எல்லாத்
தொழிகளுக்கும் யக்ஞமென்று சொல்வதுண்டு.
** யக்ஞமென்றால் சிருட்டிக்குப் பெயர். இந்த யக்ஞத்தினின்றே பூவுகலம் இன்னும் எல்லாப் பொருள்களும் வேதமும் தோன்றும்.
** யக்ஞத்துக்கு வடிவம் கொடுத்தால் அவன் பிரஜாபதி முதலிய தேவர்களாயுள்ளான். அவன் அங்கங்கள் நட்சத்திரங்கள்,
பன்னிரண்டு மாதங்கள் இன்னும் அனைத்துமாகும்.
** அகங்காரம் அத்வர்யு. சித்தம் ஹோதா. வியானன் பிரஸ்தோதா. உதானன் உத்காதன். சமானன் மைத்திரா. வருணன் சரீரம்.
வேதி தலை. துரோண கலசம் ஓங்காரம். யூபம் மனம். இரதம் காமம். பசு தியாகம், தட்சிணை. ஆத்மா யஜமானன்.
** மனிதர் பேசும்போது மூச்சுவிடுவதில்லை. ஏனெனில் அப்பொழுது பிராணனை மொழியில் யக்ஞஞ் செய்கிறார்கள்.
மூச்சு விடும் பொழுது பேச முடிவதில்லை. அப்பொழுது மொழியை பிராணனில் யக்ஞஞ் செய்கிறார்கள். இவ்வழியாத
அமுதமான யக்ஞனம் விழிப்பிலும் தூக்கத்திலும் நடைபெறுகிறது.
** மனிதர் வாழ்க்கையே ஒரு யக்ஞம் போலாகும். முதல் 24 வருஷம் காலை யக்ஞம். அடுத்த
44 வருஷங்கள் பகல் யக்ஞம். மிகுதியான 48 வருஷங்கள் மாலை யக்ஞமாகும்.
***
இவரது ’வேத சந்திரிகை’ என்னும் நூலை நேற்றிரவு தரவிறக்கினேன். வேதம் பற்றி அறிய அரியதோர் அறிமுகமாகத்
தெரிகிறது இந்த நூல். இனிதான் படிக்கவேண்டும்.
(
http://www.scribd.com/doc/124675924/Tamil-Veda-Chandrika-Intro-to-Vedas)
--ரமணி
*****