வரையற் றதுதின் வலிமை மகிமை
கரையில் கருணைக் கடலே! பரமன்
பரைபெற் றமுதற் பையலே! எனையித்
தரைபெற் றதுநின் தகவைச் சொலவே! ..(71)
[பரை = சக்தி தேவி; தரை = பூமி; தகவு = பெருமை]
[பரமனும் சக்தி தேவியும் பெற்ற முதல் பிள்ளையே! கரையில்லாத தயைக் கடலே! உன் வலிமையும் மகிமையும் எல்லையற்றவை! என்னை இந்தப் பூமி பெற்றது உன்னுடைய பெருமையைத் தோத்திரம் செய்யவே தான்!] ..(71)
சொலிசோ திமுகம் சுடராய் நயனம்
கலிதீர்க் குமிணைக் கழல்ஐந் துகரம்
பொலியா பரணம் புரியாய்ப் பணியோ(டு)
எலிமீ(து) எழில்கண்(டு) இமைநின் றிடுமே! ..(72)
[சொலி = ஒளிர்கிற; பணி = பாம்பு]
[ஒளிரும் சோதி மயமான முகம்! அதில் சுடராகப் பிரகாசிக்கும் கண்கள்! கலிக் கசடைத் தீர்க்கவல்ல இணைக் கழல்கள்! ஐந்து கரங்கள்! மின்னுகிற ஆபரணங்கள்! பூணூலாக ஒரு பாம்பு! இவற்றோடு நீ எலி மீது அமர்ந்த எழிலைக் காண்கையில் இமைகள் (இமைக்காமல்) நின்று விடும்!] ..(72)
நின்றாய் பொரவே நெடுமோர் எயிறோய்!
கொன்றாய் அதிரக் கொடுமைக் கரியை!
வென்றாய் இமையார் விடிவை! உமையாள்
கன்றே களிறே கலையாக் கலையே! ..(73)
[பொர = போரிட; எயிறு = தந்தம்; கொடுமைக் கரி = கயமுக அசுரன்; இமையார் = கண்களை இமைக்காதவரான தேவர்கள்; கன்று = பிள்ளை; களிறு = யானை]
[நீண்ட தந்தம் உடைய நீ போரில் நின்று கயமுகாசுரன் அதிரும்படி போர்செய்து கொன்றாய்! அதனால் தேவர்களுக்குப் புதுவாழ்வை வென்று கொடுத்தாய்! உமா தேவியின் பிள்ளையே! ஆனை முகனே! கலையாத அழகுக் கலையே!] ..(73)
கலைகள் பயிலக் கடிதின் றிவரும்!
மலையொத் ததடை மறையும் பனிபோல்!
எலையற் றவநீ இதயம் புகிலே
அலையா துமனம் சிதறா(து) அறிவே! ..(74)
[கடிது = கடுமை]
[எல்லை அற்றவனாகிய நீ இதயத்தில் புகுந்திருக்கையில், கலைகள் கடுமையின்றி/எளிதாகக் கற்க வரும்! மலைபோன்ற தடைகளும் பனிபோல் மறைந்து போகும்! மனம் அலையாது! அறிவு சிதறாது!] ..(74)
அறுசக் கரமாம்! அரவாங்(கு) எழுமாம்!
பொறுமை செறியப் புருவத் திடையே
குறுகிக் குறியிற் குவியும் மனமாம்!
சிறுவற் கியலாச் செயலெற்(கு) அரிதே! ..(75)
[அறு சக்கரம் = மூலாதாரம் முதலான ஆறு சக்கரங்கள்; அரவு = குண்டலினி சக்தி பாம்பாக வருணிக்கப் படும்]
[ஆறு சக்கரங்களாம்; அங்கே குண்டலினி சக்தியான பாம்பு கீழிருந்து மேல் நோக்கி எழுமாம்; பொறுமை மிக மிக, இரண்டு புருவங்களுக்கு இடையில் மனம் குறுகி ஒரு குறியில் குவியுமாம்! (இவையெல்லாம் யோகிகளின் சாதனைகள்!) சிறுவனுக்கு இயலாத இச் செயல்கள் எனக்கு அரிதே!] ..(75)
அரியோ சிவனோ அருமைக் கதையே!
