பாரதியின் கனவு - உரைநடை முயற்சி

324 views
Skip to first unread message

Vivek Bharathi

unread,
Dec 15, 2023, 7:52:50 PM12/15/23
to santhavasantham
சான்றோர்க்கு வணக்கம். மகாகவி பாரதியாரின் சுயசரிதை மற்றும் பாரதி அறுபத்தாறு இரண்டையும் உரைநடையில் எழுதலாம் என்னும் எண்ணம் மேலிட, இந்த இழையைத் தொடங்குகிறேன். சிறியனை வழிநடத்த வேண்டுகிறேன்! 

பாரதியின் கனவு

உலகில் உள்ள வாழ்வு அனைத்தும் கனவு என்று  அறிவிலும், வேதக் கல்வியிலும் சிறந்தவர்கள் கூறியிருக்கிறார்கள். அவர்களின் கருத்தில் பிழை ஏதும் இல்லை. அதை நான் அப்படியே ஏற்கிறேன். ஆனால் அதற்கென்று, சில கணத்தில் தோன்றி, பின் மறைந்து போகும் பூமியின் கீழான வாழ்க்கை நிலைகளை நிரந்தரம் என்று நான் சொல்லவில்லை. அவை நிலையற்றவை என்பதை நானும் அறிவேன்.

ஏதுமற்ற வெளி என்று கூறப்படும் வெளியைப் பாழ் என்கிறார். அந்த பாழ் நிலையைக் கடந்தால், அதற்கடுத்தது கடவுள் நிலைதான் என்கிறார். அதை நான் நேரில் சென்று அனுபவித்துப் பார்த்ததும் இல்லை. வாழ்வில், நமது முன்வினைப் பயன் எனப்படும் ஊழைக் கடந்து நமக்குக் கிடைப்பது ஏதாவது இருக்கிறதா என்ன? இவற்றுக்கெல்லாம் இடையே, நான் உண்மை என்ன என்பதைப் பாதி உணர்ந்தேன்.

மாயம் என்பது பொய். அதை முழுவதுமாகக் கண்டுகொண்டேன். அத்துடன் உலகத்தைப் படைத்த பிரம்மத்தின் இயல்பினை ஆராய்வதற்கான அருளை இன்னும் நான் பெற்றுவிடவில்லை. மேலும், தேசத்தில் எவரோ சொல்லும் சொல்லை நம்பி, நம் அறிவிக்குப் புலப்படாத ஒன்றை, செம்மை என்று மனத்தில் கொள்ளும் தீய பக்தி இயற்கையும் எனக்கு இல்லை. இனி என்ன நடக்கிறது என்பதை இன்னும் சிறிது காலம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உலகம் முழுவதும் ஒரே பெரும் கனவு. அதற்குள் நாள்தோறும் உண்டு, உறங்கி, அடுத்தவருக்கும் தனக்கும் துன்பங்களைச் செய்து, பின் மாண்டு போகிறார்கள் கலக மானிடப் பூச்சிகளான மனிதர்கள். அவர்கள் வாழ்க்கை, அந்தக் கனவுக்குள்ளும் தோன்றும் மற்றொரு சின்னக் கனவாகும்.

ஆனால் அப்படிப்பட்ட கனவுக்குள் சில தினங்கள் மட்டும் உயிருக்கு இன்பம் சேர்க்கும் கனவுகள் வருகின்றன. அவை சொல்லி முடித்து விட முடியாத கனவுகள். மயக்கம் தரும் கனவுகள். அவை, ஒளி வீசும் நெற்றி அழகை உடைய நெற்றியில், திலகம் அணிந்த பெண்கள் தரும் காதல் என்னும் கனவு. அது தெய்வீகக் கனவும் கூட. அந்தக் கனவு வாழ்க என்று மனம் வாழ்த்துகிறது.

