ஶ்ரீ ஆதி சங்கரர் அருளிச் செய்த ஆத்ம போதம் (आत्मबोधः) என்னும் நூலுக்கு விளக்கவுரையை விருத்தங்களாக எழுதும் முயற்சி.
ஶ்ரீ ஆதி சங்கரர் அருளிச் செய்த
ஆத்ம போதம் (आत्मबोधः) - பொருள் விளக்கும் விருத்தங்கள்
(அறுசீர் ஆசிரிய விருத்தம் - மா மா காய் - அரையடிக்கு)
1.
மெய்யால் மனத்தால் வாக்காலே
… மேற்கொண் டொழுகும் தவத்தாலே
பொய்நீத் தகத்தே புரையற்றார்
… பொங்கல் இல்லாத் திரமனத்தார்
நைவும் அற்றார் நசையற்றார்
… நச்சும் பேறு வீடென்பார்
துய்யர் அவர்தாம் பயனுறவே
… சொல்வேன் ஆன்ம போதமிதே.
(புரை அற்றார் = குற்றம் அற்றவர்கள்;
பொங்கல் இல்லாத = உணர்ச்சிகளைப் பொங்காத சாந்த குணமுடைய;
திரமனத்தார் = ஸ்திர மனத்தார்;
நைவு = ஏங்கி வாடுதல்;
நசை = பற்று;
நச்சும் = அடைய விரும்பும்;
துய்யர் = தூயவர்கள்;)
(கருத்து: தவத்தால் பாவங்கள் நீத்தவர்கள், சாந்த குணமுடையவர்கள், ஆசையற்றவர்கள், வீடு பேறே விழைபவர்கள் ஆகிய இத்தகைய தூயவர்களுக்குப் பயன்படவேண்டும் என்னும் நோக்கோடு ஆத்ம போதமாகிய இந்நூலை இயற்றுகிறேன்).
।।श्रीः।।
।।आत्मबोधः।।
तपोभिः क्षीणपापानां शान्तानां वीतरागिणाम्।
मुमुक्षूणामपेक्ष्योऽयमात्मबोधो विधीयते।।1।।
..Śrīḥ..
..Ātmabodhaḥ..
Tapobhiḥ kṣīṇapāpānāṃ śāntānāṃ vītarāgiṇām.
Mumukṣūṇāmapekṣyo’yamātmabodho vidhīyate..1..
2.
பருப்புப் புனல்பாத் திரமிவைபோல்
… பலவும் அடுப்பில் சிறந்திருந்தும்
நெருப்பொன் றின்றேல் நீணிலத்தில்
... நிறைவாய் உணவு சமைந்திடுமா?
விருப்பம் தியாகம் தவமுழைப்பு
… வேள்வி எனப்பல் ஒழுங்கிருந்தும்
விரைக்கும் மலர்போல் அறிவின்றேல்
... வீடு பேறும் வாய்த்திடுமோ?
(விரைக்கும் = மணக்கும்)
(கருத்து: பல்வேறு வகையான பொருள்கள் இருந்தும் நெருப்பில்லை என்றால் உணவு சமைக்க முடியாது. அதுபோல, மற்ற ஒழுக்கங்களில் சிறந்து இருந்தாலும், அறிவு என்னும் ஒழுக்கம் இல்லையென்றால் வீடு பேறு கிட்டாது)
बोधोऽन्यसाधनेभ्यो हि साक्षान्मोक्षैकसाधनम्।
पाकस्य वह्निवज्ज्ञानं विना मोक्षो न सिध्यति।।2।।
Bodho’nyasādhanebhyo hi sākṣānmokṣaikasādhanam.
Pākasya vahnivajjñānaṃ vinā mokṣo na sidhyati..2..
3.
செயிர்சேர் மருளே மிகமருவிச்
… செயல்கள் எதுவும் நடப்பதனால்
மயர்வை முற்றும் ஒழித்திடஓர்
… மருள்சேர் செயலால் முடிந்திடுமா?
வியன்பே ருலகின் இருளெல்லாம்
… விலக்கும் விரிவான் சுடர்போலே
அயர்வே இல்லா அறிவன்றோ
… அகத்தின் மடமை அறுப்பதுவே?
(செயிர் = குற்றம்; மருள், மயர்வு, மடமை = அறியாமை; அயர்வு = சோர்வு; )
[கருத்து : செயல்கள் யாவும் அறியாமையோடு முரண்படாமல் எப்போதும் அந்த மடமையுடன் இணைந்தே ஆற்றப்படுகின்றன. அதனால், செயலாற்றுவதால் அந்த அறியாமையைப் போக்க முடியாது. அடர்ந்த பேரிருளை எவ்வாறு ஒளியால் மட்டுமே ஒழிக்கமுடிவதைப்போல, அறியாமையை அழிக்க அறிவால் மட்டும் தான் முடியும் - (அதாவது, அறியாமையாகிய இருளைச் செய்கையாகிய இருளால் ஒழிக்கமுடியாது. அறிவாகிய ஒளியால் தான் முடியும்)].
अविरोधितया कर्म नाविद्यां विनिवर्तयेत्।
विद्याविद्यां निहन्त्येव तेजस्तिमिरसंघवत्।।3।।
Avirodhitayā karma nāvidyāṃ vinivartayet.
Vidyāvidyāṃ nihantyeva tejastimirasaṃghavat..3..
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/016B73BF-8A28-48D2-9913-B3A878943407%40gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNesf%2BqsaGi-VTxvgG2RSPX3OTPjpCV%3DJJzEim%2BLf8FJw%40mail.gmail.com.