ஏழு சிமிழுக்குள் இவ்வண்டப் பேரொளியின்
ஆழ அகலம் அளக்கின்ற அற்புதமா?
இன்னார் இனியரென எண்ணாதே எல்லார்க்கும்
நன்னெறிகள் சொன்ன மறை நாயகமா? காலத்தேர்
ஏற்ற இறக்கம் எதிர்கொள்ளும் காட்சிகளின்
மாற்றம் அனைத்தையும் வாங்கிவைத்த ஓர்நிமிர்வா?
இன்று புதிதாய் இயம்பப் படுவதெல்லாம்
அன்றே உரைத்த அதிசயமா? வாமனனாய்த்
தோன்றி உலகளந்த தோன்றலுக்குச் சான்றாக
ஊன்றி எழுந்த உயரப் பெருவியப்பா?
அள்ளிக்கொள் என்றே அறிவுக் களஞ்சியத்தின்
கொள்ளையினைக் கொண்டுவந்து கொட்டிவைத்த உன்னதமா?
தன்னை மறைத்த தமிழன் அறநெறியின்
மின்னை விடுத்த வெளிச்சப் புறப்பாடா?
எல்லாம் இதன்பால் இருக்கிற தென்கின்ற
சொல்லே விளக்குகின்ற சூட்சமமா? அப்பப்பா
சின்னதிலும் சின்னதிலும் சின்ன அணுவதனைப்
பின்னப் படுத்திப் பிளந்த துகளுக்குள்
ஆதார மூலம் அமரும் அனுபவமா?
சாதா ரணச்சொல் தலைமையிலே சத்தியத்தை
ஏற்றிவைத்து நித்தியத்தை எட்டவைத்த ஏற்பாடா?
போற்றுத லெல்லாம் கடந்த பூரணமா? என்சொல்ல?
வள்ளுவனை, நீதிக்கு மன்னவனை, செந்தமிழில்
உள்ளவனைப் போற்றும் உளம்.