எனக்குப் பத்து வயது இருக்கும். அப்போதெல்லாம் என் வயதை ஒத்த சிறுவர்கள் ஆடியும், ஓடியும், ஆறுகள் குட்டைகள் போன்றவற்றில் நீச்சலிட்டு விளையாடியும், மனம் விட்டு ஆசை தீரப் பேசியும், மரங்களில் ஏறி, இறங்கி ஆடியும் கிடப்பார்கள். ஆனால் நான், என் தந்தையின் கண்டிப்புக்கு அஞ்சிப்போய் வீதியில் நடக்கும் ஆட்டம் பாட்டங்கள் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தேன். நான் மட்டும் தனி ஆளாய், கையிலும் முதுகிலும் பெரும் புத்தக மூட்டையின் கணத்துடன் இருப்பேன். அந்தக் காலத்தில் உடன் இருந்து களித்து விளையாட தோழர் ஒருவரும் இல்லாமல் வருந்தி இருந்தேன்.

பாடல்கள் : 

வாழ்வு முற்றும் கனவெனக் கூறிய
மறைவ லோர்தம் உரைபிழை யன்றுகாண்;
தாழ்வு பெற்ற புவித்தலக் கோலங்கள்
சரத மன்றெனல் யானும் அறிகுவேன்;
பாழ்க டந்த பரநிலை யென்றவர்
பகரும் அந்நிலை பார்த்திலன் பார்மிசை;
ஊழ் கடந்து வருவதும் ஒண்றுண்டோ ?
உண்மை தன்னிலோர் பாதி யுணர்ந்திட்டேன்

மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்;
மற்றும் இந்தப் பிரமத் தியல்பினை
ஆய நல்லருள் பெற்றிலன்;தன்னுடை
அறிவி னுக்குப் புலப்பட லின்றியே
தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச்
செம்மை யென்று மனத்திடைக் கொள்வதாம்
தீய பக்தி யியற்கையும் வாய்ந்திலேன்;
சிறிது காலம் பொறுத்தினுங் காண்பமே.

உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே
உண்டு றங்கி யிடர்செய்து செத்திடும்
கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
கனவி லுங்கன வாகும்;இதனிடை
சிலதி னங்கள் உயிர்க்கமு தாகியே
செப்பு தற்கரி தாக மயக்குமால்;
திலக வாணுத லார்தரு மையலாந்
தெய்வி கக்கன வன்னது வாழ்கவே!

ஆண்டோர் பத்தினில் ஆடியும் ஓடியும்
ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும்
ஈண்டு பன்மரத் தேறியி றங்கியும்
என்னோ டொத்த சிறியர் இருப்பரால்;
வேண்டு தந்தை விதிப்பினுக் கஞ்சியான்
வீதி யாட்டங்க ளேதினுங் கூடிலேன்,
தூண்டு நூற்கணத் தோடு தனியனாய்த்
தோழ மைபிறி தின்றி வருந்தினேன்.


"ஓம் சக்தி"
விவேக்பாரதி
www.vivekbharathi.com


Vivek Bharathi

unread,
Dec 29, 2023, 2:52:00 PM12/29/23
to santhavasantham
சான்றோர்க்கு வணக்கம்,

பாரதியின் சுயசரிதையில் 

“நயமிகும் தனி மாதை மாமணம் 
நண்ணு பாலர் தமக்குரித் தாமன்றோ"

என்றொரு அடி வருகிறது. அதன் பொருளை அடியேனுக்கு அறியத்தரவியலுமா? 

முழுப்பாடல் : 

வயது முற்றிய பின்னுறு காதலே
மாசு டைத்தது தெய்விக மன்றுகாண்;
இயலு புன்மை யுடலினுக் கின்பெனும்
எண்ண முஞ்சிறி தேன்றதக் காதலாம்;
நயமி குந்தனி மாதை மாமணம்
நண்ணு பாலர் தமக்குரித் தாமன்றோ?

கயல்வி ழிச்சிறு மானினைக் காணநான்
காம னம்புகள் என்னுயிர் கண்டவே.  

=====================================

பிள்ளைக் காதல்

வாழ்க்கையைக் கனவு என்றும், அதில் உயிருக்கு இன்பம் தரும் மையல் என்பது தெய்விகக் கனவென்றும் சொன்னேன் அல்லவா! அதைப்போல் எனக்கும் என் பத்து வயதில் கனவு ஒன்று வந்தது. அதைச் சொல்லிச் சுவை விளங்க வைக்கத் தமிழில் வார்த்தைகளே இல்லை. எப்படி அதை நான் சொல்லி முடித்துவிட முடியும்? நான் இப்படி வார்த்தையின்றி தவிப்பதற்கான காரணம், அந்தக் கனவு என் உறக்கத்தின்போது வராமல் விழித்திருக்கும்போது நிகழ்ந்த கனவு. அதில் தெய்வம் ஒன்றைக் கண்டேன். மென்மையான நடை, கனி போல் இனிப்பும் சத்தும் நிறைந்த சொற்கள். கருமையான விழிகள். உடலெங்கும் பூக்களின் மணம் வீசும் இயல்பு. கன்னி உருவத்தில் வந்த அந்தத் தெய்வத்தைக் கண்டதும் நான் காதல் வெறியில் என்னைக் கலந்துவிட்டேன்.  

