உங்கள் கருத்துக்கும் அழகிய பாராட்டு வெண்பாவிற்கும் மிக்க நன்றி (நேரமினமையால் உடனே பதில் எழுத இயலவில்லை).
>> பண்டரி விட்டலுக்குப் பிறகு பாமரர்களோடு பழகிய ஒரே தெய்வம் ஆலவாய் சொக்கன்
சொக்கன் தானே விட்டலுக்கு வழி சுட்டியவன்! :-).
சொக்கர் அந்தாதி எழுத அவன் துணை செய்யக் காத்திருப்பேன். இப்போதைக்கு தில்லை இறைவன் பேரில் முன்னம் எழுதிய ஒரு அந்தாதியையும் பின் மடக்கு வெண்பாவையும் இணைத்துள்ளேன். (உங்களுக்கு விருப்பமிருந்தால் சிவபெருமான் மீது பிரதோஷ நாளன்று எழுதிவரும் பாடல்களை அனுப்புகிறேன்).
1. உங்களைத் தெரியாதவர்கள் எவருமில்லை எனினும் கானடாவிலேயே வாழ்க்கையைச் செலவழித்து வந்துள்ள நான் உங்கள் நாடகம் எதையும் பார்த்ததில்லை. அடுத்த முறை அமெரிக்க விஜயத்தின்போது டொராண்டோவையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
2. நீங்கள் மரப்புக்கவிதையில் நாட்டமும் தேர்ச்சியும் கொண்டவர் என இப்போதுதான் தெரிந்துகொண்டேன். உங்கள் பிற படைப்புகளை எங்குப் பார்க்கலாம்? இணையத்தில் ‘சந்தவசந்தம்’ என்னும் மரபுக்கவிதைத் தளத்தில் நீங்கள் சேர்ந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன் (https://groups.google.com/group/santhavasantham?hl=en). தளத்தைப் பார்வையிட்ட பி்ன், நீங்கள் சேர விரும்பினால் நான் அழைப்பு விடுகிறேன்.
3. தேவையெனில் உங்கள் மீனாட்சி கல்யாணக் கவிதையில் கண்ட சில சிறிய திருத்தங்களைப் பற்றிப் பேசலாம்.
===========
Emeritus Professor of Biochemistry
McMaster University
Hamilton ON
web: http://www.science.mcmaster.ca/biochem/faculty/ananthanarayanan/ananth.html
உங்கள் நெஞ்சத்தில் நடந்த ’மீனாட்சி திருக்கல்யாண’த்தை நாங்களும் கண்டு களிக்கச் செய்ததற்கு மிக்க நன்றி. அன்னையிடம் எத்தனை ஈடுபாடு இருந்தால் இத்தகைய கவிதை
உருவாகியிருக்கும் என்று எண்ணிப் பார்க்கையில் வியப்பாக இருக்கிறது. ஒரு ஒளிப்பதிவு போல, ஒவ்வொரு வரியும் கல்யாண நிகழ்ச்சிகளைக் கண்முன்னே கொண்டுவருகிறது. பக்தனுக்கே உரிய தனி உரிமையான நிந்தாஸ்துதியோடு அமைந்த வெண்பாக்கள் மிக அருமை: காட்டாக:
பிள்ளைக்கு சீராகப் பொன்னில் திருவோடும்
வெள்ளி முலாமிட்ட வெண்ணீறும் -கொள்ளியிடும்
குச்சிக்குப் பூணிட்டு காளைக்கு லாடமிட்டார்
மச்சினர் மல்லாந்த மால்
குனித்த தலையாய், குதிகால் நடையாய்
பனித்த விழியாய் பயந்து -தனித்திருந்து
புக்ககக் கூடலில் பூனையாய் வால்சுருட்டி
முக்கண்ணன் சொக்கன் முழிப்பு..
இச்சென்று முத்தமிட ஈசன் நெருங்கிட
நச்சென்று நாகம் நெளிந்தது -அச்சச்சோ
என்றலறி மீனாள் எகிறி குதித்தோட
அன்றுசிவ ராத்திரி ஆச்சு....(27)
நான் பள்ளிப் பருவத்தில், மதுரையில் சித்திரைத் திருவிழாக் காலத்தில் மீனாக்ஷி-சுந்தரேச்வரர் திருமண வைபவத்தைப் பலமுறை நேரில் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். அந்நிகழ்ச்சியை மீண்டும் கொண்டுவந்து தந்ததற்கு நன்றி.
1. மீனாட்சி பேரில் முன்பு இயற்றிய (கட்டளைக் கலித்துறை அந்தாதி) பாடல் தொகுப்பொன்றை இணைத்துள்ளேன்.
2. உங்கள் வெண்பாக்கள் தளைதட்டல் ஏதுமின்றி அழகாய் அமைந்துள்ளன. எனினும், ஓரிரு இடங்களில் குற்றியலுகரப் புணர்ச்சியால் தளை தட்ட வாய்ப்பிருக்கிறது.