எவ்வுளின் ஒளியே - திருவள்ளூர் வீரராகவர் துதி
குறிப்புகள்:
* எண்சீர் ஆசிரிய விருத்தம்
* தேமா கூவிளம் கூவிளம் புளிமா (அரையடிக்கு)
* சில இடங்களில் கூவிளத்திற்குப் பதில் தேமாங்காய் வரலாம்
* கட்டளை அடிகளைக் கொண்டது (ஒவ்வோர் அடியிலும் ஒற்று நீங்கப் 11 எழுத்துகள்)
* “முந்தை நன்முறை அன்புடை மகளிர்” - பெருமாள் திருமொழிப் பாசுர நடை
காவ லாவுன்றன் காலடி துதித்தேன்
… கான மாய்த்தமிழ்ப் பாசுரம் இசைத்தேன்
ஆவ லாலுனை நெஞ்சகத் திருத்தி
… ஆசில் ஆயிரம் நாமங்கள் உரைத்தேன்
கோவில் வாசலில் கூடிடும் அடியார்
… கூறி வாழ்த்திடக் கோருவ தருள்வாய்
மேவு சீர்த்திகழ் வீரரா கவனே
… வேதம் வாழ்திரு எவ்வுளின் ஒளியே!
- இமயவரம்பன்