அருள்மிகும் எவ்வுள் அரசன்
(சந்த விருத்தம்
- தானான தான தானான தான - தானான தான தனனா)
வானோடு பூமி தாளால் அளக்க
… மாலாய்ப் பரந்து வளர்வான்
ஊனாதி ஐந்தின் ஊடோடு கின்ற
… ஓராவி ஆக உறைவான்
வானேத்து கின்ற நாலாயி ரந்நம்
… வாழ்வென்று சொல்ல மகிழ்வான்
மாநாக மீதொர் ஏகாந்த யோகம்
… மாறாத எவ்வுள் அரசே. (1)
(நாலாயி ரந்நம் = நாலாயிரம் + நம் - விரித்தல் விகாரம்)
ஆராத இன்பம் ஆர்கின்ற அன்பை
… ஆறாய் வழங்கி அருள்வான்
பேரோதி நின்ற தோர்நெஞ்சி னின்று
… பேராதி ருந்துள் ஒளிர்வான்
கூராழி யோடு சங்கொன்ற ணிந்து … கூடாரை வென்று திகழ்வான்
தீராத நோய்கள் தீர்த்தெங்கள் வாழ்வு
… சீராக்கும் எவ்வுள் அரசே. (2)
- இமயவரம்பன்