2019-11-09
"சொல்லைக் கடந்த சுகம்"
--------------
0-1) ---- வெண்பா ----
சொல்லைக் கடந்த சுகப்பொருளே மேருவெனும்
வில்லை வளைத்தபெரு வீரனே - தொல்லை
வினைதீர்க்க வல்லவனே வெண்மதி சூடீ
உனைநான் உரைக்க உணர்த்து.
(திருமாளிகைத் தேவர் அருளிய திருவிசைப்பா - 9.1.1 - "ஒளிவளர் விளக்கே ... ... வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே");
0-2) ---- அறுசீர் விருத்தம் - (மா மா காய்) ----
சொல்லைக் கடந்த சுகந்தன்னைத் .. துய்த்தார் அதனை நமக்கெடுத்துச்
சொல்லற் காமோ அத்தகைய .. சுகத்தைப் பாட்டிற் சொல்லென்றால்
சொல்லை மறந்த நிலையெய்திச் .. சுகத்தைக் காணாச் சிறியேன்நான்
சொல்லும் சொல்லைப் பொறுத்தவையீர் .. சொல்லீர் காணும் குறைநிறையே.
குறிப்பு - 2-ஆம் அடியில் உள்ள "சொல்லற்காமோ" என்ற சொற்றொடரை இடைநிலைத் தீவகமாக இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்க. "சொல்லைக் கடந்த சுகந்தன்னைத் .. துய்த்தார் அதனை நமக்கெடுத்துச் சொல்லற் காமோ" & "சொல்லற் காமோ அத்தகைய சுகத்தைப் பாட்டிற் சொல்லென்றால்";
(பொறுத்தல் - சகித்தல்);
2019-11-09
பொது - "சொல்லைக் கடந்த சுகம்"
-----------------
(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பு )
(அப்பர் தேவாரம் - 5.2.1 - "பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்")
1)
ஈடி லாதவன் ஈரச் சடையினன்
வாடி வாழ்த்து மதிதனை வார்சடைச்
சூடி சொல்லைக் கடந்த சுகம்பெற
நாடி நெஞ்சே நினையவன் நாமமே.
2)
காதில் ஓர்குழை காட்டிய கண்ணுதல்
தீதி லாமறை ஓதி எருதமர்
சோதி சொல்லைக் கடந்த சுகம்பெற
ஆதி நாமம் அதுநினை நெஞ்சமே.
3)
தாயின் நல்லவன் தன்னடி யார்கட்குத்
தீயின் வண்ணன் திகழ்சடை ஆறணி
தூயன் சொல்லைக் கடந்த சுகம்பெற
நேய மாகி நினையவன் நாமமே.
4)
தக்கன் வேள்வியை அன்று தகர்த்தருள்
முக்கண் மூர்த்தி முடிமிசைப் பாம்பணி
சொக்கன் சொல்லைக் கடந்த சுகம்பெற
நக்கன் நாமத்தை நாளும் நினைநெஞ்சே.
5)
பித்தன் என்ற பெயரும் உடையவன்
நித்தன் நெற்றியில் நேத்திரன் நீறணி
சுத்தன் சொல்லைக் கடந்த சுகம்பெற
அத்தன் நாமம் அதுநினை நெஞ்சமே.
6)
காலன் மார்பில் கழலால் உதைத்தவன்
வேலன் தாதை விடையினன் மூவிலைச்
சூலன் சொல்லைக் கடந்த சுகம்பெற
ஆலன் நாமம் அதுநினை நெஞ்சமே.
7)
வேழம் தன்னை உரித்தவன் விண்ணவர்
வாழ வல்விடம் உண்டவன் வன்றொண்டர்
தோழன் சொல்லைக் கடந்த சுகம்பெற
ஏழை பங்கன்பேர் எண்ணு மடநெஞ்சே.
8)
மடமை யால்மலை பேர்த்தவன் சென்னிபத்(து)
அடர ஊன்றிய அண்ணல் அராப்புனை
கடவுள் சொல்லைக் கடந்த சுகம்பெறச்
சுடலை நீற்றன்பேர் சொல்லு மடநெஞ்சே.
9)
பங்க யத்தினன் பன்னகப் பள்ளியான்
எங்கும் நேடியும் எய்தற் கரியதோர்
துங்கன் சொல்லைக் கடந்த சுகம்பெறச்
சங்க ரன்பேர் தனைநினை நெஞ்சமே.
10)
நாளும் பொய்யுரை நாணிலார்க் கன்பிலான்
வேளை வெண்பொடி செய்த விமலனெண்
தோளன் சொல்லைக் கடந்த சுகம்பெறக்
காள கண்டன்பேர் நீள நினைநெஞ்சே.
11)
ஏல வார்குழல் ஏந்திழை பங்கினன்
பால னார்பயம் பாற அருள்கால
காலன் சொல்லைக் கடந்த சுகம்பெற
நீல கண்டன்பேர் நீள நினைநெஞ்சே.
வி. சுப்பிரமணியன்
========================
It looks like I never got around to posting the following set of songs I wrote in the context ofசந்தவசந்தக் கவியரங்கம்-51 - தலைப்பு - "சொல்லைக் கடந்த சுகம்"