ஓம் சக்தி
பாஞ்சாலி சபதம்
முதற் பாகம்
ஓமெனப் பெரியோர்கள் - என்றும்
ஓதுவதாய் - வினை - மோதுவதாய்
தீமைகள் மாய்ப்பதுவாய் - துயர்
தேய்ப்பதுவாய் - நலம் - வாய்ப்பதுவாய்
நாமமும் உருவுமற்றே - புந்தி
நாடரிதாய் - மனம் - தேடரிதாய்
ஆமெனும் பொருள் அனைத்தாய் - வெறும்
அறிவுடன் ஆனந்த இயல்புடைத்தாய் (1)
பதம் பிரித்து:
ஓம் எனப் பெரியோர்கள் - என்றும்
ஓதுவதாய் - வினை - மோதுவதாய்
தீமைகள் மாய்ப்பதுவாய் - துயர்
தேய்ப்பதுவாய் - நலம் - வாய்ப்பதுவாய்
நாமமும் உருவும் அற்றே - புந்தி
நாட அரிதாய் - மனம் தேட அரிதாய்
ஆம் எனும் பொருள் அனைத்தாய் - வெறும்
அறிவுடன் ஆனந்த இயல்பு உடைத்தாய்
குறிப்புகள்:
அ: சொற் பொருள்: ஏதுமில்லை.
ஆ: இலக்கணம்
புந்தி - புத்தி என்பதன் மெலித்தல் விகாரம்
இ: யாப்பு:
இது சிந்துப் பா என்ற வகையில் நொண்டிச் சிந்து என்ற உட்பிரிவைச் சேர்ந்தது. சிந்துப் பா பெரும்பாலும் நாட்டுப்புறப் பாடல்களில் பயில்வது என்றாலும், இதற்கும் இலக்கண வரையறைகள் உண்டு. 'படிக்காதவனுக்கு எப்படி யாப்பு தெரியும்,' என்று தோன்றலாம். இசைக் கணக்கு பிசகாத வரையில் யாப்பு பிசகவே பிசகாது. இது உண்மை. மேற்படிப் பாடலில் (இன்னும் தொடரப் போகும் பாடல்களிலும்) வெண்டளை மட்டுமே பயின்று வருவதைப் பார்க்கலாம்.
இந்தப் பாடல் குளகம் என்று அறியப்படும் தரவு வகை. தரவு என்றால் ஆங்கிலத்தில் stanza என்று சொல்கிறோமே, அது. சிலர் paragraph என்கிறார்கள். கவிதையில் ஒரு பத்தியைப் பத்தி என்று சொல்வதில்லை. அதற்குத் தரவு என்று பெயர். ஆங்கிலத்திலும் paragraph என்று சொல்வதில்லை; stanza என்றே சொல்கிறார்கள்.
ஒரு பாடல் நான்கு அடிகளுக்குள் (மறுபடியும்: கவிதையில் பயில்வதை வரி என்று சொல்வதில்லை. அடி என்று சொல்ல வேண்டும்.) பொருள் முடிந்துவிட்டால், வாக்கியம் முடிந்துவிட்டால் அதை 'முத்தகம்' என்று சொல்வோம். அப்படி முடிவடையாமல், அடுத்த பாட்டுக்குத் தொடர்ந்தால் அதைக் 'குளகம்' என்போம். இந்தப் பாடலில் பயிலும் வாக்கியம் இன்னும் முடிவடையவில்லை. அடுத்த பாடலுக்குத் தொடர்கிறது. ஆகவே இது குளகம். அடுத்த பாடலில் வரும் 'நின்றிடும் பிரமம் என்பார்' என்னும் இடத்தில் பாடலின் ஒரு பகுதி முடிவடைகிறது. 'பிரமம்' என்பதே இங்கே எழுவாய். அதாவது subject, predicate, object என்று சொல்வோமே, அவற்றில் subject.
ஈ: பாடல் சொல்வது:
'ஆம் எனும் பொருள் அனைத்தாய்.' எதுவெல்லாம் உள்ள பொருளோ, எதுவெல்லாம் 'இருக்கிறது' என்று அறியப்படுகிறதோ அதுவெல்லாம். இந்த, 'ஆம் என்னும் பொருளே' 'ஓம்' என்னும் சொல்லுக்குப் பொருள். இதனால்தான் வேதத்தில் பிரமத்துக்கு இந்தப் பெயர். இது பாரதியே சொல்லும் குறிப்பு.
நின்றிடும் பிரமம் என்பார் - அந்த
நிர்மலப் பொருளினை சிந்தை செய்வேன்
நன்றுசெய் தவம்யோகம் - சிவ
ஞானமும் பக்தியும் நணுகிடவே
வென்றிகொள் சிவசக்தி - எனை
மேவுறவே இருள் சாவுறவே
இன்றமிழ் நூலிதுதான் - புகழ்
ஏய்ந்தினிதாய் என்றும் இலகிடவே. (2)
பதம் பிரித்து: இந்தப் பாடலுக்குத் தேவையில்லை. இன்றமிழ் என்பதை இன் தமிழ் என்றும், ஏய்ந்தினிதாய் என்பதை ஏய்ந்து இனிதாய் என்றும் பிரித்துக்கொள்ள வேண்டும்.
அ: சொற் பொருள்:
நிர்மலப் பொருள்: மலம் என்றால் அழுக்கு; குற்றம். நிர்மலம் என்றால் அழுக்கற்றது; குற்றமற்றது.
பிரமம்: பிரமம் அல்லது பிரம்மம் என்பது வேறு; பிரம்மன் எனப்படும் படைத்தல் தொழிலை மேற்கொண்ட இறைவன் வேறு.
மேவுறவே: மேவுதல்: 1. அடைதல் (to reach); 2. விரும்புதல் 3. நேசித்தல், 4. ஓதுதல் (to learn) 5. உண்ணுதல் 6. நிரவி, சமம் ஆக்குதல் 7. மேலிட்டுக் கொள்ளுதல் (to manifest, to assume) 8. வேய்தல் (to thatch, to cover)
இந்த இடத்தில் 'வெற்றிகொள்ளும் சிவசக்தி என்னை வந்து அடையட்டும்,' என்று பொருள். 'வீணையடி நீயெனக்கு மேவு விரல் நான் உனக்கு' என்ற இடத்தினைப் போல். 'நான் அதை அடைந்தவனாகட்டும்' என்றிருந்தால், 'நான் அதற்குத் தகுதியானவனாகட்டும்' என்று பொருள் கொள்ளலாம். இங்கே அவ்வாறில்லை என்பது கவனிக்கத் தக்கது.
ஏய்ந்து: ஏய்தல் என்ற வினைச் சொல்லில் இருந்து பிறந்த சொல். பொருந்துதல் (to be suited), தகுதல் (to be fit) என்று இந்தச் சொல் transitive verb ஆகப் பயன்படும்போது பொருள் வரும். இந்த நூல் புகழ் பொருந்தியதாய், புகழுக்குத் தக்கதாய் விளங்கட்டும் என்ற வேண்டுதலுடன்
ஆ: இலக்கணம்: வென்றி: வெற்றி என்பதன் மெலித்தல் விகாரம்.
இ: யாப்பு: இதுவும் நொண்டிச் சிந்து
ஈ: பாடல் சொல்வது: நிர்மலப் பொருளாக விளங்கும் பிரமத்தை நான் என் மனத்தில் இருத்துகிறேன். தவமும், யோகமும், சிவஞானமும், பக்தியும் என்னால் நன்றாகச் செய்யப்படட்டும். சிவசக்தி என்னை அடையட்டும். இன் தமிழில் செய்யப்படும் இந்த நூல் புகழுள்ளதாக என்றும் விளங்கட்டும்.
சரஸ்வதி வணக்கம்
வெள்ளைக் கமலத்திலே - அவள்
வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள்
கொள்ளைக் கனிஇசைதான் - நன்கு
கொட்டுநல் யாழினைக் கொண்டிருப்பாள்.
கள்ளைக் கடலமுதை - நிகர்
கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொலவே
பிள்ளைப் பருவத்திலே - எனைப்
பேணவந்தாள் அருள் பூணவந்தாள். (3)
பதம் பிரித்து: இந்தப் பாடலுக்குத் தேவையில்லை
அ. சொற் பொருள்: -
ஆ. இலக்கணம்:
கொட்டுநல்: கொட்டும் நல் என்று ஏன் சொல்லவில்லை? வருமொழி முதலில் ந-கரம் வரின், நிலைமொழி ஈற்று மகரம் கெடும். அதாவது, இரண்டாவது சொல் 'ந' வர்க்கத்தில் தொடங்கியிருந்தால், அதே சமயத்தில் அந்த இரண்டாவது சொல்லுக்கு முன்னால் இருக்கும் சொல் 'ம்' என்ற எழுத்தில் முடிந்திருந்தால், அந்த முதற் சொல்லின் கடைசி எழுத்தான 'ம்' ஒலிக்கப்படாது; எழுதப்படாது. 'கொட்டும்' என்று முதற் சொல் 'ம்' என்ற எழுத்தில் முடிந்திருக்கிறது. அடுத்த சொல் 'நல்' என்று ந-கரத்தில் தொடங்குகிறது. எனவே கொட்டுநல்.
இந்த விதியைப் பின்பற்றுவது 'எளிமை நாடுவோருக்குச் சற்றுக் கடினம்' என்று குறிப்பிடுகிறார் பேராசிரியர் ம. ரா. போ. குருசாமி அவர்கள். என்ற போதிலும் இந்த விதியை நெடுகிலும் போற்றியிருக்கிறான் பாரதி. எல்லா இடங்களிலும் இந்த விதி பின்பற்றப்பட்டிருப்பதைக் காணலாம்.
கள்ளைக் கடலமுதை - கள்ளையும், கடல் அமுதையும் என்று 'உம்'மை தொக்கி நிற்பதால் உம்மைத் தொகை.
கண்டதொர்: கண்டதோர் என்பதன் குறுக்கல் விகாரம்.
இ. யாப்பு:
இதுவும் நொண்டிச் சிந்து.
ஈ. பாடல் சொல்வது:
'சரஸ்வதி வணக்கம்' என்று வாணியைத் துதித்துத் தொடங்கிய சில கவிஞர்களுள் பாரதி ஒருவன். இங்கே மட்டுமின்றி, பாஞ்சாலி சபதத்தின் 'இரண்டாவது சூதாட்ட சருக்கம்' தொடங்கும் போதும் 'தெளிவுறவே அறிந்திடுதல்' என்று தொடங்கி 'ஒளி வளரும் தமிழ் வாணி' என்று வாணி வணக்கம் செய்திருப்பதைக் காணலாம். பாஞ்சாலி சபதத்தின் இரண்டாம் பாகம் பராசக்தி வணக்கத்தோடு தொடங்குகிறது.
'பிள்ளைப் பருவத்திலே எனைப் பேண வந்தாள் - அருள் - பூண வந்தாள்' என்ற இடம், 'சிறு வயதில் வாணியே தன்னை நேரில் ஆட்கொண்டாள்' என்று கவிஞன் சொல்வதாகக் கருதுவோர் உண்டு. பிள்ளைப் பருவ நிகழ்ச்சிகளைச் சொல்லும் போதெல்லாம் பாரதி இப்படி ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறான் என்பது நோக்கத் தக்கது.
ஆதிரைத்திரு நாளொன்றில் சங்கரன்
ஆலயத்தொரு மண்டபம் தன்னில்யான்
சோதி மானொடு தன்னந் தனியனாய்ச்
சொற்களாடி யிருப்ப மற்று அங்கு அவள்
பாதி பேசி, மறைந்து பின் தோன்றினாள்
பங்கயக் கையில் மை கொணரந்தே 'ஒரு
சேதி, நெற்றியில் பொட்டு வைப்பேன்' என்றாள்.
திலதமிட்டனள். செய்கை அழிந்தனன்.
என்று 'கனவு' என்ற தலைப்பில் செய்யப்பட்ட தன் வரலாற்றில் சொல்வது, வாணியின் அருள் பெற்ற நிகழ்வையா அல்லது இளம்பருவத்தில் ஏற்பட்ட காதலையா என்ற ஐயத்தைத் தந்தாலும், இன்னோர் இடத்தில் மிகத் தெளிவாகவே சொல்கிறான்.