அந்தக் கன்னிக்கு ஒன்பது வயது இருக்கும். மகாகவி காளிதாசர் எழுதிய காவியத்தில் வர்ணிக்கப்படும் சகுந்தலையைப் போன்று கண்ணுக்குக் காட்சி அளிப்பாள். ஒன்பது வயதில் இப்படியொரு நிகழ்ச்சியா என்று கேட்பவர்களுக்கு வியப்பாகத்தான் இருக்கும். ஆனால் என்ன செய்வது? அன்பு என்கிற வெள்ளம் இழுத்துச் செல்லும்போது அதில் யார்தான் பிழைத்துவிட முடியும்? முற்காலத்தில் மகா முனிவர்களையே வெற்றி கொண்ட மன்மதனுடைய காமமாம் வில்லின் கணைகளுக்கு முன், ஏழையான குழந்தை என்னதான் செய்வேன்? என் மேல் பழி சொல்ல முடியுமா என்ன? வயது முற்றிய பின் வரும் காதல்தான் நிறைய பிழைகளைக் கொண்டது. அதில் தெய்விகம் ஏதும் இருப்பதில்லை. அதில் உடல் இன்பத்தை நாடியே காதல் ஏற்படுமே அன்றி, எண்ணத்தால் ஒன்று கலக்கும் காதல் உண்டாவதில்லை. மீன் போன்ற விழிகளைக் கொண்ட மான் போன்ற பெண்ணை நான் பார்த்தேன். அப்போது காமன் வில்லின் அம்புகள் என்னுயிரைப் பதம் பார்த்தன.

பிரகலாதன், குமர குருபரன், ஞானசம்பந்தன், துருவன் என்ற பாலர்கள் பெயர்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அவர்களெல்லாம் கடவுளர் மீது நம்மால் எண்ணி அளக்க முடியாத பக்தியைச் செலுத்தி, தங்கள் இனிய உயிர்களை வாட்டினார். அதேபோல் நானும் மனத்திலே பிறந்து, அந்த மனத்தையே உண்டு வாழும் மன்மதன் என்ற கடவுளுக்கு எனது உயிரைக் கொடுத்துவிட்டேன். நான் முன்னர் சொன்னேனே, அந்த பாலகர்கள் வானை அளக்கும் புகழைப் பெற்றனர். நான் என்ன பெற்றேன்? பின்னால் சொல்கிறேன்!

அதற்கு முன் இதைக் கேளுங்கள்! நான் சொன்னேனே அந்தப் பெண், ஆற்றங்கரையில் நீர் எடுக்கப் போவாள். முத்து மணியைப் போன்ற அவளது புன்னகைச் சுடர் அப்பகுதியில் வீசும். மனதுக்குள் போர் நிகழத் தொடங்கும். அவள் முன்னால் செல்ல, நான் பின் தொடர்ந்திருப்பேன். சுதந்திரம் என்கிற பயிர் வேர் பிடித்து வளர்வது பிடிக்காத ஆட்சியாளர்கள், காவல்துறையை ஏவி, தேச பக்தர்கள் வருகையை எதிர்பார்த்து எப்படிக் காத்திருக்கச் செய்கிறார்களோ, அதேபோல் அவள் வருவதை எண்ணி நான் காத்திருப்பேன்.

