சிற்றிலக்கிய இலக்கணம்: சிற்.012. இரட்டைமணி மாலை

87 views
Skip to first unread message

sai...@gmail.com

unread,
Jun 30, 2022, 10:02:39 AM6/30/22
to சந்தவசந்தம்
#சிற்றி_இரட்டைமணிமாலை
சிற்றிலக்கிய இலக்கணம்
சிற்.012. இரட்டைமணி மாலை
.
இருவேறு வகைப்பட்ட மணிகளை ஒன்றன்பின் மற்றொன்றாக வைத்துக் கோக்கும் மணிமாலை போல, இருவேறு வகையான யாப்புகளில் இயற்றப்பெற்ற செய்யுள்களை ஒன்றன்பின் மற்றொன்றாக வைத்துப் புனையப்பெறும் சிற்றிலக்கிய வகை இரட்டைமணி மாலையாகும். இவ்வகையில் இருபது செய்யுட்கள் அந்தாதியாகப் பாடப்பெறும்.
.
நூற்பாக்கள்
இரட்டைமணி மாலை: வகை 1
பன்னிரு பாட்டியல் 254, 255
வெண்பா முதலாகக் கலித்துறை பின்வரும்
இந்த இருப திரட்டைமணி மாலை.
.
ஆதி அந்தம் வெண்பாக் கலித்துறை
ஏதம் இன்றி வருவது இரட்டைமணி மாலை
அதுவே நாலைந் தியலும் என்ப.
.
பிரபந்த மரபியல் 8
கருதும் வெண்பாக் கலித்துறை விரவி
இருபது வழுத்துவது இரட்டைமணி மாலை.
.
முத்துவீரியம் 1049
இருபஃ தந்தா தித்துவெண் பாவும்
கட்டளைக் கலித்துறை யுங்கலந் துரைத்தல்
இரட்டை மணிமாலை யென்மனார் புலவர்.
.
இரட்டைமணி மாலை: வகை 2
வெண்பாப் பாட்டியல் 36
பெற்றசீர் மன்விருத்தம் வெண்பாப் பெயர்ந்திருப்பான்
மற்றை இரட்டை மணிமாலையாம்.
.
இலக்கண விளக்கம்
வெண்பா விருத்தம் வியப்புற இருபஃது
எண்பட உரைப்பது இரட்டைமணி மாலை.
.
★★★
இரட்டைமணி மாலை வகையில்
• காப்பு, கடைக்காப்பு தவிர்த்தே
• அந்தாதித் தொடை அமையும்
• இருபது செய்யுள்களை
• வெண்பா, கட்டளைக் கலித்துறை அல்லது
• வெண்பா, விருத்தம் என்ற நிரலில்
• ஒருபொருள் பற்றிப் பாடவேண்டும்.
• பாடுபொருள் கவிஞர் விருப்பமாம்.
.
★★★★★