தெரிவுற்(று) உணரத் திறனெற்(கு) இலையே!
சரிவோ விரிவோ சடமெற்(கு) இவண்உன்
பரிவெத் தனையோ பயனத் தனையே! ..(76)
[சரிவு = குறைவு, தேய்வு; விரிவு = வளர்ச்சி]
[அரி, சிவன் பற்றியவை எல்லாம் எனக்கு அருமைக் கதைகளே! அவற்றை நன்கு தெரிந்து கொண்டு உணர்கின்ற திறன் எனக்கு இல்லையே! சடமான எனக்குக் கிட்ட இருப்பது தேய்வோ அல்லது வளர்ச்சியோ - இங்கே உன் பரிவு எத்தனை உண்டோ அத்தனையே பயனாக எனக்குக் கிட்டும்!] ..(76)
அத்தா எனவுன் அடிபற் றிடநான்
சத்தா னவனாய்த் தகவுற் றிலனே!
சுத்தஞ் செயவே சுடுநீ அடிநீ
பித்தா னஎனைப் பிரிதல் தவிரே! ..(77)
[அத்தா = அப்பனே; தகவு = தகுதி]
[அப்பனே என்றழைத்து உன் திருவடிகளைப் பற்றிட நான் சத்தானவன் என்னும் தகுதியைப் பெற்றவன் அல்லனே! என்னைச் சுத்தமாக்க என்னை நீ அடி, அன்றிச் சுடு! ஆனால் பித்தாகிவிட்ட என்னை நீ பிரிந்து விடாதே!] ..(77)
விரைவீ(சு) இனிமை மிகுநின் பவனத்
திரையின் மறைவில் தெரியா(து) இரல்ஏன்!
புரைமிக்(கு) இழியப் பொழு(து)ஓ டிடுமுன்
கரையேற் றுவையோ கருணை நிதியே! ..(78)
[விரை = நறுமணம்; இரல் = இருத்தல்; புரை = குறை]
[நறுமணம் மிக்க உனது ஆனந்த பவனத்தில் எனக்குத் தெரியாமல் திரையின் பின்னே இருத்தல் ஏன்? என் குறைகள் மிகுந்து இழிவாகிக் கொண்டே இருக்க, பொழுது கழிந்து போகும் முன்னரே என்னைக் கரை ஏற்றி விடுவாயா கருணை நிதியே!] ..(78)
நிதியற் றவரும் நிழலற் றவரும்
விதியால் துயரில் விழநேர்ந் தவரும்
கதியென்(று) உனிடம் கடுகிக் கரையப்
புதிதாம் மலர்போல் பொலிவா குவரே! ..(79)
[கடுகி = அண்டி; கரைய = அழுது முறையிட]
[செல்வம் அற்றவரும், பாதுகாப்பு அற்றவரும், விதியின் காரணத்தால் துயரில் விழ நேர்ந்தவரும், நீயே கதி என்று உன்னிடம் அணுகி அழுது முறையிட்டால், அவர்கள் புது மலர்போலப் பொலிவை அடைவார்கள்!] ..(79)
வரசித் திவினா யகனே என(து)ஈர்
கரமுன் மலராம் கழலைக் கழுவச்
சிரமுன் அடியில் திரமாய் அமையப்
பரமாம் திருநீர் பருகற்(கு) அமுதே! ..(80)
[ஓ வரசித்தி விநாயகப் பெருமானே! எனது இரண்டு கைகளும் உன் பாத மலர்களைக் கழுவ, என் சிரம் அந்தத் திருவடிகளில் நிலையாக அமைய, (பாதம் கழுவிய) அந்தத் தெய்விகமான திருநீர் பருகுவதற்கு (ப்ராசனம் செய்ய) அமுதமே ஆகும்!] ..(80)
நல்வாழ்த்துகள்
கோபால்.
[30/12/2025]
सर्वे जना: सुखिनो भवन्तु ।