ஈறிலாப் புகழ் எவ்வுளூர்
(சந்தச் சிந்து)
(தான தானன தானனா - தன
தான தானன தானனா)
(பல்லவி)
ஈறி லாப்புகழ் எவ்வுளூர் - எங்கும்
… ஈடி லாவெழில் சூழுமூர்
வீறெ லா(ம்)மிகு மாலவன் - எங்கள்
… வீர ராகவன் வாழுமூர்.
(சரணம்)
பூத்த தாமரை மேலயன் - அடி
… போற்றி நான்முடி தாழ்த்துமூர்
ஆர்த்த தீவினை ஓட்டுமூர் - பிணி
… ஆற்றி ஆழ்துயர் மாற்றுமூர். (ஈறிலாப்)
கோல வாயொரு பைங்கிளி - அது
… கோதை காதலைப் பேசுமூர்
சோலை வாழிளந் தென்றலில் - மது
… சூதன் வாசனை வீசுமூர். (ஈறிலாப்)
காவு லாவிடு வண்டுகள் - ‘கண்ண
… கண்ண’ என்றுபண் பாடுமூர்
நாவெ லாஞ்சுவை கூடியே - குயில்
… நாமம் ஆயிரம் ஓதுமூர். (ஈறிலாப்)
மாறன் வாய்மொழி கேட்குமூர் - திரு
… மழிசை கோன்றமிழ் சாற்றுமூர்
மாறி லாத்தனி வேலினான் - திரு
… மங்கை மன்னவன் வாழ்த்துமூர். (ஈறிலாப்)
- இமயவரம்பன்