Fwd: மார்கழி முப்பது - 2025 (11-20) (கோபால்)

3 views
Skip to first unread message

GOPAL Vis

unread,
Jan 3, 2026, 7:46:44 PM (5 days ago) Jan 3
to santhav...@googlegroups.com
மார்கழி 11 [26/12/2025]

எழுத்துசில கற்றும்உனை ஏத்தறியாப் பாமரனாய்,
அழுத்துகிற ஆசைகளின் அடிதொடரும் ஐம்புலன்கள்
இழுத்தபடி அலைபவனாய், இளைத்துவிட்ட என்றனைநீ
இழுக்(கு)அகல அழுக்(கு)அழிய எப்போது நோக்குவையோ! ..(11) 
[ஏத்த அறியா = புகழத் தெரியாத]

மார்கழி 12 [27/12/2025]

வாமனனாய் நீமிதித்த மண்,அருளால் ஒருதிவலை
பாமரனென் சிரங்கண்டு பறந்தாங்கு படியுமெனில்
பூமகளின் அருள்மறவேன்! புனிதமடைந்(து) உன்னுடைய
தேமதுரப் பேர்பாடித் திளைத்(து)இன்பம் உறுவேனே! ..(12)
[திவலை = துளி; பூமகள் = பூமி தேவி]

மார்கழி 13 [28/12/2025]

வேள்கண்டால் உன்னழகில் வெட்கிஒளிந் திடுவானாம்!
வாள்கண்டுன் புருவத்தை வணங்கிடவும் அஞ்சிடுமாம்!
தோள்கண்ட மாவீரர் தோற்பாராம் பொருமுன்னே!
தாள்கண்டார் பழவினைகள் தகரமகிழ்(வு) எய்துவரே! ..(13)
[வேள் = மன்மதன்; பொருமுன்னே = போர் செய்யும் முன்னமே, தாள் = திருவடி; தகர = அழிய]

மார்கழி 14 [29/12/2025]

செடிமலருன் திருவடியிற் சேர்ந்திடவே ஏங்கிடுமாம்!
மடிநிறைந்த பசுவுன்னில் மனமயங்கிச் சுரந்திடுமாம்!
வடிவழகைக் கண்டடியார் வாய்திறந்து சொக்குவராம்!
கடிக்கயிறு கண்டுருகிக் கரைவாராம் அன்னையரே! ..(14)
[கடி = இடுப்பு]

மார்கழி 15 [30/12/2025]

துடிநேரம் கண்மூடித் துஞ்சாமல் அலைக்கிடையே
அடிமலரைச் சுகமாக அலர்மகளின் மடியிட்டுப்
படிநலனே எண்ணி,விடப் பாம்பணையில் படுத்தபடி
முடிவிலதாய் விளையாடும் மோகனமாங் கோலமென்னே! ..(15)
[துடி = வினாடியின் ஒரு சிறிய பகுதி; படி = உலகம்; கோலம் = அழகு]

மார்கழி 16 [31/12/2025]

இரங்கத்தான் நீஉகப்பாய் என்றறிந்த அமரர்களின்
சிரங்கொத்தாய் உன்னெழிலார் சேவடியில் குவிந்திருக்க,
அரங்கத்தை உறங்கத்தான் நதிசூழ அமைத்தாயோ?
தரங்கத்தில் தூங்கியபின் தரையினிலும் தொடர்வதென்னே! ..(16)
[உகப்பாய் = விரும்புவாய்; சிரங்கொத்தாய் = தலைகள் கூட்டமாக; தரங்கம் = அலை/கடல்]

மார்கழி 17 [01/01/2026]

தேவியரும் காவலரும் தேவர்களும் முனிவர்களும்
நீவிழிக்கக் காத்திருக்க, நின்விழிகள் திறந்ததுமே
நாவினிக்க நினைப்பாடி நைந்துருகும் அடியவர்கள்
பாவிசைக்கும் திசைதன்னைப் பார்த்(து)இளகும் பரிவென்னே! ..(17)

மார்கழி 18 [02/01/2026]

கண்ணாநீ கோகுலத்தைக் கால்வைத்துச் சுத்தமிட்டாய்!
அண்ணால்அன்(று) எவ்வுயிரும் உனையன்றி அன்னியத்தை
எண்ணாவா(று) இதயமெலாம் இருந்தங்கு துப்(பு)ஈந்தாய்!
ஒண்ணாதேன் உள்ளத்தை அடிமண்ணால் புடம்போடு! ..(18)
[துப்பு = தூய்மை; ஒண்ணாதேன் = தகுதியற்ற/திறனற்ற நான்]

மார்கழி 19 [03/01/2026]

கதிரெழுந்தும் என்னுறக்கம் கலையாமற் கிடந்தேனோ?
நிதிகருதிக் கடமைகளை நினையாமற் போனேனோ?
கதியற்ற எளியோரைக் காய்ந்தேனோ? அன்றி,எலாம்
விதிதானோ? எனக்(கு)இரங்கி விரையாத காரணமென்? ..(19)

மார்கழி 20 [04/01/2026]

சாத்திரங்கள் நானறியச் சாத்தியமே இனிஇல்லை!
தோத்திரத்தால் உனைக்கவரும் சூக்குமம்என் வசமில்லை!
பாத்திரமாய் ஆனபின்றான் பரிவாய்நீ எனினும்,உன்றன்
நேத்திரத்தின் தயைவெள்ளம் நீயடக்க நில்லாதே! ..(20)
[பாத்திரம் = தகுதி; நேத்திரம் = கண்]

நல்வாழ்த்துகள் 
கோபால். 
[04/01/2026]
सर्वे जना: सुखिनो भवन्तु ।

Ram Ramakrishnan

unread,
Jan 3, 2026, 7:58:06 PM (5 days ago) Jan 3
to santhav...@googlegroups.com
அரமை, திரு.கோபால்

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jan 3, 2026, at 19:46, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtu%3DuaEkmaD9yq%3DtxMHB8onqbwn8gv4GCzGq%3DdZ0PiUUyQ%40mail.gmail.com.

GOPAL Vis

unread,
Jan 3, 2026, 8:54:09 PM (5 days ago) Jan 3
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு ராம்கிராம்
கோபால்

On Sun, Jan 4, 2026 at 6:28 AM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
அரமை, திரு.கோபால்

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jan 3, 2026, at 19:46, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
மார்கழி 11 [26/12/2025]

எழுத்துசில கற்றும்உனை ஏத்தறியாப் பாமரனாய்,
அழுத்துகிற ஆசைகளின் அடிதொடரும் ஐம்புலன்கள்
இழுத்தபடி அலைபவனாய், இளைத்துவிட்ட என்றனைநீ
இழுக்(கு)அகல அழுக்(கு)அழிய எப்போது நோக்குவையோ! ..(11) 
[ஏத்த அறியா = புகழத் தெரியாத]

...............
Reply all
Reply to author
Forward
0 new messages