ஈசன் மகனே இபமா முகனே
பாசாங் குசனே பணிபூண் டவனே!
தூசாங்(கு) எரிமுன்; துயருன் திருமுன்!
ஆசத் துடனே அமர்வாய் எனுளே! ..(91)[இபம் = யானை; ஆங்கு = அதுபோல; ஆசம் = சிரிப்பு]
[ஈசனின் மகனே! பெரிய ஆனைமுகம் கொண்டவனே! பாச அங்குசங்கள் ஏந்தியவனே! பாம்பை அணிந்தவனே! நெருப்பின் முன் தூசைப் போலத்தான் உன் சந்நிதியில் துயரம்! நீ என்னுள்ளே சிரிப்புடனே அமர்ந்தருள்க!]
உள்ளத் தினிலே உறைவாய் இறைவா!
தெள்ளப் புறமும் தெரிவாய் நினருள்
வெள்ளத் தினிலே விழவே தருவாய்
அள்ளக் குறையா அருளின் துளியே! ..(92)[இறைவா, நீ என் உள்ளத்திலே நிலைகொள்! வெளிப்புறமும் தெளிவாகக் காட்சி கொடு! உன்னுடைய அருள் வெள்ளத்திலே நான் விழுவதற்கு, அள்ளக் குறையாத உன் அருளின் ஒரு துளியைத் தா!] ..(92)
துள்ளும் சிசுவைத் தொடரும் பசுவாய்க்
கள்ளம் கபடம் கடுகும் தெரியார்க்(கு)
எள்ளத் தனையும் இடரற் றவணம்
மெள்ளத் தொடரும் விரிநெஞ் சினனே! ..(93)[மெள்ள = மெல்ல]
[கள்ளம் கபடம் கடுகளவும் அறியாதவர்களுக்கு எள்ளளவும் துன்பம் வாரா வண்ணம் துள்ளும் கன்றை அன்னைப் பசு தொடர்வதைப் போல, மென்மையாகத் தொடரும் தாராளமான இதயம் உடையவனே!] ..(93)
நெஞ்சத் தினுளே நினைவைத்(து) அணியாய்ச்
செஞ்சொல் மொழியால் தினமும் பரவப்
பஞ்சக் கரனே பரிவாய் அருளே!
தஞ்சம் புனிதச் சரணின் நிழலே! ..(94)[அணியாய் = அடுக்காய், அழகாய்
; செஞ்சொல் = சிறந்த சொல், பரவ = தோத்திரம் செய்ய]
[என் இதயத்தின் உள்ளே உன்னை வைத்து, அழகாய் அமைந்த சிறந்த சொற்கள் கொண்ட மொழியால் தினமும் உன்னைத் தோத்திரம் செய்ய, ஐங்கரனே, அன்போடு அருள் செய்! உன் புனிதமான சரணங்களின் நிழல்தான் எனக்குத் தஞ்சம்!] ..(94)
நிழலே மருளால் நிசமாய்த் தெரியும்!
விழலே நிலமேல் விரிவாய் வளரும்!
பழமை நெறிகள் பழுதாய் இழியும்!
கழலே கலியில் கதிகண் திறவே! ..(95)[மருள் = மனமயக்கம்; விழல் = வேண்டாத களை]
[மன மயக்கத்தால் நிழலே நிசமாகத் தெரியும்! களைகளே நிலத்தில் பரவலாக வளரும்! பழமையான நன்னெறிகள் பழுதாகித் தாழ்ச்சி அடையும்! இத்தகைய கலி காலத்தில் உன் திருவடிகளே கதியாகும்! ஆகவே கண்ணைத் திற!
] ..(95)
திறவாக் கணைநீ திற!மெய் அறிவைப்
பெறவும், சிதையாப் பிரமத்(து) உணர்வை
உறவும், குருவாய் உபதே சமளித்(து)
இறவிப் பயமெற்(கு) இலதாக் குகவே! ..(96)
[உற = அனுபவிக்க]
[திறவாத கண்ணாகிய என் ஞானக் கண்ணைத் திற! மெய்ஞ்ஞானத்தைப் பெறவும், அழிவற்ற பிரம்மத்தை உணர்ந்து அனுபவிக்கவும், நீ என் குருவாய் இருந்து உபதேசம் செய்து, எனக்கு மரணபயம் என்பதே இல்லை எனச் செய்!] ..(96)
குகனின் முனனே குவளை விழியாள்
மகனே திருமால் மருகா எலிமேல்
சுகமாய் உலவும் சுமுகக் களிறே!
