தென்நைமிசனுக்கோர் காப்பு- இந்தமாதம் வைணவன் குரல் ஆன்மீக இதழில் வெளிவந்த பாக்கள்

5 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
Jan 22, 2026, 11:26:16 PM (7 days ago) Jan 22
to santhav...@googlegroups.com

தென்நைமிசனுக்கோர் காப்பு

அடியார்க்கடியான்

புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்

 

கோதையின் காதலுக்கு நாயகனே ஏழையாம்

சீதைக்குக் தென்னிலங்கை செற்றவனே - பாதையாய்

வேதவழி நற்சரணை ஈந்ததென் நைமிசனே

காதலுடன் காப்பிட்டேன் கண்டு                                                               1

 

ஏதேனும் சொல்லியெனைத் தள்ள இயலாதுன்

பாதார விந்தம்  திருமகள் - ஆதரவே

தோதாக உன்பக்கம் என்னை இருத்தவே

காதலுடன் காப்பிட்டேன் கண்டு                                                               2

 

பாதையி லிட்டாலும் பாழிலிட்ட போதிலும்

வேதனை இல்லை யெனக்கதிலே - சோதியம்

பாதம் பிடித்தேன்தென் நைமிசனே பார்கவனே                      

காதலுடன் காப்பிட்டேன் கண்டு                                                               3

 

ஆதாரம் நீயென் றறியாத காலமும்

தீதின்றிக் காத்த நரசிங்கா – ஓதிடப்

போதுடை நற்பதம் பாந்தமிடும் பேரன்பா

காதலுடன் காப்பிட்டேன் கண்டு                                                               4

 

பாதிநரன் பாதிசிங்கம் ஆதித்தென் நைமிசத்தாய்

தீதிலாமல் காக்கநின்ற நின்மலா - வேதியரும்

ஆதரவு நாடிவரக் கண்டதினால் உன்னடிமை

காதலுடன் காப்பிட்டேன் கண்டு                                                               5

 

சேதி தெரிந்ததும் ஓடிவரும் நாயகியர்

பாதம் பிடித்துடன் பாடுவர் - நாதனுனை

வேத முறைப்படி தாம்கொள்வர் முன்னம்நான்

காதலுடன் காப்பிட்டேன் கண்டு                                                               6

 

ஆதாரம் ஆன்மா உடலுக்கே ஆழ்ந்தறிய

ஆதாரம் நீயாம் அனைத்திற்கும் - ஓதியுணர்

மேதா விலாசம் கொண்டிலேன் மேன்மையனே

காதலுடன் காப்பிட்டேன் கண்டு                                                               7

 

சோதியா சுந்தரா சீர்ச்சுடர் சக்கரத்தா

மீதிலா யெங்குமுறை தென்நைமிசா - ஆதரவில்

பேதியா தெந்தன் பெரும்பாரம் தீர்ப்பவா

காதலுடன் காப்பிட்டேன் கண்டு                                                               8

 

வீதிக் கொருதெய்வம் நாட்டி மனிதனை

வேத வழிவாழ வைத்தபின் - ஆதிநீ

போதம் எனவித்தென் நைமிசம் பாற்றினாய்

காதலுடன் காப்பிட்டேன் கண்டு                                                               9

 

ஏதமென் பாலில்லை என்பருண்டோ பார்கவா

நீதியில் நன்றிட்டாய் நானிலத்தை - வாதமும்

ஓதிடவே ஓடும் உனசீர்மை ஓர்ந்தபின்

காதலுடன் காப்பிட்டேன் கண்டு                                                               10

 

தீதிலாக் காதலுடன் நல்லடியார்க் கேயடியான்

பாதமிட்ட காப்புதனைப் பாடிடக் - கோதிலானின்

ஆதியிடம் ஆண்டருகில் நின்றே அடிமைசெய்வர்

காதலுடன் காப்பிடுவாய் கண்டு                                                                11


--
S. Parthasarathy

+91 98441 24542/9908794542
Reply all
Reply to author
Forward
0 new messages