'மூன்று காதல்' என்று சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி தேவியரின் மீது கொண்ட காதலை விவரிக்கும் கவிதை சரஸ்வதியைக் குறித்துத் தொடங்குகிறது.
'பிள்ளைப் பிராயத்திலே - அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேன் - அங்குப்
பள்ளிப் படிப்பினிலே - மதி
பற்றிடவில்லை.....
'ஆற்றங் கரைதனிலே - தனி
ஆன மண்டப மீதினிலே - தென்றல்
காற்றை நுகர்ந்திருந்தேன் - அங்குக்
கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள்....'
இது சிந்திக்கத் தக்கது.
வேதத் திருவிழியாள் - அதில்
மிக்கபல் லுரையெனும் கருமையிட்டாள்.
சீதக் கதிர்மதியா - நுதல்
சிந்தனையே குழல் என்றுடையாள்.
வாதத் தருக்கமெனும் - செவி
வாய்ந்த நற்றுணிவெனும் தோடணிந்தாள்.
போதமென் நாசியினாள் - நலம்
பொங்குபல் சாத்திர வாயுடையாள். (4)
பதம் பிரித்து: இந்தப் பாடலுக்குத் தேவை இல்லை. நற்றுணிவு என்பதை நல் துணிவு என்று பிரித்துக் கொள்ளவும்.
அ. சொற் பொருள்
சீதக் கதிர்: குளிர்ச்சியான ஒளி. சந்திரன் அல்லது மதியின் கிரணங்களுக்கு நிலா என்பது பெயர். (நிலா என்பது ஆகாயத்தில் வட்டமாக மிதக்கிறதே, அதைக் குறிக்கும் பெயராக இருந்ததில்லை. சந்திரனின் ஒளிக்கு அந்தப் பெயர் வழங்கி வந்தது.)
கலவிக் களியின் மயக்கத்தால்
கலைபோய் அகலக் *கலை மதியின்
நிலவைத்* துகில் என்று எடுத்து உடுப்பீர்!
நீள்பொன் கபாடம் திறமினோ!
(கலிங்கத்துப் பரணி - கடைத் திறப்பு)
'ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்' என்று கண்ணதாசன்(?) எழுதிய திரைப்பாடலில் இந்தக் கருத்து இடம் பெற்றது.
சுடர்ப் பரிதி ஒளிப்ப *நிலவு ஒழுக்கு மதி*
ஒளிப்ப அலை அடக்கு தழல் ஒளிப்ப
ஒளிர் ஒளிப் பிரபை வீசும்
(வேல் வகுப்பு - அருணகிரி நாதர்)
சூரியனின் கிரணங்களுக்குக் கதிர் என்று பெரும்பாலும் வழங்கும். ஆனால் சூரிய, சந்திரருக்கே கூட 'கதிர்' என்ற பெயர் உண்டு. 'சீத' என்ற அடைமொழியோடு சொன்னதற்கு இந்தக் காரணம் இருந்திருக்கலாம்.
போதம்: ஞானம் (wisdom); அறிவு (knowledge, intelligence). அறிவின் மேல் நிலையே ஞானம். அறிவு என்பது ஒரு data bank போல. தகவல் தளத்தைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் முடிபுகளை மனிதன் இன்னும் துல்லியமாகக் கணக்கிட்டுக் கொள்கிறான் அல்லவா, அது ஏறத்தாழ ஞானம் என்று சொல்லலாம்.
ஆ. இலக்கணம் -
இ. யாப்பு
இதுவும் நொண்டிச் சிந்து
ஈ. பாடல் சொல்வது
வாணிக்கு வேதமே விழி; வேதங்களுக்குக் காணப்பட்ட உரை, அந்த விழிகளுக்கு இடப்பட்ட மை. ('மை கண்ணுக்கு நல்லது. அழகுங் கூட. ஆனால், அளவுக்கு மிஞ்சிப் பூசினால் விகாரமாகத் தோன்றுவதுடன் கண்ணே போனாலும் போய்விடும்' என்று பாரதி இந்த இடத்துக்குக் குறிப்பு எழுதியிருக்கிறான். உரையாசிரியர்கள் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்பு. {நான் எழுதுவது குறிப்பு. உரையில்லை. எனவே எனக்கு இது பொருந்தாதப்பா... :P} குளிர்ச்சியான ஒளி விடும் சந்திரனே அவளுடைய நெற்றி. சிந்தனையே அவளுடைய குழல்.) வாதம், தருக்கம் என்பன அவளுடைய செவி. அந்தச் செவிக்கு அலங்காரமான தோடு எதுவோ என்றால், துணிவு. துணிவில்லாத வாதமோ, தருக்கமோ அழகில்லாமல், ஒளிவிடாமல் போகும் என்பது குறிப்பு. ஞானமும், அறிவுமே சுவாசிக்கவும், உயிர் தரிக்கவும் தேவையான மூச்சைப் பெற்றுத் தரும் நாசி. பல விதமான சாத்திரங்களே அவளுடைய வாய்.
'சாத்திரங்களென்றாலே அருவருப்புக் கொள்பவன்' பாரதி என்றொரு கருத்துண்டு. 'கோத்த பொய் வேதங்களும், மதக் கொலைகளும் அரசர்தம் கூத்துகளும்,' என்றும் 'சாத்திரங்கள் பல தேடினேன், அங்குச் சங்கையில்லாதன சங்கையாம்,' என்றும் சொல்வதால் இப்படியொரு கருத்தை உருவாக்கிக் கொண்டுள்ளனர். பாரதி உண்மையில் சாத்திரங்கள் *எல்லாவற்றையும்* வெறுத்தவனல்லன். 'சந்தி தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்' என்று அவன் சொல்லும்போது, மிகுந்த பக்தி சிரத்தையுடன் 'சாத்திரம்' என்ற சொல்லை உச்சரிக்கிறான் என்பது என் கருத்து. (வேதங்கள், பற்றிய பாரதியின் கருத்தில் ஒரு சிறிது, 'கண்ணன் - என் தந்தை'யில் வெளிப்படக் காணலாம்.)
சாத்திரங்களை முற்றிலும் வெறுத்தவனாக இருந்திருந்தால், அவனுடைய வாணியை 'நலம் பொங்கு பல் சாத்திர வாய் உடையாள்' என்று சொல்லியிருக்க மாட்டான்.
'சிந்தனையே குழல்' என்று சொல்லியிருப்பது சுவைக்கத் தக்கது. 'முடியுமா?' என்ற என் பழைய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:
------------
"சீதக்கதிர் மதியா நுதல் சிந்தனையே குழல் என்றுடையாள்" என்றல்லவா சரஸ்வதியைப் பாடுகிறான் பாரதி? சிந்தனையே குழல் என்றால்? இரண்டுக்கும் அடர்த்தி இருந்தால்தான் மதிப்பு. தொடர்ந்த பராமரிப்பு இல்லாவிட்டால் குழல் கெட்டுப் போகும். தொடர்ந்த, முறையான பயிற்சி இல்லாவிட்டால் சிந்தனை கெட்டுப்போகும். பொடுகு, பேன் என்று அடர்ந்த கூந்தலைக் கெடுக்க ஆயிரம் வெளித்தாக்குதல்கள். அடர்ந்த சிந்தனையைக் கூட பல வெளித்தாக்குதல்கள் கெடுக்கும் - சரியான முறைகளைப் பின்பற்றாவிட்டால். வெட்டி, திருத்தி, வாரி, முடிந்துவைத்தால்தான் குழல் அழகாக விளங்கும். வெட்டி, திருத்தி, ஒழுங்குபடுத்தி, தகுந்த முடிவுகளுடன் இருந்தால்தான் சிந்தனை அழகுற விளங்கும். வயதானால் வண்ணம் மாறுவதைக்கூட சொல்லலாம். ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு. முப்பது வயதுக்குக் குறைந்தவன் கம்யூனிஸ்ட்டாக இல்லையென்றால் அவனுக்கு இதயமே கிடையாது. முப்பது வயதுக்கு மேற்பட்டவன் இன்னும் கம்யூனிஸ்டாகவே இருந்தால் அவனுக்கு மூளையே கிடையாது. (A person below thirty who is not a communist, has no heart. A person above thirty and who is still a communist, has no head.) சத்தியமாகக் கட்சித் தாக்குதல் இல்லை. நமக்கு வேறெந்த சாயமும் கிடையாது. வயதானால் வண்ணம் மாறுவதற்கு உதாரணம் காட்ட ஒரு பழமொழியை உபயோகித்துக் கொண்டேன். அவ்வளவுதான். முடிமீது கைவைத்து சத்தியம். சிந்தனையே குழலை இன்னும் விரித்தால் பாஞ்சாலியின் கூந்தலைப் போல விரியும். சொல்லப்போனால் பாஞ்சாலி சபதமும், பாரதப் போரும் கூந்தல் முடியத்தானே. கம்பன் சொல்லியிருக்கும் இராமனின் குஞ்சி பற்றிய வர்ணனைகளில் பெரும்பான்மையும் சிந்தனைக்கும் பொருந்தும். கம்பனில் தோய்ந்த பாரதி இந்த இடத்திலிருந்தும் சிந்தனையே குழல் என்பதற்கான எண்ணத்தைப் பெற்றிருக்கலாம்.
--------------
(முழுக் கட்டுரையும் எந்த வலைத் தளத்தில் இருக்கிறது என்பது நினைவில்லை)
இந்த இடத்தில் பிரசன்னா எழுப்பியிருக்கும் கேள்விக்கும் விடை சொல்லிவிடுகிறேன்.
===========
"நீங்கள் தட்டச்சி இட்டதில் புந்தி நாடரிதாய் மனம் தேடரிதாய் என்று இருக்கின்றது. என் புத்தகத்தில் மனம் நாடரிதாய்ப் புந்தி தேடரிதாய் என்று இருக்கிறது. மனமும் புந்தியும் இலக்கணப்படி எங்கிருந்தால் சரியாக இருக்கும்?"
"அந்த நிர்மலப்பொருளினை சிந்தை செய்வேன் என்பது அந்த நிர்மலப்பொருளினை நினைத்திடுவேன் என்று இருக்கிறது. எப்படி இப்படி மாறுபாடு வருகிறது?"
===========
பிரதி பேதம் அல்லது பாட பேதம் என்ற சாபக்கேடு நம் தமிழ் நூல்கள் அனைத்துக்கும் பொதுவானது. முன்பெல்லாம் பிரதி செய்த (வேணாம். copy எடுத்த... சரியா?) பெரியவர்கள் கைத் தவறுதலாகச் செய்ததிலிருந்து, தவறாக உணர்ந்து செய்ததிலிருந்து, வேண்டுமென்றே நுழைத்ததிலிருந்து ஏராளமான காரணங்களால் பிரதி பேதங்கள் ஏற்பட்டன. இப்போதெல்லாம் பதிப்பாசிரியர்களின் அலட்சியத்தால், கவனக் குறைவால் பெரும்பாலான பிரதி பேதங்கள் நிகழ்கின்றன. வெறும் நூறு வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த பாரதியின் எழுத்தில் ஏராளமான பாட பேதம் (பிரசன்னா குறிப்பிட்டுள்ளதைப் போன்ற வேறுபாடுகள்) இருப்பது நம்முடைய பதிப்பாளர்களுடைய வருத்தத்துக்குரிய போக்கின் மீது வைக்கப்பட்டுள்ள விமரிசனம்.
பிரசன்னா, மனத்துக்கும் புத்திக்கும் வேறுபாடு தேடுவது இப்போதைக்கு செய்யக் கூடிய காரியமில்லை. அதையெல்லாம் தனிக் கட்டுரையில் பார்க்கலாம். (அதாவது எழுத நேரம் கிடைத்தால்.) சிந்துப் பாவின் இலக்கணப்படி, 'மனம், புந்தி' இரண்டையும் எந்த இடத்திலும் மாற்றிப் போட்டுக் கொள்ளலாம். பொருள் பொருத்தம் எது என்பது சிந்தனைக்குரியது.
ஆனால் மனம் வேறு; புத்தி வேறுதான்.
'புத்தி மனம் சித்தம் புலன் ஒன்று அறியாமல்
வித்தை செயும் சூத்திரத்தின் மேவுமொரு பொம்மை என'
--குயில் பாட்டு.
மற்ற கேள்விகளுக்குப் பிறகு வருகிறேன் பிரசன்னா.