அவள் போகும் வழியிலெல்லாம் என் கண்களைப் பதித்துக் காத்திருப்பேன். அவளது பின்னழகைப் பார்த்தே களித்துக் கொண்டிருப்பேன். தேர் எங்கெல்லாம் செல்ல நினைக்கிறதோ, அதன் வழியினிலேயே தேரின் சக்கரங்கள் சுழன்று செல்வது போல், அவள் செல்லும் வழியில் நான் சுழன்று கொண்டிருப்பேன். அந்த சிந்தனையிலேயே என் உள்ளத்தில் கோத்துக் கிடந்த நாட்கள் பலவற்றை மன மகிழ்ச்சியுடன் செலவிட்டேன். ஒளி பூத்து இருக்கும் அவளது நெற்றி அழகு கொஞ்சம் என் பக்கம் திரும்பினால் கூட, என் புலன்களின் இன்பம் என்னைத் தாக்கி அழுத்தும் விசையால், நான் புது உயிராக உருவெடுப்பேன்.

ஐம்புலன்கள், சிந்தனை, ஆவி, விருப்பம் என்று அனைத்தையும் மானிடன் ஒருவன் எதன்மீது செலுத்தி, எந்தவித நலன்களை விரும்புகிறானோ அது கிடைத்துவிடுவது உறுதி என்று ஞானியர்கள் கூறுவார்கள். அதை நானும் உண்மை என்றே சொல்வேன். நமக்கெல்லாம் விலங்கின் இயற்கை மட்டும் இல்லாமல் போய்விட்டால், நினைத்தபடி நாமெல்லாம் முக்தி அடைந்துவிட முடியுமே! மாயம் சூழ்ந்திருக்கும் இந்த உலகத்தில், நாம் பார்க்கும் தோற்றம் அனைத்தும் மௌனத்தில் உச்சரிக்கும் வார்த்தைகள் போல் ரகசியம் ஆனவை. அதிலும், ஆழ் நெஞ்சில் ஆசையோடு ஒரு பொருளை அணுகினால் அது நாளைக்கே விளைந்துவிடும். ஆனால், கீழான எண்ணம் உள்ள சிலர், சோர்வுடையவர்கள், ஆடு நுனிப்புல் மேய்வதைப் போல் அங்கும் இங்கும் தாவித் தாவி பல பொருள்களை நாடுபவர்கள் எல்லாம் இடையில் வரும் சின்ன இடையூறுக்கு பயப்பட்டு தங்கள் விருப்பத்தை மாற்றிக் கொள்வார்கள். அவரெல்லாம் விரும்பும் எதையும் பெறவே மாட்டார்.

அப்போது விதியை நொந்து கொள்வார். அருகில் இருக்கும் தம் நண்பர்களை ஏசுவார். கோபம் கொண்டு தம் எதிரிகளைத் திட்டித் தீர்ப்பார். சதி செய்வார், பொய்யான சாத்திரங்களைப் பேசுவார், ஜாதகங்களைப் புரட்டுவார், பொய்யான புத்தியால் இழிவான நாத்திகத்தைப் பேசித் திரிவார். எந்த பொருளின் மேலும் அழியாமல் விருப்பத்தை வைத்தால், அதுவே அதை நிறைவேற்றி கதி கொடுக்கும் என்பதை உணரமாட்டார். கண்கள் இல்லாதவர்கள் போல் எதைப் பார்த்தாலும் திகைத்துப் போவார்.

சரி சரி கதைக்கு வருகிறேன்! அந்தக் கன்னிப் பெண் மேல் கொண்ட காதலால் ஏழைச் சிறுவன் நான் கோடிக்கணக்காக கவலைப் பட்டேன். எத்தனை கோடி என்று சொல்ல முடியாது. பக்தியின் பான்மையை அளந்து நன்றாய்ச் சொல்லிவிடத்தான் முடியுமா என்ன? வானத்தில் உள்ளதுபோல் உயர்ந்து தொங்கிக் கொண்டிருக்கும் கொம்புத்தேனுக்கு மாற்றுத் திறனாளி ஒருவன் ஆசைப்பட்டுக் கிடந்தபோது, அவனுக்குத் தேன் முழுமையாக கிடைத்தால் அவன் அதை எப்படி சொல்வான். அதைப்போல்தான் என்னிடத்தில் அவள் எப்படி ஆர்வம் கொண்டாள் என்று நான் சிந்தித்துக்கொண்டே இருக்கிறேன்.

