தேரார் கதிரோன் திரள்மண் டலத்துள்ளே
தீரா திருந்தே அலங்கரிப்பான் - பாருக்கே
வேரா யிருப்பவன் வேத முதல்வனாம்
நாரா யணனே நமக்கு 11
ஆராய்ந் தறிதலும் ஆமோ அவனுடை
சீரார் செழுங்குணம் செப்பிநட - தாரானே
வாரா தொழிவனோ வாட்டமேன் வாவணங்கு
நாரா யணனே நமக்கு 12
நீராய் நமையுருக்கும் நின்மலன் நாம்பாட
நீராய் உருகிடும் நித்தியன் - ஓருருளைச்
சூரிய மண்டலத்தன் சூழ்வன் நமையந்த
நாரா யணனே நமக்கு 13
(உருளை-சக்கரம்)
ஊரைந்துக்காய்த் தூதுசென்ற ஓங்கியன் உத்தமன்
தேரை நிறுத்தித் தெருள்கீதை - பாரளித்தான்
கூராம் எயிற்றில்பார் கொண்ட சிரீதரன்
நாரா யணனே நமக்கு 14
வாரணத்தின் வாழ்வளித்தான் வாயாரத் தமிழ்கொண்டான்
கூராழி கொள்வான் குளிரவைப்பான் - பாரதில்
நேராக எட்டெழுத்தின் ஞானமிட்டான் நேயத்தான்
நாரா யணனே நமக்கு 15
வார்குழலாள் சீதைக்காய் வார்கடலைத் தாண்டியவன்
கார்நிறத்தன் கொப்பூழ் கமலையன் - சீர்மிகுத்தன்
ஓரானை காத்தானாம் ஓரானை கொன்றானாம்
நாரா யணனே நமக்கு 16
நாகத்தைத் தாங்கியவன் நாகத்தில் நித்தரையன்
நாகத்தார் நாயகனின் நாயகனாம் - நாகநட்பில்
போரிட்டு வென்றன்று பெட்பவளை மீட்டவனாம்
நாரா யணனே நமக்கு 17
( நாகம் – மலை; பாம்பு; வானுலகு; குரங்கு, பெட்பு –விருப்பம்;காதல்)
ஊரார் உறவெல்லாம் உண்மை உறவில்லை
சீரார் திருமாலைச் சிந்தையிடு - காராடும்
பாரோர் புகழப் பரமபதப் பாங்களிக்கும்
நாரா யணனே நமக்கு 18
துருவன் பதமளித்த தூயவன் தாயன்
மருளை விரட்டிடும் மாலன் - மருத்துவன்
பாரா யணம்மகிழ் பாற்கடற் பள்ளியன்
நாரா யணனே நமக்கு 19
வேராம் வினையறுத்து வீடளிக்க வல்லவன்
பாரோர் புகழப் பலவாய் - வருமாயன்
கூராழி சங்கத்தன் கூற்றத்தின் கூற்றத்தன்
நாரா யணனே நமக்கு 20
தாஸன் புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்
அழகிய பதிகம்.
>> ஊரைந்துக்காய்த், சீதைக்காய் - இத்தகைய பிரயோகம் சரியானதாகத் தோன்றவில்லை.
>ஓரானை காத்தானாம்
ஓரானை கொன்றானாம்; கூராம்
எயிற்றில்பார் கொண்ட சிரீதரன்- அழகு!
... அனந்த்