மேற்குத் தொடர்மலை மேல்வான நீலநிறம்
காற்றில் கலையும் திரள்மேகம் – சாற்றுகின்ற
ஆதவனின் பொன்னொளி யங்காட்சி., நீள்மரத்தைச்
சேதமுறச் செய்வதற்கா பேய்க்காற்று? – ஈதனைய
எண்ணவலை முந்திவரக் கண்மூடிச் சிந்தித்தேன்
பண்ணபாடும் பச்சையிலை பைந்தொடியோ – விண்ணவன்
ஆக்கிய கால்வாயில் அங்கோடும் தண்ணீரும்
பாக்குமரம் தைலமரம் பைன்மரம் – நோக்கிநின்றேன்
கண்ணெதிராங் காட்சி வியந்திடச் செய்ததுவே
எண்ணிறைந்த மாமரங்கள் இங்காக – மண்மீது
நானவற்றில் ஒன்றானேன் நாயகனை நான்நினைந்தேன்
ஈனப் பசிப்பிணி இங்கொழிக்க – மானேந்தி
பச்சைப் படாம்வயலில் பாங்குடனே நெல்வளர்த்தான்
கச்சிதமாய்க் நெற்கதிரின் காட்சியதும் – உச்சமே
தாய்வய லீந்த தளிர்சேய் குளிர்விக்கப்
பாய்ந்தோடும் தண்ணீரின் பண்பதனில் – தோய்ந்தோரின்
தண்ணளியின் மேன்மை தகவன்றோ., எஞ்ஞான்றும்
விண்டுபதம் மேவுநிலம் இவ்வகையாய் – நுண்ணறிவில்
ஐந்துவகைப் பூதங்கள் ஆக்கிய இவ்லுலகில்
செந்நிறத்தில் பல்வகையான் சேர்நிறம் – தந்தவனை
இங்காம் இயற்கை இயம்புதன்றோ உள்மனத்தில்
தங்கல்வே றாகின் தகைவு.
அங்காட்சி- அழகிய காட்சி
மானேந்தி- சிவனாரைக் குறித்தது.
பச்சைப்படாம் - பச்சைநிறத் துணி, அல்லது போர்வை
தண்ணளி- இரக்கம், அருள்
தகவு - தகுதி, நிறைகுணம், நல்லொழுக்கம்
விண்டுபதம் - ஆகாயம்
மேவுநிலம் - பரந்த பூமி
நுண்ணறிவில் - கூரிய அறிவில்
தகைவு- தளர்ச்சி, களைப்பு