ஒருதலைக் காதல் என்பது பாற்கடலைக் கடைந்தபோது வந்த விஷத்தைப் போன்றதாகும். ஆனால், அதுவே இருதலைக் காதலாய் இருவரும் கலந்து அன்பு செய்தால், அமிழ்தத்தைக் கூட அதற்கு இணை என்று சொல்ல முடியாது. பெண்களைக் காதலித்து, அதே பெண் தன்னையும் திரும்பிக் காதலிக்கப் பெறுபவர்கள், தவமுடைய முனிவர்கள், விண்ணில் வாழும் தேவர்களின் வாழ்க்கையைக் கூட கேலி செய்துவிடும் அளவு இன்ப மதர்ப்பில் வாழ்கின்றனர்.

மேகத்தைக் காதலிக்கும் நிலவு, பனியைக் காதலிக்கும் மலர், வேப்பம் பழத்தில் பால், காட்சியைப் பார்க்க முடியாத விழி, பொய் சொல்லிவிட்ட உண்மை நெஞ்சர் என்பதெல்லாம் பொருந்தாத காதல் எனப்படுகிறது. இதைக் கைக்கிளை என்று சொல்கிறார்கள். அந்தக் காதலைக் கருதுவது தீயது என்று நினைக்கிறேன். நான் எப்படி கைக்கிளையைப் பாடுவேன்? எனக்குத்தான் பொருந்தி அவளது காதல் கிடைத்துவிட்டதே. என் மீது ஆவல் கொண்ட அந்தக் கன்னி, எனக்குத் தன் அன்பை அளிக்கத் தொடங்கினாள். பாவம், தீமை, பழி எதையும் அறியாமல் நாங்கள் காதலித்தோம். முன்னர் இருந்த தேவர் யுகத்தில் வாழ்ந்த மனிதர்கள் போல் நாங்கள், காவல், கட்டுகள், விதி, வழக்கம் என்று கயவர்கள் செய்யும் செய்திகள் எதையும் அறியாமல் காதலித்தோம்.

பாடல்கள் : 

ஒன்ப தாயபி ராயத்த ளென்விழிக்
கோது காதைச் சகுந்தலை யொத்தனள்'
என்ப தார்க்கும் வியப்பினை நல்குமால்
என்செய் கேன்? பழியென் மிசை யுண்டுகொல்?
அன்பெ னும்பெரு வெள்ளம் இழுக்குமேல்
அதனை யாவர் பிழைத்திட வல்லரே?
முன்பு மாமுனி வோர்தமை வென்றவில்
முன்ன ரேழைக் குழந்தையென் செய்வனே?

வயது முற்றிய பின்னுறு காதலே
மாசு டைத்தது தெய்விக மன்றுகாண்;
இயலு புன்மை யுடலினுக் கின்பெனும்
எண்ண முஞ்சிறி தேன்றதக் காதலாம்;
நயமி குந்தனி மாதை மாமணம்
நண்ணு பாலர் தமக்குரித் தாமன்றோ?
கயல்வி ழிச்சிறு மானினைக் காணநான்
காம னம்புகள் என்னுயிர் கண்டவே.

கனகன் மைந்தன் குமர குருபரன்
கனியும் ஞானசம் பந்தன் துருவன்மற்
றெனையர் பாலர் கடவுளர் மீதுதாம்
எண்ணில் பக்திகொண் டின்னுயிர் வாட்டினோர்
மனதி லேபிறந் தோன்மன முண்ணுவோன்
மதன தேவனுக் கென்னுயிர் நல்கினன்,
முனமு ரைத்தவர் வான்புகழ் பெற்றனர்;
மூட னேன்பெற்ற தோதுவன் பின்னரே.

நீரெ டுத்து வருவதற் கவள்,மணி
நித்தி லப்புன் னகைசுடர் வீசிடப்
போரெ டுத்து வருமதன் முன்செலப்
போகும் வேளை யதற்குத் தினந்தொறும்
வேரெ டுத்துச் சுதந்திர நற்பயிர்
வீழ்ந்திடச் செய்தல் வேண்டிய மன்னர்தம்
சீரெ டுத்த புலையியற் சாரர்கள்
தேச பக்தர் வரவினைக் காத்தல்போல்.