பிரசன்னாவின் குள்ளச்சாமி யார் இழையில் கடைசிக் கேள்வி:
========
கொசுறு கேள்வி: நேரமில்லாத நேரத்துல இத்தனைக் கேள்வியான்னு என்னை யாரும்
திட்டலையே? :P
========
யார் திட்டினாலும், நான் திட்ட மாட்டேன். நிறைய கேள். நான் இல்லாவிட்டாலும் யாராவது விடை சொல்வார்கள். நான் சொல்வதை எனக்குப் பொழுது கிடைக்கும்போதெல்லாம் சொல்கிறேன்.
===============
நேற்றைக்கு இருந்த நெருக்கடியில் ஒரு முக்கியமான குறிப்பு விட்டுப் போயிற்று. முக்கியமாக நான் செய்திருக்க வேண்டிய திருத்தமும் விட்டுப் போயிற்று. பாரதி பாட்டை - பாரதி என்று இல்லை, யார் எழுதியது என்றாலும் - பாரதி எழுதிய விதத்தில்தான் பதிப்பிக்க வேண்டும். பிரதிபேதம் எப்படி நேருகிறது என்று சொல்ல நினைத்தேன். காலை வேளை; அலுவலகம் கிளம்பும் அவசரத்தில் எப்படியோ போய்விட்டது.
அண்மைக் காலத்தில் வெளிவந்த பல பதிப்புகளில் 'சீதக் கதிர்மதியே - நுதல்' என்று அச்சிடப்படுகிறது. நான் படித்த பழைய சக்தி வை. கோவிந்தன் பதிப்பில் 'சீதக் கதிர்மதியா - நுதல்' என்று இருக்கும். பாரதி காலமான பிறகு பாரதி பிரசுராலயத்தார் அவனுடைய கவிதைகளைப் பதிப்பித்தார்கள். இந்த, 'சீதக் கதிர்மதியா' அச்சுப் பிழை என்றெண்ணி, 'சீதக் கதிர்மதியே' என்று பதிப்பித்தார்கள். ஆகவே அதைத் தொடர்ந்து வந்த பதிப்புகள் பெரும்பாலானவற்றில் இந்த 'யே'தான் இருக்கும். சக்தி கோவிந்தன் பதிப்பிற்குப் பிறகு சுமார் முப்பது-முப்பத்தைந்து பதிப்புகள் என்னிடம் இருந்தன. இந்த 'யே' பழக்கம் என்னையும் தொற்றிக்கொண்டது.
பாரதி 'சீதக் கதிர்மதியா' என்றுதான் எழுதியிருக்கிறான். அவன் எழுதியிருக்கும் குறிப்புகளில் பின்வரும் விளக்கம் காணப்படுகிறது:
'சீதக் கதிர்மதியா(ம்) நுதல்,' குளிர்ந்த ஒளியையுடைய மதியே ஸரஸ்வதி தேவிக்கு நெற்றியாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது. 'ஊகம்' என்பது அவளுடைய கூந்தல்.'
எனவே, 'சீதக் கதிர்மதியா' என்பதே சரியான பாடம். அது மட்டுமன்று. முதல் பதிப்பு வெளிவரும் போது, 'ஊகம்' என்பதே குழல் என்று வர்ணித்திருக்கிறான். அச்சுப் புத்தகமாக வெளிவந்த பிறகு, 'ஊகம்' என்பதை விடவும், 'சிந்தனை' என்பதே குழலுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியிருக்கிறது. அச்சுப் படியில் 'ஊகம்' என்ற சொல்லை அடித்துவிட்டு, 'சிந்தனை' என்று திருத்தியிருக்கிறான். (தஞ்சைப் பல்கலைக் கழக ஆய்வுப் பதிப்பில் காணப்படும் குறிப்பு.)
எனவே நாம் கொள்ள வேண்டிய பாடம், 'சீதக் கதிர்மதியா'தான்.
கற்பனைத் தேனிதழாள் - சுவைக்
காவிய மெனுமணிக் கொங்கையினாள்.
சிற்பமுதற் கலைகள் - பல
தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப்பாள்.
சொற்படு நயமறிவார் - இசை
தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறிவார்
விற்பனத் தமிழ்ப்புலவோர் - அந்த
மேலவர் நாவெனும் மலர்ப்பதத்தாள். (5)
பதம் பிரித்து:
இந்தப் பாடலுக்குத் தேவையில்லை.
அ. சொற் பொருள் -
'தேமலர்க் கரமென' தேனை உடைய மலர்களைப் போன்ற கரம் என. சிற்பம் முதலான பல கலைகளே வாணியின் கரங்கள். மலர்க் கரங்கள். தேன் கொண்ட மலர்க்கரங்கள்.
ஆ. இலக்கணம் -
இ. யாப்பு
நொண்டிச் சிந்து
ஈ. பாடல் சொல்வது
கவிதைக்கு இசை தேவையா இல்லையா? இந்தப் பாடலில் பாரதியின் கருத்து என்ன என்பது தெளிவாக வெளிப்படுகிறது. 'சொற்படு நயம் அறிவார்.' சொல்லுக்குள் உறைந்திருக்கும் நயத்தை அறிவார். 'இசை தோய்ந்திடத் தொகுப்பதன் சுவை அறிவார்.' அந்தச் சொல் இசையில் தோய்ந்திருக்குமாறு தொகுக்கின்ற வேலைப்பாட்டினால் விளைவதாகிய சுவையை அறிவார். யார்? விற்பனத் தமிழ்ப் புலவோர். தமிழ்க் கவிதையை இசையோடு ஒத்துச் செய்வதன் சுவையை அறிந்தவர்கள் தமிழ்ப் புலவர்கள்.
கவிஞர்கள், பாவலர்கள், புலவர்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று சமமான பொருளுடைய சொற்களே. 'புலவர் என்பவர் scholar மட்டுமே. அவர் கட்டுவது ஒன்றுக்கொண்டு ஒட்டாத செங்கல் அடுக்கு,' என்றொரு கருத்தும் நிலவுகிறது. அப்படி இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். A lawyer is an advocate; but an advocate need not be a lawyer என்பதைப் போல்தான் 'கவிஞர் என்பவர் புலமை உள்ளவர்; புலவர் கவிஞராகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை.' தனிக் கட்டுரைக்கு உரிய ஒன்று. இப்போதைக்கு இத்தோடு விட்டுவிடுகிறேன்.
வாணியைச் சரண்புகுந்தேன் - அருள்
வாக்களிப்பாள் எனத்திடமிகுந்தேன்.
பேணிய பெருந்தவத்தாள் - நிலம்
பெயரளவும் பெயர் பெயராதாள்.
பூணியல் மார்பகத்தாள் - ஐவர்
பூவை திரௌபதி புகழ்க்கதையை
மாணியல் தமிழ்ப்பாட்டால் - நான்
வகுத்திடக் கலைமகள் வாழ்த்துகவே! (6)
பதம் பிரித்து:
வாணியைச் சரண் புகுந்தேன் - அருள்
வாக்கு அளிப்பாள் எனத் திட(ம்) மிகுந்தேன்.
பேணிய பெருந்தவத்தாள் - நிலம்
பெயரளவும் பெயர் பெயராதாள்.
பூண் இயல் மார்பகத்தாள் - ஐவர்
பூவை திரௌபதி புகழ்க்கதையை
மாண் இயல் தமிழ்ப்பாட்டால் - நான்
வகுத்திடக் கலைமகள் வாழ்த்துகவே!
அ. சொற் பொருள்
பேணிய: பேணுதல் என்ற சொல்லுக்குப் பதினான்கு தனித் தனிப் பொருள் உண்டு. இங்கே 'போற்றுதல்,' (to cherish, foster, nurture) 'மதித்தல்' (to regard), 'அலங்கரித்தல்' (to adorn) என்பன பொருந்தும். 'பேணிய பெருந் தவத்தாள்' என்றால் 'போற்றக் கூடிய அளவுக்குப் பெரிய தவத்தைச் செய்தவள்' என்று பொருள் காண்பது விபரீதமாக முடியும். கல்விக்கு இறைவியை அப்படிச் சொல்வது முறையில்லை. 'தன் அன்பர்களால் போற்றப்பட்ட பெரிய தவத்தை உடையவள்,' என்றே கொள்ள வேண்டும். 'தனது அன்பர்கள்' என்பதை வருவித்துக்கொள்ள வேண்டும்.
மாண் இயல்: மாண் என்றால் மாண்பு; மாட்சிமை. Splendour, excellence, glory, dignity. தமிழ்ப் பாட்டு - தான் இயற்றும் இந்தக் காவியம் - மாண் இயன்றது என்ற பெருமிதம் தோன்றச் சொல்வதைக் காணலாம்.
ஆ. இலக்கணம் -
இ. யாப்பு
நொண்டிச் சிந்து
ஈ. பாடல் சொல்வது
நல்ல அணிகலன்களை (பூண்களை) மார்பின் மீது அணிந்தவளாகிய (இயல் - பூண் இயல்), ஐவர் தேவியான திரெளபதியின் புகழைச் சொல்லும் இந்தக் கதையை, நல்ல ஒளி நிறைந்த பாடல்களால் நான் சொல்ல வேண்டும் என்பதற்காக 'உலகம் உள்ளளவும் தன் பெயர் உள்ளவளான' வாணியைச் சரண் புகுந்தேன். அவள் எனக்கு அருள் நிறைந்த வாக்கினை அளிப்பாள் என்ற திடம் அதனால் எனக்கு உண்டாயிற்று.
நூல்
அத்தின புரமுண்டாம் - இவ்
அவனியிலே அதற்கிணையிலையாம்.
பத்தியில் வீதிகளாம் - வெள்ளைப்
பனிவரைபோற் பலமாளிகையாம்
முத்தொளிர் மாடங்களாம் - எங்கு
மொய்த்தளி சூழ்மலர்ச் சோலைகளாம்.
நத்தியல் வாவிகளாம் - அங்கு
நாடும் இரதிநிகர் தேவிகளாம். (7)
பதம் பிரித்து:
அத்தினபுரம் உண்டாம் - இவ்
அவனியிலே அதற்கு இணையிலையாம்
பத்தியில் வீதிகளாம் - வெள்ளைப்
பனிவரை போல் பல மாளிகையாம்
முத்துஒளிர் மாடங்களாம் - எங்கு
மொய்த்து அளி சூழ் மலர்ச் சோலைகளாம்
நத்து இயல் வாவிகளாம் - அங்கு
நாடும் இரதி நிகர் தேவிகளாம்.
அ. சொற் பொருள்
பத்தி: ஒன்பது வேறுபட்ட பொருள் உண்டு இந்தச் சொல்லுக்கு. இந்த இடத்தில் வரிசை என்று பொருள்.
பனிவரை: பனி மலை.
அளி: வண்டு
நத்து: நத்தை; சங்குப் பூச்சி
வாவி: நீர் நிலை
ஆ. இலக்கணம்
எங்கும் மொய்த்து என்னாமல் 'எங்கு மொய்த்து' என்றெழுதியிருப்பதைப் பார்க்கவும். முதல் சொல் 'ம்' என முடிந்து அடுத்த சொல் மகரத்தில் தொடங்கினால், முதல் சொல்லின் கடைசி எழுத்தான 'ம்' கெடும். ஒலிக்கப்படாது. எழுதப்படாது. இது நிலைமொழி ஈற்று மகரம் கெடுவது எப்போது என்னும் விதிகளில் இன்னொன்று. இதையும் பாரதி நெடுகிலும் போற்றியிருக்கிறான். (பாடல் எண் ஐந்தில் 'சிற்பமுதற் கலைகள்' என்ற இடத்தில் 'சிற்பம்' என்ற சொல்லின் மகரம் கெட்டிருப்பதும், 'சொற்படு நயமறிவார்' என்ற இடத்தில் மகரம் கெட்டிருப்பதும் வேறு வேறு விதிகள்.)