அகமா ளிகையில் அரசாய் அமரே! ..(97)[குவளை = அல்லிமலர்]
[குகனான முருகனின் முன்னவனே! அல்லி விழிகளை உடைய சக்தியின் மகனே! திருமாலின் மருகனே! எலிமீது சுகமாக உலவும் இன்முகமுடைய ஆனைமுகனே! என்னுடைய இதய மாளிகையில் அரசனாக அமர்க!] ..(97)
அமரர் முதலாய் அசுரர்க் குமெலாச்
சமயத் திலுநீ தலையாங் கடவுள்!
கமலம் நினகை கருணை நினகண்!
நிமலா எனுளே நிலைகொள் ளுகவே! ..(98)
[நிமலன் = தூயவன்]
[தேவர்கள், அசுரர்கள், யாவர்க்கும் எல்லாச் சமயத்திலும் நீதான் முதன்மையான கடவுள்! உன் கைகள் தாமரை மலர்கள்! உன் கண்கள் கருணை வடிவானவை! மாசற்றவனே! என்னுள்ளேயே நிலை பெற்றிரு!] ..(98)
கொள்ளாய்! கனலாய்க் குறைசுட்(டு) எரியே!
பள்ளத் தினிலாழ் பதிதர்க்(கு) உனநேர்
விள்ளத் தகுமோ விளியாத் துணையாய்?
எள்ளா(து) இறைவா எனையேற்(று) அருளே! ..(99)
[பள்ளம் = உய்ய ஒண்ணாத நிலை, குழி; பதிதர் = கீழ்நிலை அடைந்தவர்; விள்ள = சொல்ல,தெளிவு படுத்த; விளியா = அழைக்காத]
[என்னை முழுவதுமாக உன்னில் கொள்க! என் குறைகளைத் தீயாகச் சுட்டெரித்து விடு! கீழ்நிலையை அடைந்து உய்வடைய முடியாத படுகுழியில் ஆழ்ந்து விட்டவர்களுக்கு, அழையாமலே வந்துதவும் உனக்குச் சமமான துணை ஒன்றைச் சொல்ல இயலுமோ? என்னைத் தூற்றாமல் ஏற்று அருள்க இறைவனே!] ..(99)
ஏற்றாய் எனிலோ இசையா விடிலோ
போற்றக் கடவேன் புகல்நீ அலனோ!
ஆற்றா தவனுன் அடியேன்! கருணை
ஊற்றே நமதி(வ்) உற(வு)ஓம் புகவே! ..(100)[ஆற்றாதவன் = இயலாதவன், திற
னற்றவன்; ஓம்புதல் = பாதுகாத்தல், கடைப்பிடித்தல்]
[என்னை நீ ஏற்றுக் கொண்டாலும், அன்றி அதற்கு இசையாவிடினும், நான் உன்னைப் போற்றித் துதிக்கக் கடமைப் பட்டவனாவேன்! எனக்குப் புகல் நீயே அல்லனோ? கருணை ஊற்றானவனே! திறனேதும் அற்ற நான் உனக்கு அடியவன்! நமக்கிடையே உள்ள இந்த உறவைப் பாதுகாப்பு செய்!] ..(100)
பயன்
———
வள்ளல் வரசித் திவிநா யகனே
அள்ளித் தருவான் அவனைப் பணிவாம்!
உள்ளத் தினிலே உறவாய் அவனைக்
கொள்ளப் பெருகிக் குவியும் சுகமே! ..(101)[வரசித்திவிநாயகன் ஒரு வள்ளல்! அள்ளித் தருபவன்! அவனை நாம் பணிவோம்! உள்ளத்தில் அவனை நம் உறவாகக் கொண்டால் சுகமே பெருகி நிறையும்!] ..(101)
சுபம்
நல்வாழ்த்துகள்
கோபால்.