காத்தி ருந்தவள் போம்வழி முற்றிலும்
கண்கள் பின்னழ கார்ந்து களித்திட
யாத்த தேருரு ளைப்படு மேழைதான்
யாண்டு தேர்செலு மாங்கிழுப் புற்றெனக்
கோத்த சிந்தனையோ டேகி யதில்மகிழ்
கொண்டு நாட்கள் பலகழித் திட்டனன்;
பூத்த ஜோதி வதனம் திரும்புமேல்
புலன ழிந்தொரு புத்துயி ரெய்துவேன். 10

புலங்க ளோடு கரணமும் ஆவியும்
போந்து நின்ற விருப்புடன் மானிடன்
நலங்க ளேது விரும்புவன் அங்கவை
நண்ணு றப்பெறல் திண்ணம தாமென,
இலங்கு நூலுணர் ஞானியர் கூறுவர்;
யானும் மற்றது மெய்யெனத் தேர்ந்துளேன்;
விலங்கி யற்கை யிலையெனில் யாமெலாம்
விரும்பு மட்டினில் விண்ணுற லாகுமே.

சூழு மாய வுலகினிற் காணுறுந்
தோற்றம் யாவையும் மானத மாகுமால்;
ஆழு நெஞ்சகத் தாசையின் றுள்ளதேல்,
அதனு டைப்பொருள் நாளை விளைந்திடும்,
தாழு முள்ளத்தர், சோர்வினர், ஆடுபோல்
தாவித் தாவிப் பலபொருள் நாடுவோர்,
வீழு மோரிடை யூற்றினுக் கஞ்சுவோர்,
விரும்பும் யாவும் பெறாரிவர் தாமன்றே.

விதியை நோவர்,தம் நண்பரைத் தூற்றுவர்.
வெகுளி பொங்கிப் பகைவரை நிந்திப்பர்,
சதிகள் செய்வர்,பொய்ச் சாத்திரம் பேசுவர்,
சாத கங்கள் புரட்டுவர் பொய்மைசேர்
மதியி னிற்புலை நாத்திகங் கூறுவர்,
மாய்ந்தி டாத நிறைந்த விருப்பமே
கதிகள் யாவும் தருமென லோர்ந்திடார்.
கண்ணி லாதவர் போலத் திகைப்பர்காண்.

கன்னி மீதுறு காதலின் ஏழையேன்
கவலை யுற்றனன் கோடியென் சொல்லுகேன்?
பன்னி யாயிரங் கூறினும், பக்தியின்
பான்மை நன்கு பகர்ந்திட லாகுமோ?
முன்னி வான்கொம்பிற் றேனுக் குழன்றதோர்
முடவன் கால்கள் முழுமைகொண் டாலென
என்னி யன்றுமற் றெங்ஙனம் வாய்ந்ததோ?
என்னி டத்தவள் இங்கிதம் பூண்டதே!

காதலென்பதும் ஓர்வயின் நிற்குமேல்,
கடலின் வந்த கடுவினை யொக்குமால்;
ஏத மின்றி யிருபுடைத் தாமெனில்,
இன்னமிர்தும் இணைசொல லாகுமோ?
ஓதொ ணாத பெருந்தவம் கூடினோர்
உம்பர் வாழ்வினை யெள்ளிடும் வாழ்வினோர்,
மாத ரார்மிசை தாமுறுங் காதலை
மற்ற வர்தரப் பெற்றிடும் மாந்தரே!

மொய்க்கும் மேகத்தின் வாடிய மாமதி,
மூடு வெம்பனிக் கீழுறு மென்மலர்,
கைக்கும் வேம்பு கலந்திடு செய்யபால்,
காட்சி யற்ற கவினுறு நீள்விழி,
பொய்க் கிளைத்து வருந்திய மெய்யரோ
பொன்ன னாரருள் பூண்டில ராமெனில்,
கைக்கி ளைப்பெயர் கொண்ட பெருந்துயர்க்
காத லஃது கருதவுந் தீயதால்.

தேவர் மன்னன் மிடிமையைப் பாடல்போல்
தீய கைக்கிளை யானெவன் பாடுதல்?
ஆவல் கொண்ட அரும்பெறற் கன்னிதான்
அன்பெ னக்கங் களித்திட லாயினள்;
பாவம் தீமை,பழியெதுந் தேர்ந்திடோம்!
பண்டைத் தேவ யுகத்து மனிதர்போல்,
காவல் கட்டு விதிவழக் கென்றிடுங்
கயவர் செய்திக ளேதும், அறிந்திலோம். 
Reply all
Reply to author
Forward
0 new messages