"அம்மாவும் அப்பாவும்" -(மீ.விசுவநாதன்)

4 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
9:24 AM (11 hours ago) 9:24 AM
to Santhavasantham, M. Viswanathan
மீள் பதிவு:

"அம்மாவும் அப்பாவும்"
(மீ.விசுவநாதன்)
அப்பா அரவணைப்பும் அம்மாவின் ஊக்குவிப்பும்
தப்பாமல் கொள்ளத் தவம்நன்றாய் எப்பிறவி
செய்தேனோ நானறியேன்! சிந்தையிலே எப்போதும்
ஐயமின்றி உள்ளன(ர்) ஆம்.

பொய்சொன்னேன்! அம்மா பொழுதெல்லாம் பேசாமல்
மெய்சொல்ல வைத்தாள் மெதுவாக – வையாது
"நல்லபேர் நீயெடுக்க நான்பார்க்க வேண்டாமா
சொல்லென்று" போடுவாள் சோறு.

துன்பத்தைச் சொல்லாமல் தூக்கி வளர்த்தவர்
அன்பான அப்பா! அதிலும்தன் பொன்னான
காலத்தை என்னோடு காதலாய்ப் போக்கியவர்
கோலத்தை என்னென்பேன் கூறு.

நன்றாகக் கற்காமல் நாள்முழுதும் ஊர்சுற்றிக்
குன்றாகத் தீயபெயர் கொள்வோனை முன்னோர்கள்
பேர்சொல்லி நல்வழியில் சேர்த்திட்ட அம்மாவின்
வேர்வைக்கே ஈடாமோ வேறு.

எளியதோர் வாழ்க்கை ! இறைபக்தி கொண்டு
களிக்கின்ற பண்பு ! கபடந் தெளிக்காக்
குளிரன்பு நட்பு ! குறையிலாப் பெற்றோர்
அளித்த குபேர அறம்.
(18.06.2017 )

Siva Siva

unread,
10:50 AM (10 hours ago) 10:50 AM
to santhav...@googlegroups.com
பெற்றோரைப் போற்றும் பாடல்கள் ! வாழ்க!

கற்காமல்  &   தெளிக்காக்   /

கல்லாமல் & தெளியா - என்று இருப்பின் இன்னும் சிறக்கும்.

வி. சுப்பிரமணியன்
Reply all
Reply to author
Forward
0 new messages