இ. யாப்பு
நொண்டிச் சிந்து
ஈ. பாடல் சொல்வது
அத்தினபுரம் உலகத்திலே தனக்கு நிகரான வேறு நகரம் ஏதுமில்லாதது. அங்கே வீதிகள் வரிசை வரிசையாக இருக்கும்; வெள்ளைப் பனி சூழ்ந்த மலை(யான இமய மலையைப்) போன்ற மாளிகைகள் எங்கும் நிறைந்திருக்கும். முத்துப் போல் ஒளிவிடும் மாடங்கள் அந்த மாளிகைகளில் உண்டு. எந்தத் திசையில் பார்த்தாலும் வண்டுகள் சூழ்ந்த மலர்களைக் கொண்ட சோலைகளும், சங்கினங்கள் நிரம்பிய நீர் நிலைகளும், இரதியைப் போன்ற அழகு வாய்ந்த தேவியரும் நிறைந்திருக்கும் ஊர் அத்தினபுரம். (ஹஸ்தினாபுரம்)
குரு வம்சம் அரசாண்ட இடம் ஹஸ்தினாபுரம். (Kuru வம்சம்) ஹஸ்தி என்ற குரு வம்ச அரசன் உருவாக்கிய நகரமானதாலே அவனுடைய பெயர் சூட்டப்பட்டு விளங்குகிறது. இதனை அஸ்தி-ந-பூர் - அழிவற்ற ஊர் என்றும் விளக்குபவர்கள் உண்டு. அஸ்தி (அழிவு) என்ற சொல்லும் ஹஸ்தி என்ற பெயரும் வேறு வேறு. எனவே இந்த விளக்கம் பொருந்தாது.
அந்தணர் வீதிகளாம் - மறை
ஆதிகளாம் கலைச் சோதிகளாம்
செந்தழல் வேள்விகளாம் - மிகச்
சீர்பெறும் சாத்திரக் கேள்விகளாம்
மந்திர கீதங்களாம் - தர்க்க
வாதங்களாம் தவ நீதங்களாம்
சிந்தையில் அறமுண்டாம் - எனில்
சேர்ந்திடும் கலிசெயு மறமுமுண்டாம். (8)
பதம் பிரித்து:
இந்தப் பாடலுக்குத் தேவையில்லை.
அ. சொற் பொருள்
செந்தழல் வேள்வி. முத்தீ வளர்த்து அன்றாட வழிபாடு செய்தல் அந்தணர் கடன். 'அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தீ விளக்கு' என்று புறநானூறு (இரண்டாம் பாடல்) சொல்கிறது. ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினி என்பன மூன்று தீக்களின் பெயர்கள்.
தவ நீதங்களாம். நீதம் - தகுதி, நீதி, தானியம் என்று இந்தச் சொல்லுக்கு மூன்று பொருள் உண்டு. தவத்தினால் உண்டாகும் தகுதி என்பது இந்த இடத்தில் அமையும் பொருள்.
நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்
நாய்களோ - பன்றிச் - சேய்களோ
நீங்கள் மட்டும் மனிதர்க ளோவிது
நீதமோ - பிடி - வாதமோ
(கலெக்டர் வின்சுக்கு ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை சொல்லிய மறுமொழி)
இந்த இடத்தில் நீதம் என்பதற்கு நீதி என்பது பொருள். 'நாங்களெல்லாம் நாய்களா, இல்லையென்றால் பன்றிக் குட்டிகளா? நீங்கள் மட்டும்தான் மனிதர்களா? இது என்ன நீதி? இது வெறும் பிடிவாதமில்லையா?'
ஆ. இலக்கணம் -
இ. யாப்பு
நொண்டிச் சிந்து
ஈ. பாடல் சொல்வது
அத்தினபுரத்தில் உள்ள அந்தணர் வீதிகள், 'வேதங்களின் ஆதி' என்று சொல்லத் தக்க விதத்தில் இருந்தன. அங்கெல்லாம் விதிப்படியான முத்தீ விளங்கும்; புகழத் தக்க சாத்திரப் பயிற்சி - சொல்லுதல், கேட்டல், விவாதித்தல் என்று இவ்வண்ணமாக - எப்போதும் நடைபெறும். மந்திர கீதங்கள் முழங்கிக் கொண்டே இருக்கும். தர்க்க வாதங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். தவத்தினால் ஏற்படும் தகுதியை உடையவர்கள் வசிக்கும் வீதிகள் அவை.
அனைவர் சிந்தையிலும் அறம் இருந்தது. ஆனாலும், கொஞ்சம் மதி மழுங்கிப் போனவர்களும் இல்லாமல் இல்லை. கலி. கலியின் விளைவால் அங்கே அறமில்லாததை எண்ணும் சிந்தை உடையவர்களும் இருந்தனர்.
கம்பன் கண்ட கோசல நாட்டிலிருந்து கொஞ்சம் போல விலகுகிறது, இல்லையா இந்த வருணனை? இங்கேதானே பாஞ்சாலி துகிலுரியப்படப் போகிறாள்.
கெளரவ வேந்தர் சபைதன்னில் - அறங்
கண்டவர் யாவரும் இல்லையோ? - மன்னர்
செளரியம் வீழ்ந்திடு முன்னரே - அங்குச்
சாத்திரம் செத்துக் கிடக்குமோ?
என்று இந்த நகரத்தில் நின்றுதானே பாஞ்சாலி கேட்கப் போகிறாள். அந்தச் சூழலுக்குத் தன் வாசகனைத் தயார்ப்படுத்துகிறான் கவிஞன்.
மெய்த்தவர் பலருண்டாம் - வெறும்
வேடங்கள் பூண்டவர் பலருமுண்டாம்.
உய்த்திடு சிவஞானம் - கனிந்
தோர்ந்திடு மேலவர் பலருமுண்டாம்.
பொய்த்த இந்திரசாலம் - நிகர்
பூசையும் கிரியையும் புலைநடையும்
கைத்திடு பொய்ம்மொழியும் - கொண்டு
கண்மயக்கால் பிழைப்போர் பலராம். (9)
===========
பதம் பிரித்து:
இந்தப் பாடலுக்குத் தேவையில்லை. 'கனிந்தோர்ந்திடு' என்பதை, 'கனிந்து ஓர்ந்திடு' என்று பிரித்துக்கொள்ளவும்.
அ. சொற் பொருள்
மெய்த்தவர்: மெய்யான தவம் மேற்கொண்டவர்
ஓர்ந்திடு மேலவர்: ஓர்தல்: ஆராய்ந்து அறிதல் (to consider attentively, examine, investigate)
உய்த்திடு: உய்தல் என்ற சொல்லுக்கு 'வாழுதல் - ஜீவித்தல்' என்ற பொருள் உண்டு. 'அபாயங்களின்றும், துயரங்களின்றும் நீங்குதல்' என்பது இந்தச் சொல் தரும் பொருள். உய்தல் - செய்வினை - active voice. உய்த்தல் - செயப்பாட்டுவினை (passive voice).
கிரியை: ஏழு வேறு வேறு பொருளுள்ள இந்தச் சொல்லுக்கு இங்கே பொருத்தமாவது: 1) செய்கை - act, action, deed. 2) சிவனை ஆகமங்களில் விதித்தவாறு அகத்தானும் புறத்தானும் வழிபடுவது
கைத்திடு: கைப்பதாகிய. கசப்பான.
ஆ. இலக்கணம்
ஓர்ந்திடு மேலவர்: ஓர்ந்திடும் மேலவர். மகரம் கெட்டதன் விதியைப் பார்த்தோம்.
இ. யாப்பு
நொண்டிச் சிந்து
ஈ. பாடல் சொல்வது
துறவியரில் இரு வகை எந்தக் காலத்திலும் இருந்திருக்கிறது. உண்மையான துறவு மேற்கொண்டு, உள்ளத்தால் உயர்ந்து நிற்போர் ஒரு புறமும், துறவு வேடம் புனைந்து மக்களை ஏமாற்றித் திரிபவர் இன்னொரு புறமும் இன்று நேற்றல்ல; திருவள்ளுவர் காலத்திலும் இருந்திருக்கிறார்கள். அதனால்தான் துறவிகளுக்கே பெரிதும் சொல்லப்பட்ட 'கூடா ஒழுக்கம்' என்ற அதிகாரத்தில் (அறத்துப் பால், துறவற இயலில் இந்த அதிகாரம் இடம் பெறுகிறது)
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று
என்றார். 'மனத்தைத் தன் வழிப் படுத்தும் வலி (வலிமை) இல்லாத நிலையை உடையவனுடைய (தவ வேடம் புனைந்த) வெளித் தோற்றம் எத்தகையது என்றால், பசு, புலியின் தோலைப் போர்த்துக் கொண்டு வயலில் இறங்கி மேய்வதைப் போன்றது.' புலித்தோல் போர்த்திய பசுவைத்தான் நமக்குத் தெரியும். பசுத்தோல் போர்த்திய புலியைக் காட்டுகிறார் வள்ளுவர்.
பாரதி காட்டும் அத்தினபுரத்துத் துறவியருள்ளும் இரண்டு வகையும் இருந்திருக்கின்றனர். மெய்யான தவம் உடைய மெய்த்தவரும் அங்கே இருந்தனர். வேடங்கள் புனைந்தவரும் இருந்தனர். வாழ்வின் துன்பங்களிலிருந்து விடுவிப்பதான சிவஞானத்தை 'ஓர்ந்து,' ஆராய்ந்து அறிந்து, கனிந்திடும் ஞானியர் ஒருபுறம் இருந்தனர். பொய்யான இந்திரசாலமும் (கையை நீட்டினால் பொருள் கொட்டுகிறதே, அது போன்ற வித்தைகள்), அதற்கு நிகரான பூசைகளும், கிரியைகளும் (வெளித்தோற்றத்தால் சிவஞானம் பெற்றவர்போல் தோன்றி, உள்ளே நிகழ்வதால் நடிப்பதாகிய செயல் என இரண்டு பொருளையும் தரக் கூடிய சொல் என்பதை மேலே கண்டோம்), இழிவான நடத்தையும் (புலை நடை) கொண்டு, வாயைத் திறந்தாலே பொய் உதிரும்படியான கசப்பான செய்கையும் கொண்டு, கண்ணால் ஆளை மயக்கிப் பிழைப்பு நடத்தும் துறவியரும் அந்த ஊரில் இருந்தனர்.
பாரதி நிகழ்த்தும் சமூக விமரிசனம் இது.
மாலைகள் புரண்டசையும் - பெரு
வரையெனத் திரண்டவன் தோளுடையார்
வேலையும் வாளினையும் - நெடு
வில்லையும் தண்டையும் விரும்பிடுவார்.
காலையும் மாலையிலும் - பகை
காய்ந்திடு தொழில்பல பழகிவெம்போர்
நூலையும் தேர்ச்சி கொள்வார் - கரி
நூறினைத் தனிநின்று நொறுக்கவல்லார். (10)
பதம் பிரித்து:
திரண்டவன் தோளுடையார்: திரண்ட வன்தோள் உடையார்
அ. சொற் பொருள்
வரை: மலை, கரி: யானை.
ஆ. இலக்கணம் -
இ. யாப்பு
நொண்டிச் சிந்து
ஈ. பாடல் சொல்வது
அந்தணர் வீதிகளில் தொடங்கிய அத்தினபுர நகர வருணனை, இப்போது மறவர் வீதிகளைக் காட்டுகிறது. மாலைகள் அணிந்த, மலைபோன்ற தோள்களை உடைய மறவர்கள் அவ்வீதிகளில் வேல், வாள், வில், தண்டு (கதை) போன்ற ஆயுதப் பயிற்சிகளை மேற்கொள்வார்கள். காலை தொடங்கி மாலை வரை, பகைவரைகளை எதிர்பதற்குத் தேவையான ஆயுதப் பயிற்சியையும், போர் நூல் பயிற்சியையும் செய்வார்கள். ஒவ்வொரு மறவனும் தனி ஒருவனாக நின்று நூறு யானைகளை வீழ்த்தக் கூடியவன்.
ஒரு போர் வீரனின் ஆற்றலை அளக்கும் அளவைகளில் ஒன்று, 'அவன் எத்தனை யானை வலுவுடையான்,' என்பதும், 'எத்தனை யானைகளை வீழ்த்த வல்லான்,' என்பதும். திருதிராட்டிரன் ஆயிரம் யானை வலுவுடையவன். 'நெடுங்கை வளர் யானை பலவற்றின் வலி காட்டிடும் வெந்திறல் வீமனை, உங்கள் பொய் வளர் சூதினில் வைத்திட்டேன், வென்று போ!' என்று பின்னால் சூதாடும்போது தருமன் சொல்லப் போகிறான். வீமன், துரியோதனன் போன்றோரும் இப்படிப்பட்ட 'ஆயிரம் யானை பலம்' கொண்டவர்களாகச் சொல்லப்பட்டவர்கள்.
