(for sculptures and paintings)
வடநாட்டில் தீபாவளியைப் பல விதமாகக் கொண்டாடுகின்றனர். தீபாவளி பூஜை என்று லக்ஷ்மி பூஜையாக வழிபடுவர். வாணிகத்தில் புதுக் கணக்குகள் தீபாவளி அன்று தொடங்குவர். இந்துக்கள் அயோத்தி மாநகருக்கு இராமன் வென்றபின் மீண்ட நாளாகவும், சமணர்கள் மகாவீரர் நினைவு நாள், அவர் பரப்பிய அறவிளக்கின் வெளிச்சம் பரவ வழிபடும் நாள். விஜயநகர காலத்தில் சீன நாட்டுத் தொழில்நுட்பம் பட்டாசு செய்தல், வெடித்தல் இந்தியாவில் தீபாவளியுடன் இணைகிறது. சிவகாசி இந்தியாவிலேயே பட்டாசுத் தொழிலின் தலைநகரம்.
ராஜா ரவிவர்மா திருவனந்தபுரம் அரச குடும்பத்தில், கிளிமானூரில் பிறந்தவர். ஹிந்து சமயக் கடவுளருக்கு வர்ண ஓவியங்கள் தீட்டிப் புதிய அச்சுக்கலையைப் பயன்படுத்தியவர். அவர் பிரபலப்படுத்திய ஓவியம் லித்தோகிராப் முறையில் பல லட்சம் வீடுகளில் பாரதம் முழுதும் உள்ளது. கஜ லக்ஷ்மி நிற்கும்போது, கலைமகளும், கணேசரும் அமர்ந்திருக்கும் ஓவியம். அந்த ஓவியம் பிற்காலத்திலும் பலரால் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக மீளச்சு செய்யப்படுகிறது. கஜலட்சுமி இந்தியாவில் தோன்றிய இந்து, புத்த, ஜைன சமயங்கள் மூன்றிலும் இருக்கிறாள். சாஞ்சி பௌத்த ஸ்தூபியில் உள்ள சிற்பத்தை ரவிவர்மா ஓவியத்துடன் ஒப்பீடு செய்யலாம்.
சங்க இலக்கியம் கலித்தொகையில் கஜலக்குமி உவமை:
--------------------------------------
கதிர் விரி கனை சுடர்க் கவின் கொண்ட நனம் சாரல்
எதிரெதிர் ஓங்கிய மால் வரை அடுக்கத்து
அதிர் இசை அருவி தன் அம் சினை மிசை வீழ
முதிர் இணர் ஊழ் கொண்ட முழவுத் தாள் எரிவேங்கை
"
வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதரப்
புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தித்
திரு நயந்து இருந்து அன்ன" தேம் கமழ் விறல் வெற்ப! - கலித்தொகை 44.
ஞாயிற்றின் விரிந்து செறிந்த கதிர்களின் அழகைத் தன்னிடம் கொண்ட அகன்ற மலைச் சாரலில் எதிரெதிரே உயர்ந்து நின்ற பெரிய மலைகளின் சரிவுகள் சந்திக்கும் இடத்தில் அதிர்கின்ற ஓசையுடன் விழும் அருவி, தன்னுடைய அழகிய கிளைகளின் மீது விழ, முற்றிய பூங்கொத்துக்களைத் தீயைப் போல் வரிசையாகக் கொண்ட, முழவினைப் போன்ற அடிமரத்தையுடைய வேங்கை மரம் நிற்கிறது.
அது எதை ஒத்தது என்றால்,
வரிகள் விளங்கும் நெற்றியையுடைய அழகிய இரு யானைகள் பூவுடன் கலந்த நீரை மேலே சொரிய முறுக்குவிட்டு மலர்ந்த தாமரை மலரின் உள் இதழ்களில் பெருமிதத்துடன்
திருமகள் விரும்பி இருப்பதைப் போன்று தோன்றும்.இவ்வாறாக, கஜ இலக்குமியின் உருவத்தை மனத்தில் தோன்றச் செய்யும் மலர் மணம் கமழும் சிறந்த மலைநாட்டுத் தலைவனே!
-----
இராமாயண நிகழ்ச்சிகள் இருமுறை சங்கப் பாடலில் இவ்வாறு உவமையாகப் பாடப்பட்டுள்ளது. தெரிந்த ஒன்றைக் காட்டித் தெரியாததை விளக்குவதே உவமையின் முதன்மையான பயன்பாடு. எனவே, இராமாயணக் கதை, அன்று மக்களுக்கு நன்கு தெரிந்த ஒன்றாக இருந்திருக்கிறது.
https://www.tamilvu.org/ta/courses-degree-a011-a0112-html-a01123p4-5360 அதேபோல, கஜலக்ஷ்மியின் வடிவும் தமிழர்களுக்கு நன்கு தெரிந்த உருவமாக விளங்கியுள்ளது. கஜலக்ஷ்மி வடிவத்துடன் வெள்ளி நாணயங்கள் இந்தியாவில் கிடைக்கின்றன. மக்கள் அனைவரும் அறிந்துகொள்ள இதுபோன்ற நாணயங்களும் ஓர் காரணம். எனவே, கலித்தொகைப் புலவர் குறிஞ்சி நாடனின் நாட்டு இயற்கை வளத்தை விளக்குவதற்குக் கஜலட்சுமி தோற்றத்தை உவமையாகக் கையாளுகிறார். சங்க நூல்களில் உள்ள அரிய உவமைகளில் இப்பாடலும் ஒன்றாக இருப்பது வெள்ளிடைமலை.
சங்கச் சான்றோர் உவமைக்குச் சான்றாக, 2200 ஆண்டுகளாகக் கஜலட்சுமியைக் கலைகளில் காண்போம். வண்ண லித்தோகிராபாக, ராஜா ரவிவர்மா அச்சிட்டது பல்லாயிரம் வீடுகளின் பூஜை அறைகளில், தீபாவளி பூஜை என்று தலைப்பிட்ட இவ்வோவியம் நிலைபெற்றுள்ளது.
Summary: In a lithograph printed by Raja Ravivarma press, Diwali Pujan painting is famous. It shows Gajalakshmi standing with Saraswati and Ganesha seated. Ravivarma's lithographs took Hinduism's gods to lakhs of the Pooja rooms of the common public. Here, we can see some ancient sculptures of Gajalakshmi and Raja Ravivarma's lithograph.