sai...@gmail.com

unread,
Jun 30, 2022, 10:11:04 AM6/30/22
to சந்தவசந்தம்
(பன்னாள் முன்னர் ச.வ. குழுமத்தில் இட்டது)
#ரமணிசிற்_இரட்டைமணி மாலை
உமக்குள் ஒரு வானவில்!
(இரட்டைமணி மாலை: வெண்பா — கட்டளைக் கலித்துறை வகை)
.
காப்பு
(நேரிசை வெண்பா)
மூலாதா ரத்திகிரி மூர்த்தியாம் முக்கண்ணன்
ஆலாய்ப் பறக்கும் அகத்துறும் — வாலாம்
அகந்தையின் ஆர்த்தல் அடங்கவழி செய்தே
உகந்தவண்ணம் பெய்யநும் ஓய்வு.
.
நூல்
(வெண்பா)
மேல்முக மாக விழிமூடி உள்ளத்தில்
கால்விரிக்கும் எண்ணக் கருத்தெதுவும் — வால்கொளா(து)
ஓய்வெடுக்க நேரம் ஒதுக்கிநும் சக்கரத்தில்
நோய்போகச் செய்வீர் நுவன்று. ... 1
.
(கட்டளைக் கலித்துறை)
நுவலாதார் யாரே நுழைவான வில்காட்டும் நுண்ணிறங்கள்
நவமாக எப்போதும் நம்முள்ளே ஓர்வில் நலம்தருமே
தவறாதே கண்டு தழைத்திடும் வண்ணம் உளம்நிறைக்கும்
கவனம் நலிவு களகற்ற உள்முகம் கண்படுமே. ... 2
.
மூலாதாரச் சக்கர வண்ணம்: செம்மை
(வெண்பா)
கண்ணிமை மூடியே கால்நீட்டிப் பாய்படுத்தே
எண்ணத்தில் செவ்வண்ணம் ஏற்றிமனக் — கண்ணால்
தடவுவீர் மூலமாம் சக்கரம் உள்ள
இடமெனும் கால்க ளிடை. ... 3
.
(கட்டளைக் கலித்துறை)
இடைவெளி இல்லாச் சிவப்பினில் வானத் திதழ்மலரக்
குடையாய் விரிந்திடும் செம்பருத் திப்பூ குவிந்திருக்கச்
செடிகளில் கிள்ளிய தக்காளி எங்கும் சிவந்திருக்கச்
சடுதியில் செந்தழல் சன்னக் கதிர்களின் தாண்டவமே. ... 4
.
(வெண்பா)
தாண்டவம் இல்லாத் தணிப்பிலே செவ்வண்ணம்
பூண்டுள்ளம் மூலம் புகவெழும் — தூண்டலிலே
சக்தித் தடைகள் தளர்ந்துமூ லாதாரச்
சிக்கல்கள் தீரச் செயும். ... 5
.
சுவாதிட்டான சக்கர வண்ணம்: செம்மஞ்சள் (ஆரஞ்சு)
(கட்டளைக் கலித்துறை)
செயும்வண்ணம் கிச்சிலி செம்மஞ்சள் கண்களிற் சேர்ந்தொளிரப்
பெயும்வண்ணம் செம்மஞ்சள் பேறென வானம் பெருகிவரக்
செயலிலா உள்ளத்தில் செம்மஞ்சள் கொன்றை செறிந்திருக்க
வயப்படும் ஆரஞ்சு வண்ணம் மனத்தில் வழிந்திடுமே. ... 6
.
(வெண்பா)
வழிநிறம் செம்மஞ்சள் வாங்குமனத் தூண்டல்
பழுதகற்றிக் கொள்ளவரும் பாங்கில் — சுழித்தே
சுவாதியெனும் தானமாம் சக்கரம் சுற்றும்
கவாடம் திறக்கும் களிப்பு. ... 7
.
மணிபூரகச் சக்கர வண்ணம்: மஞ்சள்
(கட்டளைக் கலித்துறை)
களிமனம் சூரிய காந்தி மலர்கள் கவிநிறம்போல்
ஒளிர்மஞ்சள் செவ்வந்தி உள்ளே மனத்தில் குவிந்திருக்க
அளிமஞ்சள் மங்கலம் ஆளும் மனையாள் முகமெனவே
துளிர்த்தெழும் வண்ணத் துகள்பொன் மனத்தில் சுழித்திடுமே. ... 8
.
(வெண்பா)
சுழியாம் மணிபூரம் தொப்புள் அருகே
வழிமஞ்சள் வண்ண வளமே — பழுதுகள்
நீக்கிப் பொலியும் நிலையில் நெகிழ்வுறுத்தும்
சூக்கும உள்ளத்தில் சூழ்ந்து. ... 9
.
அநாகதச் சக்கர வண்ணம்: பச்சை
(கட்டளைக் கலித்துறை)