போர் வீரர்களில் முதல் - உயர் - பிரிவைச் சேர்ந்தவர்கள் தேர் வீரர்கள். அவர்களுடைய ஆற்றலை நான்கு வகையாகப் பிரித்திருந்தனர். அர்த்த ரதன், சமரதன் (அல்லது) ரதிகன், அதிரதன், மகாரதன் என்பன அவை. மகாபாரதம், உத்தியோக பருவம், ரதாதிரத சங்கியான பருவத்தில் இதற்கான குறிப்பு காணப்படுகிறது.
அர்த்தரதன் என்பவன் தன்னை மட்டும் காத்துக்கொள்ளும் அளவுக்கு (நால்வகைப் படையில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்த ஏதாவது ஒரே ஒரு வீரனை எதிர்த்துப்) போரிடும் ஆற்றல் பெற்றவன். சமரதன் அல்லது ரதிகன் என்பவன் தன்னையும், தன்னுடைய தேர், சாரதி, குதிரைகளைக் காத்த வண்ணம் ஒரு வீரனை எதிர்த்துப் போரிடும் ஆற்றல் உடையவன். மகாரதன் என்பவன், தான், தன் தேர், சாரதி, குதிரைகள், தன் சேனை ஆகியவற்றைக் காத்தவண்ணம் ஒரு சில வீரர்களோடு போர் புரியும் ஆற்றல் பெற்றவன். (அதாவது, அதிரதனின் கீழ் ஒரு படைப்பிரிவு அடங்கும். அவன் ஒரு படைப்பிரிவின் தலைவனாகவும் இருப்பான்.) மகாரதன் என்பவன், தான், தன் தேர், சாரதி, குதிரைகளையும், தன் சேனையையும் காத்துக் கொண்டு, பலரோடு ஒரே நேரத்தில் போரிட வல்லவன். Commander-in-Chief என்று சொல்லப்படும் பதவியைப் போன்ற பதவிக்குத் தகுந்தவன்.
அர்ஜுனனை மகாரதன் எனவும், கர்ணனை அர்த்தரதன் (தன்னை மட்டும் காத்துக் கொள்ள வல்லவன்; தன் தேர், சாரதி, குதிரைகளைக் கூட காத்துக்கொள்ளும் வன்மை அற்றவன்) எனவும் என்று பிதாமகர் தரம் பிரித்த காரணத்தால், 'இவர் வீழ்ந்த பிறகே போர்க்களத்தில் நுழைவேன்,' என்று சபதமிட்டான் கர்ணன். இவ்வாறு மூன்று தருணங்களில் சபதம் செய்கிறான். இது மூன்றாவது தருணம்.
ஆரிய வேன்மறவர் - புவி
ஆளுமொர் கடுந்தொழில் இனிதுணர்ந்தோர்.
சீரியல் மதிமுகத்தார் - மணித்
தேனிதழ் அமுதென நுகர்ந்திடுவார்.
வேரியங் கள்ளருந்தி - எங்கும்
வெம்மத யானைகள் எனத்திரிவார்.
பாரினில் இந்திரர்போல் - வளர்
பார்த்திவர் வீதிகள் பாடுவமே. (11)
பதம் பிரித்து: வேன்மறவர்: வேல் மறவர். சீரியல்: சீர் இயல். வேரியங் கள்: வேரி அம் கள்.
அ. சொற் பொருள்
ஆரிய வேல் மறவர். ஆரியர் என்ற சொல் 'வடவர்' என்ற பொருளில் பெரும்பாலும் வழங்கப்படுகிறது. ஆரியவர்த்தத்தில் வாழ்பவர்கள் என்று அறியப்பட்டது. இமயமலைக்கும் விந்திய மலைக்கும் இடைப்பட்ட பகுதி ஆரியவர்த்தம் என்று வழங்கப்பட்டது. ஆயினும், ஆரியர் என்ற சொல்லுக்கு ஏழு பொருள் உண்டு. 1) ஆரிய வகுப்பினன் 2) ஆரியவர்த்த வாசி 3) பெரியோன், உயர்ந்தவன் (worthy, respectable) 4) குரு, ஆசாரியன் 5) அறிவாளி 6) உபாத்தியாயன் 7) ஐயனார் சுவாமி. இது சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி தரும் விளக்கம்.
பாரதி எங்கெல்லாம் 'ஆரியன்' என்று பயன்படுத்தியிருக்கிறானோ, அங்கெல்லாம் 'உயர்ந்தவன்' என்ற பொருளில்தான் பயன்படுத்தியிருக்கிறான். அவனுடைய உரைநடைகளில் இது வெளிப்படையாகவே காணப்படும். கம்ப இராமாயணத்திலும் 'உயர்ந்தோன்' என்ற பொருளில்தான் பெரும்பாலும் இந்தச் சொல் ஆளப்பட்டிருக்கிறது.
வேரி: தேன்
பார்த்திவர்: பார்த்திபர் - மன்னர். 'பல் வளம் நிறை புவிக்கே - தருமன் பார்த்திவன் என்பதினிப் பழங்கதை காண்,' என்று பின்னால் சகுனி சொல்லப் போகிறான்.
ஆ. இலக்கணம்
வேரியங் கள்: வேரி அம் கள். 'அம்' என்றால் அழகிய என்ற பொருள் இருந்தாலும், இங்கே அது பொருந்தாது. அம் என்பது சாரியைகளுள் ஒன்று. Euphonic augment என்று ஆங்கிலத்தில் குறிப்பார்கள். புளியங்காய் (புளி அம் காய்) என்பது போல்.
இ. யாப்பு
நொண்டிச் சிந்து
ஈ. பாடல் சொல்வது
புவியை ஆள்வதான கடினமான செயலை, இனிமையான ஒன்றாகக் கருதி ஏற்றவர்களான வேற்படையை உடைய சிறந்த மறவர்கள் அந்த வீதிகளில் இருந்தனர். போர்த்தொழில் படித்த, பழகிய நேரம் போக மற்ற நேரங்களில் அழகிய முகத்தை உடைய பெண்களின் இதழ்களை அனுபவித்தவாறும், கள்ளைக் குடித்தவாறும் வாழ்பவர்கள். சினங் கொண்ட மதயானைகளைப் போல் அந்த வீதிகளில் திரிந்துகொண்டிருப்பார்கள். இத்தகைய மன்னர்கள் வாழும் வீதிகளைப் பாடுகிறேன்.
நல்லிசை முழக்கங்களாம் - பல
நாட்டிய மாதர்தம் பழக்கங்களாம்
தொல்லிசைக் காவியங்கள் - அருந்
தொழிலுணர் சிற்பர்செய் ஓவியங்கள்
கொல்லிசை வாரணங்கள் - கடுங்
குதிரைக ளொடுபெருந் தேர்களுண்டாம்.
மல்லிசை போர்களுண்டாம் - திரள்
வாய்ந்திவை பார்த்திடு வோர்களுண்டாம். (12)
பதம் பிரித்து: தேவையில்லை
அ. சொற் பொருள்
இசை என்ற சொல்லை மாற்றி மாற்றி வேறு வேறு பொருளில் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம். பாரதிக்கு(ம் சரி, கம்பனுக்கும் சரி) இது மிகவும் பிடித்த விளையாட்டு. 'தொல்லை வினைதரு தொல்லையகன்று சுடர்க தமிழ்நாடே', 'சாத்திரங்கள் பல தேடினேன்; அங்குச் சங்கையில்லாதன சங்கையாம்' என்று ஒரே சொல்லைப் பல பொருளில் பயன்படுத்தும் ஆட்டத்துக்கு வள்ளுவரும் விலக்கல்லர்.
நல்லிசை: நல்ல இசை (பாடல்). தொல்லிசை: தொன்மையான, புகழ்வாய்ந்த. கொல்லிசை: கொல்லும் தொழிலுக்கு ஏற்ற, பொருத்தமான. மல்லிசை: மல்யுத்த விதிமுறைகளுக்கு இசைவுடைய.
பாடல், புகழ், பொருந்தி வருதல், இசைவாக (in agreement with) என்ற நான்கு பொருளில் 'இசை' என்ற சொல் பயன்பட்டிருக்கிறது.
வாரணம்: யானை
மல்லிசை போர்: மல்யுத்தம், குத்துச் சண்டை.
ஆ. இலக்கணம் -
இ. யாப்பு
நொண்டிச் சிந்து. ஒவ்வோரடியும் இடது பக்கத்தில் (அதாவது முதல் சீரில்) எதுகையுடனும் (நல்லிசை, தொல்லிசை, கொல்லிசை, மல்லிசை), ஒவ்வொரு அரையடியும் தமக்குள்ளே இயைபுடனும் (முழக்கங்களாம், பழக்கங்களாம், காவியங்கள், ஓவியங்கள், போர்களுண்டாம், வோர்களுண்டாம்) ஆக இரு பக்கங்களிலும் ஓசைச் சிறப்புடன் விளங்கும் பா.
ஈ. பாடல் சொல்வது
மறவர் வாழும் வீதிகளில் காணப்படும் காட்சிகள் தொடர்கின்றன. 'க்ஷத்திரியர்களுடைய தலைவன் ஒருவனுக்கு மாத்திரமன்றி, அக்குல முழுமைக்குமே தமிழில் மன்னர் முதலிய பெயர்கள் உண்டு. நமது நாட்டடில் இப்போது 'மறவர்' என வழங்கும் கூட்டத்தார் க்ஷத்திரிய வமிசத்தவராத லுணர்க.' இது பாரதியின் குறிப்பு.
அந்த வீதிகளில் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும். நாட்டிய மாதர்கள் தாம் பழகிய கலைகளை வெளிப்படுத்திக்கொண்டிருப்பர். (நாட்டிய மாதர்தம் 'பழக்கங்களாம்' என்பதற்கு வேறு விதமான பொருள் கொள்ள ஏது உண்டு என்ற போதிலும் பெரிதும் பொருந்தும் பொருள் சொல்லப்பட்டது.) பழைய புகழ் வாய்ந்த காவியங்கள் அவ்வீதிகளில் பேசப்படும். சிற்பம் முதலான ஓவியம் சார்ந்த கலைகள் வளரும். குத்துச் சண்டைகள் நிகழும். பலர் திரளாக நின்று கண்டு களிப்பர்.
எண்ணரு மணிவகையும் - இவை
இலகிநல் லொளிதரும் பணிவகையும்
தண்ணறும் சாந்தங்களும் - மலர்த்
தார்களும் மலர்விழிக் காந்தங்களும்
சுண்ணமும் நறும்புகையும் - சுரர்
துய்ப்பதற் குரியபல் பண்டங்களும்
உண்ணநற் கனி வகையும் - களி
உவகையும் கேளியும் ஓங்கினவே (13)
பதம் பிரித்து:
எண்ணரு: எண்ண அரு; எண்ண அரிய. தண்ணறும்: தண் நறும்
அ. சொற் பொருள்
இவை இலகி நல் ஒளி தரும் பணிவகையும்: இலகு: (ஒளி தோன்றும்படி) விளங்குதல். To shine, glisten, glitter. 'இலகு பெருங்குணம் யாவைக்கும் எல்லையாம், திலக முனிக்கொத்த அடிமைக்காரன்.' (பாரதி). 'இலகிய பனியின் முத்தை இளங்கதிர்க் கையால் உண்பாய்.' (பாரதிதாசன்)
பணி: ஆபரணங்கள்; நகைகள். தலையில் நாகரத்தினத்தை உடைய காரணத்தால் பாம்புக்குப் 'பணாமுடி' என்று பெயர்.
தண் நறும் சாந்தங்கள்: குளிர்ச்சியும் வாசனையும் பொருந்திய, சாந்துக் கலவைகள். சாந்தம்: சாந்து.
மலர்த் தார்: மலர் மாலை.
சுண்ணம்: வாசனைப் பொடி. (டால்கம் பவுடரைப் போன்ற பூசுவதற்கான பொடி. மேனியில் பூசுவதற்காக ஈரத்துடன் குழைத்திருப்பது சாந்துக் கலவை. உலர்ந்த பொடி சுண்ணம்.)
சுரர்: தேவர். அ-சுரர்: தேவர் அல்லாதவர்
துய்த்தல்: அனுபவித்தல்; பயன்படுத்தல்.
