. பச்சை,நீலம்,கருமை!
( வெண்பாக்கள்)
கிளர்பச்சை மென்கிளிகள்,கேழ்வயல்கள் பச்சை,
வளர்பச்சை வண்ணம் மரங்கள், - குளிர்பச்சை
மன்னும் மரகதப்புல், மற்றிவை மாலவனின்
மின்னுபச்சை ஆமோ விளம்பு?
( குறிப்பு- குளிர்பச்சை - வினைத்தொகை)
விண்விரியும் நீலம், விளங்கு கடல்நீலம்,
மண்மலரும் பூக்கள் வகைநீலம்,- பண்வளரும்
புல்லாங் குழலோன் பொலிநீல மேனியின்முன்
எல்லாமே மண்டி இடும்!
காக்கைச் சிறகினில், காண்வைரத் தொல்லுருவில்,
ஆக்குமழை மேகத்தில், அல்லிருளில், - பார்க்கண்
ஒளியின்முன் வீழும் உறுநிழலில், கண்ணன்
எளிவந்த காட்சி எனக்கு!
(வைரத் தொல்லுரு-- நிலக்கரி)
03/09/2025(ஏகாதசி). -- தில்லைவேந்தன்.
...