சூழும் பயிர்பச்சை சுற்றிலும் காணும் சுகத்தினிலே
ஆழும் மனத்தில் அயல்நிறம் ஏதுமே ஆவதில்லை
வாழும் உயிர்மூல வண்ணம் பசுமை வளமெனவே
ஏழையாய்ப் பல்கியும் எட்டா துயர்ந்தும் இழைந்திடுமே. ... 10
.
(வெண்பா)
இழையும் பசுமை இதயத் திகிரி
அழைபேர் அநாகதம் ஆகும் — குழையும்
மரகதத் தாமரை மாண்பில் மலரும்
அருள்தந்தே தோயும் அகம். ... 11
.
விசுத்தச் சக்கர வண்ணம்: நீலம்
(கட்டளைக் கலித்துறை)
அகத்துள் விரிந்திடும் ஆகாய நீலம் அமிழ்தெனவே
ககனம்போல் நீலக் கடலின் அலையும் கரைதழுவும்
முகுந்தனின் நீல முகத்தில் கருணை முகிழ்த்திருக்கும்
உகந்திடும் நீலப்பூ உள்ளம் முழுதும் ஒளிதருமே. ... 12
.
(வெண்பா)
ஒளிரும் விசுத்தமாம் உள்வட்டம் தொண்டை
குளிர்நீல வண்ணம் குவியக் — கொளுமே
நலமென்று நீலவண்ணம் நாடும் மனத்தில்
வலம்பெறக் காணுவீர் வாக்கு. ... 13
.
ஆக்கினைச் சக்கர வண்ணம்: கருநீலம்
(கட்டளைக் கலித்துறை)
வாக்கு நலம்தரும் வட்டத் திகிரி வலுப்பெறவே
ஆக்கினைச் சக்கரம் ஆங்குநும் நெற்றி அனல்தரக்கண்
பார்க்கும் நிறத்தின் பரப்பாய்க் கருநீலம் காண்மனத்தில்
கோக்குமே நாவல் கொடிமுந் திரியின் கொலுவிருப்பே. ... 14
.
சகஸ்ராரச் சக்கர வண்ணம்: ஊதா
(வெண்பா)
கொலுவிருக்கும் ஊதாக் குடுமியென்றோர் வட்டம்
அலர்ந்தவிதழ் ஆயிரமாம் இண்டை — மலராய்ச்
சகச்சிரக் சக்கரம் சாதனை உச்சி
வகையும் துறவிக்கு வான். ... 15
.
(கட்டளைக் கலித்துறை)
வானவில் தான்கொளும் வண்ணங்கள் ஏழும் வளர்ந்திருக்கும்
மோன மனத்தில் முகிழ்க்கும் அமைதியின் மும்முரத்தில்
தானெனும் எண்ணம் தளரத் தழைக்கும் தனதுயிரில்
ஏனெனும் கேள்விகள் இன்றியே உள்ளத் திருப்புறுமே. ... 16
.
(வெண்பா)
இருப்பென ஆழிகள் ஏழாம் அவற்றைத்
திருப்பும் நிறமேழு ஊதா — கருநீலம்
நீலம் பசுமை நிசிவண்ணம் செம்மஞ்சள்
சீலத் திறுதி சிவப்பு. ... 17
.
(கட்டளைக் கலித்துறை)
சிவப்பில் தொடங்கி சிலிர்ப்பினில் ஊதா சிறந்திருக்க
உவக்கும் நிறங்களில் ஒவ்வொன்றும் ஓராழி சீர்ப்படுத்தும்
துவக்கமூ லாதாரம் உச்சி சகச்சிரம் தூய்மையுற
தவம்கொளும் சாதனை தான்போக ஆன்மா தழைப்புறுமே. ... 18
.
(வெண்பா)
மூலத் திகிரி முழுநலம் கொள்முதல்
தாலம் உணர்த்தும் சுவாதியாம் — கோலமே
தானெனும் தொப்புளின் சக்கரம் அன்பு
கருணை இதயக் கனி. ... 19
[தாலம் = உலகு]
.
(கட்டளைக் கலித்துறை)
கனிவுறும் நல்வாக் கருளும் விசுத்தத் திகிரியின்பின்
தனித்தவுள் நோக்கைத் தருமாம் நுதல்விழி ஆக்கினையாம்
சனித்தெழும் ஞானச் சகச்சிரம் உச்சியில் சாதனையாய்
குனித்த அரவெனும் குண்ட லினிநாடி கூர்த்தெழுமே. ... 20
.
29 அக்.. 2017
.
ஏழு சூக்குமச் சக்கரங்கள் மேல்விவரம்:
.
★★★★★
 
Reply all
Reply to author
Forward
0 new messages