உ
.வெண்பாக் கவியரங்கம்
கண்ணெல்லாம் ஆகுமோ கண்?
கொட்டிக் கிடக்கின்ற கொள்ளை அழகையெலாம்
கிட்ட இருப்பினும் கிஞ்சித்தும் – ஒட்டிமனம்
கண்டு களிக்காமல் ண்திறந்தும் காணாத
கண்ணெல்லாம் ஆகுமோ கண்? 1
பொந்துக்குள் இன்னொரு பொந்து
வித்தேந்தி அவ்வித்தை மின்னுகரு முட்டைக்குள்
பத்திரமாய் உள்வாங்கும் பாத்திரமே – உத்தமமாய்
வந்த உயிரை வளர்க்கின்ற கர்ப்பப்பை
பொந்துக்குள் இன்னொரு பொந்து 2
வாயென்னும் பொந்தின் வழியே உணவுண்ணப்
போயதுவும் சேர ஒரு பொந்துண்டு – தீயெடுத்தே
வந்த உணவை வளம்செய் வயிறதுவே
பொந்துக்குள் இன்னொரு பொந்து 2அ
நேசமாய் வந்த நெருப்பு
தீயிறங்கி வாவெண்றே சீதையினைச் சீராமன்
வாயுரைக்கச் சீதை வளர்தீயில் – போயிறங்கப்
பூசைக் குரியவளை பூப்போல் கொணர்ந்ததுவே
நேசமாய் வந்த நெருப்பு. 3
காதுக்கு வேண்டாம் கதவு
காததனை ஈசன் கதவின்றி வைத்துள்ளான்
ஏதெதுவும் கேட்கவைக்கும் எண்ணத்தால் - நீதமுடன்
கீதப் பறவையிசை கேட்கா திருப்பதுவோ
காதுக்கு வேண்டாம் கதவு 4
போதிலே பூத்ததிப் போது
முல்லைச் செடியும் முதல் மொட்டுக் கட்டியது
சொல்ல முடியாத சோமழை – முல்லையைப்
பாதகம் செய்யுமோ? பாழாமோ என்றுகவல்
போதிலே பூத்ததிப் போது. 5
பள்ளியாம் பாதையும் பார்
கற்றுக் கொடுக்கக் கணக்கில்லா மார்க்கமுண்டு
ஒற்றைப் பறவை உதவிடலாம்- சற்றேற்றுக்
கொள்ள மனமிருந்தால் கொஞ்சமா கற்றிடலாம்
பள்ளியாம் பாதையும் பார். 6
பார்ப்பாரே பார்ப்பாரே பார்
கண்திறந்து கொண்டு கடவுளைப் பார்ப்பதினும்
கண்மூடிப் பார்த்துக் கசிந்திடலாம் – எண்ணத்தில்
பார்ப்பதுவே என்றும் பரவசமாம் கண்மூடிப்
பார்ப்பாரே பார்ப்பாரே பார். 7
குறுக்குத் தெருவில் குடி
மண்ணுக்கு வந்தபின்னே மாளிகையில் வாழ்ந்திடலாம்
மண்ணில் பிறந்து வருமுன்னே – விண்ணின்
சிறப்புமிகத் தருமேபார் செய்ய கருப்பைக்
குறுக்குத் தெருவில் குடி 8
வானம் இறங்கி வரும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படுவரென- மெய்வகையாய்
ஞான முரை வள்ளுவரை நன்குபற்றி வாழ்பவர்க்கு
வானம் இறங்கி வரும் 9
கண்ணைமூ டிக்கொண்டு காண்
கண்திறந்து பார்த்தபின்னே கண்மூடிப் பார்த்தாலே
வண்ணம் சுழலும் வரிவரியாய் – கண்ணுக்குள்
எண்ணம் இனிக்க இழைந்துவரும் ஆகையினால்
கண்ணைமூ டிக்கொண்டு காண். 10
மறதியும் கூட வரம்
மற்றோர்செய் தீமை மறவா திருந்துவிடின்
எற்றைக்கும் தீமைசெய எண்ணிடலாம்- பற்றும்
உறவைக் கெடுக்கும் உறழ்நினைவு, தம்பி
மறதியும் கூட வரம் 11
நெருப்பை அணைக்காத நீர்
கையில் நெருப்பிருக்கும் கங்கை சிரசிருக்கும்
பையரவு மார்பில் படர்ந்திருக்கும்- ஐயன்
விருப்பத்திற் கேற்பவே மேற்கங்கை கையின்
நெருப்பை அணைக்காத நீர் 12
கொஞ்சமே னும்மிதைக் கொள்
அட்டூழி யம்செய் அரசியல் வாதிகளை
மட்டுப் படுத்த வகையென்ன?- விட்டுவிட்ட
வெஞ்சினத் திற்கும்நீ வேலைகொடு இற்றைநாள்
கொஞ்சமே னும்மதைக் கொள் 13
நட்டத்தில் உச்ச நடம்
அன்னைமகா காளி அரனொடு காட்டிலே
என்னமாய் ஆட்டம் எடுத்தாலும் – தன் காலை
எட்டி உயர்த்தி எடுத்தான் சிவபெருமான்
அட்டத்தில் உச்ச நடம் 14
நீயென்றேன் நீயென்றாய் நீ
சொல்லத் துடித்தாலும் சொல்ல முயல்கையிலே
மெல்ல நழுவி விடுகிறதே!- நல்லாய், உன்
நேயத்தை வென்றவர்யார் நெஞ்சாரச் சொல்லுக
நீயென்றேன்,நீயென்றாய் நீ! 15
புன்னகை யார்க்கும் பொது
சொல்லாம லேயன்பைச் சொல்லும் மொழியுண்டோ
எல்லோருக் கும்பொதுவாய் ஏதுண்டு? – நல்லாயே
இன்ன மொழிதான் இங்கிதற் கில்லையடி
புன்னகை யார்க்கும் பொது. 16
இலந்தை
30-6-2026
00:09am
இலந்தையார் இடுகைக்கு என் பின்னூட்டம்.
எண்ணிரண்டு வெண்பாக்கள் ஏற்றமுற
எணுந்தோறும் சுவைநல்க இங்கிட்டார்
கண்ணிரண்டும் இல்லாமல் கடவுளைநாம்
கண்டிடலாம் எனச்சொன்னார் கவினுறவே
மண்ணுக்கு வருமுன்னே மாதாவின்
மகத்தான கருவறையில் வாழ்ந்ததனை
எண்ணத்தில் சிறப்பாகப் பதியவைத்த
எழிலார்ந்த இலந்தையண்ணல் வாழியவே!
-கருவூர் இனியன்,
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCu1%3DWAn8LKCWPxow4HwQM8VAV-t0BLtxW0dcv3FU39tA%40mail.gmail.com.
--