ஆ. இலக்கணம்
இ. யாப்பு
நொண்டிச் சிந்து.
ஈ. பாடல் சொல்வது
மன்னர் வீதிகளில் காணப்படும் செல்வ வளமும், செல்வ வளம் மிக்கவர்கள் பயன்படுத்தும் பொருள்களும் பேசப்படுகின்றன.
சிவனுடை நண்பனென்பார் - வட
திசைக்கதிபதி அளகேசனென்பார்
அவனுடைப் பெருஞ்செல்வம் - இவர்
ஆவணந்தொறும் புகுந்திருப்பதுவாம்.
தவனுடை வணிகர்களும் - பல
தரனுடைத் தொழில்செயும் மாசனமும்
எவனுடைப் பயமுமிலா - தினி
திருந்திடும் தன்மைய தெழில்நகரே. (14)
பதம் பிரித்து: தவனுடை: தவன் உடை(ய); தரனுடை: தரன் உடை(ய); கடைசி அடியை 'எவனுடைப் பயமும் இலாது இனிது இருந்திடும் தன்மையது எழில் நகரே' எனப் பிரித்துக் கொள்ளவும்.
அ. சொற் பொருள்
அளகேசன்: குபேரன். அட்ட திக்கு பாலகர்களைப் பற்றி முன்னரே கண்டோம். வடக்கு திசையின் அதிபதி குபேரன். அளாகாபுரியை ஆள்பவன் என்பதனால் அளகேசன் என்பதும் அவனுடைய பெயரே.
பல தரன் உடைத் தொழில் செய்யும் மாசனம்: பல தரப்பட்ட தொழில்களைச் செய்யும் பெருமக்கள்.
ஆ. இலக்கணம்
தவன், தரன் ஆகியவை முறையே தவம், தரம் ஆகிய சொற்களின் வேறு வடிவங்கள்.
எவன்செய இனிய இவ் அழகை எய்தினான்
அவம் செயத் திரு உடம்பு அலச நோற்கிறான்
நவம் செயத் தகைய இந் நளின நாட்டத்தான்
தவன் செயத் தவன்செய்த தவனென்.
சூர்ப்பனகை, இராமனைப் பார்த்த பார்வையில் அவன் மீது கொண்ட காதலில் தனக்குள் சொல்லிக் கொள்வது இது. 'என்ன காரியத்தைக் கருத்தில் கொண்டு, இந்த அழகு வீணாகும்படி, தன் உடலை வருத்திக் கொண்டு, தவ வடிவம் தாங்கி, தவம் மேற்கொண்டிருக்கிறான்? புதிய தாமரை மலர்களைப் போன்ன அழகான கண்களை உடைய இவன் தவம் செய்ய வந்திருப்பது, 'தவம்' என்பதாகிய செயல் செய்திருக்கும் தவம்.'
இ. யாப்பு
நொண்டிச் சிந்து.
ஈ. பாடல் சொல்வது
அந்தணர் வீதிகள் ஆயின. அடுத்ததாக மறவர் வீதிகள். இப்போது வணிகர் வீதிகள். அத்தினபுரத்தில் இருக்கும் வணிகர்களிடம் புரளும் செல்வம் எப்படிப்பட்டதென்றால், குபேரனுடைய செல்வம் எவ்வளவோ, அவ்வளவு செல்வமும் இவர்களுடைய ஒவ்வொரு ஆவணத்திலும் சர்வ சகஜமாகப் புழங்குமாம். குபேர சம்பத்து எவ்வளவோ, அவ்வளவுதான் இவர்களுடைய ஆவணங்களில் புழங்கும் குறைந்தபட்சத் தொகையே. ['ஐநூறு ரூபாய் நோட்டுக்குச் சில்லறை இருக்குமா,' என்று ஒருவன் - தன்னிடம் உள்ள பெரும் செல்வப் புழக்கத்தைக் காட்டிக் கொள்வதற்காகக் - கேட்டானாம். 'ஐநூறு ரூபாய்தான் இங்க சில்லறையே' என்று பதில் வந்ததாம். :-)]
வணிகர் வீதிகளையும், நான்காவது வருணத்தவர் வீதிகளையும் இந்தப் பாடலில் பேசுகிறான் கவி. 'பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை,' என்று பெருமிதம் ததும்பப் பேசுதலன்றி, மற்ற தருணங்களில் அந்தச் சொல்லைப் பயன்படுத்தப் பெரிதும் தயங்கியவன் பாரதி. 'பல தரனுடைத் தொழில் செயும் மாசனமும்,' பல வகையான தொழில்களைச் செய்யும் பெருமக்களும் என்று நான்காவது வருணத்தைக் குறிக்கின்றான்.
வேத மறிந்தவன் பார்ப்பான் - பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலைதவ றாமல் - தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்.
பண்டங்கள் விற்பவன் செட்டி - பிறர்
பட்டினி தீர்ப்வன் செட்டி
என்று மூன்று வருணங்களையும் குறிப்பிட்டவன், நான்காவது வருணத்தைச் சொல்ல நேர்ந்த சமயத்தில்:
'தொண்டர் என்று ஒரு வகுப்பு இல்லை. தொழில் சோம்பலைப் போல் இழிவு இல்லை' என்று ஒரே போடாகப் போடுவதைக் காணலாம்.
'பல தரனுடைத் தொழில் செயும் மாசனமும்' என்ற தொடருக்குக் குறிப்பெழுதும் போது, 'மஹா ஜனங்கள். பொதுப்படையான குடிகள். இவர்களே தேசத்திற்கு உயரிராவர். இவர்களைச் 'சூத்திரர்' என்பது தற்கால வழக்கு. 'சூத்திரர்' என்ற பெயரைச் சில மூடர் இழிவான பொருளில் வழங்குவது பற்றி நூலில் அப்பெயர் தரவில்லை.'
பாரதி வைத்திருந்த, திருத்தம் செய்த, முதற் பதிப்பின் அச்சுப்படியில், 'இவர்களைச் சூத்திரர்...... தரவில்லை,' என்ற வரி (பாரதியால்) நீக்கப்பட்டிருப்பதாகத் தஞ்சைப் பல்கலைக் கழக ஆய்வுப் பதிப்பு சொல்கிறது.
துரியோதனன் சபை*
கன்னங் கரியதுவாய் - அகல்
காட்சியதாய் மிகு மாட்சியதாய்
துன்னற் கினியதுவாய் - நல்ல
சுவைதரு நீருடை யமுனையெனும்
வன்னத் திருநதியின் - பொன்
மருங்கிடைத் திகழ்ந்தவம் மணிநகரில்
மன்னவர் தம்கோமான் - புகழ்
வாளரவக் கொடி உயர்த்துநின்றான். (15)
பதம் பிரித்து:
துன்னற் கினியதுவாய்: துன்னற்கு இனியதுவாய். திகழ்ந்தவம் மணிநகர்: திகழ்ந்த அம் மணி நகர்
அ. சொற் பொருள்
துன்னல்: 1) நெருங்கி இருத்தல்; அருகில் இருத்தல்; அடைதல். 2) சிறு துளி; திவலை.
மருங்கு: பக்கத்தில், பக்கவாட்டில். இந்த இடத்தில் கரையில் என்று பொருள்படும்.
வாள்: ஒளி பொருந்திய, கொடிய. வாள் அரவம் என்ற காரணத்தால், 'கொடிய' என்ற பொருளே பொருந்தும்.
ஆ. இலக்கணம் -
இ. யாப்பு
நொண்டிச் சிந்து
ஈ. பாடல் சொல்வது
கருப்பு வண்ணமுடையது; அகன்றது; பெருமை உடையது; (கரையில்) அருகில் இருக்க இனியது; சுவையான நீரை உடையதான யமுனை நதியின் கரையில் மன்னவர்களுக்கெல்லாம் மன்னவனான துரியோதனன் கொடியதான பாம்பைக் கொடியாக உயர்த்தி நின்றான்.
யமுனா நதிக்கு யமி என்றும் பெயர் உண்டு. சூரியனுக்கும் சுவாகா தேவிக்கும் தோன்றியவள். சூரியன் யமனுக்குத் தந்தையானபடியால், யமுனை யமனுக்குத் தங்கை. யமி என்றும், காளிந்தி என்றும் பெயர் கொண்ட நதி. கரிய வண்ணத்தில் நீர் ஓடும் என்பர்.
துரியோதனனை மன்னவர் தம் கோமான் என்று கவிஞன் அறிமுகப்படுத்தினாலும், அவன் முழு அதிகாரமும் கொண்ட அரசனாய் இயங்கினவனில்லை. பல விஷயங்களுக்குத் தந்தையையும், சில விஷயங்களுக்கு வீட்டுமரையும் சார்ந்தே நின்றிருந்தான். அவன் காலம் முழுவதும் சக்ரவர்த்தியாக திருதிராட்டிரன் வீற்றிருக்கையில், சக்ரவர்த்தியைச் சார்ந்தே இயங்க வேண்டிய இளவலாகப் பல இடங்களில் காட்சி தருகிறான்.
*இக் கிளைத்தலைப்பு பாரதியால் தரப்பட்டதன்று. பாரதி பிரசுரம் பின்னாளில் தந்தது.
துரியோதனப் பெயரான் - நெஞ்சந்
துணிவுடையான் முடி பணிவறியான்
கரியோர் ஆயிரத்தின் - வலி
காட்டிடு வோன்என்றந்தக் கவிஞர்பிரான்
பெரியோன் வேதமுனி - அன்று
பேசிடும் படிதிகழ் தோள்வலியோன்
உரியோர் தாமெனினும் - பகைக்
குரியோர் தமக்குவெந் தீயனையான். (16)
பதம் பிரித்து: தேவையில்லை.
அ. சொற் பொருள் -
ஆ. இலக்கணம் -
இ. யாப்பு
நொண்டிச் சிந்து
ஈ. பாடல் சொல்வது
முதல் பாடல் யாரைச் சொல்கிறது என்பது விளக்கம் பெறுகிறது. துரியோதனன் நெஞ்சத்தில் அசாத்தியத் துணிவும், வணங்குதற்கு உரியாரையும் வணங்காத அகங்காரமும் கொண்டவனாக இருந்தான். 'ஆயிரம் யானைகளின் வலிமையைக் கொண்டவன்,' என்று வேதங்களைத் தொகுத்தவரும், பாரதத்தை இயற்றிய கவிஞருமான வியாசர் போற்றும்படியாகத் திகழ்ந்த வலிமையை உடையான். உறவினரே என்றாலும், பகைக்கு உரியவராய் நிற்கும்போது அவர்களுக்கெல்லாம் வெம்மையான தீயைப் போன்றவன்.
தந்தைசொல் நெறிப்படியே - இந்தத்
தடந்தோள் மன்னவன் அரசிருந்தான்
மந்திரம் உணர்பெரியோர் - பலர்
வாய்த்திருந் தாரவன் சபைதனிலே
அந்தமில் புகழுடையான் - அந்த
ஆரிய வீட்டுமன் அறமறிந்தோன்
வந்தனை பெறுங்குரவோர் - பழ
மறைக்குல மறவர்கள் இருவரொடே, (17)
மறைக்குல மறவர் - கிருபர், துரோணர்
பதம் பிரித்து:
அ. சொற் பொருள்: குரவோர்: தாய், தந்தை, தனயன், அரசன், குரு என்பவர் ஒருவனுக்கு ஐம்பெருங் குரவர்களாகின்றனர். இந்த இடத்தில் குரு என்று பொருள்படும்.
ஆ. இலக்கணம் -
இ. யாப்பு
நொண்டிச் சிந்து
ஈ. பாடல் சொல்வது
துரியோதனன், தன் தந்தையின் சொல்லும் வழியில் ஆட்சி செலுத்திவந்தான். மந்திரம் (ஆலோசனை) வல்லவ பெரியவர்கள் அவன் சபையில் இருந்தனர். முடிவற்ற புகழை உடைய பெரியவனான வீட்டுமன் இருந்தான். வணக்கத்துக்கு உரிய ஆசிரியர்களான, மறை ஓதும் குலத்தில் பிறந்து வில் பிடிக்கும் தொழிலைச் செய்யும் மறவர்களான கிருபரும், துரோணரும் அங்கே இருந்தனர்.
