வள்ளுவன் வாய்ச்சொல் மருந்து
(வெண்பா)
அறம்:
பொல்லா மருளுக்கும் பொய்வாழ் நெறிகட்கும்
தொல்லேழ் பிறப்பில் தொடர்வினைக்கும் - இல்லார்க்கொன்(று)
உள்ளபோ(து) ஈயா உளத்துக்கும் பேரறவோன்
வள்ளுவன் வாய்ச்சொல் மருந்து.
பொருள்:
தீரா மடமைக்கும் தீப்போல் வறுமைக்கும்
ஆராத் துயர்க்கும் அயர்வுக்கும் - ஆராய்ந்து
தெள்ளுறா(து) ஆற்றும் சிறுவினைக்கும் வான்பொருள்சேர்
வள்ளுவன் வாய்ச்சொல் மருந்து.
இன்பம்:
அன்பில் தொலைந்த அகத்துக்கும் ஊனுருகி
என்பும் கரைந்த இளைப்புக்கும் - தன்பிரிவால்
வெள்ளநீர் வார்க்கும் விழிகளுக்கும் காமருசீர்
வள்ளுவன் வாய்ச்சொல் மருந்து.
(காமரு சீர் = விரும்பத்தக்க சிறப்புடைய)
- இமயவரம்பன்