--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNUzm-q2zivp6JPF4XHifv-%3D3suXBf0dk-qZbpW%3D-vzQQ%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBA5v%2BtqYEzBGXONJ5RFkkZ%2Brfe22jiHgssm1Z2bNzmB%2Bg%40mail.gmail.com.
Thanks to Prof. Pasupathy for compiling and sharing several early SV kaviyarangams.
He had shared this file in SV on 2012-11-06 with kaviyarangam 12 songs,
Sharing Harikrishnan's segment from that kavirangam file - (as a random sample) - to give a glimpse of his writings to those SV members who do not know him.
V. Subramanian
===
53.
கிரிதானவர், கிளர்வான் தடவிடும்
கரிதானவர், தாவிடும் கற்பனைப்
பரிதானவர், இலையிலை நண்பருக்(கு)
அரிதானவர் அரங்கினில் உதித்தனரே!
அரியாதவர், சொல்லை மழுப்பத்
தெரியாதவர், இணையத் திவரைத்
தெரியாதவர் இலையெனும் புகழினர்,
விரியாதொரு நூலிலை வலையினிலே!
கவியானவர், கம்பனைக் கற்றவர்
செவியாரத் தமிழ்தரும் வித்தகர்,
புவியாவினு மாணவர் கொண்டவர்,
சவியாகிய கவிதர வேண்டுவனே!
சந்தமும் வசந்தமும் கொஞ்சும்
அந்தமில்லாத அழகை, ஹரியே
உந்தன் கவிதையில் உளம்களிக்கத் தரவேண்டும்!
அன்புடன்
மதுரபாரதி
அரிதானவர் - ஹரிதான் + அவர் (ஹரிகிருஷ்ணன்தான் அவர்; இந்தக் குழுமத்தில் கொஞ்சம் அரிதாகிவிட்டார் என்பதாக நீங்கள் புரிந்துகொண்டால் நான் பொறுப்பல்ல :-))
அரியாதவர் - அரிகிருஷ்ணன் (யாதவர் - கிருஷ்ணன்)
புவி யாவினும் மாணவர் கொண்டவர் - சென்னை ஆன்லைனில் வெளியான இவரது கம்பராமாயணக் கட்டுரைகளுக்கும், மடற்குழுக்களில் வெளியான வெண்பா வகுப்புகளுக்கும் உலகத்தின் பல பகுதிகளிலும் இவருக்கு ஒரு பெரும் மாணவர் படையே இருக்கிறது.
மன்றமையத்தில் ( http://forumhub.com/tlit ) கம்பராமயணம் இழையில் தினந்தோறும் பொருளோடு இடப்படும் கம்பராமாயணச் செய்யுள்களை வால்மீகியோடு ஒப்பிட்டு, பல அரிய விளக்கங்கள் தருகிறார். (அடியேனுடையதும் இதில் ஒரு சிறிய பங்களிப்பு உண்டு).
சவி - தெளிவு
54.
=====================
| அரிதானவர் - ஹரிதான் + அவர் (ஹரிகிருஷ்ணன்தான் அவர்; இந்தக்
| குழுமத்தில் கொஞ்சம் அரிதாகிவிட்டார் என்பதாக நீங்கள் புரிந்துகொண்டால்
| நான் பொறுப்பல்ல :-))
======================
ஏங்காணும் தலைவரே! எத்தனை நாள் கோபமையா? அரிதானவர் என்று பொடி வைக்கிறீர்? அரி தானவர் என்றால் அரி ஒரு ராட்சசன் என்றில்லையோ பொருள்? தானவர்=அரக்கர். :))
எழிற்கொள்ளை
=o0o=
இறை
சின்ன எழுத்துகளால் சிற்பம் வடிப்பதற்கு
உன்னைத் தொழுகின்றேன் ஓங்காரா - வன்ன
மயிலெழிலன் சந்த வடிவெழிலன் துள்ளும்
ஒயிலெழிலன் நிற்கட்டும் உள்.
தலை
எண்ணத் தெறிப்புகளில் ஏற்ற கவிச்செயலில்
உண்மை ஒளிரும் உணர்வுகளில் - திண்ணம்
பழகுதமிழ் செய்மதுர பாரதியின் சொல்லில்
இழைவதுவோ கொள்ளை எழில்.