சரத்வான் என்ற முனிவருக்குக் காட்டில் பிறந்தவர்கள் கிருபரும் அவருடைய தங்கை கிருபியும். பிறந்த சில தினங்களிலேயே சந்தனுவால் கண்டெடுக்கப்பட்டு அரண்மனைக்குக் கொண்டுவரப்பட்டு அங்கே வளர்ந்தவர்கள். கிருபர் ஆயுதப் பயிற்சி பெற்றது இவ்வாறுதான். பரத்துவாஜ முனிவரின் மகனான துரோணருக்கு கிருபியை மணமுடித்தனர். எனவே துரோணர், கிருபருக்கு மைத்துனர் முறை. துரோணர் அத்தினபுரத்துக்கு வந்து சேரும் வரையில் கிருபரே கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஆயுதப் பயிற்சி முதலானவற்றைக் கற்றுத் தந்தவர். ஆகவே இவர்கள் இருவருமே பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் ஆசிரியர்கள்.
மெய்ந்நெறி உணர்விதுரன் - இனி
வேறுபல் லமைச்சரும் விளங்கிநின்றார்
பொய்நெறித் தம்பியரும் - அந்தப்
புலைநடைச் சகுனியும் புறமிருந்தார்
மைந்நெறி வான்கொடையான் - உயர்
மானமும் வீரமு மதியுமுளோன்
உய்ந்நெறி யறியாதான் - இறைக்
குயிர்நிகர்க் கன்னனும் உடனிருந்தான். (18)
பதம் பிரித்து: தேவையில்லை
அ. சொற் பொருள்: புலை நடை: கீழான வழிகளை மேற்கொண்டு நடக்கும் இழிகுணம்.
மைந்நெறி: மை: கருமேகம். சூல்கொண்ட மேகம் போன்ற கொடையை உடையவன்.
ஆ. இலக்கணம் -
இ. யாப்பு
நொண்டிச் சிந்து.
ஈ. பாடல் சொல்வது
மெய்வழியை உணர்ந்தவனான விதுரன் அங்கே இருந்தான். மற்ற அமைச்சர்கள் இருந்தார்கள். இவனுக்கு நேர் மாறாக, பொய் வழியே தம் வழி என்று நடக்கும் துச்சாதனன் முதலான தம்பியர்கள் அங்கே இருந்தார்கள். கருக் கொண்ட மேகம் போல் பொழியும் கொடையும், மானமும், வீரமும் அறிவும் நிறைந்தவனும்; இத்தனை இருந்த போதிலும் தீயவர்களின் வழியையும் நட்பையும் விட்டு விலகும் வழியை அறியாதவனுமான கர்ணன் அங்கே இருந்தான். துரியோதனனின் உயிரல்லவா அவன்.
மாண்டவ்யர் என்றொரு முனிவர் இருந்தார். மிகவும் போற்றப்பட்ட அவர் ஒரு நாள் நிஷ்டையில் இருக்கும் போது, அரசியின் நகைகளைத் திருடிக் கொண்டு வந்த திருடன் ஒருவன் அந்த வழியாக ஓடி வந்தான். வீரர்களால் துரத்தப்பட்ட அவன், மாண்டவ்யரின் பர்ணசாலைக்குள் நகைகளைப் போட்டுவிட்டு ஓடிப் போனான். நகைகளைப் பர்ண சாலையில் கண்டெடுத்த வீரர்கள், 'இவை எவ்வாறு இங்கே வந்தன,' என்று மாண்டவ்யரைத் திரும்பத் திரும்பக் கேட்டனர். நிஷ்டையில் இருந்த மாண்டவ்யரின் காதில் இந்தக் கேள்வி விழவில்லை. 'திருடன் நடிக்கிறான்,' என்றெண்ணி நகைகளை மீட்டுக்கொண்டு அரசனிடம் சென்று விவரத்தைக் கூறினர்.
மாண்டவ்யரைக் கழுவேற்றச் சொல்லி உத்திரவிட்டான் அரசன். உலக்கையைத் திருப்பி வைத்து நட்டாற் போன்ற வடிவத்தில் இருக்கும் கழு மரத்தின் கூர் முனையில் தண்டனை பெற்றவனை அமர்த்தி விடுவார்கள். குதத்தின் வழியாக உள்ளே நுழையும் கழு மரத்தின் கூர் முனை, கழுத்தின் அருகே துளைத்துக் கொண்டு வெளி வரும். இது நடந்து முடிய இரண்டு நாளாகும். மெதுவானதும், வேதனை நிரம்பியதுமான சாவு. மாண்டவ்யரைக் கழுவேற்றிய நெடு நேரம் கழித்து, மக்கள் அவரை இன்னார் என்று அடையாளம் கண்டு கொண்டு, அரசனிடம் சென்று விவரம் சொல்லி, அரசன் ஓடி வந்து பார்ப்பதற்குள் பாதி உடலைத் துளைத்துக் கொண்டு வந்திருந்தது கழுமரம். கழுவிலிருந்து கீழே இறக்கி மன்னிப்புக் கேட்டான் மன்னன். அவ்வாறு இறக்கும் போது, கழு மரத்தின் ஒரு பகுதி (ஆணி) ஒடிந்து அவர் உடலிலேயே தங்கிவிட்டபடியால் அவருக்கு 'ஆணி மாண்டவ்யர்' என்ற பெயர் ஏற்பட்டது.
கழுமரத்திலிருந்து இறக்கப்பட்ட மாண்டவ்யர், மன்னனிடம் ஏதும் பேசவில்லை. நேராக தரும தேவதையிடம் சென்றார். 'எனக்கு இது ஏன் நேரிட்டது?' என்று கேட்டார். 'சிறு வயதில் நீர் தும்பிகளைப் பிடித்து, அவற்றின் வால் நுனியை வெட்டி, சிறு குச்சிகளைச் செருகி, அதில் நூல் கொண்டு கட்டி அவற்றைப் பறக்கச் செய்து விளையாடினீர். ஆகவே, இந்தத் தண்டனை நேர்ந்தது,' என்றது தரும தேவதை.
'அறியாத வயதில் செய்த செயலுக்கு இவ்வளவு கடுமையான தண்டனை வழங்குவதா? உனக்கு தரும நெறிமுறையின் அளவு தெரியவில்லை. மண்ணுலகத்தில் என்னைப் போல் மனிதனாய்ப் பிறப்பாய். நான் எவ்வாறெல்லாம் கழுமரத்தில் துன்பப்பட்டேனோ, அவ்வாறெல்லாம் மனத்தளவில் துன்பப்பட்டு, புண்பட்டு வருந்துவாய்,' என்று சாபமிட்டார் மாண்டவ்யர்.
அந்தச் சாபத்தினால் பூமியில் வந்து பிறந்த தரும தேவதைதான் விதுரன். யுதிஷ்டிரனாவது தரும புத்திரன். கெளரவர்கள் பக்கம் தரும தேவதையே வந்து நின்றுகொண்டிருந்தது. அதனால்தானோ என்னவோ அவர்கள் பக்கம் சற்று உயர்ந்தே கோலோச்சிக் கொண்டிருந்தது.
வேறு
எண்ணி லாத பொருளின் குவையும்
யாங்க ணுஞ்செலும் சக்கர மாண்பும்
மண்ணி லார்க்கும் பெறலரி தாமோர்
வார்க டற்பெருஞ் சேனையு மாங்கே
விண்ணி லிந்திரன் துய்ப்பன போன்று
வேண்டு மின்பமும் பெற்றவ னேனும்
கண்ணி லாத்திரி தராட்டிரன் மைந்தன்
காய்ந்த நெஞ்சுடன் எண்ணுவ கேளீர். (19)
பதம் பிரித்து:
எண் இலாத பொருளின் குவையும்
யாங்கணுஞ் செலும் சக்கர மாண்பும்
மண்ணில் ஆ(யா)ர்க்கும் பெறல் அரிதாம் ஓர்
வார்கடல் பெரும் சேனையும் ஆங்கே
விண்ணில் இந்திரன் துய்ப்பன போன்று
வேண்டும் இன்பமும் பெற்றவ னேனும்
கண் இலாத் திரிதராட்டிரன் மைந்தன்
காய்ந்த நெஞ்சுடன் எண்ணுவ கேளீர்.
அ. சொற் பொருள்
வார்கடல்: நெடுங் கடல். வார்: நீண்ட, நேரான, நெடும்.
ஆ. இலக்கணம் -
இ. யாப்பு
எண்சீர் விருத்தம் என்று பாரதி குறித்திருக்கும் கட்டளைக் கலிப்பா. கட்டளைக் கலிப்பாக்களுக்கு எழுத்துக் கணக்கு உண்டு. (கட்டளை என்று தொடங்கும் எல்லா வகைப் பாவினமும் ஒவ்வொரு அடியிலும் ஒரே அளவான எழுத்துகளோடு இருக்கும்.) எண்சீர் விருத்தத்துக்கும் கட்டளைக் கலிப்பாவுக்கும் உள்ள ஒரே வேற்றுமை, 'சந்தத்ததால் அளவொத்து வருவது விருத்தம்; எழுத்தால் அளவொத்து வருவது கட்டளைக் கலிப்பா.' மற்றபடி இவை இரண்டும் ஒரே மாதிரியான அமைப்பை உடையவ¨தாம். மேற்படிப் பாவில் எழுத்தெண்ணிப் பார்க்கலாம். எண்ணும் போது, ஒற்று ஒழித்து எண்ண வேண்டும். அதாவது க், ச், ப், ந், ய், ல், போன்ற எல்லாப் புள்ளி எழுத்துகளையும் விட்டுவிட்டு எண்ண வேண்டும். 'கடுகு' என்ற சொல்லில் இருப்பது மூன்றெழுத்துகள். 'கண்ணுக்குள்' என்ற சொல்லில் இருப்பதும் மூன்றே எழுத்துகள்தாம். க ணு கு. ண், க், ள் ஆகிய மூன்றையும் விட்டுவிட வேண்டும்.
இப்படி எண்ணினால், மேற்படிப் பாடலில் ஒவ்வோர் அடியிலும் இருபது எழுத்துகள் இருப்பதைக் காணலாம். ஒவ்வோர் அரை அடியிலும் பத்துப் பத்து எழுத்துகள் இருக்கின்றன. (பதம் பிரிக்காத வடிவத்தில் எண்ணவும்.) ஓர் அடி என்பது இரண்டு பாகங்களாகப் பிரிந்திருக்கிறது. 'எண்ணி லாத' என்று தொடங்கி, 'குவையும்' என்பது வரை அரை அடி. அதற்கு அடுத்ததாக 'யாங்கணும்' என்று தொடங்குவதும் அதே முதல் அடிதான்; சற்றே உள்ளே மடக்கிப் போட்டிருப்பதால் இதனை 'மடக்கடி' என்று சொல்வார்கள். இது முதல் அடியின் இரண்டாவது அரை அடி. ஒரே நீண்ட அடியாகவும் இந்தப் பாடலை எழுத முடியும். அதாவது இப்படி:
எண்ணி லாத பொருளின் குவையும் யாங்க ணுஞ்செலும் சக்கர மாண்பும்
மண்ணி லார்க்கும் பெறலரி தாமோர் வார்க டற்பெருஞ் சேனையு மாங்கே
விண்ணி லிந்திரன் துய்ப்பன போன்று வேண்டு மின்பமும் பெற்றவ னேனும்
கண்ணி லாத்திரி தராட்டிரன் மைந்தன் காய்ந்த நெஞ்சுடன் எண்ணுவ கேளீர்.
ஐந்து சீர்களுக்கு மேல் போகும் எல்லா விருத்தங்களிலும், சிந்துப் பா வகைகளிலும் ஓரடியை இரண்டாகப் பிரித்து, இரண்டாவது அரை அடியை மடக்கி எழுதுவார்கள். பார்வைக்கு எடுப்பாக இருக்கும் என்பதுதான் இதன் பயன். வேறு எந்தவிதமான நோக்கமோ, அமைப்புக் கட்டுப்பாடோ கிடையாது. இது ஒரு பதிப்புச் செளகரியம் (publishing convenience). அவ்வளவுதான்.
