தென்நைமிசம் அடைமினோ!

1 view
Skip to first unread message

Parthasarathy S

unread,
Apr 2, 2026, 8:49:13 PM (9 days ago) Apr 2
to santhav...@googlegroups.com

தென்நைமிசம் அடைமினோ!

அடியார்க்கடியான்

புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி,பெங்களூர்

 

திருவுடன் கனலியும் குருங்குடி அமர்ந்தென

திருவினை மடியினில் இருத்திய அரியவன்

அருவுரு அடியரும் அளிப்பதை அகமிடக்

கருவரை அமருதென் நயிமிசம் அடைமினோ                             1

  ( கனலி- பன்றி- வராஹன்; நைமிசம்- நயிமிசம்)

 

கடலிடம் மலர்விழி கருத்துடன் வளர்த்திடும்

அடலுடை அரியவன் அமர்ந்தனன் அழகுடன்

படவிரி அனந்தனின் பயிலணை நரகரி

படரெழில்   பதித்ததென் நயிமிசம் அடைமினோ!                   2

 

குணக்கடல் அளவில குளிர்மழை திருக்கணில்

கணக்கில பொழிதரும் கரமெலாம் கருணையில்

அணைத்திடும் தழைவிடும் அரும்பதம் தலையிட

அணிகலன் அமைக்குதென் நயிமிசம் அடைமினோ!              3

 

புதுவொரு பொலிவினில் பரவினன் வரமதை

இதமொடு கருத்தினில் இருத்திய பழையவன்

நகமதில் எதிரியின்  நெடுங்கதை முடித்தவன்

அகமெனத் தெரிந்ததென் நயிமிசம் அடைமினோ                4

 

கனவிலும் நினைவிலும் கருத்தினில் எதிரியின்

மனதினில் இருந்தவன் மலரடி தருபவன்

நனையென நலமதில் நடத்துவன் நிலையினைத்

தனமெனக் குலவுதென் நயிமிசம் அடைமினோ                     5

 

மறையது மறைந்திட மயலுறு பிரமனின்

கறையது கடிந்திடக் கடலடிப் பொருதினன்

உறைவிட(ம்) ஒளிதிகழ் உயர்நலன் புவியதில்

குறைவற அளிக்குதென் நயிமிசம் அடைமினோ                     6

 

புரந்தரன் இழந்ததைப் புதுமையில் இரந்தவன்

துரந்தரன் தகவுடன் துயரதைத் தகர்ப்பவன்

நிரந்தரன் நலனுடை நிமலனும் நடைமிக

வரந்தர வசிக்குதென் நயிமிசம் அடைமினோ                          7

 

தினம்வளர் எரியழல் தெரிதரு பலநலம்

மனங்குளிர் அரியவன் மதியருட் செயலது

கனம்மிகு அடியரின் கடுந்துயர் அறுந்திடத்

தனம்மிக இருத்துதென் நயிமிசம் அடைமினோ                       8

 

விழியதில் கருணையின் விரியொளிர் சிறந்திட

அழிவுறும் வினையதும் அகத்தினில் அளவிடும்

பழியெதும் அடியரைப் படருவ திலையென

செழிதிரு பொழியுதென் நயிமிசம் அடைமினோ                    9

 

இரவிலை பகலிலை இடமதும் வெளியுளும்

தெரிவிலை படைகளும் தொடவிலை அசுரனின்

பரிவிலை உரமதைப் படுத்தனன் உகிரதில்

உரிமையில் உதவுதென் நயிமிசம் அடைமினோ                      10

 

இருமறை செவிபட இருக்குமிவ் விறையவன்

ஒருமுறை மதலையை உயிர்தரும் வயிறென

அருமையில் இருத்தியே அதிசயம் விளைத்துடன்

திருவுடன் அமருதென் நயிமிசம் அடைமினோ!                      11

( மதலைதூண்)

 

படியதைத் தனதெனப் பரப்பியத் திருவடி

நொடியினில் அடைவகை நெடியவன் இடும்புகழ்

அடியவர்க் கடியவன் அருந்திட விரித்தவை

படிவினை விடுத்துடன் பழைவிடம் படிக்குமே                      12

 (பழையவிடம்பழைவிடம் தொகுத்தல்விகாரம்; படித்தல்தங்கவைத்தல்;)


--
S. Parthasarathy

+91 98441 24542
Reply all
Reply to author
Forward
0 new messages