அவை
முன்னும்* கவியெழிலின் மூர்ச்சிதத்தை உள்நிறுத்தி
சின்னதொரு பூவில் சிறகசைத்து - மன்னி
இருக்கின்ற பேரெழிலை என்னாளும் நெஞ்சக்
கருத்திருத்தும் நல்அவையே கண்டு.
*முன்னுகின்ற
=o0o=
எழிற் கொள்ளை
===============
கைப்பிடித்த நாள்முதலாய்க் கால்தடத்தைக் காத்தெனது
மெய்பிடித்து நெஞ்சுக்குள் வேர்பிடித்த - செய்யமுது
கண்ணில் சிரிப்பேற்றிக் காலம் வழிவருதல்
எண்ணுவதோ கொள்ளை எழில். 1
என்னுள் முளைத்தவுயிர் என்விரலைப் பற்றிவழி
சின்னப் பதமெடுத்துச் சேர்ந்தவுயிர் - என்னைப்
பதமேற்றும் வண்ணம் படர்ந்து செழித்து
இதமேற்றல் கொள்ளை எழில். 2
தன்மனையைத் தாண்டிமனம் சற்றே விழிபூத்துத்
துன்பத் தடம்மாற்றச் சூழுமெனில் - என்றென்றும்
காந்தும் மனங்களுக்குக் கைகொடுக்க நெய்விளக்கு
ஏந்துவது கொள்ளை எழில். 3
காய்ந்த வயிற்றுக்குக் கையன்னம்; செய்கையெலாம்
ஓய்ந்த கரங்களுக்(கு) ஓர்உதவி - தோய்ந்திருக்கும்
அன்பில் துளிர்த்துசெயல் ஆற்றல் பெருக்கிடுமோர்
இன்பமே கொள்ளை எழில். 4
வற்றி இளைத்தெண்ணம் வாடி நலிந்துநீர்
முற்றி முளைத்தவிழி மோனத்தில் - ஒற்றைச்சொல்
ஆறுதலாய் உள்புகுந்து ஆற்றத் திரும்பவுயிர்
ஏறுவதே கொள்ளை எழில். 5
கானத்தில் கற்ற கவியெல்லாம் என்னுயிரில்
மோனத்தை என்றும் முளைக்கவைத்தால் - நானத்தை
சற்றேனும் உள்வைத்தல் சாதித்தால் என்துன்பம்
எற்றாதோ கொள்ளை எழில். 6
வாழ்ந்த கணங்களுக்குள்; மாறும் கணங்களுக்குள்;
சூழ்ந்த துயரின்பச் சூழலுக்குள் - ஆழ்ந்து
நனைத்த அனுபவத்தை நானுணர்ந்து பார்த்தால்
எனைத்திறக்கும் கொள்ளை எழில். 7
சொல்பிசைந்து எண்ணத்தில் சோதி கொளுத்தியொரு
நல்ல கவிசொல்ல நாவசைய - வல்லான்
மறைந்திருந்து சொல்வதென்றன் வாயசைப்பில் வந்தால்
இறைந்திருக்கும் கொள்ளை எழில். 8
வாழ்ந்த தடம்காட்டும் வண்ணம் சிலநொடிகள்;
தாழ்ந்தும் சிலநொடிகள்; சாதனைக்குள் - போழ்ந்து
மனமுதிர்ந்த காலம் வழித்தடமாய் நின்றால்
இனங்காட்டும் கொள்ளை எழில். 9
எண்ணத் தெளிவிருந்தால் ஏற்கும் மனமிருந்தால்
கண்ணில் மனத்தில் களிப்பிருந்தால் - வண்ணத்தில்
ஒன்றிக் கலந்திருந்தால் உண்மை உலகெல்லாம்
என்றென்றும் கொள்ளை எழில். 10
அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.
On 8 May 2026, at 8:14 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCM-E552McUSnhDei5XWGAqmiGHEur7UQXY%2BxeK5JZ%3Djqw%40mail.gmail.com.