மேற்படி கட்டளைக் கலிப்பா 'எண்' என்று நேரசையில் தொடங்கியிருக்கிறது. அடிக்கு இருபது எழுத்துகள் பயிலும். நிரையசையில் தொடங்கும்போது அடிக்கு இருபத்தோ ரெழுத்து இருக்கும். பேராசிரியர் ம. ரா. போ. குருசாமி அவர்கள் கொடுத்திருக்கும் குறிப்பிலிருந்து:
"எண்சீர் கொண்ட நாலடிப் பாடல்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று எண்சீர்க் கழி நெடில் அடி ஆசிரிய விருத்தம். மற்றொன்று, கட்டளைக் கலிப்பாவாகும். இக் கட்டளைக் கலிப்பாவினை இனம் காணும் முறை: நேரசையில் தொடங்கும் அரையடியில் ஒற்று நீக்கி எண்ணுமிடத்துப் பதினோரெழுத்து இருக்கும்; நிரையசையில் தொடங்கும் அரையடியில் பன்னிரண்டு எழுத்து இருக்கும். காப்பியங்களில் இவ்வகையைக் காணலாம். பாரதியாரிலும் இப் பாடல்கள் பல. ... ... ... ... ... ... ... ... மரபு வழிப்பட்ட இவையேயன்றி நேரசையில் தொடங்கும் அரையடிக்குப் பத்தெழுத்தும், நிரையசையில் தொடங்கும் அரையடிக்குப் பதினோரெழுத்தும் கொண்ட புதுவகையான கட்டளைக் கலிப்பாக்களும் பாரதியாரில் உள்ளன."
எழுத்துக் கணக்கெல்லாம் பார்த்து எழுதினால் அந்தப் பாட்டில் உயிர் எப்படி இருக்கும், கவிதை எப்படி இருக்கும், உணர்ச்சி எப்படி இருக்கும் என்றெல்லாம் விமரிசிப்பவர்களும், கவலைப் படுபவர்களும் இதைப் பார்க்கவும்:
நெரித்த திரைக்கடலில் நின்முகங்கண்டேன்;
நீல விசும்பினிடை நின்முகங்கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங்கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின்முகங்கண்டேன்;
பிரித்துப் பிரித்துநித மேகமளந்தே
பெற்றதுன் முகமன்றிப் பிரிதொன்றில்லை.
சிரித்த ஒலியினிலுன் கைவிலக்கியே
திருமித் தழுவியதில் நின்முகங்கண்டேன்.
(கண்ணம்மா என் காதலி - பின்னே வந்து கண் மறைத்தல்.)
ஒவ்வோர் அடியையும் எழுத்தெண்ணிப் பாருங்கள். 'நெரித்த' என்று நிரையசையில் தொடங்கும் இந்தத் தரவில் ஒவ்வோர் அரையடிக்கும் பன்னிரண்டும், பதின்மூன்றுமாக எழுத்துகள் அமைந்திருப்பதைக் காணலாம். உங்கள் வசதிக்காக ஒற்று நீக்கிக் கணக்குப் போட்டும் காட்டுகிறேன்.
நெரித திரைகடலி நிமுககடே
3 5 5 = 13
நீல விசுபினிடை நிமுககடே
2 5 5 = 12
திரித நுரையினிடை நிமுககடே;
3 5 5 = 13
சின குமிழிகளி நிமுககடே;
2 5 5 = 12
பிரிது பிரிதுநித மேகமளதே
3 5 5 = 13
பெறது முகமறி பிரிதொறிலை.
3 4 5 = 12
சிரித ஒலியினிலு கைவிலகியே
3 5 5 = 13
திருமி தழுவியதி நிமுககடே.
3 5 5 = 13.
இந்தக் கவிதையில் இருந்து கடைசித் தரவை மட்டும் தந்திருக்கிறேன். நான்கு தரவுகளை (stanza) கொண்ட இந்தக் கவிதை முழுவதிலும் இந்த அமைதி பொருந்தி வரும். இந்தப் பாடலில் உணர்ச்சி இல்லையா, அழகில்லையா, கவிதையில்லையா? முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
ஈ. பாடல் சொல்வது
எண்ணில் அடங்காத பொருட்களின் குவியலும், எல்லா இடத்திலும் செல்லுபடியாகும் அரச அதிகாரத்தின் பெருமையும், உலகத்தில் வேறு யாருக்கும் கிடைப்பதற்கு அரிதான நீண்ட கடலை ஒத்த சேனையையும், இந்திர போகம் என்று சொல்லத் தக்க எல்லா வகையான இன்பங்களையும் அனுபவிப்பவனே ஆனாலும், கண் இல்லாதவனான திருதிராட்டிரனின் மகன் நெஞ்சில் ஈரம் இல்லை; பசை இல்லை. வற்றிக் காய்ந்த நெஞ்சை உடையனாக இருந்தான் - பாண்டவரிடத்தில். அப்படிப் பட்ட காய்ந்த நெஞ்சோடு அவன் எண்ணுவதைக் கேளுங்கள்.
வேறு
பாண்டவர் முடியுயர்த்தே - இந்தப்
பார்மிசை உலவிடு நாள்வரைநான்
ஆண்டதொர் அரசாமோ - என
தாண்மையும் புகழுமொர் பொருளாமோ
காண்டகு வில்லுடையான் - அந்தக்
காளையருச்சுனன் கண்களிலும்
மாண்டகு திறல் வீமன் - தட
மார்பிலும் எனதிகழ் வரைந்துளதே. (20)
பதம் பிரித்து: காண்டகு: காண்தகு; மாண்டகு: மாண் தகு
அ. சொற் பொருள்
காண்டகு: காணத் தகுந்த. மாண்டகு: மாண்பினால் தகுதி வாய்ந்த.
ஆ. இலக்கணம்
மாண்டகு: ஆல் என்ற மூன்றாம் வேற்றுமை தொக்கு நின்றதால் மூன்றாம் வேற்றுமைத் தொகை.
இ. யாப்பு
சந்தம் முந்தைய பாடலினின்று மாறுபடுவதைப் பார்க்கலாம். மறுபடியும் நொண்டிச் சிந்து வடிவத்துக்கு வந்திருக்கிறது. இனி, பாடல் 37 வரை நொண்டிச் சிந்துதான்.
ஈ. பாடல் சொல்வது
அரசர்கள் என்ற தகுதியோடு பாண்டவர்கள் ஆட்சி செய்யும்வரையில், நான் ஆண்டது ஓர் அரசா? என் ஆண்மை, புகழ் எல்லாம் ஒரு பொருளா? காணத் தகுந்தவனும் வில்லாளுமான அருச்சுனம் கண்களிலும், பெருமை பொருந்திய திறலுடைய வீமனின் மார்பிலும் என் அவமானம் எழுதி வைக்கப்பட்டிருக்கிறதே!
எங்கேயோ காட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் பாண்டவர்கள். குரு வம்சத்தினரின் அரசு பாண்டுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது, அண்ணன் திருதிராட்டிரன் பார்வையற்றவன் என்ற ஒரே காரணத்தால். ஆகவே, பாண்டுவின் அரசு - ஒரு வகையில் பார்த்தால் - காபந்து அரசு (caretaker government). ஆனால், குரு வம்சத்தின் ஆட்சி மிக விரிவாகப் பரவுவதற்குப் பாண்டு பெரிய காரணனாய் இருந்தான். குரு வம்சத்தின் சாம்ராஜ்ஜியத்தைத் தன் போராற்றலால் விரிவுபடுத்தினான். ஆகவே, இன்னொரு வகையில் பாண்டுவின் வம்சம் ஆட்சிக்கு உரிமையுடையதாக ஆகிறது. ஆட்சிப் பொறுப்பை திருதிராட்டிரனிடத்தில் ஒப்படைத்துவிட்டு, பாண்டு வனவாசம் மேற்கொண்டிருந்தாலும், துரியோதனனுக்கு ஒரு வருடத்துக்கு முன்னால் பிறந்துவிட்டபடியால், தருமனுக்கு ஆட்சி உரிமை தானாகவே வந்து அமைகிறது. இப்படிப்பட்ட பல சிக்கல்களுக்கு உரியதாக இருந்தது குரு வம்சத்தின் மகுடம்.
பாண்டவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் எங்கோ காட்டகத்தில். பாண்டு இறந்து, குந்தியும் பாண்டவர்களும் அத்தினபுரத்துக்குத் திரும்பியபோது தருமருக்குப் பதினாறு வயது. வீமனுக்கும் துரியோதனனுக்கும் பதினைந்து வயது. பிறந்தது முதல், 'இவர்கள் வரமாட்டார்கள்; ஆட்சி முழுவதும் தன்னுடையது மட்டுமே,' என்ற எண்ணத்தில் வளர்ந்தவனானபடியாலே துரியோதனனுக்கு, 'குரு வம்சத்தின் மகுடத்தை இவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும்,' என்ற எண்ணம் தாங்க முடியாத சினத்தையும், பொறாமையையும் விளைத்தது.
அவனுடைய எண்ணத்தில் தருமன் ஒரு கோழை. எப்போது பார்த்தாலும், எடுத்ததற்கெல்லாம் அற வழியைப் பற்றிப் பேசுபவன் கோழையாகவும், கையாலாகதவனாகவும்தானே இருக்க முடியும்! 'இவனுக்குப் போய் ஆட்சியா,' என்று கொதித்துக்கொண்டிருந்தவன் திருப்தி அடையுமாறு காண்டவ வனத்தைப் பாண்டவர்களுக்குக் கொடுத்தான் திருதிராட்டிரன். குரு வம்சப் பேரரசின் அளவினால் பாதி அளவுக்கு விரிந்து கிடந்தது காண்டவ வனம். பாதி ராஜ்ஜியம் கொடுத்த கணக்கு. கொடுத்தது என்னவோ, ஒன்றுக்கும் உதவாத, மக்கள் யாரும் வாழாத காடு. அந்தக் காட்டைத் திருத்தி நாடாக்கி, இந்திரப் பிரஸ்தம் செய்து, திக்குவிஜயங்களால் தங்களுடைய ஆட்சியை விரிவுபடுத்திக் கொண்டனர் பாண்டவர். அதுவே பொறுக்க முடியவில்லை துரியோதனனுக்கு. தருமன் செய்த ராஜசூய யாகத்துக்குச் சென்று திரும்பியிருக்கிறான் துரியோதனன். அங்கே தருமனுக்குச் செய்யப்பட்ட சிறப்புகளைக் காணக் காணப் பொறுக்க முடியாமல் வெதும்பிக்கொண்டிருந்தான். தன் மாளிகைக்குத் திரும்பியவுடன், தனிமையில் அந்த வெப்பம் வெளிப்படுகிறது.
அவனை வருத்தியதெல்லாம் தருமனின் உயர்வுமட்டுமல்ல. தருமன் ஒரு கோழை. அவனைப் பற்றி ஏதுமில்லை. இருந்தாலும் இப்படிப்பட்ட, ஆற்றலில்லாத ஒருவனைப் போய் அத்தனை மன்னர்களும் விழுந்து விழுந்து வணங்கினர் என்பது சொல்லவொண்ணா சினத்தை ஏற்படுத்தியது. 'இவன் என்ன, தன்னுடைய தோள் வலியினாலா, தகுதியினாலா அத்தனைச் சிறப்புகளையும் பெற்றான்? அங்கே இரண்டு பேர் இருக்கிறார்களே, அவர்களலல்லரா இத்தனைக்கும் காரணம்? சிறப்பு வாய்ந்த வில்லை உடைய அருச்சுனனுடைய கண்களிலும், கதாயுதப் பிரயோகத்தில் ஆற்றல் மிகுந்தும் திகழ்ந்த வீமனின் மார்பிலுமல்லவா இவனுடைய அவமானம் வரைந்து வைக்கப்பட்டிருக்கிறது!
தருமன் ஒரு பொருட்டில்லை. நகுல சகதேவர்கள் - துரியோதனனைப் பொருத்தமட்டில் - சிறுவர்கள். அவனுடைய கவலையெல்லாம் இந்த இருவரைச் சுற்றிதான். கதாயுதப் பயிற்சியில் சிறந்த வீமனுக்குத் தானே மாற்று என்றாலும், வில் பயிற்சியில் தேர்ச்சியுள்ள ஒருவன் அவனுக்குத் தேவைப்பட்டான். 'அர்ச்சுனனுக்கு மாற்று இவனே,' என்று பார்த்த பார்வையில் கர்ணனைத் தன் நண்பனாக்கிக் கொண்டதற்குக் காரணம் இதுதான். (கர்ணன், ஆரம்ப காலத்தில் துரோணரிடம் பயிற்சி பெற்றவன்தான்.)